பிரான்சில் வீட்டில் உணவு தயாரிப்போர் யார்? என்பதை அட்டவணை:7 மூலமாகப் பார்ப்போம்.15


அட்டவணை: 7


நாட்கள்                                பெண்            ஆண்            மற்றவர்கள்
வேலை நாட்கள்                76                   14                        10
விடுமுறை நாட்கள்         65                   24                        11


பிரான்சில் பெண்கள் வீட்டு வேலையில் எத்தனை மணித்தியாலயம் ஈடுபடுகின்றனர்? என்பதை அட்டவணை:8-இன் வழியாகப் பார்ப்போம்.16


அட்டவணை: 8
ஈடுபடும் நேரம் மணித்தியாலம் எத்தனை சதவீதப் பெண்கள்


1 - 2 24.2%
3 - 5 32..2%
6 - 9 19.2%
10 - 19 8.6%
20 - 29 4.5%
30 - 39 0.4%


பிரான்சில் வீட்டுச் சமையலில் பாத்திரம் கழுவுவது யார்? என்பதை அட்டவணை:9-இலிருந்து பார்ப்போம். (3.3.1999)17


அட்டவணை: 9
யார் எத்தனை சதவீதம்


பெண் 51%
எல்லோரும் 29%
ஆண் 15%
பிள்ளைகள் 3%


பிரான்சு வீட்டில் எந்த வேலை அதிகமாக உள்ளது? என்பதை அட்டவணை:10-இன் வழியாகக் காணலாம். (28.2.1999)17


அட்டவணை: 10


எந்த வேலை                     எத்தனை சதவீதம்

அயன்பண்ணுதல்                          40%
கூட்டுவது                                         14%
உணவு தயாரித்தல்                     13%
பாத்திரம் கழுவுவது                   12%
உடுப்பு தோய்த்தல்                        6%
எதுவுமில்லை                                15%

 

குடும்பம், கணவன் அல்லது வீட்டு வேலையில் பெண்ணின் திருப்தி உற்றமை 87 சதவீதமாகும். (8.3.1999)17 இந்தியாவில் பொருளாதாரக் காரணத்தால் மத்தியதரக் குடும்பங்களில் வீட்டு வேலையை ஆண் பகிர்ந்து கொள்ள பெண்ணின் வேலைக்குத் துணையாக உள்ளது. (6.2.1991)13


பாரம்பரியமான பெண்ணின் கடமைகள் ஏகாதிபத்தியப் பண்பாட்டால் மாற்றத்தைச் சாதிக்கவில்லை. நவீன உபகரணங்கள் வேலையின் பளுவைக் குறைத்த போதும் பெண்ணின் கடமையைக் குறைக்கவில்லை. சமையல் கலையாக இருந்த போது அது பெண்ணின் உரிமையாக இருந்தது. ஆனால் அக்கலை பெண்ணிடம் இருந்து பறித்தெடுத்த ஏகாதிபத்திய நுகர்வுப் பொருளாதாரம் பெண்ணின் கடமையைத் தொடர வழிகாட்டுகின்றது.


சமையல் கலையைப் பெண்ணிடம் இருந்து அன்னியப்படுத்தி அதை ஆணின் உரிமையாக்கி அதை இலாபம் தரும் சந்தைக்குள் நகர்த்தியுள்ளது. இதன் மூலம் அக்கலை மேட்டுக்குடியின் ருசிக்கும் அதற்கேயுரிய கலையாகச் சீரழிந்து போனது. பெண்ணிடம் எஞ்சிக் கிடந்த சமையல் கலை அடிமட்ட மக்களிடம் இருந்து அன்னியப்பட்டது.


