தேசியம் என்பதன் அடிப்படை உள்ளடக்கமே என்ன? தேசிய பொருளாதார கட்டமைப்பாகும். தேசிய பொருளாதார கட்டமைப்பை பற்றி பேசாத அனைத்து தேசியங்களும் பிற்போக்கானவையாகும். அவை உள்ளடக்கத்தில் இன்றைய உலக ஒழுங்கை பேணிக் கொள்வதையும், அதன் நீட்சியாக இருப்பதையும் மூடிமறைக்கின்றது. இலங்கையில் சிறுபான்மை இனங்கள் முதல் பெரிய தேசிய இனங்கள் ஈறாக தேசியத்தை பற்றி பேசும் ஒவ்வொரு கணமும், தேசிய பொருளாதாரம் பற்றி மக்களுக்கு இருட்டடிப்பு செய்கின்றனர். இதில் இருந்தே இலங்கையில் பிற்போக்கான மக்கள் விரோத தேசியங்கள், மக்களின் மேல் சவாரி செய்வதை தனது தேசிய கொள்கையாக தேசியமாக வருணிக்கின்றனர்.
இங்கிருந்தே சுயநிர்ணயம் பற்றி திரிவுவாதப் பிரச்சாரங்களை கட்டமைக்கின்றனர். சுயநிர்ணயம் என்பது அனைத்தையும் சுயமாக நிர்மாணிக்கும் ஆற்றலை கோருவதுதான். இதில் யார், எந்த நிறத்தான், எந்த மதத்தான், எந்த இனத்தான் ஆள்வது என்பதை குறித்து சுயநிர்ணயத்தை திரிக்க முடியாது. சுயநிர்ணயத்தை ஒரு நாடு அல்லது ஒரு இனம் கோரும் போது சொந்த மக்களின் சுயநிர்ணயத்தை தீர்மானிக்கும் வகையில், சொந்த பொருளாதாரத்தை உருவாக்கவேண்டும் அந்நியனுக்கு சேவை செய்வது சுயநிர்ணயமாக இருப்பதில்லை. சிங்கள இனத்தை எதிரியாக காட்டுவது அல்லது சிறுபான்மை இனங்களை எதிரியாக காட்டுவது சுயநிர்ணயம் அல்ல. சுயநிர்ணயம் என்பது சொந்த பொருளாதாரத்தை சொந்த தேசிய வளத்தில் இருந்து நிர்மானிக்கவும் அதை மக்களுக்கு மட்டும் பகிர்ந்தளிப்பதையும் உள்ளடக்கமாக கொள்கின்றது. இந்த சொந்த தேசிய வளம் சார்ந்து மக்களின் உழைப்பைக் கொண்டு உருவாக்கும் பொருளாதார கட்டமைப்பு முழுக்க முழுக்க மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட வேண்டும். இந்த மக்களின் நலன் சார்ந்த பொருளாதார கட்டமைப்புக்குள் ஒரு குறித்த மொழி பேசுகின்ற மக்கள் கூட்டத்தையும், அந்த நிலப்பரப்பின் மேல் நிலவும் ஆட்சி சொந்த பண்பாட்டையும் கொண்டே சுயநிர்ணயம் தெளிவாக வரையறை செய்கின்றது. இதற்குள் எதையாவது ஒன்றை மறுக்கின்றோமோ, அப்போதே சுயநிர்ணயத்தை இழந்து விடுகின்றோம். ஒரு மொழி பேசுகின்ற மக்கள் கூட்டம் தனது பொருளாதார கட்டமைப்பு சார்ந்து ஒருநிலத் தொடர் மீது சொந்த பண்பாட்டையும் கொண்டிராத அல்லது அதற்காக போராடாத எல்லா நிலையிலும் சுயநிர்ணயம் என்பது ஏமாற்றும் மோசடி நிறைந்தாகும்.
அந்நிய மூலதனம் தேசிய எல்லை கடந்து உட்புகும் போதே, தேசிய பொருளாதாரத்தை சிதைக்கின்றது. அந்நிய மூலதனம் தேசிய பொருளாதாரத்தின் கல்லறைகள் மேல்தான் எழுகின்றன. இங்கு சுயநிர்ணயம் என்பதை அந்த சமூகம் இழந்துவிடுகின்றது. அந்நிய மூலதனம் தனது பொருளாதாரத்துடன் ஒரு மொழியையும், ஒரு பண்பாட்டு கலாச்சாரத்தையும் கொண்டு வரும் போது, தேசியம் என்பது எதுவும் எஞ்சி இருப்பதில்லை. இங்கு நிறம், இனம், மதம் முதல் குறித்த தனிமனித ஆட்சிகளை முன்நிறுத்தி அதை தேசியமாக்கின், உண்மையில் மக்களின் வாழ்வும் உழைப்பும் இரத்த தியாகங்களும் அந்நியனுக்கு சேவை செய்யவே கோரப்படுகின்றது. இலங்கையின் சுயநிர்ணயம் என்பதை மற்றயை இனத்தை எதிரியாக காட்டியும், மதத்தை முதன்மை படுத்தியும், குறித்த தனி மனிதர்களை முதன்மைப்படுத்தியும், அந்நிய மொழியை மோகித்தும், அந்நிய உற்பத்தி பற்றிய பிரமைகளை கொண்டே தேசியமும் சுயநிர்ணயம் விளக்கம் பெற்று இழிந்து சிதைகின்றது.
இலங்கையில் அந்நிய பொருளாதாரத்தை எதிர்த்து தேசிய பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்திய ஒரு தேசியத்தை, சுயநிர்ணயத்தை யாரும் கோரவில்லை. தேசிய மொழியை வளர்த்தெடுக்கவும் அந்நிய ஆங்கில மொழியை எதிர்த்து யாரும் போராடவில்லை. எமது தேசிய பொருளாதார கட்டமைபின் மேல் எமது பண்பாட்டு கலாச்சாரத்தை வளர்தெடுக்கவும், அன்னிய பண்பாட்டு கலாச்சார அடிப்படைக்கு எதிராக யாரும் போராடவில்லை. இந்த நிலையில் தான் தேசிய எல்லைகளை கடந்த அந்நியன் புகுகின்றான். இதில் சிங்கள இனவாதிகளுக்கு பதில் ஏகாதிபத்தியங்கள் புகுவதையே இலங்கையின் தேசியமாக சயநிர்ணயமாக அனைத்து தரப்பும் விளக்கம் கொடுக்கின்றனர். இது இன்றைய எமது செந்த வரலாறாகும். இதை யாரும் மறுக்க முடியாது. அந்நியனுக்கு சேவை செய்யும் இழிந்து போன தேசியத்தை நியாயப்படுத்த, சுயநிர்ணயம் பற்றி கொச்சைத் தனமான விளக்கங்களை முன்வைக்கின்றனர்.
சுயநிர்ணயம் என்பதை கோட்பாட்டு ரீதியாக மார்க்சியமே வரையறை செய்துள்ளது. இதற்கு வெளியில் சுயநிர்ணயம் என்பது மக்களை ஏமாற்றுகின்ற ஒரு திட்டவட்டமான ஏமாற்று மோசடியாகும். சுயநிர்ணயம் என்பது சுயமாக தன்னை தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை கொண்டவை. அது பொருளாதாரம் சார்ந்த பண்பாடு கலாச்சாரம் மேல் ஒரு மொழியை பேசுகின்ற மக்கள் கூட்டம் ஒரு நிலத் தொடர் மீது சுயநிர்ணயம் செய்வதேயாகும். இதை மார்க்சியம் தெளிவுபடவே ஆழமாக தெளிவுபடுத்தியுள்ளது. இது ஆகக் குறைந்த தேசியத்துக்கான, சுயநிர்ணயத்துக்கான அடிப்படை நிபந்தனையாகும். இதை யாரும் விமர்சிக்கவும், மாற்றாக எதையும் முன் வைக்க முடியாத நிலையில், இதை திரித்த விளக்கவதே எப்போதும் அரங்கேறுகின்றது. இதில் குறைந்த பட்டசம் பொருளாதார கட்டமைப்பை கைவிடுவதன் மூலமே, அனைத்து பிற்போக்கையும் நியாப்படுத்துகின்றனர்.
இன்று இலங்கையில் சுயநிர்ணயத்தையும், தேசியத்தையும் சார்ந்து அன்னிய பொருளாதார கட்டமைப்பை, பொருளாதார ஊடுருவலை யாரும் விமர்சிப்பதுமில்லை, எதிர்த்து போராடுவதுமில்லை. தேசியம் பற்றியும், சுயநிர்ணயம் பற்றியும் விளக்குகின்றார்கள் எனின், அந்நிய பொருளாதாரத்தை மேலும் விரிவாக்க சமூக எதிர்ப்பை கோட்பாட்டு ரீதியாகவும் உணர்வியல் ரீதியாகவும் சிதைப்பதை நியப்படுத்துவதையே செய்கின்றனர். இன்று இலங்கையில் வாழ்வதாயினும் சரி, தமிழீழத்தில் வாழ்வதாயினும் சரி, உலகமயமாதல் பற்றிய உலகொழுங்கைப் பற்றி பேசாது தேசியம் சுயநிர்ணயம் பற்றி கதைப்பதே ஒரு மோசடியாகும். தேசியத்துக்காக போராடுவதாக கூறுவதும், தியாகம் செய்வதும் கூட அர்த்தமற்றதாக இருப்பதுடன், ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்ய அழைத்துச் செல்வதுமாகும்.
