பு கைத்தல் கட்டுப்பாட்டு தரகு அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் ஜீடித் மேக்காவின் அறிக்கையின் படி, உலகில் 110 கோடி பேர் புகைக்கின்றனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.
புகைத்தலும் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் 10-ஆவது உலக மகாநாட்டில், கி.பி. 1990-இல், புகைத்தல் மூலம் 30 இலட்சம் பேர் இறந்ததாகப் பிரிட்டிஸ் மருத்துவ இதழில் செய்தி வெளிவந்துள்ளது. அத்துடன் கி.பி. 2025 - 2030 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் வருட இறப்பு ஒரு கோடியாக அதிகரிக்கும் என்றும் அறிவித்துள்ளனர். அத்துடன் வளர்ச்சியடைந்த நாட்டில் புகையிலைக்குப் பலியாகும் அதே எண்ணிக்கை, வளர்ச்சியடையாத நாடுகளிலும் காணப்படும் என்று வேறு அறிவித்துள்ளனர்.
ஜனநாயகம், சொத்துடைய வர்க்கத்தின் பணப்பெட்டியை நிரப்புவதில் சார்ந்துள்ளதை இது காட்டுகின்றது. இன்று அரசுகள் மக்களைப் பலியிட்டு, உழைப்பை வரிகள் மூலம் சுரண்டும் வடிவமாகப் புகையிலை நீடிக்கின்றது. இதன் மூலம் ஏற்படும் நோய்க்கான செலவு, வருமானத்தைவிட அதிகமாகும். புகைத்தல் தனிமனிதச் சுதந்திரம் என்று வேறு விளக்கம் சொல்ல பின்நவீனத்துவ அன்னக்காவடிகள் காத்துக் கிடக்கின்றனர். இதை வேர் அறுப்பதும், மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதும் ஜனநாயக விரோதமானவையல்ல.
ஒவ்வொரு வருடமும் அந்தந்த நாடுகளில் வசிக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் ஆண்டொன்றுக்குப் பயன்படுத்தும் சிகரெட்டின் எண்ணிக்கையை அட்டவணை:30-இல் காணலாம். (12.5.2000)37
அட்டவணை: 30
ஆண்டு அமெரிக்கா சீனா ஜப்பான் பிரான்ஸ்
1960 2681 345 1317 991
1999 1633 1324 2630 1404
அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு இளம் சிறார்கள் 3,000 பேர் புதிதாகப் புகைக்கத் தொடங்குகின்றனர். தனிமனிதச் சுதந்திர ஜனநாயகம் வருடம் 10 இலட்சம் புதிய புகைப்போரை மூலதனச் சந்தையில் நுகர்வோராக உருவாக்குகின்றது.
வளர்ச்சியடைந்த நாடுகளில் நடக்கும் 35 முதல் 69 வயதுடைய மரணங்களில் 30 சதவீதம் புகைத்தல் மூலம் நிகழ்கின்றது. அமெரிக்காவில் வருடம் புகைத்தல் சார்ந்த காரணத்தால் நிகழும் மரணம் 4.35 இலட்சமாகும். கர்ப்பம் தரிக்கும் பெண் புகைக்கும் போது, 20 முதல் 30 சதவீதம் எடைகுறைந்த குழந்தையும், 14 சதவீதம் வளர்ச்சி குன்றி சிசுவின் இறப்பும் நிகழ்கின்றது. அதாவது சிசு இறப்பில் 10 சதவீதம் புகைத்தல் மூலம் நிகழ்கின்றது.
இந்த மரணம் பற்றி அறிவித்தல் எதையும் தொலைக்காட்சிகள் வெளியிடுவதில்லை. சிசு மரணத்தில் இது ஒரு முக்கியமான அம்சமாக இருந்தும், ஏகாதிபத்தியங்கள் இதை இருட்டடிப்பு செய்கின்றன. புகையிலை சார்ந்த மூலதனத்தின் ஜனநாயகம், இறந்து போகும் மனிதர்களைவிட முக்கியமானது என்பது உலகமயமாதலின் அடிப்படைக் கொள்கையாகும். மக்கள் அதன் ஆற்றல் உள்ள உழைக்கும் இயந்திரமாகவும், நுகர்வோராகவும் இருப்பதே ஜனநாயகத்தின் வடிவமாகும். இதைப் பாதுகாத்து எழுவதே தனிமனிதச் சுதந்திரமாகும்.
