Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

book _7.jpgஉ லகில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் யுனிசேவ் கி.பி. 1995-இல் ஓர் அறிக்கையை முன்வைத்தது. அந்த அறிக்கையில் ஆரம்பக் கல்விக்கு 1,300 கோடி டொலரும், சுத்தமான தண்ணீருக்கு 600 கோடி டொலரும், சுகாதாரத்துக்கு 900 கோடி டொலரும், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு 600 கோடி டொலருமாக மொத்தம் வருடம் 3,400 கோடி டொலர் இருப்பின், உலகில் குழந்தைகளின் நிலைமைகளை மேம்படுத்த முடியும். ஆனால் இது உலகமயமாதலின் சுரண்டலில் சாத்தியமில்லை.


ஆணாதிக்கச் சுரண்டலைப் பாதுகாக்கவும், தனிமனித உணர்வுகளைத் தீர்க்கவும், சமூக விரோதத் தன்மையை வளர்க்கவும், செலவு செய்யும் தொகை சிகரெட்டுக்கு 40,000 கோடி டொலரும், குடிப்பதற்கு (பீர், வைன்) 24,500 கோடி டொலரும், கோல்ஃப் விளையாட 4,000 கோடி டொலரும், இராணுவத்துக்கு 80,000 கோடி டொலரும் பயன்படுத்துகின்றனர்.


ஒரு ஏ.கே.47 துப்பாக்கி செய்யும் பணத்தைக் கொண்டு 3,000 பேருக்குக் குருட்டுக் கண்ணை நிவர்த்தி செய்யும் விட்டமின் ஏ குளிசையை (மாத்திரையை) வாங்க முடியும். ஒரு கோடி கண்ணி வெடிகளைக் கொண்டு, அதாவது 10 கோடி டொலர்களைக் கொண்டு ஆறு விதமான தடுப்பூசிகளை 77 இலட்சம் குழந்தைகளுக்கு ஏற்றமுடியும். 23 எப்-16 விமானத்தைக் கொண்டு, அதாவது எண்பது கோடி டொலர்களைக் கொண்டு 160 கோடி மக்களுக்கு 10 வருடத்துக்கு ஐயடின் குறைவால் ஏற்படும் மனவளர்ச்சிக் குன்றலைத் தடுக்கமுடியும். நீர்மூழ்கி கப்பல் கொண்டு, அதாவது 240 கோடி டொலர் கொண்டு 4.8 கோடி மக்களின் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்த முடியும்.


இதை நாம் செய்யமுடியுமா எனின் இல்லை. இந்த ஜனநாயகம் இருக்கும் வரை இது சாத்தியமில்லை. இதைக் கோரும் ஜனநாயகத்தை மக்கள் சர்வாதிகாரம் கொண்டு நசுக்கும் போதே இந்தப் பணம் மக்களின் நலனுக்குப் பயன்படும். உலகமயமாதல் ஆணாதிக்கச் சுரண்டல் அமைப்பில் கட்டிப் பாதுகாக்கும் இந்த மனித விரோத, சமூகவிரோத, தனிமனித நலன்களைக் கொண்டிருக்கும் வரை, மக்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களை அடக்கும் ஜனநாயகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும். இதைப் புரியாதவரை, இதை எதிர்த்துப் போராடாத வரை, இதன் மீது அதிகாரத்தை நிறுவாதவரை இந்த ஜனநாயகம் மாறிவிடப் போவதில்லை. மாறுவதும் மாறாததும் ஒவ்வொரு தனிமனிதனும், தனிமனித வாதத்துக்கு எதிராக, சமூகமயமாகி போராடுவதில் தங்கிக் கிடக்கின்றது.


குழந்தைகளையிட்டு அக்கறைப்படாத உலக ஜனநாயகத்தில் கி.பி. 1990-இல், 2.5 இலட்சம் குழந்தைகள் கொரில்லாப் போராட்டக் களத்தில் இயங்கினர். 10 கோடி குழந்தைகள் பாடசாலை செல்ல வசதியற்றவர்களாக இருக்கின்றனர். 15 கோடி குழந்தைகள் பட்டினியுடன் படுக்கையை நாடினர். 3 கோடி குழந்தைகள் வீடற்ற நிலையில் வீதியில் படுத்துறங்கினர். இவைகளால் 40 ஆயிரம் குழந்தைகள் இறந்து போகின்றனர். ஐந்து கோடி குழந்தைகள் உணவற்ற நிறைகுறைவினால் மரணத்தின் பிடியில் சிக்கியிருந்தனர். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மையின் பால்சுரப்பை 4 முதல் 6 மாதத்துக்கு நீடிக்கும் உணவைக் கொடுப்பதன் மூலம், உலகில் 10 இலட்சம் குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்க முடியும். கி.பி. 1984-க்கு முந்திய பத்து வருடத்தில் 50 இலட்சம் குழந்தைகள் யுத்தத்தினால் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். 50 இலட்சம் பேர் வதிவிடத்தை (வாழ்விடம்) இழந்தனர். உலக வர்த்தக அமைப்பு மற்றும் யுனிசேவ் அறிக்கைகளின் படி கி.பி.1990-களின் குழந்தைகளின் மரணத்தைப் பார்ப்போம்.


அட்டவணை: 1


காகுலான் இருமல்                     - 5.1 இலட்சம்
சிசு தலைவிறைப்பு ஜன்னி    - 7.9 இலட்சம்
மலேரியா                                         - 10 இலட்சம்
மணல்வாரியம்மை                    - 15.2 இலட்சம்
இதர சுவாச நோய்கள்              - 22 இலட்சம்
வயிற்றுப்போக்கு நோய்           - 40 இலட்சம்
இதர காரணங்கள்                        - 42 இலட்சம்


மக்கள் விரோத, தனிமனித ஜனநாயகத்தில் ஒவ்வொரு வருடமும் வயிற்றுப் போக்கினால் ஐந்து வயதுக்கு உட்பட்ட 30 இலட்சம் குழந்தைகள் இறந்து போகின்றனர். கி.பி. 1993-இல் தொற்று நோய்கள் காரணமாக 165 இலட்சம் மக்கள் (இங்கு சில நாடுகளில் தொற்று நோய் சாதாரண இறப்பாக மதிப்பிடுவதால் இறப்பு அதிகமாகவே இருக்கின்றது.) இறந்து போனார்கள். இருபது கோடி குழந்தைகள் ஊட்டச் சத்து இன்றி பட்டினியில் தவிக்கின்றனர். 50 கோடி மக்கள் மனநோயால் துன்புறுகின்றனர்.


உலகில் 175 கோடி மக்கள் காச நோய் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட போதும், வறுமையில் வாழும் நாட்டு மக்களின் நோயாக இருப்பதால், சந்தை வசதியின்றியிருப்பதால், பன்னாட்டு மருந்து உற்பத்தியாளர்கள் இதற்கான நோய்த்தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய மறுக்கின்றனர்.


சமூகச் சுதந்திரத்தை மறுக்கும் உலகமயமாதலின் தனிமனிதச் சுதந்திரத்தில் இவைகளைச் சாதிக்கின்றது. இந்தச் சமுதாயத்தின் நாகரிக உற்பத்தியாகும் விளைவுகள் இவை. மூலதனத்தின் குவிப்பில் வெளியேற்றப்படும் கழிவுகள் இவை.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி


10 வயதுக்கும் 14 வயதுக்கும் உட்பட்ட 7.3 கோடி குழந்தைகள், அதாவது 13 சதவீதத்தினர் கடுமையான உடலுழைப்பில் வாழ, இந்த ஜனநாயக உலகம் நிர்ப்பந்திக்கின்றது. வீட்டில் வேலைக்காரர்களாக வேலை செய்யும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இதற்குள் உட்படுத்தப்படவில்லை. தொழிற்துறை சார்ந்த இந்தப் புள்ளி விபரமே பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. அதாவது 15 வயதுக்குக் கீழ்ப்பட்ட 20 முதல் 25 கோடி குழந்தைகள் கண் விழித்தவுடன் உடலுழைப்பில் ஈடுபடுகின்றனர். இந்த ஆணாதிக்கச் சுரண்டல் அமைப்பில் ஜனநாயகம் என்பது சுரண்டுவதற்கே ஒழிய, சிறுவர்களின் மென்மையான, அப்பாவித்தனமான, பிஞ்சு நெஞ்சங்களுக்கு அல்ல. குழந்தைகளை வாட்டிப் பிழிந்தெடுத்த மூலதனத்தில் தான் ஜனநாயகம் பீறிட்டுப் பிறக்கின்றது. இந்த அமைப்பின் அனைத்துப் பண்பாட்டு நாகரிகமும் இரத்தச் சாற்றை உள்ளடக்கியவை.