தமிழ் குறுந் தேசிய வாதிகளுக்கும் சிங்கள பேரினவாதிகளுக்கும் இடையில் நடக்கும் சாமதனப் பேச்சுவார்த்தையில் கூட தேசியம் பொருளாதாரம் பற்றி மௌனம் சாதிக்கின்றனர். அந்நிய ஏகாதிபத்தியத்துக்கு எப்படி? யார்? சேவை செய்வது என்பதை தீர்மானிக்கும் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தீர்வு காணவிழைகின்றனர். ஏகாதிபத்திய மூலதனத்தை விரிவாக்கவும் தேசிய பொருளாதாரத்தை அழிக்கவும் நடக்கும் சமாதானப் பேச்சு வார்த்தை அல்லது யுத்தத்தில் யார் வெற்றி பெற்றாலும் தோல்வி பெற்றாலும், மக்களுக்கு தேசிய பொருளாதாரம் சார்ந்து எதும் கிடைக்கப் போவதில்லை. இதை யாரும் உறுதியாக இது தான் கிடைக்கும் என்ற சொல்லமுடியாது. ஏனெனின் அது ஒரு அரசியல் வடிவமாக தேசிய வாதிகளிடம் இல்லை. ஆனால் ஏகாதிபத்திய மூலதனம் தேசியத்தை அழிக்கும். மக்கள் இலங்கையில் வாழ்ந்தாலும் சரி, தமிழீழத்தில் வாழ்ந்தாலும் சரி இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் ஏகாதிபத்திய பொருளாதார விரிவாக்க கட்டமைப்புக்கு இசைவான ஒரு தேசியத்தை, இலங்கை அரசும் சரி தமிழ் தேசிவாதிகளும் சரி தெளிவாகவே முன்வைக்கின்றனர்.
2000ம் ஆண்டு இலங்கையில் செலவு செய்யும் ஒவ்வொரு ஒரு ரூபாவுக்கும் 25 சதத்தை வட்டியாக ஏகாதிபத்தியத்துக்கு தேசியவாதிகள் கட்டினர். இது 2001 இல் 35 சதமாக மாறியுள்ளது. இலங்கை ஏகாதிபத்தியத்தின் மாறுகாலனியாகி வருவதை இது தெளிவாக காட்டுகின்றது. உள்ளடக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் கொத்தடிமை முறைக்குள் மாறிச் செல்லுகின்றது. அதே நேரம் யுத்தத்துக்கு 17 சதத்தை (17 சதமும் யுத்த தளவாடம் சார்ந்து நேரடியாகவே ஏகாதிபத்தியத்திடம் செல்லுகின்றது) செலவு செய்வதன் மூலமும், வட்டி கட்டுவதன் மூலமும், இது சார்ந்து இலங்கையில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாவிலும் 50 சதத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் ஏகாதிபத்தியத்திடம் போய்ச் சேருகின்றது. தேசியவாதிகள் இந்த விடையத்தையிட்டு பேசாது, எந்த தேசியத்தை தான் வென்று எடுக்கப்போகின்றார்கள். அண்மையில் சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கிய பின்பு ஏகாதிபத்தியம் வேகமாகவே இலங்கையில் காலுன்றத் தொடங்கியுள்ளது.
புதிய அரசாங்கம் பதவி ஏற்றதைத் தொடர்ந்து உலகவங்கியும் சர்வதேச நிதியமும் ஆட்சியேறிய முதல் 18 மாதத்தற்கு 9200 கோடி ரூபாவை புதிய கடனாக வழங்கியுள்ளது. இதன் மூலம் இலங்கை பொருளாதாரத்தை ஏற்றுமதியை அடிப்படையாக கொண்டு வட்டி கட்டும் ஒரு நாடாக மாற்றுவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கறுப்பு ஆளும் வர்க்கத்தை ஆட்சியில் தக்கவைப்பதன் மூலம், அவர்களின் இனவாத தரகு தேசியத்தை தேசியமாக பாதுகாப்பதன் மூலம், இலங்கையைச் சுரண்ட ஏகாதிபத்தியங்கள் விரிந்த தளத்தில் களமிறங்கியுள்ளனர். அண்மையில் இலங்கை பராளுமன்றத்தில் நடந்த வரவு செலவு விவாத்தில் வெளிநாட்டு துதார்களும், உலகவங்கி பிரதிநிதிகளும், சர்வதேச நிதியப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன், வரவு செலவுக்கான நிகழ்ச்சி திட்டத்தை அங்கீகரித்தனர். ஜனவரி 6ம் திகதி இலங்கை உள்நாட்டு அமைச்சர் ஜோன் டமரதுங்க, இலங்கைச் அரசுதுறைகளை தனியார் மயமாக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தனியார் மயமாக்கல் என்பது இலங்கையின் தேசிய முதலாளிகளிடம் விற்பது அல்ல. மாறாக ஏகாதிபத்திய பன்நாட்டு நிறுவனங்களிடம் அரசுதுறைகளை கையளிப்பதையே சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் இலங்கை தேசிய வளங்களை அன்னியனுக்கு தரைவார்த்து கொடுப்பதன் மூலம், மக்களின் வாழ்க்கை சூறையாட அறைகூவல் விடத்துள்ளனர். இந்த நிலையில் தான் இலங்கையில் தேசிய விடுதலை என்ற பெயரில், இன குறுந் தேசிய போராட்டம் நடக்கின்றது. எதிர்நிலை தேசிய வாதிகளும், இந்த தேசிய அழிப்பையிட்டு மௌனம் சாதித்து அங்கீகரிப்பது நிகழ்கின்றது. இலங்கையின் அரசுதுறை தனியார் மயமாகும் போது, அது வடக்கு கிழக்கின் அரசுதுறை சார்ந்து அசையும் அசையா சொத்துகளையும் உள்ளடக்கியே விற்கப்படுகின்றது. தமிழ் மக்களின் தேசிய வளங்கள் விற்கப்படுவதையிட்டு, மௌனம் சாதிக்கும் குறுந் தேசிய வாதிகளின் ஏகாதிபத்திய கைக்கூலித்தனம், நிர்வாணமாவதை வெளிப்படுத்துகின்றது.
நோர்வேயின் மத்தியஸ்த முயற்சியைத் தொடர்ந்து, புத்தளத்தில் 25000 ஏக்கர் மரமுந்திரிகை உற்பத்தி செய்ய 40 கோடி ரூபாவை, நோர்வை நாட்டு பன்நாட்டு நிறுவனம் ஒன்று முதலிடவுள்ளது. இதன் மூலம் 10000 தொன் பதப்படுத்தப்பட்ட மரமுந்திரிகை பருப்பை உற்பத்தி செய்து, ஏகாதிபத்தியத்தில் வாழும் வெள்ளையர்களின் வாய்க்கு ருசிக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. புத்தளத்தை தமிழ் தேசியவாதிகளும், சிங்கள தேசிய வாதிகளும் உரிமை கோரும் இனமோதலை நடத்திக் கொண்டிருக்க, 25000 ஏக்கர் நிலத்தை பன்நாட்டு நிறுவனுத்துக்கு தரைவார்க்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை தேவை சார்ந்த உணவு உற்பத்திகள் நிராகரிக்கப்பட்டு, ஆடம்பரமான சுவையான உணவை வெள்ளைக்காரனுக்கு ஏற்றுமதி செய்து, அந்த மண்ணில் வாழும் தேசிய மக்களை இழிநிலைக்குள்ளாக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆனால் தமிழ், சிங்கள இனத்தேசியவாதிகளின் மௌனம் மூலமான ஓத்த அங்கீகாரம் இதற்கு கிடைத்துள்ளது. இங்கு தான் தேசியத்தின் பொய்மை வெட்டவெளிச்சமாகின்றது. இதே போன்றே திருகோணமலை எண்ணைக்குதங்களை நீண்ட குத்தகை என்ற பெயரில் இந்தியா ஆக்கிரமித்த முயற்சியையும், அமெரிக்கா திருகோணமலை துறைமுகம் உள்ளிட்ட இலங்கையை மறுகாலனியாக்கி இராணுவத் தளமாக மாற்ற எடுக்கும் ஆக்கிரமிப்பு ஒப்பந்த்தையிட்டு, தேசியவாதம் மௌனம் மூலம் அங்கீகரிக்கின்றது.
உலகமயமாதலையே சமாதனம் என்று விபச்சாரம் செய்யும் புதிய அரசு, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 முதல் 90 சதவீத சுங்கத் தீர்வை குறைப்பது என அறிவித்துள்ளது. இதில் இந்தியாவும் இலங்கையும் 1987 இல் செய்து கொண்ட ஒப்பந்ததில் குறிப்பிடப்படாத 4561 பொருட்களுக்கும் புதிதாக அடங்கும். சுங்கத் தடையற்ற வகையில் இந்தியப் பொருட்கள் இலங்கைக்குள் அளவு கடந்து குவிவதற்கு அனுமதித்ததன் மூலம், இலங்கை தேசிய உற்பத்திகளை சுடுகாட்டுக்கு அனுப்ப கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. இதை விரிந்த தளத்தில் புரிந்து கொள்ள, 2001ம் ஆண்டு இறக்குமதி எற்றுமதியை ஆராய்ந்தலே உண்மையின் அபாயத்தையும், அதன் அளவை தெளிவாக புரிந்து கொள்ளமுடியும். 2001 இல் இலங்கைக்கான இந்தியா ஏற்றுமதி 5360 கோடி ரூபாவாக இருக்க, இலங்கையின் ஏற்றுமதியோ வெறுமனே 620 கோடி ரூபா மட்டுமேயாகும். இன்று சுங்கத் தீர்வை சலுகை ஊடாக பல மடங்காக இந்தியா ஏற்றுமதி அதிகரிக்கவுள்ளது. இதன் மூலம் இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறிவருகின்றது. 1987 இல் இந்தியா இலங்கை இடையிலான ஒப்பந்தம், தேசிய பிரச்சனையை தீர்க்க செய்யப்படவில்லை. இலங்கையை சூறையாடவே செய்யப்பட்டது. இதைத் தான் இன்று இலங்கையில் ஏகாதிபத்தியங்கள் செய்து கொண்டிருக்கின்றன. இலங்கை மறுகாலனியாதிக்க எல்லைக்குள் இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறிச் செல்வதில் பொருளாதார ரீதியாக இந்தியாவின் ஆக்கிரமிப்புக்குளாகின்றது.
