இன்று பெண்கள் ஜனநாயகமாக வாழ்வதாக ஒரு மாயை, ஆணாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் எல்லா ஆண்களும், பெண்கள் ஜனநாயகத்தை அனுபவிப்பதாகக் கூறும் அதேநேரம், அநேகமான பெண்களும் கூட இப்படி கருதுகின்றனர். ஆணாதிக்கக் கருத்தியல் கண்ணோட்டத்தைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனிச் சொத்துரிமையை ஆதாரமாகக் கொண்டு மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு போன்ற வடிவங்கள் ஊடாகப் புகுத்தப்பட்டு, இயல்பாக ஏற்க வைக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது.
இதை நாம் விவரிப்பதாயின், ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகநாடுகளை அடக்கி ஒடுக்குகின்றது. அந்த அடக்குமுறையையே ஜனநாயகம் எனக் கூறியபடி, அதையே சொந்த மக்களையும், மூன்றாம் உலகமக்களையும் ஏற்க வைக்க எப்படி பாடுபடுகின்றதோ அதுபோன்றதே இதுவும்.
மக்களை மூளைச்சலவை செய்வதன் மூலம் பல்வேறு வடிவங்களில் உள்ள ஒடுக்குமுறைகளை ஒரு சாதாரண, இயல்பான நிகழ்ச்சியாக மாற்றி விடுகின்றனர். இந்தவகையில் வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் விளம்பரங்கள், பத்திரிக்கைகள், புத்தகங்கள், மதம், கலாச்சாரம் ............ என அனைத்தும் இதன் செயற்பாட்டுக்கு உழைக்கின்றது.
இந்த நிலையில் பெண்கள் மீதான ஒரு தனித்துவமான ஆண்களுக்கு இல்லாத ஒடுக்குமுறையை இனம் காண்பதன் மூலம் அதை எதிர்த்துப் போராடுவது அவசியம். ஒரு பெண் விடுதலை அடையவேண்டும் எனின், அது தனியாகச் சாதித்து விட முடியாது. அப்பெண் சமுதாயத்தின் அங்கம் என்பதால், அப்பெண் சமுதாய மாற்றத்துடன் தான் விடுதலை பெறமுடியும். இந்த வகையில் பெண் போராட முற்படும் போது சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வான வாழ்நிலைகள் பெண்களின் கோரிக்கைகளை மாறுபடச் செய்கின்றன. பெண்ணின் இந்த மாதிரி மாறுபடும் அற்பக் கோரிக்கை என்பது, அப்பெண்ணை விடுவித்து விடமாட்டாது. மாறாகச் சமுதாயம் முழுவதுமாகக் கலாச்சாரப் புரட்சிகளை நடத்தும் வகையில், பெண்கள் தமது கோரிக்கைகளைப் பல்வேறு சமூகக் கோரிக்கைகளுடன் இணைக்க வேண்டும்.
இந்தவகையில் பெண் போராட வேண்டும் எனின் ஆண்கள் தமது நிலை கடந்து உயர்ந்த ஒரே நிலையை அடைவது மட்டுமின்றி, சமுதாயத்தில் உள்ள அனைத்து வேறுபாடுகளும் அகற்றப்படவேண்டும். இந்தவகையில் ஒரு போராட்டத்தைக் கட்டி எழுப்புவது என்பது ஒடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் கோரிக்கையாக, ஒரு சமுதாயக் கோரிக்கையாக இருக்க முடியும்.
உலகமயமாதல் கி.பி. 1985-இல் 3,500 கோடி வருமானம் உள்ள 400 பன்னாட்டு நிறுவனங்கள் உலகப் பொருளாதாரத்தில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தின. இந்த வகையில் உலகப் பன்னாட்டு நிறுவனங்களின் வருமானத்தை விட கூடுதலான வருமானத்தைக் கொண்ட நாடுகள் 9 மட்டுமே இருந்தன. மேலும் உலகில் மிகப்பெரிய 20 வங்கிகள் ஒன்றிணைந்து மட்டும் 7,24,500 கோடி ரூபாயை வைத்திருந்தது.
உலகப் பொருளாதாரத்தையும், உலகையும் ஒரே குடையின் கீழ் ஆளும் வகையில் பொருளாதார மையங்கள் உருவாக்கப்படுவதால் வேகம் அதிகமாகின்றது. மக்கள் எல்லோரையும் உழைக்கும் தொழிலாளர் படைக்குள் தள்ளிச் செல்லும் செயலானது, தவிர்க்கமுடியாத ஒரு கலாச்சார வடிவத்தை இதற்கு இசைவாக நகர்த்துகிறது.