தனிமனிதச் சுரண்டலும், அதைப் பாதுகாக்கும் சமூகவிரோத யுத்தங்களும் மக்களுக்கு எதிராக மாறுவதால் குழந்தைகளை இந்தச் சுரண்டல் அமைப்பு சிதைக்கின்றது. கி.பி. 1995-களில் 18 வயதுக்குட்பட்ட 2 கோடியே 40 இலட்சம் சிறுவர்களைப் புலம் பெயர்ந்த அகதி முகாம்களில் அல்லாட வைத்துள்ளது. கடந்து சென்ற 10 வருடங்களில் 20 இலட்சம் குழந்தைகளைக் கொன்ற சுரண்டல் தனிமனித வாத ஜனநாயக அமைப்பு, 40 முதல் 50 இலட்சம் குழந்தைகளை ஊனமாக்கியுள்ளது. இந்த அவலங்களை இந்த உலகமயமாதல் ஜனநாயக அமைப்பில் தடுக்க முடியாது. இந்த உலகமயமாதலுக்குப் பதில் இந்த ஜனநாயகத்துக்குப் பதில் மக்கள் சர்வாதிகாரம் இதன் மீது நிறுவப்படும் போதே இவைகளை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.


இந்தியாவிலுள்ள உத்திரப் பிரதேசத்தில் மீர்ஸாபூர் என்ற மாவட்டத்தில் கம்பளம் பின்னும் தொழிலில் ஒரு இலட்சம் குழந்தைகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முதல் மூன்று வருடங்கள் சம்பளமின்றியும, அடுத்த வருடம் 15 மணி நேர வேலைக்கு மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை கொடுத்து கொடூரமாகச் சுரண்டப்படுகின்றனர். பெரோஸாபாத் கண்ணாடி தொழிற்சாலையில் 50,000 குழந்தைகள் வாட்டி எடுக்கும் 700 - 1500 டிகிரி வெப்ப நிலையில், தினமும் பன்னிரண்டு மணித்தியாலம் உழைக்கிறார்கள். இதற்குக் கூலியாகப் பெறுவது எட்டு முதல் பதினொரு ரூபாய் ஆகும். இவர்கள் தப்பியோடாது இருக்க மாஃபியா அமைப்பு கண்காணிப்பில் ஈடுபடுகின்றது. (1.1.1993)1 திருப்பூரில் தீப்பெட்டி, தோல் பதனிடல், பீடித்தொழில், பின்னல் ஆடை, சாயப் பட்டறை ஆகிய தொழில்களில் ஐந்து முதல் 15 வயதையுடைய 30,000 குழந்தைகள் 16 மணிநேரத்துக்கு மூன்று ரூபாய் கூலியில் கடுமையாகச் சுரண்டப்படுகின்றனர். (15.11.1994)1


கனடா டொரன்டோ நகரில் 10,000 தெருவோரப் பிள்ளைகள் வசிக்கின்றனர். கடந்த பத்து வருடங்களில் இது வேகமாக அதிகரித்துள்ளது. பெற்றோரின் விவாகரத்து, தனிமை, கட்டுப்பாடு, வறுமை போன்ற காரணங்களால் வீதிக்கு வந்த இவர்களில், 54 சதவீதம் பேர் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். ஐந்து பெண்ணுக்கு ஒருத்தி கருத்தரிப்பதாகவும், 80 சதவீதமானோர் போதைப் பொருள் பாவிப்போராக அல்லது குடிப்போராக இருக்கின்றனர். 67 சதவீதம் பேர் துர்ப்பிரயோகம் செய்யப்படுகின்றனர். 43 சதவீதம் பேர் தற்கொலை செய்ய முயன்றுள்ளனர்.2 நாகரிகமான, சுதந்திரமான மனிதர்கள் வாழ்கின்ற செல்வம் கொழிக்கும் உலகமயமாதலின் தலைநகரங்களின் பொதுத்தன்மை இவைகளே. ஏழைநாடுகளின் குழந்தை உழைப்புக்கு நிகரான சீரழிவுகளை இந்த ஜனநாயக அமைப்பு ஏற்படுத்தி, அதை மூலதனத்தின் கவர்ச்சிகரமான அழகியலின் பின்னால் மறைக்க முயன்றாலும் முடியாது என்பதுக்கு இவைகள் சாட்சியாகவுள்ளது.


இனி நாம் கி.பி. 1995-ஆம் ஆண்டின் கணக்குபடி குழந்தை உழைப்பினை உலகளவில் பார்ப்போம்.


அட்டவணை: 2


நாடுகள் குழந்தை உழைப்பு சதவீதம்


பூர்கினா பாசோ             51
புறூண்டி                           49
கமருன்                             25.2
கோட்ஈவார்                     20.5
எகிப்து                              11.2
எதியோப்பியா               42.3
கானா                                13
கினியா                             41
மாலி                                  54.5
நைகர்                                45.1
நைஜீரியா                        25.7
உகான்டா                         45.3
செனிகல்                          31.3
சாம்பியா                         16
சிம்பாவே                         29
பங்காளதேஷ்                30
பூட்டான்                           55
சீனா                                  12
இந்தியா                          15
இந்தோனேசியா          9.5
நேபாளம்                        45.1
பாக்கிஸ்தான்              17.5
துருக்கி                           24
தாய்லாந்து                   16.2
ஜெர்மனி                        20
பொலிவியா                 14.3

பிரேசில்                         16
குவாட்டமாலா           16.2
அதாயிட்டி                    25.3
மெக்ஸிக்கோ             6.7
நிக்கரகுவா                   14
டொமினிக்கன்குடியரசு 16
சாலமன் தீவுகள்       28.8
பாப்புவா நியூகினியா  19
பொலினீசியா              3.6
அல்பேனியா               1.1
அங்கேரி                        0.1
இத்தாலி                        0.3
போர்த்துக்கல்             1.7
ருமேனியா                   0.1


குழந்தை உழைப்பு முதலாளித்துவ மூலதனத்தைத் திரட்டுவதில் முக்கியமான பங்கை வகித்தது. மிக இளமையில் குழந்தைகளின் இயல்பான வாழ்க்கையைச் சிதைத்து இயந்திரத்தனமானதாக மாற்றுவதன் மூலம் மிகக் குறைந்த கூலிக்கு எதிர்ப்பற்ற இலகுவான சுரண்டலை நடத்த முடிகின்றது.


ஐரோப்பிய முதலாளித்துவப் புரட்சியைத் தொடர்ந்து வளர்ச்சி பெற்ற மூலதனம் தனது மூலதனத் திரட்சியைக் கொண்டு குழந்தை உழைப்பை, பெண்கள் உழைப்பை வாரம் ஏழு நாட்களும் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரத்துக்கு ஒட்டச் சுரண்டியதால் வேகமான வளர்ச்சி கண்டது.


இதை மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார். "முன்னதாகத் தொழிலாளி தன் சொந்த உழைப்புச் சக்தியை விற்றார். அதை அவர் பெயரளவில் சுதந்திரப் புருஷராய் விற்றார். இப்போது அவர் மனைவியையும் குழந்தையையும் விற்கிறார். அவர் அடிமை வியாபாரியாகியிருக்கிறார். குழந்தைகளின் உழைப்புக்கான கோரிக்கை முன்னதாக அமெரிக்கப் பத்திரிக்கை விளம்பரங்களில் காணப்பட்ட நீக்ரோ அடிமைகளுக்கான விவரக் கோப்புகளைப் போலவே இருக்கிறது." (மூலதனம் பாகம் : 1, புத்தகம் : 1, பக்கம்-536)4


