09212023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

மாணவ - மாணவிகளின் ஆணாதிக்கச் சீரழிவுப் போக்கு

பி ரேசிலில் பெற்றோர்களுடைய உழைப்பின் கூலி மீது பிள்ளைகள் அதிக அளவு ஆதிக்கத்தைச் செலுத்தி, ஏகாதிபத்தியச் சீரழிவின் சுதந்திர நுகர்வோராக உள்ளனர். 5,000 கோடி அமெரிக்க டொலரை, பெற்றோரிடம் இருந்து பெற்று, தமது நோக்கத்தை ஈடேற்றுவதாக ~வேஸா| பத்திரிகை தெரிவித்துள்ளது. 40 சதவீதமான குழந்தைகள் தமது பெற்றோரை உயர்வாக மதிப்பதை விட, உதைபந்தாட்ட (கால்பந்து) வீரர்களை உயர்வாக மதிக்கின்றனர். இவர்கள் வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எதைப் பார்ப்பது? எங்கு சுற்றுப் பயணங்கள் செல்வது? வீட்டுக்கு வராது வேறு வீடுகளில் தங்குவது என்று பெற்றோரின் அனுமதியின்றி வெம்பிச் சிதைகின்றனர். சமூகச் சுதந்திரத்தை மறுத்த தனிமனிதச் சுதந்திரச் சீரழிவின் பக்கத்தில் இதுவும் ஒன்று.


பிரேசிலில் 14 முதல் 19 வயதுக்குள்ளாகவே 33 சதவீதமான சிறுமிகளும், 64 சதவீதமான ஆண்களும் உடலுறவில் ஈடுபட்டு விடுகின்றனர். பெண்களின் உடலுறவு கடந்த பத்து வருடங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இளம் வயது சிறுமிகளில் 18 சதவீதமானோருக்குக் குழந்தைகள் இருப்பதும் அம்பலமாகியுள்ளது.


"இதோ இளைய பாரதம்" என்ற தலைப்பில் இந்தியா டுடே 45 இலட்சம் பேர் கொண்ட மாணவ-மாணவிகளை அடிப்படையாகக் கொண்டு 1,365 பேரை இந்தியா டுடே-மார்க் ஆய்வு செய்தது. இவர்கள் வியாபாரக் கார்ட்டைக் (பண அட்டையைக்) கொடுக்க கூடியவர்கள் என குறிப்பிட்டு பம்பாய், டில்லி, கல்கத்தா, சென்னை, நாசிக், அலகாபாத் ஆகிய நகரங்களை மையமாக வைத்து ஆய்வு நடத்தியது. அதன் விவரங்களை அட்டவணை : 5-இல் காணலாம். (21.1.1999)13


அட்டவணை: 5


குறிக்கோள் சதவீதத்தில்


நல்ல வேலை         60%
ச%க சேவை            18%
மணவாழ்க்கை       13%
புகழ்                               8%

 

இந்தியாவில் மேட்டுக்குடி மாணவ - மாணவிகளின் போக்குகளை ஆராய்வோம். குறிக்கோளைப் பொறுத்த வரை மேட்டுக்குடிகளின் கனவுகளையே இவை காட்டுகின்றது. சமுதாயத்தில் இருந்து அன்னியப்பட்ட, சமுதாயத்தைச் சூறையாட நினைக்கும் சுயநலம் மேலோங்கி மண்டிக் கிடப்பதைத் தொடர்ந்து ஆராய்வோம்.


பட்டம் பயனற்றது என்று 60 சதவீதமானவர்களும் போட்டியிடத் தயார் என்று 75 சதவீதமானவர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர். இதனடிப்படையில் தாம் கற்கும் கல்வி அர்த்தமற்றதென்பதையும் (60மூ), போட்டி போட்டு வெல்ல முடியும் (75மூ) என்ற மேட்டுக்குடியின் சமூக நிலைமையை துல்லியமாகக் கோடிட்டுக் காட்டுகின்றது. மேட்டுக்குடிகளின் கல்வி மீதான அதிருப்தி சமுதாயத்தின் கல்வி பற்றிய கொள்கையையே சிதைக்கின்றது. இதற்குட்பட்ட கல்வி மேலும் சீரழிவை நோக்கி நகர்வதுக்கு இவை வழிகாட்டுகின்றது.