இந்தியாவிலுள்ள கேரளச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தில் எது அதிகரிக்கின்றது? என்பதை அட்டவணை: 31-இலிருந்து காணலாம்.
அட்டவணை: 31
வகை அதிகரித்த சதவீதம்
ஜனத்தொகை 17%
குடி 200%
குற்றம் 60%
தேசியக் குற்றம் 30%
1987, 1991-இல் பெண்கள் மீதான குற்றம் 37%
மாதம் 200 விவாகரத்து வழக்குகள் வருகின்றன. இந்த விவாகரத்தில் பெரும்பாலானவை குடியால் ஏற்பட்டவை. கி.பி. 1965-1966 தேசியத் தனிநபர் சராசரி நுகர்வுக்கான செலவு கேரளத்தை விட 34 சதவீதம் அதிகம். கி.பி. 1983-1984 கேரளத்தின் சராசரி செலவு தேசியச் செலவை விட 20 சதவீதம் அதிகமாகும். (6.11.1994)13
பிரான்சில் 20 சதவீதமான ஆண்கள் 17 சதவீதமான பெண்கள் 15 முதல் 19 வயதில் புகைக்கின்றனர். 20 சதவீதமான ஆண்கள் 4 சதவீதமான பெண்கள் 15 முதல் 19 வயதில் குடிக்கின்றனர். (1996)38 பிரான்சில் வழக்கமாகக் குடித்தல் பழக்கத்தைச் சதவீதத்தில் கீழ்க்கண்ட அட்டவணை:32-இல் காணலாம். (கிழமைக்கு இருதரம்)39
அட்டவணை: 32
வயது ஆண் பெண்
11-13 5% 2%
14-15 11% 7%
16-17 24% 11%
18 கூட 40% 12%
பிரான்சில் 50 இலட்சம் பேர் மோசமாகக் குடிப்பவர்களாக உள்ளனர். இதில் 20 இலட்சம் பேர் குடிக்கு அடிமையாகியுள்ளனர். இதனால் வருடாவருடம் 50,000 பேர் இறக்கின்றனர். இதில் 3,000 பேர் போதையால் வீதி விபத்தில் இறக்கின்றனர். மது மூலம் ஏற்படும் நோய்க்கான மருத்துவ செலவு வருடம் 8,000 கோடி பிராங் (இது இலங்கைப் பணத்தில் 92,000 கோடி ரூபாயாகும். இது இலங்கை மக்களின் தேசிய வருமானத்தை விட அதிகமாகும்.) செலவாகின்றது.
