Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பி ரான்சில் 10 இலட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. (11.2.1999)40 அதாவது 60 பேருக்கு ஒரு கேமரா என்ற வீதத்தில் கண்காணிப்பைச் செய்கின்றது. இங்கு தான் சுதந்திரமான மனித நடமாட்டம், பாலியல் நடத்தை, கட்டற்ற சுதந்திரம் பற்றி புலம்புகின்றனர். இதைவிட பொலிஸ், தனியார் பாதுகாப்பு பிரிவு, உளவுப் பிரிவு, விசேட பாதுகாப்பு பிரிவுகள், இராணுவம் (பிரான்சில் சிவில் கண்காணிப்பின் போது வீதியில் பொலிசுடன் இணைந்து இராணுவம் செயல்படுகின்றது.) என்று பல்வேறு கண்காணிப்புகளுக்கு ஊடாகவே இச்சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாடும் அனைத்து இடங்களும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது. சொந்த வீட்டைத் (ஏழு சதுர மீற்றர் (meter)  இடத்தைத் தவிர எங்கும் கண்காணிப்பதை இந்த ஏகாதிபத்திய அமைப்பு நடைமுறைப்படுத்துகின்றது.

 


பொதுவாக மனிதனின் இயல்பான வாழ்க்கைக்கு எதிரான கண்காணிப்பாகச் சுற்றுச் சூழல் உள்ள போது வீடு என்ன நிலையில் உள்ளது? பிரான்சில் 50 இலட்சம் பேர் வீட்டு வசதியின்றி வீடு கேட்டுப் போராடுகின்றனர். அரசு வீட்டு அலுவலகத்தில் 20 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
குழந்தைகள், பெற்றோர் மண்டிப் போய் முடங்கிக் கிடக்கும் இவ்வீட்டில் தான், பாலியல் வாழ்க்கையும் நடக்கின்றது. ஒரு அறை அல்லது இரண்டு அறைக்குள் மலசலகூடம் முதல் படுக்கை ஈறாக இருக்கும் குடும்பத்தில் பாலியல் வாழ்க்கை எப்படி சுதந்திரமாக, இயல்பாக நடக்க முடியும்? மேற்கில் இந்தளவுக்கு மோசமான வாழ்க்கைத் தரத்தில் குடும்பங்களின் இன்ப-துன்பங்கள் சிதறுகின்ற போது, கணவன் மனைவி முரண்பாடு மேலும் உக்கிரமடைகின்றது. ஒரு புறம் அனைத்துத் தொடர்பு சாதனமும் பாலியல் வக்கிரத்தை அள்ளிக் கொட்ட, சொந்தக் குடியிருப்பானது பாலியலின் நினைவைக் கூட மறுக்கும் நெருக்கடியில் அமைந்துள்ளது. இது அடிப்படையான பாலியல் தேவையையே சிதைக்கின்றது. சுற்றுச் சூழல் கண்காணிப்பால் நிர்வாணமாக்கப்பட, வீடு நரகமான இடநெருக்கடியில் பிராண்டுகின்றது.


மேற்கிலே இந்த நிலைமையென்றால் வறிய நாடுகளில் நிலைமை இதைவிட வேறுபட்டு மோசமாக உள்ளது. ஒரே கூரையில் 10 சதுரமீற்றர் அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட பல குடும்பங்கள் நெரிந்து சிதைந்து வாழுகின்றனர்.