ஒருபுறம் கோடிக்கணக்கில் குழந்தைகள் கல்வி பெறமுடியாத நிலையில், இன்னொரு புறம் கிடைக்கும் கல்வியே அர்த்தமற்றது என்ற நிலையில், இந்தக் கல்வியின் பின்னால் மனித அவலங்கள் விரிவாகின்றது. மக்களின் நலன் சார்ந்த கல்வி மறுக்கப்பட மக்களைச் சமூகத் தளத்தில் இருந்து அன்னியப்படுத்தும் அளவுக்கு இது சீரழிய, பெண்கள் மேலும் மேலும் ஆணாதிக்க வக்கிரத்தில் சிக்குகின்றனர். அண்மைக் காலமாக இந்து பாசிசம் கல்வியில் நடத்தும் மாற்றங்கள் மென்மேலும் கல்வியூடாகப் பெண்களை ஆணின் அடிமையாக்குகின்றது.


திருமணமான பின் பெண் வேலைக்குச் செல்லக் கூடாது என்ற கருத்தை ஆண்கள் 34 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர். அதே கருத்தைப் பெண்கள் 17 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.


திருமணத்துக்குப் பின் பெண் வேலைக்குச் செல்லக் கூடாது என்ற இந்த மேட்டுக்குடியின் கண்ணோட்டம் நிலப்பிரபுத்துவத்தின் எச்சமாகும். தரகு முதலாளித்துவத்தின் கோட்பாட்டை உள்வாங்கிய படி இந்த மேட்டுக் குடி இயங்கிய போதும், சமுதாயத்தில் நிலப்பிரபுத்துவத்துடன் கொண்ட ஏகாதிபத்தியக் காதல், பெண்ணை வீட்டு வேலைக்காரியாக இருக்கக் கோருகின்றது. பெண்ணின் கடமையைச் செய்வது பெண்ணுக்கு அழகு என்ற பண்பாட்டை ஆணாதிக்கம் கோரி பாதுகாக்கின்றது.


திருமணத்தின் போது வரதட்சணையைப் பெறுவேன் என்று 31 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.


திருமணத்தில் சீதனம் வாங்குவேன் என்று கூறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமானது. வாங்க மறுப்பேன் என்றோர் திருமணத்தின் போது வாங்கும் நிலைக்குள் செல்வது எங்கும் பொதுவாக உள்ளது. மாணவர்களின் இன்றைய உணர்வு திருமணத்தின் போது தீர்மானகரமானது அல்ல. ஏனெனின் ஆணாதிக்கக் குடும்பச் சொத்துரிமை ஆதிக்கம் பெற்றோர் இளைய சந்ததிக்கிடையில் உயிரோட்டமாக உள்ளது. இது நான் வாங்குவேன் என பிரகடனம் செய்யவும், வாங்க மாட்டேன் என்று கூறி வாங்கவும் ஆணாதிக்கச் சொத்துரிமை வழிகாட்டுகின்றது.


சிபாரிசு மூலம் பணம் சம்பாதிக்க முடியும் -                                  89 சதவீதம்
முன்னேற ஆடுற மாட்டை ஆடியே கறக்க முடியும் -              63 சதவீதம்
முன்னேற உதவக் கூடியவர்களைத் தெரிவது அவசியம் -     33 சதவீதம்