மக்களின் கூட்டு உழைப்பு சார்ந்த பொருளாதாரம் தனியார் உழைப்பாக மாறி, தனிச் சொத்துரிமையாகிய வரலாற்றின் தொடர்ச்சியில், அதையும் இழந்து செல்லும் இப்போக்கின் ஊடாகக் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து, குடும்பம் என்ற அலகு சிதைந்து, மனிதனைத் தனிநபராக மாற்றியுள்ளது, மாற்றுகின்றது.
ஒருவரை ஒருவர் அருகில் இருந்தும் பழக முடியாத வகையில் பணம் என்ற எல்லைக்குள் மனிதனைக் குறுக்கி இயந்திர மனிதனாக மாற்றியுள்ள இந்தச் சமுதாயத்தில் குடும்பம் என்பது பாசத்தையும் விலைபேசி விற்றுள்ளது.
இந்த வகையில் குடும்ப அலகு சிதைந்த போதும் பெண்;களுக்கு விடுதலையைப் பெற்றுத் தரவில்லை. மாறாக மேலும் நவீன வகையில் பெண்கள் சுரண்டப்பட்டனர். இந்த முதலாளித்துவச் சமுதாயத்தில் விவாகரத்து உரிமைகள், கருஅழிப்பு உரிமைகள், ஓரினச்சேர்க்கைகள், பெண்ணின் பொருளாதாரப் பலம் போன்றவை கூட பெண்களை விடுவித்துவிடவில்லை.
இவை பெண்களையும் சரி அல்லது மக்களின் எந்தப் பிரிவையும் சரி இந்த உரிமைகள் அவர்களை விடுவிக்காது. உரிமை என்பது ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக இருந்தாலும் அது இவர்களை விடுவிக்காது. ஏனெனில் யதார்த்தத்தில் பெண்கள் கோரிய வாக்குரிமை, விவாகரத்துரிமை, வேலைசெய்யும் உரிமை, கருத்தடை உரிமை, கரு அழிப்புரிமை ......... என அனைத்து உரிமைகளும்கூட அவர்களை விடுவித்து விடவில்லை. இவை மறுக்கப்படும்போது, இவற்றில் ஏதோ ஒன்று இல்லாததால்தான் பெண் ஒடுக்கப்படுகின்றாள் என்று ஒரு பிரமையை ஏற்படுத்த முனைகின்றனர். இப்படிப்பட்ட உரிமைகள் வழங்கப்படும்போதுதான், அங்கு ஒடுக்குமுறை முதலாளித்துவச் சமூகப் பொருளாதாரம், அரசியல் அமைப்பைப் புரிந்து கொள்ளுவதற்கு யதார்த்தம் வழிகாட்டுகின்றது. இதைப் புரிந்து கொள்வது மட்டுமே சமூக மாற்றத்துக்கான ஆணாதிக்க ஒழிப்பின் முக்கியமான அடிப்படையாகும்.
அப்பொழுது மட்டும்தான் அப்பெண் சரியான திசைவழியைக் கண்டு உணர முடியும். தேசியச் சுயநிர்ணய உரிமைக்குப் பதில் பிரிவினையை அல்லது ஏதோ ஒரு தீர்வை ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு வழங்கும் போதுதான் சொந்த முதலாளியை, சொந்த முதலாளியின் கொடூரத்தை அம்மக்கள் இனங்காண்பர். உரிமையைப் பெற்றபின்தான், அவர்கள் புரிந்து கொள்வர், இதைப் போன்றுதான் பெண்களின் உரிமைகள் என்பது ஒரு பெண்ணின் விடுதலையைப் பெற்றுத் தராது. மாறாக முதலாளித்துவச் சுரண்டலைத் தகர்ப்பது தான் பெண்ணை விடுவிக்கும். இனி இதை மறுக்கும் வாதங்களின் பின்னுள்ள ஆணாதிக்கக் கோட்பாடுகளையும், மார்க்சியத்துக்கு எதிராக வைக்கும் வாதங்களையும், மார்க்சியத்துக்குத் திருத்தம் செய்யக் கோரும் ஆணாதிக்கப் போக்குகளையும் ஆராய்வோம்.