ச ரிநிகர் 123-இல், "கோணேஸ்வரிகள்" என்று தலைப்பிட்டு கலா என்பவர் ஒரு கவிதை எழுதியிருந்தார். இக்கவிதையைத் தொட்டு பல விமர்சனங்களைச் சரிநிகர் எதிர் கொண்டு சிலவற்றை வெளியிட்டு இருந்தனர்.
ஆணாதிக்கம் இனவாதத்துடன் இணையும் போது ஒரு தமிழ்ப் பெண் சந்திக்கும் இனவாத ஆணாதிக்கத்தை மிக அருமையாகத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தார் கலா. இதன் மூலம் யதார்த்தச் சமூகத்தின் இயலாமைக்குச் சவால் விட்டுள்ளார். அதேநேரம், இனவாதம் சிங்களப் பெண் மீதான இராணுவ, ஆணாதிக்க வன்முறையை ஒத்தி வைத்துள்ளதை அழகாகச் சுட்டிக் காட்டுவதன் மூலம் இலங்கை அரசியலைச் சரியாக, மிக நேர்த்தியாகச் சுட்டிக் காட்டுகின்றார் கலா. ஆனால் பெண்ணியல் அமைப்பாளர்கள், ஜனநாயகவாதிகள், பெண்கள், பத்திரிக்கையாளர்கள் எனக் கொஞ்சம் பேர் இதை எதிர்த்து அழுது வடிந்துள்ளனர்.
தமது வர்க்கக் கட்டமைப்புக்கு இசைவாக ஆணாதிக்க நிலையில் நின்றும், இனவாதக் கட்டமைப்பின் மீது நின்றும் நடந்த ஆணாதிக்க வன்முறையை மூடிமறைக்கும் போது அல்லது மௌனமாகி கைவிடும் போது, ஒரு பெண்ணின் மீதான கொடுமையைச் சரியாகச் சுட்டும் போது எதிர்த்துப் புலம்பியுள்ளனர். நாம் முதலில் கலாவின் அக்கவிதையைப் பார்ப்போம்.
கோணேஸ்வரிகள்...!
நேற்றைய அவளுடைய சாவு - எனக்கு
வேதனையைத் தரவில்லை.
மரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்
அதிர்ந்து போதல் எப்படி நிகழும்?
அன்பான என் தமிழச்சிகளே,
இத்தீவின் சமாதானத்திற்காய்
நீங்கள் என்ன செய்தீர்கள்!?
ஆகவே வாருங்கள்
உடைகளைக் கழற்றி
உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்
என் அம்மாவே உன்னையும் தான்.
சமாதானத்திற்காய் போரிடும்
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள் யோனிகளைத் திறவுங்கள்.
பாவம்,
அவர்களின் வக்கிரங்களை
எங்கு கொட்டுதல் இயலும்?
வீரர்களே! வாருங்கள்
உங்கள் வக்கிரங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
என் பின்னால்
என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.
தீர்ந்ததா எல்லாம்
அவளோடு நின்றுவிடாதீர்!
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.
ஆகவே
வெடி வைத்தே சிதறடியுங்கள்
ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளிப்
புதையுங்கள்
இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.
சிங்களச் சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலையில்லை.
(17.05.1997 அன்று பத்து பொலிசாரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, பெண்குறியில் கிரானைட் வைத்து கொல்லப்பட்ட மட்டக்களப்பு 11 - ஆம் கொலனியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய்.)
காலம் காலமாக நடக்கும் இனவாதச் சாவுகள் பழக்கப்படுத்தப்பட்ட நிலையில் அவை அதிர வைப்பதில்லை. உணர்வுகள் மரத்துப் போகின்றன. சமாதானத்திற்காகப் போராட முடியாத அரசியல் குரோதத்தில் முடங்கிப் போகும் போது, நீங்கள் நிர்வாணமாக ( உடல் மற்றும் இனவாத அடிப்படை எப்படியாயினும்) இருப்பது தான் உங்கள் நிலை. ஏனெனின் சமாதானம் என்பது தேசங்களின் சுயநிர்ணய உரிமையில் ஏற்படுகின்றது. அந்தத் தேசச் சுயநிர்ணய உரிமையை, அது சார்ந்த சமாதானத்தை நிலைநாட்டக் கூடிய அரசியல் வர்க்கப் போராட்டமே. அதற்காக என்ன செய்துள்ளீர்கள்? என்பதே இதன் சாரம்.