சமுதாயத்தில் உயிர்வாழும் ஆதாரம் சமுதாய நலனில் இருந்து தொடங்குவதில்லை. மாறாக எப்படியாவது பணத்தைப் பெற எதையும் செய்ய தயாரான கண்ணோட்டமாக இது உள்ளது. இதுவே இந்த மேட்டுக் குடியின் பொது கண்ணோட்டமாக உள்ளது. சமுதாயம் எந்தளவுக்கு மக்கள் விரோதமாக உள்ளதோ அந்தளவுக்கு அதற்குள் சென்று வாழ தயாராக உள்ளதை மாணவ - மாணவிகளின் போக்கு காட்டுகின்றது. எதிர் நீச்சல் போட்டு, சமுதாயத்தை எதிர்த்துப் போராடுவதை விட அந்தச் சகதிக்குள் புரண்டு எழும் கண்ணோட்டம் அனைத்து மக்கள் விரோத போக்கையும் கோருகின்றது.


பட்டப்படிப்பில் உள்ளோரில் மூன்றில் இரண்டு பேர் பெற்றோர் தெரிவு செய்பவரைத் திருமணம் செய்யத் தயார் என்கின்றனர். 33 சதவீதம் பேர் திருமணத்துக்கு முன் பாலுறவிலும் (sex), தன்னிச்சை உறவிலும் (homosex) ஈடுபட்டதுடன், இதே எண்ணிக்கை உடையோர் வரதட்சணை வாங்கத் தயாராக உள்ளனர்.


இந்தியப் பாரம்பரியப் பாலியல் கண்ணோட்டத்திற்கு எதிராகத் தம்மைப் பாலியலில் ஈடுபடுத்துகின்றனர். ஒருதாரமணத்தில் திருமணத்துக்கு முன் பாலியல் உறவைத் தவறாகக் கருதும் இந்தியாவில், மேட்டுக்குடி இதை மறுதளிக்கின்றது. மாறாக ஏகாதிபத்திய நுகர்வுக் கலாச்சாரத்தில் பெண்ணைப் பாலியல் பண்டமாகக் காண்பதும், நுகர்வதும் ஜனநாயகமாகின்றது. இந்த வகையில் ஏகாதிபத்தியச் சீரழிவில் பாலியல் வக்கிரத் தன்மை பெற்று இந்த மாணவ - மாணவிகள் மத்தியில் உயிரோட்டமான பண்பாடாகின்றது. சமுதாயத்தில் கடுமையான ஆணாதிக்க ஒழுக்கமுள்ள பாலியல் கட்டமைப்பும், ஏகாதிபத்தியச் சீரழிவுத் தன்மை கொண்ட விபச்சாரமும் ஒன்றுக்குள் ஒன்றாக, அக்கம்பக்கமாக நீடிக்கின்றது. இது திருமணத்துக்கு முன் பாலுறவு (sex) தவறில்லை எனக் கருதுகின்றது. அந்த வகையில் ஆண்கள் 48 சதவீதமானவர்களும், பெண்கள் 18 சதவீதமானவர்களும் பாலுறவு தவறில்லை என்று கூறியுள்ளனர்.


இவை சமுதாயத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியில் இருந்து தோன்றவில்லை. மாறாக வக்கரித்து போன மேட்டுக்குடியின் விபச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றியுள்ளது. இதில் இருந்தே நெருக்கமாக ஒருவருடன் பாலியல் ரீதியாக உறவைத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றேன் என்ற கருத்துக்கு ஆண்கள் - 33 சதவீதமானவர்களும், பெண்கள் 17 சதவீதமானவர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அப்படி உள்ள போது இன்னும் ஒருவருடன் ஓரிரு முறை உறவு உள்ளதை ஆண்கள் 37 சதவீதமானவர்களும், பெண்கள் 34 சதவீதமானவர்களும் ஒருவருடன் இருக்கும் தொடர்பைத் தாண்டி நுகர்வுப் பண்பாட்டில் விபச்சாரத் தளத்துக்குள் பாலியலில் ஈடுபடும் இந்த மேட்டுக்குடி, சமுதாயத்துக்குத் தலைமை தாங்குவது தான் மொத்தச் சமுதாயத்தினதும் அவலமாகும். இந்த விபச்சார அவலம் சமுதாயத்தின் அனைத்துத் துறையிலும் விபச்சாரத்தைப் புகுத்துகின்றது. இது அடிமட்ட வாழ்க்கையை நாசமாக்குகின்றது.