இருபதாம், இருபத்தியோராம் நூற்றாண்டில் உள்ள நாகரிகத்துக்கு முந்திய நூற்றாண்டு பச்சிளம் கைகளின் உழைப்பால் வறண்டுபோன வறட்சியில் தான் இன்று குளிர்மையைக் கண்டுள்ளது. ஆணின் உழைப்பு மட்டுமே கொண்டு குடும்பத்தைப் பராமரிக்க போதுமான கூலியைப் பெற்று வாழ்ந்த நிலையை, முதலாளித்துவம் ஆணின் கூலியைக் குறைத்ததன் மூலம் பெண்ணின் உழைப்பை நிபந்தனையாக்கியது. மார்க்ஸ் மூலதனத்தில் குறிப்பிட்டது போல், "இயந்திரச் சாதனங்களைப் பயன்படுத்தி முதலாளிகள் முதலில் நாடிச் சென்றது மாதர்கள், குழந்தைகளின் உழைப்பையே. உழைப்புக்கும் தொழிலாளர்களுக்குமான அந்த வலிமை பொருந்திய பதிலி, பால் அல்லது வயது வேறுபாடின்றி தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் மூலதனத்தின் நேரடி ஆளுகையில் வேலைக்குப் பதிவு செய்து கொண்டதன் மூலம் கூலித் தொழிலாளர்களின் தொகையை அதிகமாக்குவதற்கான சாதகமாய் உடனடியாகவே மாற்றப்பட்டது. முதலாளிக்கான கட்டாய உழைப்பு குழந்தைகளது விளையாட்டின் இடத்தை மட்டுமல்லாமல், குடும்பத்தின் ஆதாரத்துக்கான மிதமான வரம்புகளுக்குட்பட்டு வீட்டில் நடக்கும் சுதந்திர உழைப்பின் இடத்தையும் அபகரித்துக் கொண்டது." (மூலதனம் பாகம்: 1, புத்தகம்: 1, பக்கம்-534)4


இது பெண்ணை வீட்டுக்கு வெளியில் உழைப்பில் ஈடுபடுத்த தொடங்கியதுடன், ஆண் - பெண்ணின் உழைப்பை மேலும் ஆழமாகச் சுரண்டியதோடு குழந்தைகளை உழைப்பில் இறக்க நிர்ப்பந்தித்தது. இதை மார்க்ஸ் மூலதனத்தில் எப்படி திருமணத்தின் வயதைக் கூட தீர்மானிக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றார்.
"நவீனத் தொழில் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்கின்ற நிலைமைகளில் தவிர்க்க முடியாத விளைவாகிய இளம் வயது திருமணங்கள் இந்தச் சமுதாயத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. சீக்கிரமாய் பிள்ளை பெற்று வேலைக்கு அனுப்புவதால், கிடைக்கக் கூடிய கூடுதல் வருமானமும் இதற்கு உதவுகிறது. (மூலதனம் பாகம்: 1, புத்தகம்: 2, பக்கம்-863)4


குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் உழைத்தால் மட்டுமே நாகரிக ஜனநாயக முதலாளித்துவ அமைப்பின் கூலியில் கஞ்சி குடிக்க முடியும் என்ற நிலைமையை மூலதனத் திரட்சி நிபந்தனையாக்கியது. இதற்கு எதிரான போராட்டத்தை ஆண் தொழிலாளர்கள் தமது எதிர்ப்பின் மூலம் வெளிப்படுத்தினர். இது ஆணாதிக்கச் சிந்தனைக் கோட்பாட்டு மரபு வழிகளில் தனது எதிர்ப்பைக் காட்டிய போதும் இந்தப் போராட்டத்தின் நியாயமான பக்கம் நிராகரிக்க முடியாதவையாகும். ஆண்கள, பெண்களின் கடின உழைப்பை மட்டுமல்ல சொந்தக் கடின உழைப்பின் வாழ்க்கையைக் கூட சகித்துக் கொள்ள முடியாத பட்டினியில் இருந்தே பெண்களுடைய உழைப்பின் பாத்திரத்தை எதிர்த்தனர்.


அன்று "தென் அமெரிக்காவிலுள்ள சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அன்றாடம் செய்ய வேண்டிய வேலையானது 450 அடி ஆழத்திலிருந்து 180 முதல் 200 இறாத்தல் எடையுள்ள உலோகச் சுமையைத் தோளில் தூக்கி மேலே தரைமட்டத்துக்குத் கொண்டு வருவதாகும். அவர்கள் ரொட்டியும் மொச்சையும் மட்டும் உண்டு வாழ்கின்றனர். ரொட்டியை (பாண்) விரும்பி உண்பதால் இவ்வேலையைச் செய்யமுடியாது எனக் கருதிய அதிபர்கள் மொச்சையை உண்ணுமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.


24 வயதுடைய இளம்பெண் இரண்டு சிறுமிகளின் உதவியுடன் நாளொன்றுக்கு 2,000 ஓடுகள் செய்வது வழக்கம். அப்பெண்ணுக்கு உதவியாக இரு சிறுமிகள் களிமண் சுமந்தனர், ஓடுகளை அடுக்கினர். 30 அடி ஆழத்திலிருந்து களிமண் குழிகளில் வழுக்கலான சரிவுகளில் நாளொன்றுக்கு 10 டன் சுமந்தனர். பின்னர் 210 அடி தூரத்துக்கு அதைச் சுமந்து சென்றனர்..."4 இப்படியாக ஆண்கள் மட்டுமல்ல பெண்களினதும், குழந்தைகளினதும் இழிவான துன்பத்தைச் சகிக்க முடியாத ஆண்கள், இந்த உழைப்பை எதிர்த்தனர். கடுமையாக உழைத்து வரும் ஆண் வீட்டில் ஆற்றிக் கொள்ள முடியாத நெருக்கடியில் சிக்கிய போது அதைக் கண்டு கோபம் கொண்டான். இதனால் பெண்ணை மீண்டும் வீட்டுக்கு அனுப்பும் படி போராடினான்.


பெண்களின் உழைப்பைச் சுரண்டி சூறையாடிய முதலாளித்துவம் குழந்தைகளையும், கணவனையும் பராமரித்த பெண்ணின் நிலையை முதலாளித்துவம் தனது சுரண்டும் நலனுக்காக மறுதலித்ததேயொழிய, பெண்ணின் விடுதலைக்காக அல்ல. இது பெண்ணைப் புதிய பரிணாமத்துக்கு நகர்த்தியது. "அதீத இறப்பு வீதங்களுக்கு வட்டார அளவிலான காரணங்கள் ஒருபுறமிருக்க, பிரதானமாக, தாய்மார்கள் வீட்டை விட்டுச் சென்று வேலை செய்வதும், அதனால் ஏற்படுகின்ற கவனிப்பின்மையாலும் தகாத முறைகளாலும் விளையும் ஊட்டப் பற்றாக்குறை, பொருந்தா உணவு, அபின் ஊட்டி உறங்கச் செய்தல் போன்ற கேடுகளும் காரணங்களாகும். மேலும் தாய்க்கும, சேய்க்கும் இடையே இயற்கைக்கு ஒவ்வாத பிணக்கு தோன்றுகின்றது. இதன் விளைவாக, வேண்டுமென்றே பட்டினி போடுவதும், நஞ்சூட்டுவதும் நிகழ்கின்றன."4 இதில் இருந்து தான் ஆண் தொழிலாளர்கள், பெண் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை எதிர்த்தும, பெண்ணை மீண்டும் வீட்டுக்கு அனுப்பக் கோரியும் போராடினர்.


இந்தப் பக்கத்தில் இருந்த பாரம்பரிய ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை, பாட்டாளி வர்க்கத்தின் போதனையூடாகத் திருத்தி மேலும் சரியாகப் போராடக் கற்றுக் கொண்டது. முதலாளித்துவப் பெண்ணியல் கோட்பாட்டாளர்கள் எப்போதும் இந்த ஆண் தொழிலாளர்களின் போராட்டத்தைப் பாட்டாளி வர்க்கப் போராட்டத்துக்கு எதிராக நிறுத்துகின்றனர். இதை இன்று முன்நிறுத்தும் போது அக்காலகட்டத்தின் யதார்த்த நிலையைத் திட்டமிட்டு மூடி மறைக்கின்றனர். பெண் உழைப்பால் ஆணின் கூலி மேலும் வீழ்ச்சி உற்றதையும், பெண்ணின் உழைப்பை இரட்டிப்பு ஆக்கியதையும், குழந்தை உழைப்பின் மூலம் சூறையாடும் வடிவத்தைத் திட்டமிட்டே மூடிமறைக்கின்றனர். பின்னால் ஆண்கள் இப்படி என்று நிறுத்துவதன் மூலம் முதலாளித்துவச் சுரண்டல் வடிவத்தைக் கட்டிப்பிடித்து பாதுகாக்கின்றனர்.


குழந்தை உழைப்பை முதலாளித்துவ அமைப்பே உருவாக்கியது மட்டுமின்றி பெண்ணையும் சுரண்ட பெண்களை வீட்டுக்கு வெளியில் கொண்டு வந்தது. இந்தப் பக்கத்தைக் கவனமாக மறைத்தபடி ஆண் தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசமாக்கியதையும், இதன் ஊடாக மொத்தக் குடும்பத்தையும் சிதைத்ததையும் கவனமாக மூடிமறைக்கின்றனர். "குடும்பத்தின் ஜீவனத்துக்காக, ஒருவருக்குப் பதில் இப்போது நால்வர் உழைக்க வேண்டும் என்பதோடு, முதலாளிக்கு உபரி - உழைப்பும் தரவேண்டும்."4 இதைத்தான் அன்று மூலதனம் பெண் உழைப்பு, குழந்தை உழைப்பின் ஊடாகச் சாதித்தது.