இந்தியாவில் சிறு தேயிலை தேசிய உற்பத்தியளார்களின் வாழ்வையும், கூலித் தொழிலார்களின் கூலிப் பிழைப்பையும் நாசமாக்கும் வகையில், இந்திய தேயிலை இறக்குமதியை வரைமுறையின்றி செய்துள்ளது. பன்நாட்டு தேயிலை முதலாளிகள் இந்தியாவின் தேயிலை உற்பத்தியை முழுமையாக கட்டுப்படுத்த, இறக்குமதியை சலுகை அடிப்படையில் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையிலும் இந்தியாவிலும் இயங்கும் ஒரே பன்நாட்டு நிறுவனம் இந்திய உற்பத்தியை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிக்கு, மேலும் வலுவூட்டும் வகையில் அண்மைய ஒப்பந்தம் மேலும் சலுகை வழங்கியுள்ளது. இலங்கை தேயிலை இந்தியா இறக்குமதி செய்ய, மற்றைய நாட்டு தேயிலைக்கு 70 முதல் 100 சதவீத சுங்கத் தீர்வையை கொண்டுவந்துள்ளது. இலங்கை இந்தியா ஒப்பந்தப்படி தேயிலைக்கு 7.5 சதவீத சுங்கத் தீர்வை இருப்பதுடன், 1.5 கோடி கிலோ தேயிலையை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளது இந்திய அரசு. ஆனால் இலங்கை 0.1 கோடி கிலோ தேயிலையே ஏற்றுமதி செய்கின்றது. அனுமதித்த தொகை இந்தியா செல்லுமாயின், இந்திய தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மேலும் வீழ்ச்சி காணும்.
அதே நேரம் இலங்கையிலும் தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி அதிகரித்துச் செல்லுகின்றது. உலகமயமாதல் சூறையாடல் விரிவாக இலங்கையின் உற்பத்திகள் விரிந்த தளத்தில் ஆட்டம் காண்கின்றது. 2002 இல் மத்திய வங்கி விடுத்த அறிக்கை ஒன்றில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைவதாக எச்சரித்துள்ளது. தேயிலை உற்பத்தி 14.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆடை, துணி, தோல் உற்பத்தி 16 சதவீதமாக விழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத்துறையில் 2.9 சதவீத வீழ்ச்சியடைந்துள்ளது. 2001 முதல் பத்து மாதத்தை முந்திய வருடத்துடன் ஒப்பிடும் போது, ஏற்றுமதி 9.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக எற்றுமதி 17.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதி 24.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி 12.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. 2001 இல் பணவீக்கம் 14.2 யாக இருக்க, இது 2000 இல் 6.2யாக மட்டுமே இருந்தது. கொழும்பில் அதிகுறைந்த வருமானத்தை உடையவர்கள் 40 சதவீதமாக அதிகாரித்துள்ளது. வருடாந்த பற்றக்குறை 3045 கோடி ரூபாவாக மாறியது. சர்வதேச நாணய நிதியம் வரவு செலவு பற்றக்குறை 8.5 சதவீதமாக மதிப்பிட்ட போதும், இது 10.5 சதவீதமாக அதிகாரித்துள்ளது. உள்நாட்டு கடன் மற்றும் மீள் அளிக்கப்பட வேண்டிய வட்டியுமாக 27500 கோடியாக அதிகரித்துள்ளது. இலங்கையின் கடன் மற்றும் வட்டியை ஆராய்வோம்.
1995 1996 1997 1998
உள்நாட்டு கடனுக்கான வட்டி 3500 கோடி 4220 கோடி 4860 கோடி 4760 கோடி
உள்நாட்டு கடனுக்கான வட்டி வீதம் 12.2 11.8 12.7 10.7
வெளிநாட்டு கடனுக்கான வட்டி 62 கோடி 670 கோடி 670 கோடி 730 கோடி
வெளிநாட்டு கடனுக்கான வட்டி வீதம் 1.8 1.9 1.8 1.6
அரசின் மொத்த வருமானத்தில் வட்டியின் வீதம் 30.2 32.8 33.5 31.4
நாட்டையே அடைமானம் வைத்த நிலையில் அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்க நட்டக் கணக்கை அரசு வெளியிட்டுள்ளது. பெற்றோலியம் கூட்டுத்தாபனம் 2150 கோடியும், மின்சார சபை 1560 கோடியும், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் 830 கோடியம், தபால் திணைக்களம் 230 கோடியும், இலங்கை போக்குவரத்து சபை 210 கோடியும் நட்டமடைந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதைத் தெரிவித்த நிதி அமைச்சர் கே.என்.சொக்சி தனது பதவிப்பிரமாணத்தில் "சீர்திருத்தம் வருத்தம் மிகுந்தது" என்ற கூறி, தேசிய சொத்துகளை அந்நியனுக்கு விற்பதற்கான ஒரு நியாயவாதத்தை முன்வைத்துள்ளார். அத்துடன் "மக்களை குறிப்பிட்ட காலம் எங்களுடன் தாங்கிக் கொள்ளுமாறு கேட்கவேண்டும். அதன்படி அவர்கள் குறைந்த பட்சம் ஒரு வித்தியாசமான சித்திரத்தைக் காண்பார்கள்" என்றார். அரசுதுறை சார்ந்த தேசிய வளங்களை நட்ட கணக்கு காட்டி, பன்நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிடவே அரசு காரணங்களை முன்வைக்கின்றது. மக்கள் தமது சொந்த உழைப்பில் உருவாக்கிய தேசிய வளங்களை அந்நியனுக்கு தாரவார்க்கும் போது, எதிர்ப்பு தெரிவிக்காது கைக் கூலிகளாக பங்கு கொள்ள அழைக்கின்றனர். இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் "ஸ்தாலமான அறிகுறிகளை" காணவில்லை என்று மிரட்டியதன் மூலம், தேசிய வளங்களை விரைவாக தானம் செய்யக் கோருகின்றனர். இதை மிரட்டலைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம் மீன்டும் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் "அரசாங்கத்திடமிருந்து" சமிக்கை கிடைத்துள்ளதாக கூறி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது. இவை அனைத்தும் அமைதியை நோக்கி முன்னேறும் தேசியத்தின் வாய் வீச்சுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சம காலத்திலேயே, நாட்டை ஒட்டு மொத்தமாக ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். தேசிய வாய் வீச்சாளர்கள் மௌனமாக இதை அங்கீகரித்து ஒத்துப் போவது சர்வசாதரணமாக நிகழ்கின்றது. சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசிடம் இவ்வருட (2002) முடிவுக்குள் 27.5 கோடி டொலர் பணத்தை, தனியார் மயக்குவதன் மூலம் திரட்ட வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இலங்கையில் ஏகாதிபத்திய தலையீடுகள் தேசிய பொருளாதாரத்தை வேகமாக சூறையாடத் தொடங்கியுள்ளது. மக்களின் தியாகங்கள் மேல் தேசியம் இதற்கு கம்பளம் விரிக்கின்றது.
1977 தேசிய வருவாயில் 41 சதவிதம் சமூக நலன் திட்டத்துக்கு பயன்படுத்தியது. ஆனால் 1977 இல் சர்வதேச நிதி நிறுவனங்கள் புகுந்த பின்பு, 1992 இல் இது 17 சதவீதமாக குறைந்தது. ரேசன் அரிசி நிறுத்தப்பட்டதன் மூலம் அரசு 65 கோடியை மக்களின் வறுமை மீதே கொள்ளையடித்து. அண்ணளவாக 1973 இல் 10 சதவீத பணக்கார குடும்பங்கள் தேசிய வருவாயில் 30 சதவீதத்தை அபகரித்தனர். இது 1992 இல் இது 40 சதவீதமாக அதிகரிhத்துள்ளது. தேசிய வருமானம் சிலரின் கையில் குவியும் அதே நேரம், வட்டியாக 35 சதத்தை ஒவ்வொரு ரூபாவுக்கு வட்டியாக கட்டுகின்ற தேசியமே எமது தேசியமாக உள்ளது. மக்களின் சமூக நலன் திட்டங்கள் மறுக்கப்பட்டு அவற்றை மேற்க்கில் உள்ளவர்களுக்கு கொடுக்கின்ற உலகமயமாதல் நிபந்தனைகளை, தலைகீழகாக நின்றே இலங்கையின் தேசிய வீரர்கள் செய்கின்றனர். 1983 முதல் 1993 வரையிலான பத்து வருட காலகட்டத்தில் பாதுகாப்புச் செலவு வளர்ச்சி பெற்று 5850 கோடியாக மாறியது. 1999 இல் இலங்கை அரசு பெறும் தேசிய வருவாயில் மூன்றில் ஒன்றை யுத்தத்துக்கு செலவு செய்கின்றனர். அரசின் மொத்த செலவில் 13.9 யுத்தத்துக்காக செலவு செய்யப்படுகின்றது. அரங்சாங்கம் மக்களை கசக்கி பிழிந்து பெறும் வரியில் 40 சதவீதம், யுத்தத்துக்கு செலவு செய்கின்றது. வரியாக சுரண்டும் 24884 கோடி ரூபாயில், யுத்த செலவு 10079 கோடியாகியது. இது மக்களின் தேசிய தலைவிதியாகியது. இதே நேரம் கல்விக்கு 1500 கோடியும், சுகாதாரத்துக்கு 900 கோடியுமே ஒதுக்கப்படுகின்றது. ஒருபுறம் யுத்தம் மக்களின் வாழ்வை சூறையாட, மறுதளத்தில் ஏகாதிபத்தியங்கள் வட்டியாகவும் சுரண்டல் வழியிலும் கொள்ளையடிக்கின்றன. தேசியம் இந்த இரு வடிவத்திலும் ஒத்துப் போவதன் மூலம், நாட்டை ஏகாதிபத்தியத்திடம் தரைவார்க்கின்றனர்.