புத்தரின் பேரால் புத்தரைத் திரித்தே சமாதானம் பேசுகின்றனர் (இங்கு புத்தரை அல்ல) யுத்தவாதிகள். சமாதானத்துக்காகப் போர் புரியும் இனவாதிகளின் சமாதான ஆணாதிக்க வக்கிரத்தைத் தீர்க்க அரசியல் அற்ற நிதர்சனமானதென்றாலும், சமூகம் ஆணாதிக்கத்தில் யோனியைத் திறந்து தான் வைத்திருக்கிறது யதார்த்தத்தில். ஏனெனின் யோனி மீது இனவாதம் தனது இனவாத ஆணாதிக்கத்தால் பெண்ணின் கற்பு உரிமையைக் குதறும் போது, மௌனம் சாதிக்கும் இனவாதப் பெண்ணியத்தின் முன் யோனி அரசியல் அற்ற நிதர்சனமான பிம்பம் தான். அதே நேரம் இயல்பான ஆணாதிக்கச் சமூகக் கண்ணோட்டத்தில், பெண்ணை யோனி வழியாகக் காண்பதும், பண்பாட்டுக் கலாச்சார வேர்களை யோனி வழியாகத் திணிக்கும் போது, இயல்பான சமூக ஆணாதிக்கம் யோனியை நிர்வாணமாகக் காண்கின்றது, ஆராய்கின்றது.
ஆணாதிக்க இன வக்கிர அடையாளத்தையும், இதற்கு எதிரான எழுச்சியையும் சிதைக்க யோனியின் உள்வைத்து வெடிக்க வைக்கும் கைக்குண்டு. இதுவே பொதுவான ஆணாதிக்கக் "கற்பு" நிலையும் கூட. யோனிக்குள் தேடும் "கற்பு" இனவாதத்துக்கு எதிராகப் போராடுபவர்களின் இன்றைய பொதுக் கண்ணோட்டமாகும். இதை எதிராகக் காட்டி மறுக்கும் சிலரின் கண்ணோட்டத்தில் பெண்ணின் கற்புரிமையை, அதாவது யோனியில் திறந்து பொது விபச்சாரம் செய்வதாகும். இப்படி பல.
பிறக்கும் குழந்தை தனது பிறப்புக்குப் பழிதீர்க்கவும், ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்டவும், சமாதானத்தை நிறுவும் வழியை அடைக்க, போராடாது இருக்க, குழந்தை பிறக்கும் வழியிலேயே (யோனியில்) வைக்கும் குண்டுகள். பெண்ணின் உறுப்பு மீது இந்தச் சமாதானவாதிகளின் கருணை நாளைச் சிங்களப் பெண்கள் மீது பாயத் தயாராக உள்ளது. இது தான் கவிதையின் அடிப்படை.
ஆணாதிக்க அதிகார இனவாதிகள் மட்டும் தான் இதற்கு எதிராக ஊளையிடுவார்கள். பண்பாடு இல்லை என்பார்கள். பெண்மை இல்லை என்பார்கள். ஆபாசம் என்பார்கள். ஏனெனில் ஆணாதிக்க ஒழுக்கம் இவையல்லவா? இதை எதிர்த்துப் போராட அழைப்பு விடுகின்றார், கவிதை மூலம. இதைச் சமாதானத்துக்காகவா செய்தீர்கள்? எனக் கேட்க இது இனவாதக் காய்ச்சலை உண்டாக்குகிறது. அருவருப்பு உணர்ச்சியைத் தருகிறது என்கிறார் பெண்ணியவாதி செல்வி திருச்சந்திரன். நாகரீகம் தாண்டிய கவிதையாம். ஆணாதிக்க உலகமயமாதல் உலகைச் சார்ந்த நாகரீகத்தைக் கோரும் செல்வி திருச்சந்திரன். யோனி, நிர்வாணம் என எழுதுவது அவமானம் என்கின்றார்.
உயிரியல் படிக்கும் ஆண் - பெண், மருத்துவம் படிக்கும் ஆண் - பெண், இதை யதார்த்தமாய்க் கேட்கின்றனர், சொல்லுகின்றனர். அருவருப்பாக அல்ல. பாலியல் கல்வியின் அவசியத்தைப் பார்ப்பனிய இந்து மதம் இப்படித்தான் எதிர்க்கின்றது. ஆனால் ஆணாதிக்கச் சமூகம் பெண்ணைப் பொத்தியதைப் போல், இதைப் பொத்தி மூடி மறைத்து அநாகரீகம் எனக் கூறுவதன் மூலம, அந்தப் பெண்ணின் யோனி கற்பழிப்புக்கு உட்பட்டதையும், அதைக் குண்டுவைத்து தகர்த்த வக்கிரத்தையும் மூடி மறைத்து நியாயப்படுத்துகின்றனர். இதைச் சமாதானத்துக்கான யுத்தம் மீது செய்வதை மறைத்து, யுத்தத்தைச் சமாதானத்தின் பேரில் பாதுகாக்க முனைகின்றனர். இதன் மூலம் இனவாத ஆணாதிக்கத்தையும், இயல்பான யதார்த்த ஆணாதிக்கத்தையும் தமது வர்க்க நலனில் இருந்து பாதுகாக்கின்றனர்.