Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1978 வரையப்பட்ட இனவாத அரசியல் சட்டம் "சிறீலங்க குடியரசு என்பது பௌத்தத்துக்கு முதன்மையான இடத்தை வழங்கும். பௌத்த சாசனத்தையும் தர்மத்தையும் பேணிக்காக்கும் பொறுப்பு அரசுடையதாகும்." இந்த இனவாத மதவாத அரசில் சிறுபான்மை இனங்களின் மேலான ஒடுக்குமுறையை தெளிவாகவே அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவே அங்கீகரிக்கின்றது. போலிச் சுதந்திரத்துக்கு முன்பாக பிரிட்டனின் நலன்கள் சார்ந்து உருவான அரசியல் அமைப்பு கிறிஸ்தவ மதம் சார்ந்தே காணப்பட்டது.

 

 

 பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இதை தெளிவாகவே வெளிப்படுத்துகின்றது. 1948 இல் கிறிஸ்தவர்களின் பாராளுமன்ற அங்கத்துவம் 48 சதவீதமாக இருந்தது. இது 1952 இல் 24 சதவீதமாகவும், 1960 இல் 16 சதவீதமாகவும் மாறியது. பௌத்தர்கள் 1948 இல் 21 சதவீதமாகவும், 1952 இல் 57 சதவீதமாகவும், 1960 இல் 66 சதவீதமாகவும் அதிகரித்தது. இலங்கையின் ஜனநாயகம் இனவாதத்துடன் மத அடிப்படைவாதத்தையும் உள்ளடக்கியே காணப்படுவதை காட்டுகின்றது. மதம் அற்ற, இனமற்ற ஆட்சி அமைப்பு அல்லாத ஒரு அரசு எப்படி இனங்களுக்கிடையில் சமத்துவத்தை, மதங்களுக்கிடையில் முரணற்ற தன்மையை கொண்டு வரும். உண்மையில் இந்த அமைப்பு முறைக்கு வெளியில் மட்டுமே சாத்தியம்.

 

நிலவும் இனவாத அமைப்பில் இனங்களை அழித்தொழிப்பது மற்றையவர்களின் நலன்களாக மாறுகின்றது. உதாரணமாக இலங்கையில் வழங்கப்பட்ட சம்பள உயர்வு மலையக மக்களுக்கு தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றது. அற்ப கஞ்சியே குடிக்க முடியாத ஒரு நிலையில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கின்றது. இதனால் வழங்கப்படும் அற்ப சம்பள அதிகரிப்பைக் கூட மலையக மக்களுக்கு மறுக்கப்படுகின்றது. இந்த வகையில் 1989 இல் 75 ரூபாவும், 1990 இல் 200 ரூபாவும், 1991 இல் 300 ரூபாவும், 1992 இல் 100 ரூபாவும் வழங்கப்பட்டது. அதாவது நான்கு வருடத்தில் வழங்கிய 675 ரூபாவை மலையக மக்களுக்கு மறுக்கப்பட்டது. 1992யூன் 18ம் திகதி தேயிலை தோட்டங்களை 22 தனியார் கம்பனிகளிடம் 99 வருட குத்தகைக்கு அரசு கொடுத்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். இனவாத அமைப்பு மலையக மக்களின் நலன்களை ஒடுக்குவதில் ஏலம் விடுகின்றனர்.

 

எல்லா வழிகளிலும் மலையக மக்களை தனிமைப்படுத்துவதில் இனவாத அரசு செயற்பட்டது. இந்த வகையில் இனவாதம் பிரஜாவுரிமை சட்டத்தின் பின் 1948 முதல் 1977 வரை ஒரு உறுப்பினரைக் கூட மலையகமக்கள் பாராளுமன்றம் அனுப்பமுடியவில்லை. 1977 இல் அனுரா பண்டாரநாயக்காவை வெல்ல வைக்க நுவரெலியா தொகுதியை மூன்று தொகுதியாக்கிய போதே தொண்டமான் அதில் வெல்ல முடிந்தது. இனவாத அமைப்பில் ஒரு இனம் முற்றாக பாராளுமன்ற அரசியலில் இருந்து கூட ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டது.

 

1947ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இன ரீதியான பிரதிநிதித்துவம்

 

இனம்                              சனத்தொகை              பராளுமன்ற பிரதிநிதித்தவம்        ஒரு பிரதி நிதிக்கு எற்ப சனத்தொகை

ஐரோப்பியர்                         2 433                                                 4                                                                               608

பறங்கியர்                          33 671                                                 3                                                                          11 224

இலங்கைத் தமிழர்    804 671                                               13                                                                         61 919

முஸ்லீங்கள்                382 984                                                 6                                                                          63 831

சிங்களவர்                   4 515 198                                               68                                                                         66 400

மலையக மக்கள்      732 258                                                  7                                                                       104 608

  

1938 இல் நடந்த இனவாத வாக்குரிமை பறிப்பின் ஊடாக அவர்களின் பிரதிநித்துவம் குறைவாகவே காணப்பட்டது. இது 1949 இன் பின் இந்த மக்களின் பிரதிநிதித்துவத்தை முற்றாக மறுக்குமளவுக்கு இனவாதம் கோலோச்சியது. 1947 தேர்தலில் இடதுசாரி கட்சியின் செல்வாக்கும், மலையக மக்களின் வாக்கும் தொடர்பு இருந்தது.