பெண்கள் இந்த விபச்சாரத்தனமான ஆளும் மேல்மட்டத்தின் பண்பாட்டுக்குள் சிக்கி சிதைகின்ற போது ஆணின் பார்வை பெண்ணை நுகர்வுப் பண்டமாக மாற்றுகின்றது. பெண்ணை அழகியலாகப் பார்த்து இரசித்து பாலியல் பண்டமாகக் கண்ட நிலப்பிரபுத்துவப் பண்பாட்டில் இருந்து ஏகாதிபத்தியப் பண்பாடு மேலும் பெண்ணை நுகர்வுக்குரிய பொது விபச்சாரத் தளத்துக்குத் தாழ்த்துகின்றது.


இந்தப் பண்பாடு நுகர்வை மூலதனமாக்குகின்றது. இது கவர்ச்சியைக் காட்டி முன்னேறலாம் என்கின்றது. இந்தக் கருத்தினை ஆண்கள் 37 சதவீதமானவர்களும், பெண்கள் 15 சதவீதமானவர்களும் ஆதரித்துள்ளனர். இந்த வகையில் கவர்ச்சியானது நுகர்வின் அடிப்படையாகின்றது. இந்தக் கவர்ச்சியை மூலதனமாக்கி எதைச் செய்யலாம் என்ற மேட்டுக்குடியின் கனவு எதையும் செய்ய தயாராகின்றது. நிர்வாணமாக போஸ் கொடுக்க தயாராக உள்ளது. இதை ஆண்கள் 11 சதவீதமானவர்களும், பெண்கள் 13 சதவீதமானவர்களும் சரியென்று கருத்து கூறியுள்ளனர். பாலியல் அங்கத்தை முன்னிறுத்தி காட்டி, கவர்ச்சி வடிவத்துக்கு ஆணைவிட பெண் அதிகமாகத் தயாராக உள்ள நிலைமையானது ஏகாதிபத்திய நுகர்வு, விபச்சார, விளம்பர உத்தியில் இருந்து உயிர்த்தெழுகின்றது. பாலியல் அங்கத்தை மூலதனமாக அடமானம் வைக்க தயாரான மேட்டுக்குடி கண்ணோட்டம், ஒட்டு மொத்தச் சமுதாயத்துக்கும் இன்று தீர்வாக மாற்றுகின்றது.

 
இன்றைய திரைப்படங்களில் வரும் ஆபாசம், பெண்ணின் கவர்ச்சிக் காட்சிகள் மிகவிரைவில் பகிரங்கமான பாலியல் உறவு காட்சிகளை அரங்கேற்றும். கவர்ச்சி காட்டவும், நிர்வாணமாக போஸ் கொடுக்கவும் பாலியலை மூலதனமாக்க மேட்டுக்குடி தயாராக உள்ள சமுதாய பார்வையுடன் கூடிய பண்பாட்டைத் தொடர்பு சாதனங்களில் மிகவிரைவில் அரங்கேற்றுவர். இது மேட்டுக்குடியின் பண்பாடாக இருப்பதாலும், அதுவே அதிகார வர்க்கமாக இருப்பதாலும், இந்தப் பண்பாடு இந்தச் சமுதாயத்தின் பொழுதுபோக்காக ஊடறுத்துச் செல்ல ஏகாதிபத்தியப் பண்பாடு உந்தித் தள்ளுகின்றது. இது சமுதாயத்தைப் பொது விபச்சாரத் தளத்துக்குள் அனைத்துத் துறைகளையும் மாற்றுகின்றது.