ஆனால் மக்கள் வாழ்வு இழந்து நாட்டை விட்டே பிழைப்பைத் தேடி உலகெங்கும் ஒடுகின்றனர். அங்கு இழிந்த கூலிகளாக, பாலியல் வள்முறைக்குள் அடிமைகளாக தேசிய வருமானத்தை திரட்டித் தருகின்றனர். உரிமைகளற்ற அரையடிமை கூலிகளின் எற்றுமதியும், பாலியல் வன்முறைக்குள் சிக்கிவிடும் அடிமைத் தனமும் இலங்கையின் பிரதான உழைப்பாகியதுடன், தேசிய வருமானத்தை திரட்டித் தரும் மூலதனமாகிவிட்டது. பெருமளவில் வெளியேறியவர்கள் மாவட்டரீதியாக சதவீத்தில்
1979 1980
கொழும்பு 57.6 53.0
கம்பஹா 15.8 15.9
கண்டி 4.0 5.8
மன்னார் 0.1 0
அம்பாறை 0.2 0.3
புத்தளம் 1.0 1.5
1977 இல் மத்தியகிழக்கு நடுகளில் 15000 குறைந்தவர்களே கூலி வேலைக்குச் சென்றனர். 1979 இல் வெளியேறிய தொழிலாளர்களில் 47.3 சதவீதம் பெண்களாக இருந்தனர். இது 1993 இல் 72.5தாக மாறியது. 1992இல் ஒரு லட்சம் பெண்கள் அரபு அந்தப்புரங்களில் உழைக்க வைக்கப்ட்டனர். 1994 இல் இது 5 லட்சத்தை தாண்டியது. இது இலங்கையில் உழைக்கும் மக்கள் தொகையில் 6 சதவீதமாகும். இது இலங்கையின் வேலையின்மையுடன் ஒப்பிடின் 39 சதவீதமாகும். இதைச் சார்ந்து இலங்கையில் 25 லட்சம் மக்கள் அதாவது எட்டில் ஒருவர் வாழ்கின்ற இழிநிலைக்கு நாடு சென்றுள்ளது. இதன் மூலமான இலங்கைக்கு கிடைத்த வருமானம் 3000 கோடி ரூபாவாகும். வெளிநாட்டுக்கு மனித உழைப்பை கடத்தி பெறுவது தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லுகின்றது. மக்களை இழிவாக்கி சுரண்டும் தேசிய வருமானம் தொடர்ச்சியாக அதிகரிக்கின்றது.
1993 3059,2 கோடி ரூபா
1994 3534,5 கோடி ரூபா
1995 4089,1 கோடி ரூபா
1996 4784,0 கோடி ரூபா
2000 ஆண்டில் 8 இலட்சத்து 53 ஆயிரம் பேர் வெளிநாட்டில் வேலைக்கு சென்றதன் மூலம் சமூக சீரழிவுக்குள்ளாகியுள்ளனர். இதில் பெண்கள் 5 இலட்சத்து 53 ஆயிரமாகும் என்று, அரசு சார்பாக அமைச்சர் மகிந்த சமரசிங்க 2002 இல் தெரிவித்தார். அவர் மேலும் 2002இல் அரசு 3 லட்சம் வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி நாடு கடத்தவுள்ளதாகவும், இதன் மூலம் 23 கோடி வருமானத்தை பெற உள்ளதாக அறிவித்துள்ளார். உற்றார் உறவினர்களை இழந்து குடும்ப பந்த பாசங்களை தொலைத்து அந்நிய நாட்டில், எந்த தொழிச் சட்டத்துக்கு உட்படாத அடிமைகளாக இழிவுக்குள்ளாகிய ஒரு நாடு, அந்த மக்களின் வருமானத்தையே சூறையாடி வாழும் நிலைக்கு நாட்டை வழிநடத்தி செல்லுகின்றனர். இந்த நாடு கடந்து பிழைப்பவர்களில், மேற்கு நோக்கிய புலம் பெயர்வு உள்ளடக்கப்படவில்லை. ஒட்டு மொத்தமாக இலங்கை சனத்தொகையில் 20 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் நாடு கடந்துள்ளனர். அதாவது உழைக்கும் இளம் தலைமுறையே இந்த இழிநிலைக்கு தாழ்கின்றனர். மொத்த சனத் தொகையில் 10 சதவீதம் இந்த வகையில் சுரண்டப்படுகின்றனர்.
சொந்த தேசியத்துக்காக போரடடுவதாக மார்பு தட்டும் தேசிய வீரர்கள் சொந்த மக்களுக்கு சோறுபோட வக்கில்லாமல் இருப்பதை காட்டுகின்றது. இனம் கடந்து, மதம் கடந்து பிழைப்பைத் தேடி உழைக்கும் வர்க்கத்தை ஒட வைப்பதையே இன்றைய தேசிய பொருளாதாரமாக மாற்றியுள்ளனர். ஏகாதிபத்திய நலன்களை பாதுகாக்க தேசியம் செய்யும் யுத்தம், மக்களின் அடிப்படையான தேசிய நலன்களை அழிப்பதில் கண்ணும் கருத்துமாக செய்ற்படுகின்றனர். இலங்கையின் பிரதானமான ஏற்றுமதி வருமானத்தை திரட்டித் தரும் உற்பத்தியில், மனிதர்களை உழைப்புச் சந்தையில் ஏற்றுமதியாக்குவது ஒரு வடிவமாகிவிட்டது. இதன் விளைவை ஒப்பீட்டு அடிப்படையில் பார்ப்போம்.
இதன் ஒப்பீடும் அனுப்பிய பணம் இலட்சம் ரூபாவில்
வருடம் தனிநபர் உழைப்பை விற்று அனுப்பிய பணம் தேயிலை இரப்பர் தெங்கு ஆடை உற்பத்தி
1976 1080 21000 8900 3830 700
1980 25100 61700 25900 12340 18140
1990 160540 198230 30800 27830 251630
1994 353450 209640 35820 37610 766140
கடந்த இலங்கை வரலாற்றில் தேசிய வருவாய் எப்படி மாறி வருகின்றது என்பதை மேலுள்ள அட்டவனை காட்டுகின்றது. மலையக மக்களின் அரையடிமை உழைப்பும், சுதந்திர வர்த்தக வலையத்தில் நடக்கும் அரையடிமை உழைப்பும் மற்றும் வெளிநாட்டுக்கு அரையடிமைகளாக மனித உழைப்பை ஏற்றுமதி செய்வதன் மூலமே, இன்று இலங்கையின் தேசிய வருமானம் திரட்டப்படுகின்றது. இதில் பெருமளவில் பெண்கள் உழைப்பு அடிப்படையாக இருப்பதுடன், அவர்களின் இழிந்த வாழ்வின் (பட்டினி, ஆணாதிக்க ஒடுக்குமுறை, பாலியல் வன்முறை என்று பல தளத்தில்) ஊடாகவே இந்த மூலதனம் திரட்டப்படுகின்றது. இந்த உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பண்பாடு மற்றும் கலாச்சார உணர்வுகளே, தேசியமாக இருப்பது இதில் மற்றொரு உண்மையாகும். தேசிய மக்களின் பொருளாதார அடிப்படைகளை தேசியம் எந்த விதத்திலும் தீர்க்கவில்லை. மாறக அவர்களை இழிவுக்குள்ளாக்கியே தேசியத்துக்கு பதில் இனவாதம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த இனவாதம் சார்ந்து உருவான யுத்தம் தேசிய நலன்களை பிரதிபலிக்கவில்லை. தேசிய நலன்களை அந்நியனுக்கு தரை வார்ப்பதை அடிப்படையாக கொள்கின்றது. இந்த இனவாத யுத்தம் தீவிரமாக தேசிய வளங்களையே விழுங்கிவிடுகின்றது. முற்றாக சரியான மதிப்பீடு இல்லாவிட்டாலும் இலங்கை அரசின் பொலிஸ் மற்றும் இராணுவச் செலவு எப்படி இனவாத யுத்தத்துக்குள் அதிகரித்துச் செல்லுகின்றது எனப்பார்ப்போம்
1976 33.4 கோடி
1977 40.2 கோடி
1978 54.0 கோடி
1979 65.2 கோடி
1980 82.7 கோடி
1981 90.8 கோடி
1982 95.5 கோடி
1983 151.2 கோடி
1984 187 கோடி
1985 277 கோடி
1986 530 கோடி
1987 800 கோடி
1988 650 கோடி
1989 580 கோடி
1990 934 கோடி
1991 1413 கோடி
1992 1740 கோடி
1993 1827 கோடி
1994 2240 கோடி
1995 3320 கோடி
1996 3920 கோடி
வரவு செலவில் பாதுகாப்புக்கு ஒதுக்கியதும் செலவானதும்.