பாட்டாளிவர்க்கம் இந்த ஆண் தொழிலாளர்களின் தவறான பக்கத்தைத் திருத்தியதுடனும், பாட்டாளி வர்க்க உணர்வை ஊட்டியதுடனும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஈவிரக்கமின்றி சுரண்டப்படுவதையும், பொதுவான சுரண்டல் வடிவத்தை எதிர்த்தும் போராடக் கற்றுக் கொடுத்தது. இதன் மூலம் குழந்தை உழைப்பு படிப்படியாகத் தடை செய்யப்பட்டது மட்டுமின்றி பெண்களின் கூலியை ஆணுக்குச் சமமாகக் கொண்டு வரும் போராட்டம் இன்று வரை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதில் பெண்களும் ஆண்களுடன் சேர்ந்து, தலைமை தாங்கிப் போராடும் புதிய வடிவத்தைப் பாட்டாளி வர்க்கம் கற்றுக் கொடுத்தது. இதை மறுக்கும் பெண்ணாதிக்கம், பெண்ணின் தனித்துவத்தை மீள (முன்பு ஆணாதிக்கம் பெண்ணைத் தனித்துவமாக ஒதுக்கி வைத்திருந்தது.) சுதந்திரமாகக் கோருகின்றது.
மார்க்ஸ் இந்த ஆண் தொழிலாளர் போராட்டத்தையும் இதனால் குழந்தை உழைப்பு தடை செய்யப்பட்டதையும் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார். "இயந்திரச் சாதனமானது, தொழிலாளர் தம் அணிகளில் மாதர்களையும் குழந்தைகளையும் அளவுக்கதிகமாகச் சேர்த்ததன் மூலம், மூலதனத்தின் கொடுங்கோன்மைக்கு ஆண் தொழிலாளர்கள் பட்டறைத் தொழிற்காலத்தில் தொடர்ந்து காட்டி வந்த எதிர்ப்பை இறுதியில் உடைத்திடுகிறது." (மூலதனம் பாகம்: 1, புத்தகம்: 1, பக்கம்-545)4


தொழிலாளர் வர்க்கம் பலம்பெற்ற நாடுகளில் குழந்தை உழைப்பு ஒழிக்கப்படுவதைத் தீவிரமாக்கியது. நவீன தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளைச் சாதகமாகக் கொண்டு முதலாளித்துவ அமைப்பு தன்னை மீள அமைத்துக் கொண்டு புரட்சியைப் பின் தள்ளியது. தொழிலாளர் வர்க்கம் பலவீனமான மற்றும் முதலாளித்துவப் புரட்சி நடைபெறாத நாடுகளில் குழந்தை உழைப்பு சதையுள்ள சுரண்டலாக உள்ளது. முதலாளித்துவ நாடுகளில், இதை ஒழிக்கத் தொழிலாளர் வர்க்கம் போராடிக் கொண்டிருந்த போது, இந்த நாடுகளின் காலனிகளில் இதை முழு வீச்சில் ஏகாதிபத்தியங்கள் கட்டிக்காத்து ஊக்குவித்தன.


உலகளவில் சோவியத் புரட்சியின் தாக்கம, பின்னால் தொடர்ந்த பாட்டாளி வர்க்கப் புரட்சிகள், காலனிக்கு எதிரான தேசிய விடுதலை எழுச்சிகள் குழந்தை உழைப்பை ஒழிப்பதை நிபந்தனையாக்கியது. இங்கு ஏகாதிபத்தியம் இதை உயிருடன் வைத்திருக்க, பாதுகாக்க போராடியது. பின்னர் காலனித்துவக் கைமாற்றல்களின் பின்னாலான நவகாலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ வடிவத்தை உருவாக்கியது. இது ஏகாதிபத்திய நாடுகளுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்ததன் மூலம் குழந்தை உழைப்பு கேள்விக்கு உள்ளாகவில்லை.


ஆனால் இன்று வீச்சுபெற்றுவரும் ஏகாதிபத்திய உலகமயமாதல் மூலதனத் திரட்சியை நேரடியாகத் தேசம் கடந்து திரட்டும் புதிய வடிவத்தில் குழந்தை உழைப்பை இடைஞ்சலான வடிவமாகக் காண்கின்றது. தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தியைச் சர்வதேசமயமாக்கி சுரண்டுவதால், மூன்றாம் உலகில் மலிவுக் கூலியில் உற்பத்தி செய்து மேற்கில் மூலதனத்தைத் திரட்ட முடிகின்றது. இந்த மூலதனத் திரட்டலில் குழந்தை உழைப்பின் ஊடாகத் திரட்டப்படுகின்ற போது, அது சொந்த நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் கடுமையான எதிர்ப்பை எதிர்த்து விற்க முடியாத பகிஸ்கரிப்பை (புறக்கணிப்பை) எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் சொந்த நாட்டில் உற்பத்தியான பொருளை மூன்றாம் உலகில் விற்கின்ற போது, அந்நாட்டில் சந்தையின் பெறுமானத்தில் மூலதனத்தைத் திரட்ட முடியாத நிலைக்குள் சிக்கிக் கொள்கின்றது.


மூன்றாம் உலகில் தேசிய முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவ உற்பத்திகள் மலிவுக்கூலியான குழந்தை உழைப்பு சார்ந்து ஏகாதிபத்தியச் சந்தை வடிவத்தைப் போட்டிக்குள்ளாக்குகின்றது. இந்த உழைப்பை ஏகாதிபத்தியம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மேற்கு பாட்டாளி வர்க்கத்தின் போராட்டமும், மூன்றாம் உலகில் மலிவான உற்பத்தியும் ஏகாதிபத்தியச் சந்தையை நெருக்கடிக்கு உள்ளாக்கி, மூலதனத் திரட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது.


இதை ஏகாதிபத்திய அமைப்பு சகித்துக் கொள்ள முடியாத நிலையில் குழந்தை உழைப்புக்கு எதிராக மனித வரலாற்றில் சுரண்டும் வர்க்கம் முதன்முதலாகக் குரல் கொடுக்கின்றது. இது பெருமூலதனம் சிறுமூலதனத்துக்கு எதிராகத் தன்னை அமைப்பாக்கி போராட்டத்தைக் கோருகின்றது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டக் கோட்பாட்டுக்கு உள்ளிருந்தே சிதைத்த முதலாளித்துவம், பாட்டாளிவர்க்கத்தின் வீறுமிக்க போராட்டத்தை அதன் அரசியல் உள்ளடக்கத்தில் சிதைத்தது. இதனால் குழந்தை உழைப்புக்கு எதிரான ஏகாதிபத்தியப் போராட்டத்தை, அரசியல் மயப்படாத தொழிலாளர் வர்க்கம் ஏகாதிபத்திய அரசியல் உள்ளடக்கத்தில் ஏற்றுள்ள நிலை பரவலாகக் காணப்படுகின்றது.


ஆனால் பாட்டாளி வர்க்கம் தன்னையும், தனது கோட்பாட்டையும் வர்க்கப் போராட்டத்தில் ஒழுங்கமைத்து, குழந்தை உழைப்புக்கு எதிரான தனது நிலைப்பாட்டைத் தெளிவாக ஒழுங்கமைக்கின்றது. பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்தியக் குழந்தை உழைப்பின் ஒழிப்பை நிபந்தனையின்றி எதிர்க்கின்றது. குழந்தை உழைப்புக்குக் காரணமான சமூக நிலைமையை மாற்றாமல் குழந்தை உழைப்பை ஒழிப்பதானது அந்தக் குழந்தையினதும், குடும்பத்தினதும் வாழ்க்கையை மேலும் சிதைக்கும் என்பதை அம்பலப்படுத்துகின்றது. ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பு தான் மூன்றாம் உலகில் குழந்தை உழைப்பைப் பாதுகாக்கும் மறைமுக நேரடி வடிவம் என்பதை அம்பலப்படுத்துகின்றது.