சமையல் கலையைப் பெண்ணிடம் இருந்து பறித்து சமையலை வெறும் இயந்திரத்தனமான நிலைக்குத் தரம் இறக்கியுள்ளது. ஏதோ உண்டால் சரி என்றளவுக்குச் சமையல் கலையை நவீன உபகரணத்தின் செயற்கை எல்லைக்குள் மாற்றிவிட்டது. இது பெண்ணின் வேலைப்பளுவைக் குறைத்த போதும் பெண்ணின் சமையல் என்ற கடமையை மாற்றிவிடவில்லை. வீட்டு வேலைகள் பொதுவாக இயந்திரமயமான போது குறைந்து செல்கின்றது. போடும் உடுப்புகள் தேய்த்தல் (அயன்) மட்டும் அதிக பளுவுள்ளதாக உள்ளது. இதற்கான இயந்திரங்கள் இன்மையே இதன் காரணமாக உள்ளது.


மிகவும் தரக் குறைவாக மதிக்கப்படும் வேலையில் பெண்ணின் பங்கே அதிகமாக உள்ளது. ஆணின் பங்கு குறைவானதாகவும் உள்ளது. இந்த ஆணாதிக்கக் கண்ணோட்டம் பெண் பொருளாதாரப் பலம் பெற்ற நிலையிலும், சுதந்திரமான செயல்பாட்டிலும் தொடர்கின்றது. இது ஆணாதிக்கப் பண்பாட்டு நெருக்கடியில் ஆண் - பெண் தொடர்ந்து சிக்கியுள்ளதைக் காட்டுகின்றது.


நவீன கண்டுபிடிப்புகளைப் பெண்ணின் பொற்காலமாகப் புகழ்வதும், ஆணாதிக்கத்திடமிருந்து விடுதலையாகக் காட்டவும் இந்த உலகம் தயங்கியதில்லை. அன்று "கிரேக்கக் கவிஞரான ~ஆண்டிப் பட்ரோஸ்|, எல்லா இயந்திரச் சாதனங்களுக்கும் மூல வடிவமாய்த் திகழும் கண்டுபிடிப்பாகிய தானிய அரைவை நீர் விசைச் சக்கரத்தின் கண்டுபிடிப்பை, அடிமைப் பெண்களுக்குச் சுதந்திரம் வழங்கும் கண்டுபிடிப்பென்றும், பொற்காலத்தைத் திரும்பக் கொண்டுவரும் கண்டுபிடிப்பென்றும் புகழ்ந்தார். அவர் அதை கவிதை மூலம் சொன்னதைக் கீழே காணலாம்.


தானியமரைத்து அசதியுற்ற கைக்கு ஓய்வளிப்பீர்!
ஓ, அரைவைப் பெண்களே, சற்று கண்ணயர்வீர்!
விடியலைச் சேவல் கூவியழைப்பது வீணாகட்டும்!
வனிதையர் வேலையை வனதேவதை செய்திடும், இது தேவனின் ஆணை
மெல்லடியெடுத்து தேவதை நடனமாட சக்கரங்கள் சுழன்றோடும்!
அச்சுகள் அசைந்து ஆரைகள் சுற்றும்
சுழலும் கற்களின் பாரம் இழுபடும்!
மூதாதையர் வாழ்வை மீண்டும் வாழ்வோம்!
களைப்பாறி இளைப்பாறி,"4