ஐரோப்பாவில் முதல்தரக் குடிகார நாடாகப் பிரான்ஸ் இருக்க, ஐரோப்பியர் வருடாவருடம் ஒவ்வொரு நபரும் 11.9 லீற்றர் (டவைசந) வீதம் குடிக்கின்றனர். பிரான்சின் மதுபானத் தொழிலில் 5 இலட்சம் பேர் ஈடுபடுகின்றனர். 15 இலட்சம் பெண்கள் மோசமான குடிகாரிகளாக உள்ளனர். இது கி.பி.1981 -இல் 8 இலட்சம் மட்டுமேயாகும். இதில் பெருமளவில் பாதிக்கப்படுவது திருமணம் செய்யாத பெண்களே. பொதுவாக ஆண்கள் பகிரங்கமாகக் கடைகளில் சமூக அங்கீகாரத்துடன் குடிக்க, 92 சதவீதமான பெண்கள் மறைவிடங்களில் ஒளிந்து கொண்டு குடிக்கின்றனர். இளம் சமுதாயத்தில் நாலுக்கு ஒருவர் 12-19 வயதுக்கு இடைப்பட்ட வயதில் குடிக்கின்றனர். 15 வயது இளம் சமூகத்தினர் நிரந்தரக் குடிகாரர்களாகவும், புகைப்போர்களாகவும், போதைவஸ்து பாவிப்போர்களாகவும் உள்ளனர். (15ஃ16.4.1999)17
ஆசிய நாடுகளில் வயது வந்தோரில் 60 சதவீதம்2 புகைப்போர்களாகவும் இருக்கின்றனர். பிரிட்டனில் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் 29 சதவீதத்தினரும், பெண்களில் 27 சதவீதத்தினரும் புகைக்கின்றனர். கிட்டத்தட்ட 90,000 மாணவர்கள் மிதமிஞ்சி குடிப்பதாகவும், ஆண்கள் வாரத்துக்கு 21 கிளாசும், பெண்கள் 14 கிளாசும் குடித்துப் போதையேற்றுகின்றனர். 15 வயது ஆண்களில் 11.5 சதவீதமானோர் அளவுக்கு அதிகமாகக் குடிக்கின்றனர்.
14-15 வயது பெண்களில் இருபதுக்கு ஒருவர் மோசமாகக் குடிக்கின்றார்.
ஜப்பானில் 14,000 மாணவ-மாணவிகள் மத்தியில் ஆனரி ஈவினிங் என்ற செய்தித்தாள் செய்த ஆய்வில் 17.3 சதவீதத்தினர் குடிகாரர்களாக இருக்கின்றனர். இது ஆண்களில் 24.8 சதவீதமாக இருக்கின்றது. 20 வயதுக்கு உட்பட்டோர் குடிக்கத் தடையிருந்த போதும், தனிமை, கவலை போன்ற காரணங்களால் குடிப்பதாகக் கூறினர்.2 சமூகச் சுதந்திரத்துக்குப் பதிலான தனிமனிதச் சுதந்திரம், குழந்தைகளை அன்னியப்படுத்திச் சிதைப்பதை இது காட்டுகின்றது.
கனபி (CANNABIS) என்ற போதை மருந்தைப் பிரெஞ்சு பாடசாலைகளில் மூன்றில் ஒரு மாணவ - மாணவியர் பயன்படுத்திப் பார்த்துள்ளனர். அதே நேரம் ஆறில் ஒருவர் இதற்கு அடிமையாகி உள்ளனர். பாரிசில் கி.பி. 1983-இல் புகைப் பிடிக்கும் மாணவர்கள் 43 சதவீதமாக இருந்துள்ளது. அதேநேரம் கனபி பயன்படுத்தியோர் கி.பி. 1983-இல், 19 சதவீதமாக இருந்தது. அது கி.பி. 1991-இல், 24 சதவீதமாக அதிகரித்துள்ளது. கி.பி. 1993-இல், குடிகாரராகப் பாடசாலையில் 17 சதவீதமாக இருந்தது. கி.பி. 1998-இல், 27 சதவீதமாக அதிகரித்துள்ளது. 15-19 வயதுக்குட்பட்ட வயதினர் கனபி பயன்படுத்தியது 30 சதவீதமாகும். இதில் இரண்டில் ஒருவர் தொடர்ந்து பயன்படுத்துபவராக மாறிவிடுகின்றார். 43 சதவீதமான பாடசாலைகளில் கனபி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 23 சதவீதத்தினர் மாதத்தில் ஒருமுறை இதைப் பயன்படுத்துகின்றனர். 15.5 வயதில் முதல் பயன்படுத்தல் தொடங்குகின்றது.