ஆண்டு பாதுகாப்புச் செலவானது பாதுகாப்புக்கு ஒதுக்கியது
1997 4500 கோடி 2730 கோடி
1998 5100 கோடி 2910 கோடி
1999 6340 கோடி 3300 கோடி
இனவாத அரசு சிறுபான்மை இனங்கள் மீது நடத்தும் இன யுத்தத்துக்கு மக்களின் உழைப்பில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை வாரியிறைக்கின்றனர். இதை எதிர்த்து தேசியத்துக்காக போராட வேண்டிய சிறுபான்மையினங்கள், தேசியத்துக்கு பதில் குறுந் தேசிய இன யுத்தத்தை நடத்துகின்னர். இதனால் புலிகளின் இராணுவச் செலவு, அரசின் இராணுவ செலவுடன் ஒப்பிடும் போது 20 சதவீதமாகும். வடக்குகிழக்கு தேசிய வருமானத்தில் 5.78 முதல் 10 சதவீதத்தை யுத்தத்தில் பயன்படுத்துகின்றது. புலிகள் 2000 ஆண்டு வரை அண்ணளவாக 4260 கோடி ரூபாவை யுத்தத்துக்கு செலவு செய்துள்ளாதாக மதிப்பிடப்படுகின்றது. இதே காலத்தில் இராணுவம் 35118 கோடியை செலவு செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக தேசிய வருமானத்தில் 50 முதல் 60 ஆயிரம் கோடியை இராணுவதுறை சார்ந்து அழிக்கப்ட்டுள்ளது. இந்த யுத்தத்தில் மக்களின் தேசிய வளங்கள் அழிகப்படும் அதே நேரம் மக்களுக்கு ஏதை பெற்றுத் தர இதை நடத்துகின்றனர் என்றால் எதுவுமில்லை. தேசிய வளங்களை பாதுகாக்கவும், தேசிய பொருளாதாரத்தை மீட்க்கும் ஒரு தேசிய யுத்தமாக இருந்தால் அது முற்போக்கானதாக அமைந்திருக்கும். ஆனால் தேசிய பொருளாதாரத்தை அன்னியனுக்கு தரைவார்க்கும் தேசிய கொள்கையுடன், தேசியத்துக்கு பதில் இன யுத்தமான போது, மக்கள் மேலும் அடிமைத் தனத்துக்குள் இழிந்து செல்லுகின்றனர். யுத்தம் ஏற்படுத்தும் விளைவு மற்றொரு தேசிய அழிப்பாக மாறிவிடுகின்றது.
1983-1987 க்கு இடைப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன. 34 ஆயிரம் வீடுகள் சேதமாகின. 1987-1994 க்கு இடையில் புனருத்தாரணம், புனர்நிர்மானம், நிவாரணமாக 2265 கேடி ரூபா செலவு செய்யப்பட்டது. போர்ச் செலவீனம் 1987 முதல் 1998 வரையிலான காலத்தில் (செலவு, சொத்தழிவு, உற்பத்தி இழப்பு)
1.நேரடிச் செலவு
நேரடியாக போருக்கான அரசின் செலவு 21232 கோடி ரூபா
பொதுசன பாதுகாப்ப மேலதிக செலவு 4000 கோடி ரூபா
புலிகளின் போர்ச் செலவு 4200 கோடி ரூபா
இடம்பெயர்வு சம்பந்தப்பட்ட செலவு 3800 கோடி ரூபா
மொத்தம் 33392 கோடி ரூபா
2.சொத்திழப்பு, புனர்நிர்மாணச் செலவு
1987 - வடகிழக்கு புனர்நிர்மாணச் செலவு 1040 கோடி ரூபா
1995 - வடகிழக்கு புனர்நிர்மாணச் செலவு 4900 கோடி ரூபா
வீடுகள் புனர்நிர்மாணம் (வடக்குகிழக்கு) 1010 கோடி ரூபா
வடகிழக்கு வெளியே வீடமைப்பு 450 கோடி ரூபா
வடகிழக்கு வெளியே அழிவுகள் (1998 பெறுமதி) 11230 கோடி ரூபா
1995 க்கு பின் 2480 கோடி ரூபா
3.உற்பத்தி இழப்பு
தொழில் நிபுணர்கள் காரணமான இழப்பு 11250 கோடி ரூபா
வடகிழக்கு உற்பத்தி இழப்பு
1.1982 அடிப்படையில்
உற்பத்தி குறைவு மொத்தமாக 27300 கோடி ரூபா
2.தேசிய வளர்ச்சி வீதத்தில்
வடக்குகிழக்கின் உற்பத்தி இழப்பு 39200 கோடி ரூபா
உல்லாச பயணத்துறை 12000 கோடி ரூபா
அந்நியமுதலீடு 7500 கோடி ரூபா
மொத்த போர்ச் செலவு 151752 கோடி ரூபா
அழிவுகளைத் தவிர்த்த மொத்த செலவீனம் 130642 கோடி ரூபா
இலங்கையின் இன யுத்தம் தொடங்கிய 15 வருடத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 282 394 கோடி ரூபாவுக்கு மேல் அழிந்துள்ளது. இதில் பொருட்களின் அழிவுகள் உள்ளடக்கப்படவில்லை. இலங்கையில் பெருபான்மை இனங்கள் படிமுறை வரிசையிலும், நேரடியாகவும் சிறுபான்மை இனங்களை ஒடுக்குகின்றன. இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான நியாயமான போராட்டம், தேசிய அடிப்படைகளை கோரத் தவறிவிட்டது. மாறாக இனப் போராட்டமாகியதால் குறுந்தேசியமாகி ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை தரைவார்க்கவே வழிநடத்திச் செல்லுகின்றனர். தேசிய பொருளாதாரங்கள் பிரமாண்டமாக அழிக்கப்பட்ட நிலையில், மக்கள் மேலும் வாழ்வை இழந்து செல்லுகின்றனர். நடக்கின்ற யுத்தம் இந்த மக்களின் தேவையை ஒருநாளும் பூர்த்தி செய்யப் போவதில்லை. மேலும் நாட்டை ஏகாதிபத்தியத்திடம் தரைவார்ப்பதன் மூலம், மக்களை கையேந்தவே வழிகாட்டுகின்றனர். இந்த இனவாத யுத்தம் இனங்களை அழித் தொழிப்பதே புதிய வேலை வாய்ப்பாக, இராணுவத்தை உருவாக்கிவிட்டது. இன்று இலங்கையில் இரண்டவது அதிக வேலை வாய்ப்பை வழங்குவது இராணுவத்துறையாகும். மொத்தம் 2 75 000 பேர் நேரடியாக இதில் உள்ளனர். இவர்களின் சம்பளம் மற்றும் செலவுகளாக 2500 கோடி செலவாகின்றது. இந்த இராணுவம் சார்ந்து விபச்சாரம் முதல் ஆயுத தரகர்கள் வரை ஒரு ஒட்டுண்ணி பொருளாதாரமும் வளர்ச்சி பெற்றுள்ளது.
மக்கள் கஞ்சி குடிக்கும் தேசிய வளங்களை சூறையாடுவதே இனத் தேசியத்தின் குறிக்கோளாகவே உள்ளது. இராணுவத்துறை பாரிய பொருளாதாரத்தை ஏப்பம் விடும் அதே தளத்தில், மக்களின் அடிப்படையான உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நெல் உற்பத்தி மூலம் கிடைப்பது 2684 கோடி ரூபாவாகும். உபதானியம் மூலம் கிடைப்பது 3303 கோடி ரூபாவாகும். இந்த விவசாய உற்பத்தியில் இருந்து கிராமப்புற மக்களுக்கு கிடைப்பது 1998 கோடி ரூபாவாகும். மிகுதியை சூறையாடும் அரசு யுத்தத்துக்கும், ஏகாதிபத்தியங்களுக்கு வட்டி கட்டவுமே பயன்படுத்தப்படுகின்றது.
பன்நாட்டு நிறுவனங்களின் நேரடி சுரண்டல் இலங்கையில் அதிகரித்துள்ளது. ஆடை ஏற்றுமதியில் பன்நாட்டு நிறுவனங்கள் 1596 கோடி ரூபாவை நிகர லாபமாக கொள்ளையடித்துள்ளனர். சுதந்திர வர்த்தக வலையத்தில் ஆடை உற்பத்தி 1997இல் இருந்ததை விட 1999 இல் ஆறு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் பெறுமதி 245 கோடி டொலாராகும். இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் இது 52 சதவீதமாக மாறியுள்ளது. கைத்தொழில் அமைச்சின் அறிக்கையின்படி 1998 இல் 280 000 அரை அடிமைகளைக் கொண்ட 890 தொழிற்சாலைகள் இயங்கின. முழுமையாக இளம் பெண்களின் உழைப்பில் இயங்கும் இந்த சுதந்திர வர்த்தக வலையத்தில், இலங்கையின் தொழில் சட்டங்கள் எதுவும் செல்லுபடியாகது. தொழிச்சங்க உரிமையற்ற இந்த இளம் பெண்கள் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படுவதுடன், பாலியில் பண்டமாகவும் சீராழிந்துள்ளனர். தொழிச்சாலை கறுப்பு அதிகார வர்க்கத்தின் பாலியல் வன்முறைக்கு இசைந்து கொடுப்பது, வேலைக்கான உத்தரவாதத்துக்கான நன்நடத்தையாகியுள்ளது. இந்த பெண்கள் சமூக வாழ்வில் ஈடுபடமுடியாத சமூக இழிவுக்குள், ஆணாதிக்க பாலியல் அடிப்படையில் இழிவாக்கப்பட்டுள்ளனர். கற்பு, ஒழுக்கம் எதுவுமற்ற ஒரு தனிச் சமூகமாக அடையாளம் காட்டி நடக்கும் சமூக பாலியல் ஒடுக்குமுறை, பன்நாட்டு நிறுவனங்களுக்கு மேலும் உழைபை கறந்தெடுக்க வாய்ப்பாகிவிடுகின்றது. படுக்கைகளின் சூடு ஆறாத வண்ணம் நெருக்கடிகள் நிறைந்த பொந்துகளில் குடியிருக்கின்றனர். இங்கு வீட்டுச் சொந்தக்காரன் முதல் சுற்று வட்டார ஆணாதிக்க ஆண்களின் பாலியல் வன்முறைக்கு எதிர் கொள்ள முடியாத அபலைகளாக வாழ்கின்றனர். பல ஆண்களிடம் இருந்து தற்காப்பு கருதி ஒரு ஆணை சார்ந்து வாழ்வது ஒரு வடிவமாகின்றது. இந்த பெண்களின் கதை ஒரு தனிக் கதையாகவே உள்ளது. சொந்த மக்களை அந்நியனுக்கு அடிமைகளாகவும், உழைப்பை சூறையாடவும் விட்ட பின்பே, தேசியம் பற்றி தமிழ் சிங்கள தேசிய வாதிகள் பீற்றுகின்றனர். தேசியம் இந்த மனித இழிநிலைகளை எதிர்த்து போராடாத வரை, இதை வெறுக்காத வரை இந்த தேசியம் வெறுமனே குறுந் தேசியமாக சீரழிகின்றது. யுத்தம் இனவாதமாக எஞ்சி விடுகின்றது. இதையே தமிழ் பிரதேசத்தில் செய்ய தமிழ் தேசிய வாதிகள் துடிக்கின்றனர்.