- என்று நவீனக் கண்டுபிடிப்பு பெண்ணை மட்டுமல்ல ஆணையும் விடுவிக்கும் என்ற நம்பிக்கையைக் கவிஞன் வெளிப்படுத்துகின்றான். கடந்து சென்ற பொற்காலம், ஓய்வான வாழ்க்கையை இது மீட்டு எடுக்கும் என்று கவிஞன் பாடுகின்றான். ஆனால் இதற்குப் பின்னால் மூலதனம் ஒன்று இருப்பதைக் கவிஞன் புரிந்து கொள்ளாத நிலைவரை இது அவனின் கனவாகவே இருக்கும். ஆனால் மூலதனம் ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் தனது மூலதனப் பெருக்கத்துக்கான உறுப்பாக மாற்றியமைத்தது. முன்பை விட இயந்திர வாழ்க்கையைப் புகுத்தினான். இதனால் மேலும் சுமை அதிகரித்தது. மேலும் புதிய நுகர்வுப் பண்பாடு புகுந்து கொண்டது. பெண் புதிய சுமையை நவீனத் தொழில் நுட்பம் ஊடாக ஏற்றுக் கொண்டாள். அத்துடன் அழகியல் பற்றிய நவீன வடிவம் பெண்ணை மேலும் இறுக்கமான சுமைக்குள் நகர்த்தியது. அழகுபடுத்துவது ஆணாதிக்கத்தைத் திருப்தி செய்யும் ஊடகமாக மாறியது. இது பின்னால் பெண்ணின் புதிய பண்பாடாகியது. பெண் எல்லையற்ற சுதந்திரமான கனவுகளில் நுகர்வுக் கவர்ச்சியில் சிக்கிக் கொண்டாள்.


இதனால் பெண்ணின் திருப்தி ஆண் மீது இருப்பதில்லை. இது பல்வேறு துறை சார்ந்து காணப்படுகின்றது. இந்தியாவில் மத்தியதர ஆண்கள் வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கு உதவுவது காணப்பட்ட போதும் இது பொருளாதார நலன் சார்ந்து இயங்குவதைக் காட்டுகின்றது. பொருளாதார ரீதியாகப் பெண்ணை விடுவிப்பது மட்டுமல்ல பண்பாட்டுக் கலாச்சாரப் புரட்சியின் அவசியத்தை, ஆணாதிக்கத்துக்கு எதிராக நடத்துவதன் அவசியத்தை இவை காட்டுகின்றது.


இதை மறுப்பவர்கள் ஆணிடம் இருந்து பெண்ணைத் தனிமைப்படுத்தும் ஆண் எதிர்ப்புக் கண்ணோட்டத்தை இந்தச் சமுதாயத்தில் முன்வைக்கின்றனர். இது தீவிரப் பெண்ணியம் என்று அடையாளம் காட்டப்படும் அராஜக வதை மற்றும் பூர்சுவா பெண்ணியத்தின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடாகும். வீட்டு வேலையைச் சமூக வேலையாக்கும் போக்கில் புரட்சியும், புரட்சிக்குப் பிந்திய கலாச்சாரப் புரட்சியும் ஆணாதிக்கத்துக்கு எதிராக நடத்தப்பட வேண்டும். இது சுரண்டல் அமைப்பில் இருந்து இலாப நோக்கமற்ற சமுதாயத் தேவையை உள்ளடக்கிய வகையில் புரட்சி அரசியல் மயப்படுத்தப்படவேண்டும். குறுகிய தனிமனித நலனுக்கு எதிராகச் சமுதாய நலனை அரசியல் ஆணையில் வைக்கவேண்டும்.


மார்க்ஸ் இது பற்றி "குடிவாழ் கூட்டில் மட்டுமே ஒவ்வொரு தனிநபரும் தனது அறத்திறன்களை எல்லாத் திசைகளிலும் வளர்த்துக் கொள்வதற்கான சாதனங்களைப் பெறுகின்றான். எனவே குடிவாழ் கூட்டில் மட்டுமே தனிநபர் சுதந்திரம் சாத்தியம்"18 இந்தச் சுதந்திரம் பற்றிய கண்ணோட்டமே மற்றைய பெண்ணியத்தில் இருந்து பாட்டாளி வர்க்கப் பெண்ணியத்தைத் துல்லியமாக வேறுபடுத்துகின்றது. சுதந்திரம் என்பது தனிமனிதனுக்காகவா? சமூகத்துக்காகவா? என்பதே அடிப்படையான கேள்வியாகும். இதுமற்றைய பெண்ணியத்தில் இருந்து வேறுபட்டு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சியை ஆணாதிக்கத்துக்கு எதிராக துல்லியமாக வேறுபடுத்தி பெண்ணை விடுவிக்கும்.