இதையொட்டி மார்க்ஸ் "பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இருக்கும் நிலையில், குழந்தைத் தொழிலாளர்களைப் பொதுவாகத் தடை செய்வது ஒத்துவராது, எனவே அது ஒரு வெற்று அவா"5 என்று கூறினார். மேலும் பெற்றோர்கள் குழந்தைகளைச் சுரண்டுகின்றனர் என்பதையும் கீழ்க்கண்டவாறு மறுக்கின்றார் மார்க்ஸ். அதாவது "முதலாளித்துவச் சுரண்டல் என்பது பெற்றோர் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால் விளைந்தது அல்ல. மாறாக முதலாளியின் சுரண்டல் பாங்கே பெற்றோர்களின் அதிகாரத்தின் பொருளாதார அடிப்படையைப் பறித்து விட்டதால், குழந்தைகள் மீது, தங்களது உண்மையான அதிகாரத்தை அவர்கள் விஷமத்தனமாகத் தவறான தேவைக்குப் பயன்படுத்த வகை செய்தது."5 மார்க்ஸின் இந்தக் கருத்தைத் தன்னார்வக் குழுவைச் சேர்ந்த ஏகாதிபத்தியத் தொண்டர் அமைப்புகள் குறிப்பிட்டு மார்க்ஸ் கருத்து தவறானது என்று விமர்சிக்கின்றது. ஏனெனின் இன்று மேற்கில் குழந்தை உழைப்பு ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், கல்வி கிடைத்துவிட்டதாகவும் காட்டுகின்றனர். ஆனால் வரலாற்றில் அக்காலத்தில் இவை கிடைத்துவிடவில்லை.


மாறாக மார்க்ஸ் வழிகாட்டிய பாட்டாளி வர்க்கம் தீவிரமான நீண்ட போராட்டத்தை (இன்று இதை எழுதும் தன்னார்வக் குழுவுக்குப் பணம் வழங்கும் அமைப்புக்கு எதிராக நீண்ட தீவிரமான போராட்டத்தை) நடத்தியே இதைச் சாதித்தது. கைக்கூலித் தனத்தில் குழந்தை உழைப்பு பற்றி எழுதிய அந்த நூல் தனது சொந்த வரலாற்றையே போராடிய வர்க்கத்துக்கு எதிராக நிதி ஆதாரத்தில் கட்டமைத்து சோடித்துக் காட்டிப் பாதுகாக்கின்றனர். இன்று பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்குக் குழந்தை உழைப்பு தடையாவதால் எதிர்க்கும் ஏகாதிபத்தியத்தின் நிலையை, அன்றைய பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக நிறுத்தி ஏகாதிபத்திய அமைப்பைக் கைக்கூலித்தனத்தில் நிறுவுகின்றனர்.


பாட்டாளி வர்க்கம் சொந்த நாட்டில் குழந்தை உழைப்பை எதிர்த்து தேசியப் புரட்சியைக் கோருகின்றது. தேசியப் புரட்சி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்துகின்ற போது தேசிய முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவுவதன் மூலமும், சொந்த வர்க்கத்தின் தலைமையில் ஆட்சியை அமைத்து குடும்பத்தின் பொருளாதார நிலைமையை உயர்த்துவதன் மூலமும் குழந்தை உழைப்பை ஒழிக்கப் போராடுகின்றது.


சில மூன்றாம் உலக நாடுகளில் 50 சதவீதத்துக்கும் மேல் குழந்தை உழைப்பில் ஈடுபடும் நிலைமை என்பது தன்னிச்சையாக பெற்றோர் விரும்பி செய்தவையல்ல. ஒரு தாய் தனது குழந்தையைக் கணவனுடன் சேர்ந்து சூறையாடும் உழைப்பில் ஈடுபடுத்தும் ஈவிரக்கமற்ற இயந்திரங்கள் அல்லர். அவர்கள் இயற்கையாகக் குழந்தை மீதான பாதுகாப்பில் அதிகமாக உயிராற்றலை வெளிப்படுத்துபவர்கள். இது உயிரியல்விதி. தாய்மையின் உயர்ந்த பண்பையும் அதன் வெளிப்பாட்டையும் பட்டினி போட்டு அழிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சுரண்டல் கொடூரத்தின் மூலம், உயிர் வாழ்தலுக்காக உழைத்தலை நிபந்தனையாக்குகின்றது. இந்த இளம் வயது உழைப்பு, பற்றாக்குறையிலான வாழ்க்கையையும் குழந்தை மரணத்தையும் தீவிரமாக்குகின்றது.


மார்க்ஸ் இதுபற்றி "..உண்மையில், பிறப்பு-இறப்பு எண்ணிக்கை மட்டுமல்லாமல் குடும்பங்களின் அறுதி அளவும் கூட கூலி மட்டத்தோடு எதிர் விகித உறவு கொண்டுள்ளது. எனவே தொழிலாளர்களின் வௌவேறு வகையினர் பயன்படுத்தும் வாழ்வுச் சாதனங்களின் அளவோடும் எதிர்விகித உறவு கொண்டுள்ளது. முதலாளித்துவச் சமுதாயத்தின் இந்த விதி காட்டுமிராண்டிகளுக்கு, ஏன், நாகரிகக் குடியேற்றக்காரர்களுக்கே கூட அபத்தமானதாகவே தோன்றும். தனிநிலையில் பலமற்றதாகவும் ஓயாமல் வேட்டையாடி ஒழிக்கப்படுவதாகவும் இருக்கும் மிருகங்கள் தமது இனத்தை வரம்பின்றிப் பெருக்கிக் கொள்கின்றன அல்லவா, அதைத் தான் இந்த விதி நமக்கு நினைவுபடுத்துகிறது"4 என்றார். இதனால் இயற்கையான, அதிக அழிவைக் கொண்ட உயிரினங்கள் அதிகமாக பெருகுவது என்ற இயற்கையின் பரிணாம விதிக்கமைய குழந்தை பிறப்பு அதிகரிக்கின்றது. இது மட்டுமே உயிர்வாழும் அந்த இனமக்கள் கூட்டத்தின் உயிர் வாழ்தலுக்கான அடிப்படை விதியாகும். இதை ஏகாதிபத்தியம் திசை திருப்பி அதிக குழந்தைகளே வறுமைக்கு காரணம் என்ற திரிபை புகுத்தி சுரண்டலை தீவிரமாக்குகின்றனர். அந்த மக்களின் சொந்த தேசிய உழைப்பை சூறையாடி நாசமாக்கியபடி அவர்களை கையேந்தும் நிலைக்குள்ளாக்கி உணவுக்கு மற்றவனை எதிர்பார்க்கும் (தன்னார்வக் குழுக்களின் உதவிகள், மத அமைப்புகளின் தயவுகள், ஏகாதிபத்திய உதவிகள் போன்றன) நிலைக்குத் தரம் தாழ்த்தியுள்ளனர்.


குழந்தையின் பிறப்பு விதியை இயற்கைக்குப் புறம்பாக ஏகாதிபத்தியம் செய்யும் பிரச்சாரத்தில் ஈர்க்கப்படும் ஆணுக்கு எதிரான பெண்ணியக் கோட்பாட்டாளர்கள், கர்ப்பத்தடை, குடும்பக் கட்டுப்பாடு, கருஅழிப்பு என்ற ஏகாதிபத்தியப் பதாகையைத் தூக்கிக் கொண்டு வலம் வருகின்றனர். இதற்குப் பெண்ணின் சுய உடல், சுதந்திரக் கட்டுப்பாடு என்று வேறு விளக்கங்களையும் வைத்து மூடிமறைக்கின்றனர். இந்த ஆணாதிக்க ஏகாதிபத்தியச் சிந்தனைக்கு வெளியில், எப்படி பெண் சுதந்திரமாகச் சிந்தித்து, சுதந்திரமாக உடல் கட்டுப்பாட்டைக் கொண்டு வாழமுடியும் என்று கேட்டால் பதிலளிப்போர் யாரையும் காணமுடிவதில்லை. இதை வறட்டு வாதம் என்று கூறி விபச்சாரம் செய்கின்றனர்.


பச்சிளம் பாலகர்கள் சிறு பிராயத்தில் தமது இளமையை உழைப்பில் ஈடுபடுத்தும் போது அந்த இரத்தக் கசிவு சதையுள்ள மூலதனமாகத் திரண்டு, கலையுள்ள கொழுப்பாகின்றது. ஆனால் குழந்தைகளின் எலும்புகள் இயந்திரத்தின் உறுப்பாகின்றது. இந்த ஜனநாயக முதலாளித்துவ அமைப்பின் நாற்றம் உலகு எங்கும் 25 கோடி சிறுவர்களின் உழைப்பால் கட்டிக் காக்கப்படுகின்றது. இது முந்திய பிந்திய நாகரிகத்தின் மூலதனத்தை நவீனமாக்குகின்றது. இதைப் பாட்டாளி வர்க்கம் தனது போராட்டத்தின் ஊடாக வேரறுப்பதை யாரும் தடுக்க முடியாது.