சமாதனம் என்ற பெயரில் தேசியங்களை விலை பேசுவதும், உதவி என்ற பெயரில் அதை விபச்சாரம் செய்ய வைப்பதும் பெரியளவில் தொடங்கியுள்ளது. யாழ் குடா நாட்டு மக்களுக்கு உதவி என்ற பெயரில், ஐரோப்பிய யூனியன் 8.8 லட்சம் டொலரை வழங்கியுள்ளது. இது போன்று ஆசியன் வங்கி முதல் அமெரிக்கா ஈறாக பணத்தை வாரி வழங்குகின்றனர். தேசிய இனங்களை விபச்சாரம் செய்ய இந்த கையூட்டு அவசியமானதாக உள்ளது. ஏகாதிபத்திய நிதி உதவியில் இலங்கையில் 3000 அரசு சார்பற்ற நிறுவனங்களாக கூறிக் கொள்ளும் தன்னார்வக் குழுக்கள் செயற்படுகின்றன. 1990 இல் உலகெங்கும் விரிந்து பரவிய இந்த குழுக்களுக்கு 400 கோடி டொலரை ஏகாதிபத்தியங்கள் வாரி வழங்கின. ஏகாதிபத்திய கையூட்டில் செழித்து வளரும் அரசு சார்பற்ற நிறுவனங்கள், தேசங்களையும், தேசியங்களையும் ஏகாதிபத்தியம் அழித் தொழிக்க எதிர்பற்ற புறச்சூழலை உருவாக்கி கொடுக்கின்றனர். பணத்தைக் கொண்டு போராடுபவர்களையும் சமூக அக்கறையுள்ளவர்களையும் வாங்குவதும், சிறு சலுகைகளை கொடுத்த மக்களின் எதிர்பாற்றலை நலனடிப்பதும் இதன் பிரதான மைய செயற்களமாகும். அதேநேரம் ஏகாதிபத்தியத்துக்கு தேவையான விபரங்களை அனைத்த துறையிலும் துல்லியமாக திரட்டி வழங்குவது இதன் மற்றொரு பணியாகும். இந்த துறை சார்ந்து இலங்கையில் இந்த தன்னார்வக் குழுக்கள் அரசு மற்றும் புலிகள் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் இயங்குகின்றன. இந்த நாசகார குடையின் கீழ் தேசமும், தேசியமும் அழிக்கப்படுகின்றது. மறு தளத்தில் தேசமும், தேசியத்தை கோரும் போராட்டமும் தேசியத்தையும் தேசிய பொருளாதாரத்தையும் அழிப்பதற்கு இணங்குகின்றனர். அவர்களே அதை அழிக்கின்றனர்.
தேசியம் என்பது தேசிய பொருளாதாரத்தில் உட்செறிந்த காணப்படுகின்றது. தேசிய பொருளாதாரம் சிதைகின்ற போது தேசியத்தின் அனைத்து கூறுகளம் அழிகின்றன. இலங்கையை ஆளும் சிங்கள இனவெறி அரசு சிங்கள தேசியம் என்ற பெயரில் நாட்டை ஏகாதிபத்தியத்துக்கு விபாச்சாரம் செய்ய விட்டதன் மூலம், மறு காலனியாக்கம் இசைவாகவும் இயல்பாகவும் வேகம் பெறுகின்றது. இந்த நிலையில் தேசியத்தை முன்வைத்து போராடுபவர்கள் தேசியத்துக்கு பதில் இனத் தேசியத்தை முன்னிலைப்படுத்தினர். தேசிய நலனுக்கு பதில் இன நலனை முன்னிலைப்படுத்தினர். இது படிப்படியாக சீரழிந்து இனத் தேசியத்தின் பின் இருந்த தேசிய நலன்களை கைவிட்டு, குறுந்தேசிய நலன்களை அரசியலாக்கினர். ஏகாதிபத்திய சூறையாடலுக்கு தமிழ் தேசியத்தை தரைவார்க்கவும், தமிழ் இனத்தில் உயர் சாதிய யாழ் மேட்டுக்குடியின் நலன்களை மையப்படுத்தினர். தேசத்தின் பொருளாதார நலனை முன்னிலைப்படுத்தி உழைக்கும் வர்க்கத்தையும், அவர்களின் தேசிய நலன்களையும் பாதுகாக்கத் தவறி எட்டி உதைத்தனர், உதைக்கின்றனர். சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு பதில் தமிழ் ஆளும் வர்க்கத்தை தமிழ் பிரதேசத்தில் நிறுவும் ஒரேயொரு குறிக்கோள் மட்டுமே, இந்த இனக் குறுந் தேசியத்தின் மைய விடையமாகிவிடுகின்றது. மற்றைய அனைத்தையும் இலங்கை அரசு போல் விதிவிலக்கின்றி கையாளுகின்றனர்.
புலிகளின் வரி அறவிடும் முறை தேசியத்தை அழிப்பதில் பிரதான மையமான ஒரு வடிவமாகியுள்ளது. வரி அறவிடுவது ஒரு நாட்டில் தனியார் சுரண்டும் உற்பத்தி முறை உள்ளவரை, அவர்களிடம் இருந்து அறவிடுவது அவசியமான விடையமாகியுள்ளது. இந்த வரி என்பது நாட்டின் பொது சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யவே பயன்படுத்த வேண்டும். ஆனால் அது அப்படி இருப்பதில்லை. ஏகாதிபத்தியத்துக்கு வட்டி என்ற பெயரில் மானியம் கொடுக்கவும், ஏகாதிபத்திய பன்நாட்டு நிறுவனங்களின் உற்பத்தியை இறக்குமதி செய்து சலுகை பெறவும், மக்களை அடக்கியாளவும், ஆளும் வர்க்கம் கொழுக்கவுமே பொதுவாக இன்று பயன்படுத்தப்படுகின்றது.
இதை தேசியவாதிகள் தமது கொள்கை அல்ல, என்று மறுத்துவிடவில்லை. ஆட்சிக்கு வரும் போது இதையே செய்ய மார்பு தட்டுகின்றனர். அதற்கான அனைத்து நடவடிக்கையையும் இன்றே செய்கின்றனர். இன்று புலிகளின் வரி என்பது தேசிய உற்பத்தி அழிப்பதாக உள்ளது. உற்பத்திகள் மேலான கடுமையான வரிமுறையை புலிகள் கையாளுகின்றனர். உற்பத்தி மீதான வரியும், அதைத் தொடர்ந்து அதன் விற்பனை மீதும் ஒவ்வொரு தரமும் வரி அறவிடும் முறை கையாளப்படுகின்றது. உற்பத்திக்கு முன்பும் உற்பத்தி பொருட்கள் மீதும் வரி அறவிடப்படுகின்றது. ஒரு பொருள் பயன்பாடு வரை அதாவது விற்பனை நின்று போகும் வரை, அதன் எல்லாப் படிநிலையிலும் வரிமுறைக்குள்ளாகின்றது. வரி மீள மீளக் கோரப்படுகின்றது. உதாரணமாக நெல் உற்பத்தியில் நீர் பாசனத்தை எடுப்பின் 1980 இல் 300 ரூபாவாக இருந்த வரி இன்று 3000 ரூபாவுக்கு மேலாக மாறிவிட்டது. இது மட்டுமின்றி ஒரு பொருளை வாங்கும் ஒருவனின், உழைப்புக்கும் கூட வரி அறவிடப்படுகின்றது. ஒருமுறை வரி கட்டியவனுக்கு இரண்டாம் முறை அதை மீட்டுயெடுக்க வழியில்லை. வரி என்பது ஒரு சூறையாடும் முறையாக படிநிலையாக உள்ளது. ஒரு பொருளின் உற்பத்தியை விட அதன் படிமுறை வரி, உற்பத்தி பொருளின் விலையை பலமடங்காக்கின்றது.
சிங்கள இனவாதிகள் திட்டமிட்ட பொருளாதாரத் தடை மூலம் நடத்துகின்ற இன அழிப்புக்கு நிகராக, புலிகளின் வரிகள் தேசிய உற்பத்திகளை அழிக்கின்றன. சிங்கள அரசின் திட்டமிட்ட பொரளாதரத் தடையையும், பல வரிகளைக் கடந்தும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் வரும் பொருட்களுக்கு, புலிகள் கண்முடித்தனமாக வரிவிதிக்கின்றனர். பின் விற்பனைக்கும் வரி விதிக்கப்படுகின்றது. வரி தான் தேசிய வருமானமாக மாறிவிட்டது. இங்கு உற்பத்தியல்ல. சிங்கப்பூர் கனவுனளில் மிதக்கும் புலிகளின் தரகுத் தன்மை, தேசியத்தையே வரியாகிவிடுகின்றது. இஸ்ரேலிய கனவுகளுடன் மிதக்கும் புலிகள், உலகிலேயே அதிக அமெரிக்க உதவி பெறும் இஸ்ரேலின், பேட்டை ரவுடித்தனத்தை காணத் தவறுகின்றனர். மக்களின் அடிப்படை தேவை, அவர்களின் வாழ்வு என்பதில் இருந்து அவர்களின் உற்பத்தி சார்ந்து தேசியத்தை, தேசிய பொருளாதாரத்தை புலிகள் முன்வைக்கவில்லை. மாறாக ஏகாதிபத்திய மறுகாலனிய பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி சிங்கப்ப+ர், இஸ்ரேலிய கனவுகளுடன் மிதக்கின்றனர்.