இது (விபச்சாரம்) தேவையானால் இலஞ்சம் கொடுப்பீர்களா? என்ற கேள்விக்கு ஆம் என்போர்களில் ஆண்கள் 43 சதவீதமானவர்களாகவும், பெண்கள் 34 சதவீதமானவர்களாகவும் தனது விபச்சாரத்தை இலஞ்சத்துக்குள் செய்கின்றது. யதார்த்த வாழ்க்கைக்குள் மேலும் ஊடுருவும் போது இந்த இலஞ்சம் கொடுக்கும் விபச்சாரக் கண்ணோட்டம் மேலும் அதிகமாகும். இது நாட்டை விற்று வாழத் தன்னைத் தயார்ப்படுத்துகின்றது. நாட்டை விற்று வெளிநாட்டில் படிக்க 51 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.


இந்த மேட்டுக் குடிகளின் கண்ணோட்டம் ஏகாதிபத்தியத்தின் வரவுக்காகத் தன்னையும், தனது பண்பாட்டையும் நிர்வாணமாக்குகின்றது. இதைப் பொதுப் பண்பாடாக்க அதிகாரத்தைக் கையில் எடுக்கின்றது. 3,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் குடும்பத்தை சேர்ந்தோரில் 23 சதவீதம் பேர் மட்டுமே அரசுத் துறையில் வேலையை நாடுகின்றனர். 21 சதவீதம் பேர் சொந்தத் தொழில் நடத்த விரும்புகின்றனர். தரவுகளை வழங்கியோரில் ஐந்தில் ஒருவர் தொழிலில் இருந்தனர். வேலைக்குத் தகுதி தேவையில்லை என்போர் 89 சதவீதமாகும். இந்தளவுக்குச் சமுதாயம் தகுதியை விட அதிகாரம் மூலமும், பணத்தைக் கொண்டும் அதிகாரத்தை கைப்பற்றுகின்றது.


அரசைவிட தனியார் துறையில் ஏகாதிபத்தியத் தரகாக உழைப்பதுக்கான கண்ணோட்டத்தைத் தமது மனநிலையிலேயே வெளிப்படுத்துகின்றனர். இது கல்வியைத் தனது நலனுக்கு இசைவாகச் சீரழிக்கின்றது. சமுதாயத்தைச் சூறையாடும் ஒரு நல்ல வேலை கிடைத்தால் 49 சதவீதம் பேர் பட்டத்தைத் தூக்கி எறியத் தயார் என்று பிரகடனம் செய்வதன் மூலம், கல்வியைச் சமுதாயத்துக்கு நிராகரிக்கின்றனர். இது ஏகாதிபத்தியம் கோரும் கல்வியைத் தனியார்மயமாக்கும் கண்ணோட்டத்துக்கு இசைவானது. இதில் இருந்தே பட்டம் பற்றி பிரச்சனையில்லை என்கின்றனர் 55 சதவீதம் பேர். இதில் பட்டத்துக்குத் துணையாகப் படிப்பதில் ஆண்கள் 42 சதவீதமானவர்களும் பெண்கள் 38 சதவீதமானவர்களும் கல்வியை இந்தளவுக்குச் சீரழிவாக்கிய மேட்டுக்குடி கண்ணோட்டம் பட்டப்படிப்பைச் சமுதாயத்தில் இருந்து அன்னியப்படுத்தி மேட்டுக்குடியின் பொழுது போக்காக மாற்றுகின்றது.


இது கல்லூரியில் பெற விரும்புவது எது? என்ற கேள்விக்குக் கிறுக்குத்தனமான பதிலைத் தருகின்றது. அந்தப் பதிலில் அதிக மதிப்பெண்ணுக்காக 57 சதவீதமும் தொடர்புக்காக 31 சதவீதமும் பொழுதுபோக்கு 11 சதவீதமும் என்ற விகிதத்தில் இருந்தது. கல்வியைத் தனக்கே மறுத்தபடி பொழுது போக்கை விரிவாக்குகின்றது. கல்வியை அர்த்தமற்றதாக்குகின்றது. பாலியலை நுகர்வாக்கி நுகருகின்றது. அனுபவிப்பைப் பொது விபச்சாரமாக்குகின்றது. இதை அனைத்துத் துறைக்கும் பண்பாடாக மாற்றுகின்றது. இதில் இருந்தபடி இந்த மேட்டுக்குடி அரசு அதிகாரியாக ஆசை என்பதற்கு 42 சதவீதமானவர்களும், உயர் அதிகாரியாக ஆசை என்பதற்கு 21 சதவீதமானவர்களும், தொழில் தொடங்க ஆசை என்பதற்கு 9 சதவீதமானவர்களும் பிரகடனம் செய்கின்றனர்.