உலகில் 150 கோடி மக்கள் வீடின்றி வசிக்கும் அதே நேரம் நாலு கோடி சிறுவர்கள் வீதியில் வசிக்கின்றனர். இந்த லட்சணத்தில் தான் பாலியல் சுதந்திரம் பற்றி பிதற்றுகின்றனர். ஒரு பெண்ணும் ஆணும் குறைந்த பட்சம் தனிமையில் கதைக்கக் (பேசுவதற்குக்) கூட இடமற்ற மனித நாகரிகத்தில், சுதந்திரம் உண்டு என்று கூறும் கூக்குரல்கள் எல்லாம் உண்மையில் வசதியாக வாழும் முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகாரக் குரல்களே. ஆணும் பெணும் கூடிவாழ முடியாத இந்த நாகரிக ஜனநாயகத்தில் ஓரினச் சேர்க்கை பற்றியும், பலவிதமான பாலியல் வக்கிரம் பற்றியும் நியாயப்படுத்தி எழுதிக் கோருகின்ற சமூக நிலை, எந்த வர்க்கம் இதைச் சுதந்திரமாக அனுபவிக்க முடிகின்றதோ அந்த வர்க்கத்தின் வக்கிரம்தான் இவை. சுதந்திரத்தை மற்ற வர்க்கத்துக்கு மறுப்பவன் தான் பாலியல் சுதந்திரம் பற்றி பிதற்றுகின்றான்.


உங்கள் பிரச்சினை என்ன? என்று பீகிங், சாங்காய், சாங்கிங் (ஊர்ழுNபுஞஐNபு), காங்காங் போன்ற இடங்களில் வாழ்பவர்களிடம் கேட்டபோது (25.12.1998)73 அவர்களின் பதில்களைச் சதவீதத்தில் கீழ்க்கண்ட அட்டவணை:37-இல் காணலாம்.


அட்டவணை: 37

எது                                                   சதவீதத்தில்
வீடு                                                      19.48 %
பிள்ளை                                             18.3 %
வேலை                                              16.8 %
பணம்                                                 14.9 %
உடல்நலம்                                      12.8 %
படிப்பு                                                 11.9 %
காதல்                                                  9.4 %
பயணம்                                              7.6 %
வேலை உயர்வு                             7.2 %
நாட்டை விட்டு வெளியேறல் 5.8 %
நண்பர்களைத் தேர்தல்              5.3 %
மற்றவை                                          5.6 %


அத்துடன் இங்கு விவாகரத்தைப் பெண்கள் எடுத்தல் என்பது 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்படி சமூகப் பிரச்சினை விசுவரூபம் எடுக்கின்றது. வீட்டு நெருக்கடி பாலியல் நெருக்கடியை வளர்க்கின்றது. வீட்டு நெருக்கடி பிள்ளை பெறுவதைத் தடுக்கின்றது. இது விவாகரத்தை விரிவாக்குகின்றது. இப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புக்குள்ளாகி பிரச்சினைகள் விரிவாகின்றன. தீர்வு காணமுடியாத அளவுக்குச் சமூக நெருக்கடி மனிதர்களின் சுதந்திரமான கூட்டு வாழ்க்கையைச் சிதைக்கின்றது. ஆண் பெண் கூடி கதைத்து (பேசி) வாழ இடமற்ற இந்தப் பூமியில் நாம் எதைக் கோர வேண்டியுள்ளது? குறைந்த பட்சம் ஆணும் பெண்ணும் கூடிவாழ ஒரு சுதந்திரமான இடமல்லவா!. அதற்குப் பின் அல்லவா மற்றவை கோரப்பட வேண்டும். இதை எந்தப் பெண்ணியம் கோருகின்றது? எந்த பெண்ணியமும் கோருவதில்லை.


பாட்டாளி வர்க்கம் தான் பாலியல் நெருக்கடியில், இதை ஓர் அங்கமாகக் காண்கின்றது! அதற்காகப் போராடுகின்றது! அதை இந்த வர்க்கச் சமூகத்தில் தீர்க்கமுடியாது என்பதைக் காண்கின்றது. மாறாகச் சொந்த மக்கள் அமைப்பாவதால் மட்டுமே சொந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதையும் கூறி விழிப்பூட்டுகின்றது. மக்கள் அல்லாத ஆட்சி எப்படி மக்களின் பிரச்சனையைத் தீர்க்கும்? மக்கள் தமது சொந்த ஆட்சி ஊடாகவே சொந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதையும், தேவையைப் பூர்த்தி செய்வதையும் உறுதி செய்யும். அதற்காகப் போராடாத எந்தப் பெண்ணியமும் அன்னிய ஆணாதிக்க அமைப்புக்குக் காலாற சேவை செய்யும் கைக்கூலி பெண்ணியம்தான்.