இது ஒருபுறம் இருக்க குழந்தைகள் நவீன வடிவில் சுரண்டப்படுவது நாகரிகமாகியுள்ளது. பாலியல் ரீதியில் சுரண்டுவதை எதிர்க்காத ஏகாதிபத்தியம் குழந்தைகளை விளம்பரத்துக்கும், அழகிப் போட்டிக்கும் அனுப்பி, நுகர்வு வக்கிரத்தை ஏற்படுத்தி, நுகரும் நாகரிக விளம்பரச் சந்தையின் பங்காளியாகப் பயன்படுத்தும் போது இதை ஏகாதிபத்தியம் எதிர்ப்பதில்லை. அமெரிக்காவில் நடக்கும் குழந்தை அழகிப் போட்டிகள் இன்று இந்தியா வரை நீண்டு உள்ளது. இதை இந்த நவீன உழைப்பின் சேவைத் துறை உழைப்பாக மூலதனத்தைத் திரட்டுவதாக உள்ளது. குழந்தை உடல் உழைப்பில் ஈடுபடும் போது அதை எதிர்க்கும் ஏகாதிபத்தியம், சேவைத்துறை சார்ந்தும், பண்பாடு - கலைத்துறை சார்ந்தும் சொகுசான உழைப்பில் ஈடுபடுவதை இந்த ஏகாதிபத்தியம் எதிர்ப்பதில்லை.


ஏகாதிபத்திய எதிர்ப்பதெல்லாம் தனது சுரண்டலைத் தீவிரமாக்க தடையான பிரிவுகளை மட்டுமே. தனது மூலதனத் திரட்சிக்குச் சாதகமான குழந்தை உழைப்பை ஊக்குவித்து ஜனநாயகத்தின் சுதந்திரமான பக்கமாகக் காட்டித் தன்னை அலங்கரிக்கின்றது. இதைப் பாட்டாளி வர்க்கம் இனம் கண்டு அம்பலப்படுத்தி குழந்தை உழைப்பை ஒட்டு மொத்தமாக ஒழித்துக்கட்டப் போராடுகின்றது.


இந்தியாவில் கிராமப் புறங்களில் 43 சதவீதமான சிறுவர்களும், 69 சதவீதமான சிறுமிகளும் நகரத்தில் 17 சதவீதமான சிறுவர்களும், 36 சதவீதமான சிறுமிகளும் வறுமை காரணமாகப் பாடசாலை செல்வதில்லை. படிக்கும் மாணவர்களில் ஐந்தில் ஒரு மாணவன் படிப்பை முடிக்காது படிப்பை இடையில் கைவிடுகின்றான். கல்வி பயிலும் 8 சதவீதமான மாணவர்களுக்குக் கரும்பலகையோ, இருக்க கதிரையோ (பெஞ்ச்) கிடையாது என 42ஆவது சுற்று தேசிய சர்வே அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. (1.7.1990)1 யாழ்குடாவில் 20,600 சிறுவர்கள் வறுமை காரணமாகப் பாடசாலை செல்லவில்லை. இலங்கையில் 1.5 இலட்சம் சிறார்கள் வீட்டு வேலைகளில் வேலைக்காரர்களாக நசிகின்றனர். கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் 2.2 இலட்சம் சிறுவர்கள் வீதியில் வாழ்கின்றனர். (27.9.1998)6


சுதந்திர ஜனநாயகத்தினுடைய வக்கிரத்தின் விளைவால், பிரான்சில் 30 இலட்சம் பேர் எழுதப் படிக்கத் தெரியாதோராக அதிகரித்து வருகின்றது. இது மொத்த ஜனத்தொகையில் 10 முதல் 20 சதவீதமாகும். (2.12.1998)7 ருசியாவில் கி.பி. 1908-இல், 1,000 குடி மக்களுக்கு 46.7 பேரே பாடசாலை சென்றனர். இது கி.பி. 1904-இல், 44.3 பேர் மட்டுமேயாகும். பள்ளி செல்லக் கூடியோர் ஜனத்தொகையில் 22 சதவீதம் இருக்க 4.7 சதவீதம் பேர் மட்டுமே சென்றனர். ஜனத்தொகையில் 21 சதவீதம் பேர் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தனர்.8


குழந்தைகளுக்கான கல்வி என்பது வறுமையுடன் தொடர்புடையதாகப் பொதுவாக உள்ளது. இதை விட நிறம், சாதி, பால், இனம், வர்க்கம் சார்ந்து கல்வி மறுக்கப்படுவதும் உண்டு. கல்வி பற்றிய சமுதாயத்தில் முதலாளித்துவ ஜனநாயக அமைப்புக்குப் பின்புதான் கல்வி மறுப்பு அரசியல் வடிவம் பெற்றது. இது முதலாளித்துவ மூலதனத் திரட்டலுக்குக் குழந்தைக் கல்வி கோட்பாட்டு மறுப்பைப் பெறுகின்றது. நிலப்பிரபுத்துவம் நீடித்து வந்த காலத்தில் சமுதாயத்தின் கிராமியப் பொருளாதாரங்கள் வடிவத்தையொட்டி அச்சமுதாயத்தில் பல்வேறுவிதமான கல்வி காணப்பட்டது. அது சமுதாயம் சார்ந்து, உழைப்பு சார்ந்து அதன் எல்லைக்குள், தேவைக்குள் இக்கல்வி சுயாதீனமாக மக்கள் தமது தேவையுடன் தாமே ஒழுங்குபடுத்தினர். ஆனால் முதலாளித்துவ மூலதனம் திரண்டு பெரும் உற்பத்தியாக விரிவுபட்ட போது அதற்கே உரிய கல்வியை வழங்க மறுத்தது. அதற்குப் பதில் குழந்தை உழைப்பை மூலதனத் திரட்டலுக்கு அவசியமான, மலிவான இயந்திர வடிவமாகக் கண்டது.


முதலாளித்துவம் குழந்தை உழைப்பை எப்படி நியாயப்படுத்தியது எனப் பார்ப்போம். "அவர்களது வேலைக்குரிய துணியின் மென்மையான இழை நயத்துக்கு, விரல்களின் மெல்லிய தொடுநயம் தேவை, இந்தத் தொழிற்சாலைகளில் அவர்கள் பிள்ளைப் பிராயம் முதலே பழகினாலன்றி இந்தத் தொடு நயத்தைப் பெறமுடியாது"4 என்று ஜனநாயக முதலாளித்துவம் குழந்தை உழைப்பை நியாயப்படுத்தி வாதாடிய போது, மார்க்ஸ் தனது விமர்சனத்தில் "குழந்தைகள் முழுக்க முழுக்க அவர்களின் மெல்லிய விரல்களுக்காகவே வதைக்கப்பட்டனர்"4 என்று விமர்சித்தார். மேலும் "சித்திரப் பின்னல் இடங்களில் இரண்டு, இரண்டரை வயது குழந்தைகள் காலை ஆறு முதல் இரவு எட்டு மணி வரை கசக்கி பிழியப்படுகின்றனர்.... வேறு இடத்தில் 8-9 மணிக்கு வேலை முடிந்து செல்லும் போது "இது அம்மாவுக்காக" என்று கூறி இறுதி சித்திரப் பின்னல் வேலையை வீட்டுக்கு அனுப்பி மூலதனத்தைக் குவித்தனர். (இது என்னால் சுருக்கப்பட்டது. விபரமாக இந்தச் சூறையாடலைப் புரிந்து கொள்ள மூலதனத்தைப் படிக்கவும்.)"4


இதனால் சிறுவயது குழந்தைகளின் கல்வி மறுப்பு மூலதனத்தின் சுதந்திரமான நலன் கருதி முதலாளித்துவத்தின் ஜனநாயகக் கோட்பாடாகியது. இதைப் போற்றி மகுடம் சூட்டிக் கொள்ள, இதில் ஜனநாயகத்தைப் பூதக்கண்ணாடி வைத்து தேடினர். டயானா சீமாட்டியும், அன்னை திரேசாவும் மனிதச் சமூகத்தை மீட்கப் பிறந்த மீட்பாளர்கள் ஆகியது போல் ஆக்கிய, ஆக்கிய பெருமை இந்த மக்கள் தொடர்பு சாதனங்களுக்கு எப்படி இருந்ததோ அது போல் அன்றும் குழந்தை உழைப்பைப் போற்றினர்.