 

கட்சி சார்ந்து பிரதிநிதித்துவம் 1947 இல்

 

கட்சி                               வேட்பளார் எண்ணிக்கை            பெற்ற வாக்குகள்               வாக்கு %        ஆசணங்கள்      ஆசணங்கள் %

ஐ.தே.க                                             99                                                  744 698                               39.6                           42                          44.2

ல.ச.க,                                               28                                                 2 04 020                               10.8                           10                          10.5

கம்யூனிஸ்ட் கட்சி                   13                                                     70 331                                 3.7                              3                            3.2

போல்ஷேவிக் லெனினிஸ்ட் 10                                             1 13 193                                  6.0                              5                            5.3

தொழிற் கட்சி                               9                                                     38 932                                  2.1                              1                            1.1

தமிழ் கங்கிரஸ்                           9                                                    82 499                                  4.4                               7                            7.4

இலங்கை இந்தியா கங்கிரஸ் 8                                                72 230                                  3.8                              6                             6.3

சுயட்சை                                       185                                                5 55 461                                29.5                            21                          22.1

மொத்தம்                                                                                          18 81 361                                  100                           95                           100

 
1947 தேர்தலில் பெருமளவில் இடதுசாரி வேட்பாளர்கள் பெருமளவில் வென்ற நிகழ்வு, வர்க்க அடிப்படையில் சுரண்டும் வர்க்கத்துக்கு பீதியை ஏற்படுத்தியது. தோட்டங்களை தமிழ் சிங்கள முதலாளிகள் வாங்கியிருந்ததால், சிங்கள தமிழ் இனவாத கட்சிகள் பீதியடைந்தனர். மலையக மக்களை ஒடுக்குவதன் மூலம் சுரண்டவும், அதே நேரம் இடதுசாரிகளை பாராளுமன்றத்தில் ஒழித்துக்கட்டவும் தயங்கவில்லை. இந்த இனவாத மற்றும் வர்க்க ஒடுக்குமுறைக்கு தமிழ் சிங்கள தலைவர்கள் முரண்பாடின்றி ஒத்துழைத்தனர். மலையக மக்கள் சிங்கள இனத்துக்கு அடுத்ததாக மிகப் பெரிய சிறுபான்மை இனமாக இருந்தனர். இதை திட்டமிட்டு குறைப்பதில் தமிழ் சிங்கள தலைவர்கள் முரண்பாடின்றி ஒத்துழைத்தனர்.

 

மலையக் மக்களின் சனத்தொகை

 

ஆண்டு                  தமிழர்                வீதம்                    மலையகதமிழர்                   வீதம்

1911                       528 000                  12.8                             531 000                                 12.9

1921                       517 300                  11.5                             602 700                                 12.9

1931                       598 900                  11.3                             818 500                                 15.4

1946                       733 700                  11.0                             780 600                                 11.7

1953                       884 700                  10.9                             974 100                                 12.0

1963                    1 164 700                  11.1                         1 123 000                                 10.6

 

1950 களின் பின்பும் மிகப் பெரிய சிறுபான்மை இனமாக மலையக மக்கள் இருந்தனர். இவர்களை நாடு கடத்தியதன் மூலம், ஒரு இன அழிப்பை நடத்த முடிந்தது. இன்று இது மற்றொரு வழியில் நடக்கின்றது. மலையகத்தில் கடந்த 10 வருடமாக இடை தரகர்களின் உதவியுடன் கட்டாய கருத்தடையை வெற்றிகரமாக அழுலாக்கி வருகின்றனர். கருத்தடை செய்யின் 500 ரூபா உதவி என்ற பெயரிலும், தரகர்களின் கொழுத்த வருமானத்துடன் ஒரு இன அழிப்பை நிரந்தரமான கருத்தடைய+டாக சமூக மயமாக்கி வருகின்றனர். இன்று மலையக மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள் இன அழிப்பினால் வேகமாக சிதைந்து வருகின்றது. மலையக மக்கள் அங்கு சிறுபான்மையாக்கப்படுகின்றனர்.

  

பிரதேசங்கள்                 சிங்களவர்              தமிழர்             மலையக மக்கள்            முஸ்லிம் மக்கள்

நுவரெலியா                      287655                  88008                            308259                                  14688

கண்டி                                  910978                  43340                            115130                                126995

மாத்தளை                         110978                    9901                               36873                                  44909

பதுளை                               574450                 28104                             120365                                  31916

மொனராகலை                187155                    3177                               12163                                    4090

இரத்தினபுரி                      642900                 19237                               77018                                  18444

கேகாலை                          535807                 19498                               35112                                   13529

களுத்துறை                      888580                   9215                                32471                                  13073

மாத்தறை                          736023                     876                                14763                                  19255

மொத்தம்                         4873585              221356                              752150                               286899

  

இன்று மலையக மக்களின் வாழ்விடங்களும் அவர்களின் கூலி வாழ்வும் இனவாத வர்க்க ஒடுக்குமுறையால் தீவிரமான சூறையாடலுக்குள்ளாகின்றது. மலையக மக்களின் அடிப்படைத் தேவையை உள்ளடக்கிய வாழ்வும், இன ஒடுக்குமுறையற்ற வர்க்க ஒடுக்குமுறையற்ற ஒரு சமூக மாற்றத்தைக் கோரி நிற்கின்றது. இன்றைய தேசியம் அதை நிறைவு செய்யாத வரை, இலங்கையில் எந்த சிறுபான்மை இனமும் இனவொடுக்கு முறையின்றியும் வாழமுடியாது. அதே போல் இலங்கையில் எந்த இனமும் ஒரு நிம்மதியான சமூக விடுதலையை அடையமுடியாது. தமிழீழம் கிடைத்தாலும் தமிழீழத்தில் உள்ள சிறுபான்மை இனங்களின் மேலான ஒமுக்குமுறையும், பிரதேச ரீதியான ஒடுக்குமுறையும் தொடரவே செய்யும். பண்பியல் ரீதியில் வேறுபாடற்ற ஒரேநிலையில் இனவாதம் தனது பங்கையாற்றும்.