50 சதவீதமான மாணவர்கள் சிகரெட்டைப் புகைக்கின்றனர். புகை புகைப்பதில் ஐந்து மாணவர்கள் ஒருநாளைக்கு 10-க்கும் மேற்பட்ட சிகரெட்டைப் புகைக்கின்றார். 30 சதவீதமான மாணவ - மாணவிகள் மனநிலை பாதிக்கப்பட்டு மருந்து உட்கொள்கின்றனர். (29.4.1999)37
இதுவே மேற்கத்திய கட்டற்ற சுதந்திரப் பண்பாடாகும். பாடசாலைகளில் போதை பாவித்தல், புகைத்தல், குடித்தல், பாலியலில் ஆபாசமாக வாழ்தல் ஆகியவை மாணவ - மாணவிகளுக்குத் தெரிந்த ஒரே கல்வியாக உள்ளது. இந்தச் சீரழிவில் தான் உலகப் பண்பாட்டை உலகமயமாதல் மூலம் கட்டமைக்கின்றனர். மாணவ - மாணவிகளின் அனைத்துக் கல்வி அமைப்புகளும் கட்டற்ற, சுரண்டும் நலன் சார்ந்து விபச்சாரத் தளத்துக்குள் மனிதப் பண்பாடுகளைச் சிதைக்கின்றது.
கல்வி மீதான அறிவைவிட குடி, போதை, புகைத்தல், பாலியலில் வெம்பிப்போன சமூக அவலங்களை உற்பத்தி செய்கின்றனர். இந்த இளம் சமுதாயமே அடுத்த தலைமுறையை உருவாக்கும் போது அவை சமூக மதிப்பீட்டை மறுக்கின்றது. எல்லாவற்றிலும் அலட்சியம், கோமாளித்தனம் என்று அர்த்தத்தையே மறுத்து பொம்மையாக வெளிறிவிடுகின்றது. இதுதான் பின்நவீனத்துவம் (ஏகாதிபத்தியம்) கோரும் கழிசடைப் பண்பாடு. இதில் ஆண் - பெண் பேதம் இன்றி கட்டற்று இயங்குவதில் சளைத்துவிடவில்லை.
அதே நேரம் பிரான்சில் சமூக அவலங்கள் மனிதர்களை நிரந்தரமான குடிபோதைக்குள் நிலைநிறுத்துகின்றன. இதில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் சிக்கி விடுகின்றனர். கட்டற்ற ஏகாதிபத்தியச் சுதந்திரத்தில், பெண் தனிமையாக வாழும் வாழ்க்கை போதையைத் தீர்வாகக் கொடுக்கின்றது. முன்பு இருந்த ஆணாதிக்கத்தில் கிடைத்த ஒருதாரப் பாலியல் தீர்வு கூட மறுக்கப்பட்டு, புதிய சமூக அவலத்தைத் தனிமையில் சந்திக்கும் பெண்கள் குடிபோதையில் சிக்கித் தவிக்கின்றனர்.
தனிமை, அவலமான வாழ்க்கை ஆகியவை போதைக்குள் மெய்மறந்த கட்டற்ற, உணர்வற்ற ஜடத்தனத்தை ஏற்படுத்துகின்றது. இளைய சமுதாயம் சமூக விழுமியங்களைக் கைவிட்டுப் போதையில் சிக்கும் குடும்ப உறவுகளின் சிதைவுகள் தூண்டுகோலாக உள்ளது. சமுதாயத்தில் சுரண்டும் வர்க்கம் தனது நலன் சார்ந்து சமூக அமைப்பை ஒழுங்குபடுத்த, அவை குடும்ப அமைப்பையே தனித்தனி உலகமாக்குகின்றது. இது சமூகக் கூட்டை மறுத்து செயல் ஆற்றும் போது ஆண்கள் தற்கொலை, பெண்கள் விபச்சாரம், குழந்தைகள் போதை என்று எல்லாமுமாகச் சிதைகின்றது. இதைத்தான் உலகப் பண்பாடாக்க ஏகாதிபத்தியங்கள் ஒற்றைக்காலில் ஜனநாயகமயமாக்குகின்றன. இந்த ஜனநாயகம் தனிமனிதர்களை இயந்திரப் பொம்மையாகச் சிதைக்கின்றது. இது பண்பாட்டு ரீதியாக அனைத்தையும் விபச்சாரம் செய்கின்றது.