"..தொழிலின் முக்கிய இடமான நார்விச்சில் ஆறு வயதுள்ள சிறிய ஜீவனும் கூட உழைப்புக்கு லாயக்கானதென்று (தகுதியானதென்று) கருதப்பட்டது. தாராளக் குணத்துக்குப் பேர் போனவர்கள் எனக் கருதப்பட்ட சிலர் உட்பட அந்தக் காலத்திய எழுத்தாளர்கள் பலரும், அந்த ஒரு நகரத்தில் மட்டும் இளந்தளிரொத்த சிறுவர்கள், சிறுமிகளும் வருடம் ஒன்றுக்குத் தங்கள் சொந்த ஜீவனத்துக்கு அவசியமானதை விடப் பன்னிரண்டாயிரம் பவுன் மிகுதியாகப் படைக்கின்றனர் என்ற உண்மையைக் களிப்புடன் குறிப்பிடுகின்றனர்... அதாவது பஹாலந்தில் வறியோர் இல்லமொன்றில் நான்கு வயது குழந்தை வேலைக்கு அமர்த்தப்பட்ட விதத்தை 17-ஆவது நூற்றாண்டில் "அன்புள்ளம் கொண்ட" வாணிப நேயர்கள் "களிப்புடன்" விவரிக்கின்றனர் என்பதையும் "நடைமுறை நற்பண்பு" என்பதன் உதாரணங்கள் ஆடம் ஸ்மித்தின் காலம் வரை மெக்காலே பாணியிலான எல்லா மனிதாபிமான நூல்களிலும் எடுத்தாளப்படுகிறது."4


அன்று முதல் முதலாளித்துவத்தின் மனிதாபிமான எச்சில்கள் மீது புகழாரங்கள் சூட்டப்பட்டன. இதை மாற்றத்தின் முன்மாதிரி வடிவமாகப் புகழப்பட்டது. இதன் பின்னால் மாபெரும் ஒடுக்குமுறை என்பது வெற்றியோடு பவனி வந்தது. இந்த ஒடுக்குமுறை ஜனநாயகப் பாராளுமன்றத்தில் மக்களின் வாக்குரிமைக்கு ஊடாக வளர்ச்சி பெற்றது. குழந்தைகளின் கல்வி மறுப்பும், உழைப்புக்கு நெட்டிச் (தள்ளிச்) செல்லும் சட்டக்கோவைக்காக மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனநாயகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றங்களில் வாக்களித்தனர். இதற்காகவே இந்தப் பாராளுமன்றம் தனது சுதந்திரமான மூலதனச் சூறையாடலுக்காக இன்று வரை சுதந்திரமாக வாக்களித்து சட்டத்தை இயற்றுகின்றது. இதற்கு எதிரான போராட்டம் தொழிலாளர் வர்க்கம் படிப்படியாக முன்னெடுத்த போது முதலாளித்துவம் அதற்கு எதிராகப் போராடியது.


"கி.பி. 1870-இல், அமெரிக்காவில் பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பான நைட்ஸ் ஆப் லேபர் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பதைத் தடை செய்யக் கோரி போராடியது..... கி.பி. 1890-இல், நியூயார்க் குழந்தைத் தொழிலாளர் குழு, தேசிய நுகர்வோர் லீக், பெண்கள் சங்கப் பொதுக் கூட்டமைப்பு குழந்தைத் தொழிலாளர்களைத் தடை செய்யக் கோரி போராடியது."5


இதை மறுத்துப் போராடிய முதலாளித்துவம் பற்றி மார்க்ஸ் அழகாகவே குறிப்பிட்டுள்ளார். "இந்தக் கல்வி சரத்துக்களுக்குத் தொழிலதிபர்களே காட்டுகின்ற எதிர்ப்பு, அவற்றை ஏய்ப்பதற்காக அவர்கள் கையாளும் தந்திரங்களும், சூழ்ச்சிகளும் ஆகிய இவை யாவற்றிலும் முதலாளித்துவப் பொருள் உற்பத்தியின் ஆன்மா கண்கூடாகத் தெரிகிறது." (மூலதனம் பாகம்:1, புத்தகம்:1, 541)4 இந்தளவுக்கு இன்றைய முதலாளித்துவ ஜனநாயகம் இன்று போல் அன்றும் கல்வியைக் குழந்தைகளுக்கு மறுத்தது. குழந்தை உழைப்பை வாட்டிப் பிழிந்து எடுத்த இரத்தத்தினதும், வியர்வையினதும் சுதந்திரமான எல்லை கடந்த வெளிப்பாடு தான், இன்றைய மூலதனத் திரட்சியைச் சாதித்தது.


இதே போல் அன்று கத்தோலிக்கத் திருச்சபை குழந்தைகளின் கல்விக்கான கோரிக்கையை, புனிதத்தின் மகிமையை நிலைநாட்ட எதிர்த்தது. நியூயார்க் திருச்சபை "கல்விக்கான மசோதா பெற்றோர்களின் உரிமையைப் பறிக்கின்றது (இது இன்று பெண்களின் கரு அழிப்புக்கு உடல் சுதந்திரம் என்று கூறுவது போல்) என்றும், குடும்ப வருமானத்தைக் குறைப்பதன் மூலம் வறுமை உருவாகும் என்றும் (இன்று வறுமைக்குக் காரணம் அதிக குழந்தைகள் என்று காரணம் கூறுவது போல்) வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்த்தனர்."5


பிரெஞ்சுப் புரட்சி பற்றி அறிந்த ஆஸ்திரிய அதிகாரிகளும், திருச்சபையும் "அரசு நடத்தும் பாடசாலை கல்வி இளம் குழந்தைகளை, வேகம் நிறைந்த உள்ளங்களை மனிதாபிமானம் என்ற போர்வையில், அழிவை ஏற்படுத்தும் சிந்தனைகளால் ஈர்க்கின்றனர். இந்தச் சிந்தனைகள், மிகவும் கீழ்மட்டத்து மக்களுக்கும் பரப்பப்பட்டு, அது மேலும் அடிவரை ஊடுருவ முயல்கின்றனர்"5 என்று கி.பி. 1793-இல், அரசருக்கு எழுதினர். மதப்போதனை இல்லாத பொதுக்கல்வி ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் என்றனர். இப்படியாக எல்லா நாடுகளிலும் கிறித்தவம் போல் கல்வியை எதிர்த்தனர்.


பார்ப்பனியம் சூத்திர மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் திட்டவட்டமாக மறுத்தது. கல்வி நிபந்தனையாக உருவான போது அதை மதவாதம் மற்றும் முதலாளித்துவக் கல்வியாக மாற்றி இருக்கும் அமைப்புக்குச் சேவை செய்யக் கூடியதாக உருவாக்கினர். இன்று ஏகாதிபத்தியங்கள் கல்வியைத் தனது அமைப்பு நீடித்து வாழ எப்படி உருவாக்கி கட்டியமைக்கின்றதோ, அந்தளவுக்குக் கல்வி தனது தூய்மைத்தனத்தை இழந்து வர்க்கக் கல்வியாகியது.


இன்று மீண்டும் "டங்கல் ஒப்பந்தச் சரத்துப்படி பாடசாலைகளைத் தனியார்மயமாக்கி கல்வி பெற்று வரும் குழந்தைகளின் கல்விக்கு வேட்டுவைக்க தன்னாலான முயற்சிகளை மீளவும் தொடங்கியுள்ளது. குழந்தை உழைப்பைத் தடை செய்யக் கோரும் ஏகாதிபத்தியக் கூக்குரல்கள் குழந்தையின் கல்விக்கான உரிமையை நிலை நாட்டக் கோருவதில்லை. இதை மேலும் இல்லாது ஒழிப்பதை நிபந்தனையாக்குகின்றது. இது முதலாளித்துவ அமைப்பின் எல்லையில்லா சுரண்டல் கனவுகளின் ஜனநாயகமாகும்.


கி.பி. 1999-இல், ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து "15 இலட்சம்"9 குழந்தைகள் பாடசாலை செல்வதை நிறுத்தியுள்ளனர். "தென்கொரியாவில் 8.6 முதல் 14.8 சதவீதமாக"9 வறுமை அதிகரித்துள்ளது. கல்வி இந்த உலகமயமாதல் சந்தை நிலைமைக்கு ஏற்ப மறுப்பதும், கொடுப்பதும் தீர்மானமாகின்றது. இந்தச் சுரண்டல் அமைப்பு கல்வியைத் தேவையாகவும், கடமையாகவும் கருதுவதில்லை. மாறாகத் தனது நலன்களையொட்டியே கல்வியைத் தீர்மானிக்கின்றது. சோவியத் அக்டோபர் புரட்சியும், சீனப் புரட்சியும் அந்த நாட்டுக் குழந்தைகளை உடனடியாகவே குழந்தை உழைப்பில் இருந்து விடுவித்ததுடன் தொடர்ச்சியாகப் போராடியது. பெற்றோரின் வாழ்க்கை நிலைமையை உயர்த்தியதுடன், மரபார்ந்த கல்விக்கு எதிராக ஆணாதிக்கக் கருத்துக்கு எதிராகக் கலாச்சாரப் புரட்சியின் போது போராடியது.