வன்னியில் தமிழ்ச்செல்வன் செய்தியாளருக்கு முன் நிகழ்த்திய அண்மைய உரையில், இந்த ஏகாதிபத்திய பொருளாதார நலனை பிரதிபலித்து முன்வைத்த கருத்தில் சிறப்பாக காணலாம். "சுகாதாரம், கல்வி வசதிகள், போக்குவரத்து வசதிகள் என அனைத்து வசதிகளும், எம் மக்களுக்கு அரசினால் மறுக்கப்பட்டன. மக்கள் தமது வாழ்க்கையை நடத்துவதற்கான தொழில் வாய்ப்புகளின்றி மிகவும் அல்லலுறுகின்றனர்." என்று புலிகள் கூறும் போது, தேசியம் நிர்வணமாக அம்பலமாகின்றது. அரசின் திட்டமிட்ட ஒடுக்குமுறை உண்டு என்பது அனைவரும் அறிந்தே. ஆனால் நீண்ட காலம் ஒரு தேசத்தை கட்டமைத்து, பல நூறு வரிவிதித்து தமிழ் தேசியம் என்று கூறும் போது, ஏன் இதை உங்களால் சொந்தத்தில் சாதிக்க முடியவில்லை. சுகதாரம், கல்வி, போக்குவரத்து வசதி போன்றவற்றை அரசு தடை செய்தது எனின், அவர்களுக்கு அது எங்கிருந்து கிடைக்கின்றது. எந்த வளமும் எந்த வசதியும் மனித உழைப்பில் இருந்தே உருவாகின்றது. டொலர் என்ற காகித பணத்தில் இருந்தல்ல. மனித உழைப்புக்கு வெளியில் எதையும் யாரும் வெற்றிடத்தில் பெறமுடியாது. மனித உழைப்பே அனைத்தையும் படைக்கின்றது. இன்று புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இயங்கும் அனைத்து அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தையும் அரசே வழங்குகின்றது. ஆனால் அவர்களின் மேலான வரி மற்றும் அங்குள்ள உற்பத்தி மேல் புலிகள் வரி அறவிடுகின்றனர். இப்படி அரசின் பொதுவான தன்மைகளை புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளோர் பெறுகின்றனர். இது கடும் நெருக்கடிக் ஊடாக கடந்து வருவதாக இருக்கலாம். ஆனால் சொந்த கட்டுப்பாட்டு பிரதேசம் முதல் புலம் பெயர்ந்த நாடு வரை வரியாகவும், உதவியாகவும், நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டியும் சேர்க்கும் பணம் முதல் அபகரித்தும் பெறும், பெரும் தொகையிலான பணத்தை தேசிய பொருளாதார கட்டுமானம் மீது என் பயன்படுத்தவில்லை. மக்களின் ஆரோக்கியமான சந்தோசமான வாழ்வில் இருந்தே தேசத்தின் தேவையை ஏன் பூர்த்தியாக்கவில்லை.
மக்களின் உழைப்புதான் கல்வியில் இருந்து சுகதாரம் என அனைத்துக்கும் அடிப்படையானது. அமெரிக்க டொலர்களும் மார்க்குகளுமல்ல. தமிழ்ச்செல்வன் தனது உரையில் "விவசாயத்திற்கான உள்ளீடுகளையும், கிருமிநாசினிகளையும் பெற முடியாமல் ..." உள்ளதாக கூறும் அதே தளத்தில், தேசிய பொருளாதாரம் என்பதை புலிகள் நிராகரிக்கின்றனர். விவசாய உள்ளீடுகளும், கிருமிநாசிகளும் கடந்த 30, 40 வருடத்திய பசுமைப் புரட்சியும் அதைத் தொடர்ந்து வந்த உலகமயமாக்கலும், தேசிய விவசாயத்தை அழிக்கும் உள்ளீடாக அறிமுகமானவையே. பசுமைப்புரட்சினதும் உலகமயமாதலினதும் உள்ளீடுகளான கிருமிநாசிகளும், உரங்களுமற்ற உற்பத்திமுறை, எம் மண்ணில் இருந்துள்ளது. இதுவே தேசிய உற்பத்தியாகும். சொந்த கிராமமும் சுற்று வட்டரமும் என்ற அளவில் இருந்த தேசிய உற்பத்தி, மனித தேவையின் அடிப்படையை பூhத்தி செய்தது. அந்நிய நாட்டிடம் கையேந்தியும், அயல் மாவட்டங்களின் வளங்களைச் சார்ந்து இந்த உற்பத்தி இருக்கவில்லை. மாறக தன்னிறைவான உற்பத்தியாக இருந்துள்ளது. இதை புலிகள் தேசியம் சார்ந்து மீட்டுயெடுக்கவில்லை. சிங்கள இனவாதிகள் ஏகாதிபத்திய விசவாசத்துடன் மறு காலனியதிக்கத்தை அடிப்படையாக கொண்ட அதே உற்பத்தி முறையை, அப்படியே புலிகள் பாதுகாக்கின்றனர். தேசியம் என்ற அடிப்படையில் சிங்கள அரசின் உற்பத்தி முறையில் இருந்து எந்த விதத்திலும் எதையும் மாற்றிவிடவில்லை. பிரிட்டனின் காலனிய காலத்தில் கூட, பிரிட்டனில் இருந்து எதுவும் வந்துவிடவில்லை. மாறக சொந்தவளம் சார்ந்தே இந்த உற்பத்தி இருந்தது. மனிதனின் கல்வி, சுகதாரம் என்று பல்துறை சார்ந்து இது இருந்துள்ளது. ஊருக்கு ஊர் குளங்கள் முதல் அது சார்ந்த தேசிய உற்பத்தி முறைகளும், அனைவருக்குமான வேலை வாய்ப்பை இந்த மண் ப+ர்த்தி செய்திருந்தது. இந்த உண்மையை புரிந்த கொள்ளாத யாரும், இதை மீளவும் ஒரு தேசியமாக்கி, அதை முன்னெடுக்க முடியாத யாரும், உண்மையில் தேசிய பொருளாதாரத்தை முன்வைக்க முடியாது. யாரும் உண்மையான தேசியத்துக்காக ஒரு அடியைத் தன்னும் எடுத்து வைக்கமுடியாது. மாறாக ஏகாதிபத்திய பொருளாதாரத்தை தரகுடன் கூடிய அடக்குமுறையுடன் தேசியத்தை அழிக்கவே முடியும்.
முன்னைய தேசிய வளங்கள் மீது வரி அறவிட்டதற்கு அப்பால், அதன் வளர்ச்சி மீதும் எந்த அக்கறையையும் தேசியம் காட்டவில்லை. அதை சூறையாடுவது மட்டுமே நிகழ்ந்தது. நிகழ்கின்றது. மக்களின் அன்றாட பிழைப்பு சார்ந்து நீடித்த மக்களின் இந்த உழைப்புகள், வரிகள் மூலம் ஒருபக்கம் அழிக்கப்படுகின்றது. மாறாக ஏகாதிபத்திய பொருளாதாரத்தை முன்னிறுத்தி தேசிய பொருளாதாரத்தை அழிக்கின்றனர். வன்னியில் இருந்த வந்த கடிதம் ஒன்றில் இது தெளிவாக பிரதிபலிக்கின்றது. "நாட்டுப் பிரச்சனைகளை நினைத்தால் என்ன பிள்ளை என்றாலும் இனி மேல் வளர்ப்பது கஸ்ரம். … அக்கா நீங்கள் எல்லோரும் போனது நல்லதாய் போய்விட்டது. போராட்டத்தில் பிள்ளைகள் இருந்தாலும், எல்லைப் படைக்கு சின்னன்னையை கேட்ட போது போகமாட்டேன் என்று சொன்னபடியால் மோட்டச் சைக்கிள் அவர் ஓடப்போவதில்லை. தோட்டம் செய்வது என்றால் இயக்கமும் தோட்டம் செய்து மரக்கறி சந்தைக்கு விற்பனை செய்து கொண்டு இருக்கின்றது. நாங்கள் மண் எண்ணை 120 ரூபாவிற்கு மேல் வாங்கி செய்யவேனும். இயக்கம் 30 ரூபா எண்ணையில் செய்து கொண்டு இருக்கின்றது. என்ன செய்தாலும் கஸ்ரம். ….. இருப்பது கொஞ்ச சனங்கள் தான். 96 இல் நடந்த பிரச்சனையில் எல்லாரும் வவுனியாவுக்கிற்கு போய்விட்டனர்" 20.5.2001 இல் எழுதிய இக் கடிதம், சர்வசாதரணமான மக்களின் உள்ளார்ந்த அபிராயங்கள். புலிகளால் 30 ரூபாவுக்கு எண்ணை பெறமுடிகின்றது. ஆனால் மக்கள் பல வரி கடந்து 120 ரூபாவுக்கே எண்ணையை பெறுவதைக் காட்டுகின்றது. இது பல பொருட்களுக்கும் பொருந்தும். இனவாத அரசின் தடை என்று மட்டும் கூறி மக்களை ஏமாற்றமுடியவில்லை. மக்களின் உழைப்பு முடக்கப்படுவதைக் காட்டுகின்றது. ஒன்றில் உற்பத்தியில் சம வாய்ப்பை எல்லோரும் வழங்கி உற்பத்தியை வளர்த்தெடுக்கவேண்டும். அல்லது உற்பத்தியை கூட்டுறவாக்கி அவர்களின் கையில் அதிகாரத்தை கொடுத்து, அவர்களின் உற்சாகத்தின் ஊடாக உற்பத்தியை பெருக்கி தேசிய வளத்தை வளர்த்திருக்கவேண்டும். ஆனால் மக்களின் உழைப்பு மேல் கடும் வரியை விதித்தனர். இதனால் உற்பத்தி கடுமையான நெருக்கடியை சந்திக்கின்றது. உற்பத்தியை கைவிடுவது நடந்தது, நடக்கின்றது. சொந்த உற்பத்தியை விற்க முடியாத நிலையில் பொருள் தேகத்துக்கு உள்ளாகின்றது. உற்பத்திகளை வாங்கும் திறனை மக்கள் இழந்துவிடுகின்றனர். அதே நேரம் மக்கள் பட்டினியில் மடிகின்றனர். குறுந் தேசியவாதிகள் எலும்பும் தோலுமான குழந்தைகளின் படத்தை தமது பத்திரிகைகளில் போட்டு, அரசின் பொருளாதாரத் தடையால் நிகழ்வதாக காட்டும் அதேநேரம், வடக்கு கிழக்கு விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி அரசுக்கு எதிராக மனு கொடுக்கின்றனர், போராடுகின்றனர். வடக்கு கிழக்கில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு நெல் உற்பத்தி நடக்கின்றது. ஆனால் மக்கள் பட்டினியில் வாழ்கின்றனர் என்றால் அதற்கு காரணம் என்ன? தேசியவாதிகளின் கொள்கை அடிப்படையான காரணமாகும். இலங்கை இனவாத சிங்கள அரசு நடத்தும் பொருளாதார தடைக்கு நிகராக, குறுந்தேசியவாதிகளின் தேசிய பொருளாதாரக் கொள்கை மக்களை பட்டினியில் தள்ளுகின்றது. மீன்பிடி தொடங்கியவுடன் ஏற்றுமதி வசதி பற்றி கோரப்படுகின்றது. ஆனால் மக்களுக்கு மீன் கிடைப்பதில்லை. எங்கும் மக்கள் வாங்கும் சக்தியை இழந்து விட்டனர். இழந்துவிடுமளவுக்கு தேசிய கொள்கை மக்களின் உழைப்பை மறுக்கின்றது. அவர்களின் கூலியை சூறையாடுகின்றனர்.