இந்த உயர் வர்க்கத்தின் அதிகாரம், பணத்திமிர் சமுதாய நலனுக்கு எதிரானது. இந்த வர்க்கம் சமுதாயத்தை ஒட்டச் சுரண்டி சூறையாடவும், காட்டிக் கொடுக்கவும், கூட்டிக் கொடுக்கவும் தயாரான பண்பாட்டை வெளிப்படுத்துகின்றனர். இதைச் செயல்படுத்த அரசியலில் சேர விரும்புவோர் 48 சதவீதம் பேராக உள்ளனர். இந்த வர்க்கம் தான் ரவுடி அரசியலுக்கும் வன்முறை-வக்கிரத்திற்கும் காவலர்கள் ஆவர். இவர்கள் தான் இந்த ஜனநாயக அமைப்பின் தூண்கள். இவர்கள் சமுதாயத்தைத் தனக்கு இசைவாகத் தலைகீழாக நிறுத்தக் கோருகின்றனர். இந்த வர்க்கம் ஏகாதிபத்தியத்தின் தாராளமயமாக்கலை நல்லது என்போரில் ஆண்கள் 40 சதவீதமும் பெண்கள் 23 சதவீதமும் ஆவர். எந்த விதத்திலும் தேச நலன் கோராத இந்தப் பிரிவு நல்ல ஏகாதிபத்தியக் கைக்கூலிகளாக இருக்க வெட்கப்படவில்லை.
உங்களுக்குப் பிடித்தமானவர் யார்? என்ற கேள்விக்கு அளித்துள்ள பதில்களை அட்டவணை:6-இல் காணலாம்.


அட்டவணை: 6


பிடித்தமானவர் சதவீதம்


இராஜிவ் - 25.1 சதவீதம்
அசாருதீன் - 14.2 சதவீதம்
இரத்தின்டாடா - 9.1 சதவீதம்
பாபாஆம்தே - 8.2 சதவீதம்
மன்மோகன்சிங் - 7 சதவீதம்
ஹர்ஷத்மேத்தா - 4.7 சதவீதம்
நரசிம்மராவ் - 4.4 சதவீதம்
அருண்சௌத்ரி - 3.4 சதவீதம்
ஜெனரல் சுந்தர்ஜி - 1.2 சதவீதம்


இந்த வர்க்கத்தின் தலைவர்கள் உழைக்கும் மக்களின் விரோதிகளே. சமுதாயத்தின் ஒட்டு மொத்த அதிகார வர்க்கத்துக்குத் தலைமை தாங்கும் ஏகாதிபத்தியக் கைக்கூலிகளை இரசிக்கும் பண்பாடுதான், மேட்டுக்குடியின் உயர்ந்த பண்பாட்டுக் கலாச்சாரமாகும். இந்த மேட்டுக்குடியின் பண்பாட்டில் உருவான பாலியல் வக்கிரத்தையே கம்யூனிச எதிர்ப்பு கொண்ட பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களின் பாலியல் விளக்கமாக உள்ளது. இந்தக் கும்பல் கோட்பாட்டில் ஏகாதிபத்தியத்துக்காக உழைக்க, அவர்களின் வக்கிரத்தை விளக்கம் கொடுத்து பாதுகாக்க தயாராக உள்ளதைக் காட்டுகின்றது.


பி.இரயாகரன் - சமர்