கி.பி. 1949-இல், சீனப் புரட்சி நடந்த போது எழுத்தறிவு மொத்த ஜனத்தொகையில் "20 சதவீதமாகவே"5 இருந்தது. குழந்தைகளில் "நாலில் ஒருவரே"5 ஆரம்பப் பள்ளியில் இருந்தனர். கி.பி. 1982-இல், "93 சதவீதம்"5 பேர் பாடசாலை செல்வதை உறுதி செய்தது. அதே நேரம் எழுத்தறிவு 68 சதவீதமாக உயர்ந்தது. இந்த அதிகரிப்பு புரட்சியின் பின் முழுமையாக ஏற்பட்டு விடவில்லை. கலாச்சாரப் புரட்சியில் தான் இதன் வேகம் என்றுமில்லாத அளவுக்கு வளர்ச்சி பெற்றது. இது கட்டாயக் கல்வி என்பதில் இருந்து கடமையாகவும், தேவையாகவும் அரசியல் மயப்படுத்தப்பட்டது. கி.பி. 1952-இல், பெண்களின் பங்கு ஆரம்ப பாடசாலையில் 23 சதவீதமாகும். இது கி.பி. 1975-இல், 45.2 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டது.


இது போல் சோவியத்தில் கி.பி. 1917-இல், 70 சதவீதம் எழுத்தறிவின்மை காணப்பட்டது. இதை கி.பி. 1931-இல், கட்டாயக் கல்வி கொள்கை அமுல் செய்யப்பட்டுக் கல்வி அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டது. வர்க்கப் போராட்டம் குழந்தையின் கல்வி மட்டுமின்றி பெண்களின் கல்வி மற்றும் சமவுரிமையையும் உறுதி செய்கின்றது. அத்துடன் புரட்சிக்கு அடுத்த நிமிடமே எல்லாம் மாறிவிடும் என்ற அராஜகவாதக் கண்ணோட்டமும், புரட்சி முடிந்து விட்டது என்ற இயங்கியல் மறுப்பு வாதமும் தவிடுபொடியாகின்றது. மாறாக வர்க்க முரண்பாடு நிலவுவதையும், ஏற்றத் தாழ்வு நீடிப்பதையும் தொடர்ந்து வர்க்கப் புரட்சி நடத்தப்படுவதன் மூலமே மேலும் மக்கள் தமது விடுதலையைச் சாதிக்க முடியும் என்பதையும் இது காட்டுகின்றது.


கல்வி என்பது சமுதாய வளர்ச்சியில் சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைக்கு எதிரான கல்வியைக் கொண்டதாக இருக்கவேண்டும். இது மனித முரண்பாடுகளைக் களைவதை அடிப்படையாகக் கொண்டு மனிதத் தேவையை உள்ளடக்கி அதைப் பெறுவதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இன்று கிடைக்கும் கல்வியை அனைவருக்கும் உறுதி செய்யவும், ஏகாதிபத்தியக் கல்வியை மாற்றியமைக்கவும் கோராத போராட்டம் கல்வி மறுப்பாகவும் ஏகாதிபத்திய அமைப்பை உறுதி செய்வதுமாகவே இருக்கும்.


இன்று ஏகாதிபத்திய நலன்களை அடிப்படையாகக் கொண்டு அதிகாரத்துக்காகச் சுரண்டும், சூறையாடும் கொள்ளையை (உரிமையை) யார் பெறுவது? என்ற யுத்தத்தில் குழந்தைகள் பலியிடப்படுவது நியதியாக மாறிவிட்டது. கடந்த பத்து வருட உலகளாவிய யுத்தங்களில் இருபது இலட்சம் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நாற்பது இலட்சம் சிறார்கள் சொந்த வீட்டையும், குடும்பத்தையும் இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். பத்து இலட்சம் சிறார்கள் அநாதைகளாகியுள்ளனர். 2.5 கோடி மக்கள் அகதியாக உலகில் அலைகின்றனர். யுத்தம் இன்று குழந்தைகளைப் பந்தாடுவதும் உளவியல் ரீதியாகச் சிதைப்பதும் அதிகரித்துச் செல்லுகின்றது. அத்துடன் குழந்தைகளைப் போர் முனையில் ஈடுபடுத்துவதன் மூலம் வலது பாசிசம் தனது அதிகார வடிவத்தை உறுதி செய்கின்றது. இது இலங்கையில் இருந்து உலகம் வரை விரிந்து பரந்து போயுள்ளது.


குழந்தைகள் விளையாட்டுகளாக வரும் கணினி மற்றும் மின்னணு (எலக்ட்ரானிக்) சார்ந்த அனைத்துப் பொருட்களும் யுத்தத்தைச் சொந்தத்தில் செய்வதை, ஜனநாயக உரிமையாக இந்தச் சுரண்டல் அமைப்பு குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கின்றது. குழந்தைகளின் கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) முதல் இது எங்கும் வியாபித்து போயுள்ளது. யுத்தமும், வன்முறையும் குழந்தையின் இணைபிரியாத விளையாட்டாக ஆக்கப்பட்டுவிட்டது. இது யதார்த்தத்தில் வன்முறையாகவும், யதார்த்தமான சண்டையாகவும், அகதி வாழ்க்கையாகவும் குழந்தைகளுக்கு இந்தச் சூறையாடும் சுரண்டல் அமைப்பு பரிசளிக்கின்றது. இதுதான் நாம்! போற்றும்!! தேர்ந்தெடுக்கும்!!! முதலாளித்துவ ஜனநாயகத்தின் விளைவாகும். இதை வேர் அறுக்காத வரை இதன் பாதிப்பு எல்லாத் தளத்திலும் ஆழமான பக்க விளைவுகளைக் கொடுப்பதுடன் அதையே புதிய பண்பாடாகவும் செய்கிறது.


இலங்கையில் அதிகமாகக் குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட இடமாகக் கொழும்பு செட்டியார் தெரு மாறியுள்ளது. ஆணாதிக்க அமைப்பில் வாழும் பெண்கள் தங்களின் செருக்கைக் காட்ட, பெருமையைப் பேச, கௌரவத்தை வெளிப்படுத்த, அந்தஸ்த்தைக் காக்க தங்க ஆபரணங்களை அணிந்து ஆண்களுக்கு அழகு காட்டும் இந்தத் தங்க ஆபரணங்களின் பின்னால் நெஞ்சைப் பிழியும் குழந்தை உழைப்பு அகோரமாக உள்ளது. இந்த இடத்தில் வசிக்கும் 7 வயது முதல் 14 வயதுடைய 90 சதவீதமான குழந்தைகள் தமது கல்வியை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் மட்டுமே கல்வி கற்கின்றனர். ஆண்களுக்காக அழகுபடுத்தும் தொழிலில் இருக்கும் குழந்தைகள் எழுத வாசிக்க தெரியாத இயந்திரப் பேச்சு மொழியுள்ள நடைப்பிணங்களாகும். 20,000 தொழிலாளர்களைக் கொண்ட இந்தப் பணக்காரச் செட்டியார் தெரு உழைப்பில், 40 சதவீதம் பச்சிளம் பாலகர்களின் கைகளை ஆதாரமாக கொண்டுள்ளது.(19.3.2000)10 காலை 6 மணி முதல் இரவு 11 - 12 மணி வரை உழைக்க வேண்டிய இவர்கள் இலங்கை ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு ஒரு வகை மாதிரியாகும்.


பெரும்பாலான சிறுவர்களின் உழைப்பு, உணவு, படுக்கை என எல்லாம் தொழில் இடமாக உள்ளது. வேலை முடிந்த பின் முதலாளியின் அற்பக் கடமைகளையும் செய்து நக்கிப் பிழைக்கக் கோருகின்றது இந்தப் பணக்காரப் பண்பாளர்களின் பண்பாடு. உலகத்தில் மூலதனத்திடம் ஈவிரக்கம் எதிர்பார்க்க முடியாது. இதற்கு எதிரான போராட்டமும் ஈவிரக்கம் அற்றதாகவே இருக்கும். இந்த மூலதனத்தை ஒழிக்கும் வன்முறையில் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது.