. சிங்கள பேரினவாதமும் இராணுவ சர்வாதிகாரமும் கைகோர்த்து நிற்கின்றது.
12042020வெ
Last updateஞா, 29 நவ 2020 7pm

சிங்கள பேரினவாதமும் இராணுவ சர்வாதிகாரமும் கைகோர்த்து நிற்கின்றது.

இலங்கையில் ஒரு சிங்கள பேரினவாத இராணுவ சர்வாதிகாரம் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் மத்தியில் கூட, இந்த விடையம் உணரப்படவில்லை. அந்தளவுக்கு புலிப் பாசிசம் எதிர்முகம் காட்டி நிற்கின்றது. இந்த சிங்கள பேரினவாத பாசிச சர்வாதிகாரத்தை தடுத்து நிறுத்த, புலிப்பாசிசமே தடையாகி நிற்கின்றது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் ஒற்றுமையை உருவாக்குவதற்கு, புலிப்பாசிசம் தடையாக நிற்கின்றது.

 புலிகள் தமிழ்மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுக்கும் வரை, இந்த ஒற்றுமை என்பது எப்படி சாத்தியமற்றதோ, அந்தளவுக்கு தமக்கான சொந்த எதிரிகளையும் அன்றாடம் புதிதாக உற்பத்தி செய்கின்றனர். சிங்கள இனவாத பாசிச இராணுவ சர்வாதிகாரம் தமிழ் மக்களுக்கு மறுக்கின்ற அடிப்படை உரிமை மீறல்கள் மீதான எதிர்வினை என்பது, உள்ளடகத்தில் எதுவுமற்றதாகி விடுகின்றது.

 

நிலைமை ஒன்றை மீறி ஒன்று பரஸ்பரம் சமனிலைப்படுத்தப்படுகின்றது. அவை இனம் காணமுடியாத சூக்குமத்தில், அரசியலற்ற வெற்றுத் தளத்தில் சர்வசாதாரணமான நிகழ்வாக ஜீரணிக்கப்படுகின்றது.

 

பேரினவாத சிங்கள இராணுவ இயந்திரம், சர்வாதிகார பாசிச வழிகளில், சில இரகசிய நபர்களின் வக்கிரங்களுக்கு ஏற்ப பூரணமாக இயக்கப்படுகின்றது.

 

1. பெருமளவில் வகை தொகையின்றி தெரிவு செய்யப்பட்ட நபர்கள் இன்று கொல்லப்படுகின்றனர்.


2. பலர் அன்றாடம் காணமல் போகின்றனர்.


3. பெருமளவிலான கப்பமும், அதற்கான கடத்தலும் அன்றாட விடையமாகிவிட்டது.


4. தமிழர் என்ற அடையாளம், அவர்களை குற்றவாளி சமூகமாக்க போதுமான காரணமாகிவிட்டது. அந்த வகையில் பல செயல்பாடுகள் செய்யப்படுகின்து.


5. தமிழ் மக்களின் உரிமையைப் பற்றி பேசியபடி, அதன் கழுத்தை அறுத்துப் போடுகின்றனர். தமிழரின் உரிமைக்கான அனைத்து சமூகக் கூறையும் அழிப்பது இன்று விரிவாகிச் செல்லுகின்றது.

 

உண்மையில் தமிழ் மக்களின் தாலியறுக்கப்படுகின்றது. தமிழர்கள் விதைவைக் கோலம் பூண்டு, வெள்ளைச் சீலை அணிந்து நாதியற்று செயலற்று கிடக்கின்றனர். வாழ்விப்போர், வழிகாட்டுவோர் யாரும் கிடையாது. சொந்த மக்கள் தமக்காக, தாம் போராடும் உரிமையை, புலிகளிடமே இழந்து நிற்கின்றனர். இதை மீறினால் புலிப்பாசிட்டுகள் அவர்களை துரோகி என்கின்றனர். அதற்காகவே அவர்களை கொன்று போடுகின்றனர்.

 

இன்று தமிழ் மக்களின் அரசியல் உரிமையைப்பற்றி யாருக்கும் எந்த அரசியல் அக்கறையும் கிடையாது. புலி, அரசு இதைச் சுற்றியே இயங்கும் வௌ;வேறு பிரிவுகளின் பின்னால், பிழைப்புக்காக நக்குகின்ற கூட்டம் தான் அனைத்துமாகிவிட்டது. தமிழ் மக்களின் அன்றாட வாழ்வு, இருப்பு கேள்விக்குள்ளாகிவிட்டது. அச்சம், பீதி, மன உளைச்சல் இதைத் தவிர, தமிழ் மக்கள் வேறு எதையும் தமது வாழ்வாகப் பெறவில்லை. தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்வியல் உரிமைக்காக, அதை மறுப்பவர்களுக்கு எதிராக போராடாத வரை, இதுவே தமிழ் மக்களின் தலைவிதியும் கூட. இதற்கு வெளியில் தமிழ் மக்களின் உரிமையை பெற, வேறு எந்த மாற்று உண்மையும் கிடையாது.

 

பி.இரயாகரன்
08.06.2007