இந்த மண்ணின் தேசிய வளத்தை தேசிய பொருளாதாரத்தை எப்படி தேசியவாதிகள் தேசிய நலன் சார்ந்து கட்டமைத்துள்ளனர். மக்களின் உழைப்பு விவசாயமாக இருப்பதால், எத்தனை ஏக்கர் நிலத்தை புதிய நீர்ப் பாசனத் திட்டத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். எத்தனை குளங்கள் புதிதாக அமைத்துள்ளனர். எத்தனை குளங்களை மீள புனரமைத்தனர். அரசு வழங்கும் சம்பிரதாய பூர்வமான குள நிர்வாகங்களுக்கு அப்பால், எதையும் தேசியவாதிகள் செய்யவில்லை. இலங்கையில் இயல்பான வகையில் செய்யப்படும் நிகழ்சிக்கு அப்பால், தேசியவாதிகளால் தேசிய பொரளாதாரத்தை வளர்த்தெடுக்கும் அரசியல் வடிவில், எதுவும் செய்யப்படவில்லை. எத்தனை கன மீற்றர் நீரை புதிதாக சேகரித்துள்ளனர். மறாக நீர் வீணாக்குவது அதிகரித்துள்ளது. மண் அரிப்பு விரிவாகியுள்ளது. அந்நிய நாட்டிடம் கை ஏந்தாத வகையில் (இது இலங்கை சிங்கள அரசு முதல் அமெரிக்கா ஈறாக), தேசிய பொருளாதாரத்தை எப்படி மாற்றியமைத்துள்ளனர். எல்லாம் வெற்றுமான ஒரு வட்டம்தான்.
பல குளங்கள் வடக்கு கிழக்கில் முற்றாக தூர்ந்து அழிந்துவிட்டது. பெரும்பான்மையான குளங்கள் பராமரிக்கப்படமையால் அழிந்து கொண்டிருக்கின்றது. மழை நீர் கடலுக்கு வழிந்தோடுவது என்றுமில்லாத வகையில் தேசிய வளம் சிதைந்து விட்டது. இதை சிங்கள இனவாத அரசு செய்யவேண்டும் என்று கூறுவதும், குறுந் தமிழ் தேசியம் கற்பனை பண்ணுவதும் வேடிக்கையானது. ஆயுதத்தை அரசு தராது போல், தேசிய பொருளாதாரத்தையும் அரசு கட்டமைத்து தரமாட்டது. அரசு விரும்பினாலும் ஏகாதிபத்தியம் அனுமதிக்காது. ஏகாதிபத்தியம் தான் கொடுக்கும் பணத்துக்கு மட்டுமல்ல, தேசிய வருமானத்தையும் ஏப்படி செலவு செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர். இதை புரிந்து கொண்டு தேசிய வாதிகளான நீங்கள் தான், தேசிய பொருளாதாரத்தை கட்ட வேண்டும். குளத்தை புனரமைப்பது, அதை பராமரிப்பதும், நீர் வளத்தை அதிகரிக்க வைப்பதும் மக்களின் உழைப்பாக உள்ளவரை, எப்படி இதை குறுந் தேசியவாதிகள் திசைதிருப்ப முடியும். மக்கள் வேலையின்றி, வாழ வழியின்றி வாழ்கின்ற நிலையில், தேசியத்தின் ஆக்க பணியில் ஈடுபடுத்தும் வகையில் தேசிய பொருளாதாரக் கொள்கையை குறுந் தேசியவாதிகள் ஒருநாளும் கையாளவில்லை. தேசிய வளங்களை அழிக்க கோரி உலகமயமாதல் கோருகின்றது. அதை சிங்கள அரசு சிரமேற்றுள்ளது. இதையே குறுந் தமிழ் தேசியமும் சிரமேற்கின்றது. சிறிய நீர் தேக்கங்களில் நீரை தேக்கி வைப்பது கைவிடப்படுகின்றது. இவை லாபமற்றவையாக கருதி கைவிடுவதே உலகமயமாதல் நிபந்தனைக்கு உட்பட்டது. இதுவே குறுந் தேசியவாதிகளின் நிலையும் கூட. நாட்டை அடகுவைத்து வட்டி கட்டும் அதே நேரம், மக்களின் உணவை ஏற்றுமதி செய்து தேசியத்தை மீட்க போவதாக நம்பிக்கைய+ட்டுகின்றனர். அமெரிக்கா நிபந்னையுடன் தரும் பேப்பர் டொலர், சுயமாக உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. எங்கும் மக்கள் தான் உழைப்பில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தான் அனைத்தையும் உற்பத்தி செய்கின்றனர். அவர்கள் தான் அனைத்தையும் நிர்மாணம் செய்கின்றனர்.
இதை இலங்கை சிங்கள அரசு தனது ஒடுக்கு முறையூடாக சிங்கள தமிழ் மக்களுக்கு மறுக்கின்றனர் எனின், அதையே குறுந் தமிழ் தேசியவாதிகளும் செய்கின்றனர். இலங்கை அரசில் இருந்து எந்த விதத்திலும் தமது பொருளாதாரக் கொள்கையை மாற்றவில்லை. இலங்கை அரசு எப்படி ஏகாதிபத்திய மறுகாலனியதிக்கத்தை சிரமேற்று அமுல் செய்கின்றனரோ, அதையே குறுந் தமிழ் தேசியவாதிகளும் தாமும் செய்ய தலைகீழாக நிற்கின்றனர். அனைவரும் தாம் தேசிய வாதிகளாக கூறிய படி, மக்களின் நலனை ஏறி மிதிப்பதும் சூறையாடுவதிலும் தலைமையேற்கின்றனர். மக்களின் உழைப்பு, உற்பத்தி, அது சார்ந்த பண்பாடு கலாச்சரம் என அனைத்தும், ஏகாதிபத்தியத்தால் சூறையடப்படுகின்றது. இதற்கு இன தேசியவாதிகள் கம்பளம் விரித்த சேவை செய்வதையே, தேசியம் என்று மார்பு தட்டி துப்பாக்கி முனையில் அடக்கு முறையூடாக தம்பட்டமடிக்கின்றனர். யார் மக்களின் உழைப்பு, உற்பத்தி, அவர்களின் அடிப்படை தேவையை சார்ந்து தேசிய பொருளாதாரத்தை கட்டமைக்கின்றனரோ, அவர்கள் மட்டும் தான் உண்மையான தேசியவாதிகளாவர். உலகமயமாதல் உற்பத்தி முறையை எதிர்த்து யார் போராடுகின்றனரோ, அவர்கள் மட்டும் தான் உண்மையான தேசியவாதிகள். இன மற்றும் குறுந் தேசியத்தை முன்வைத்து இனங்களை மட்டும் எதிரியாக காட்டி தம்மை நிலைநிறுத்தும் ஏகாதிபத்திய விசுவாசிகள், தேசியவாதிகளாக இருப்பதில்லை. இஸ்ரேல் கனவுடன், சிங்கப்பூர் பிரமையை விதைத்து ஒரு மறு காலனியதிகத்துக்காக தமிழ் பிரதேசத்தை தரைவார்க்க மார்பு தட்டுபவர்கள், உண்மையான தேசியவாதிகள் அல்ல. மக்களை எமாற்றவும், அவர்களின் உழைப்பை சூறையாடி வாழ்வதும் தேசியத்துக்குரிய பண்பு அல்ல. மக்களின் வாழ்வு, அவர்களின் சந்தோசத்தை யார் முன்னிறுத்தி அதற்காக அவர்களின் நலன் சார்ந்து போராடுகின்றனரோ, அவர்கள் மட்டும் தான் உண்மையான தேசியவாதிகள். இது தமிழ், சிங்கள என்று எல்லை கடந்து உலக வரை பொதுவனதாகும். மற்றவனை சூறையாடுவதும் சரி, சூறையாட நினைப்பதும், சூறையாட ஒத்துக் கொள்வதும் தேசியத்தின் பண்பு அல்ல. இது தனி மனிதன் தொடங்கி பரந்த சமூக வேறுபாடுகள் வரை பொதுவான அடிப்படையாகும்.