Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மூலதனத்தை திரட்ட விசேட நிலச்சட்டம் 1810 லும், 1812லும் நிலம்பற்றிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டப்படி ஐரோப்பியர் 4000 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கவும், ஐந்து வருடத்துக்கு வரியேதும் கட்டத் தேவையில்லை என்ற விசேட சலுகை வழங்கப்பட்டது.

ஆனால் 1800 இல் உருவான சட்டம் உள்ளுர் மக்களுக்கு 100 ஏக்கருக்கு மேல் நிலத்தை வைத்திருக்க முடியாது. மூலதன திரட்டலில் ஐரோப்பிய நலன்களை இதன் மூலம் உறுதி செய்யப்பட்டது. கோப்பிச் செய்கை உருவான போது 12 வருட வரி மற்றும் சுங்கத் தீர்வையை நீக்கி சலுகை வழங்கப்பட்டது. பல்வேறு மக்களை அடக்கியாளும் நிர்வாகங்களில் இருந்த வெள்ளை இனத்தவர்கள் இந்த மூலதன திரட்சியில் ஈடுபடும் வண்ணம், இதற்கு இசைவாக தமது வேலை விட்டு விலக அனுமதிப்பதில் சலுகை வழங்கப்பட்டது. கோப்பி செய்கையை ஊக்குவிக்க ஒரு ஏக்கர் நிலம் 5 சிலிங் (25 சதத்துக்கு) வழங்கப்பட்டது. இப்படியாக 1937-1945 இடையில் 2 94 526 ஏக்கர் விற்கப்பட்டது.

 

மூலதன திரட்டலுக்கு தாராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டது. இந்த மூலதனத்தை பிரிட்டனுக்கு கடத்திச் செல்வது ஊக்குவிக்கப்பட்டது. பிரிட்டனில் நடந்த முதலாளித்துவ மூலதன திரட்சி இதனால் கொழுப்பேறியது. இந்த மூலதனத்தை திரட்ட இராணுவ வழியிலேயே மலையக மக்களிடம் வேலை வாங்கப்பட்டது. அதே நேரம் இந்த மூலதனத்தை கடத்திச் செல்ல தேவையான பாதைகளை நிர்மாணம் செய்ய "பயணியர் பேர்ஸ் முன்னோடி பட்டாளம்" என்ற பெயரிலேயே இந்தியாவில் இருந்து மக்களை கொண்டு வந்தனர். இவர்கள் குளம் கட்டுதல், ரயில்பாதை போடுதல், பாலம் கட்டுதல் போன்று பல் துறையிலும் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மூலதனம் இலகுவாக மலிவாக கடத்திச் செல்வது இலகுவானது. இந்த வகையில் உருவான ஒரு வரலாற்றில், இந்த மூலதனத் திரட்சி சுதந்திரத்துக்கு பின்பும் தொடர்ந்தது. இந்த மூலதனத்தால் மற்றைய இனங்கள் நன்மையடைவது சாத்தியமாகியது. இப்படி கிடைத்த மூலதனம்

 

வருடம்                         கோடி ரூபாயில்                                 இலங்கைக்கு கிடைத்த எற்றுமதியில்

                                                                                          தேயிலை மற்றும் றப்பர் மூலம் கிடைத்தவை சதவீதத்தில்

1968                                          197.6                                                                            75.55

1969                                          187.5                                                                            79.58

1970                                          199.5                                                                            78.2

1971                                         193.0                                                                            75.22

1977                                         661.5                                                                             67.0

1978                                       1317.5                                                                             64

1979                                       1522.8                                                                             54

1980                                       1717.9                                                                             51

1981                                       1965.8                                                                             47

 
1968 இல் தேசிய வருவாயில் 75 சதவிகிதத்தை திரட்டித் தந்த மலையக மக்களின் உழைப்பு, அரை அடிமைத்தனத்திலேயே சுரண்டப்பட்டது. இது 1981 இல் 50 சதவிகிதத்துக்கு மேலாக சரிந்துள்ளது. 1977 இல் ஆட்சிக்கு வந்தவர்கள் திறந்த பொருளாதாரத்தையும் உலகமயமாதலையும் தொடங்கி வைத்ததை அடுத்து, இலங்கை முக்கிய இரண்டு சுரண்டல்கள் தீவிரமாகியது. ஒன்று சுதந்திர வர்த்தக வளையத்தில் ஏழைப் பெண்கள் (பெரும்பான்மையாக சிங்கள இளம் பெண்கள்) கொடூரமாக உழைப்பு முதல் பாலியல் ரீதியாகவும் சுரண்டப்பட்டனர். மற்றையது மனித உழைப்பு ஏற்றுமதியாகின்றது. இந்த வகையில் இனம் கடந்து பெண்களே மத்திய கிழக்கு முதல் பல நாடுகளில் கொடூரமாக உழைப்பை மட்டுமின்றி பாலியல் ரீதியாகவும் சூறையாடப்படுகின்றனர். இவற்றை விரிவாக பின்னால் பார்ப்போம்

 

1880 களில் கோப்பிக்கு ஏற்பட்ட நோயைத் தொடர்ந்து கோப்பிச் செய்கை கைவிடப்பட்டது. மலையக மக்கள் பட்டினியில் ஆயிரக்கணக்கில் மாண்டனர். பலர் மீண்டும் திரும்பிச் சென்றனர். அதே காலத்தில் தேயிலை உற்பத்தி தொடங்கியது. தேயிலை உற்பத்தி 1878 இல் 4700 ஏக்கராக இருந்தது. இது 1905 இல் 384000 ஏக்கராகவும், 1917 இல் 426000 ஏக்கராகவும், 1953 இல் 574000 ஏக்கராகவும், 1971 இல் 597171 ஏக்கராகவும் அதிகரித்துச் சென்றது. இதனால் மலையக மக்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டதுடன், அவர்கள் நிரந்தரமாக தங்கும் நிலைக்கு தேயிலை உற்பத்தி வழிவகுத்தது.

 

ஆண்டு                         மலையக தமிழர்                         மொத்த மக்களில் மலையக தமிழரின் சதவீத்தில்

1911                                           531000                                                                                    12.9

1921                                           602000                                                                                    13.4

1931                                           818000                                                                                    15.4

1946                                           780000                                                                                    11.7

1953                                           974000                                                                                    12.1

1963                                         1123000                                                                                    11.6

1971                                         1174000                                                                                      9.3

 
1911 இல் மலையக தமிழர் 530983 யாக இருக்க, மற்றைய தமிழர்கள் 528024 யாக மாறும் அளவுக்கு மலையக மக்களின் வாழ்வு அமைந்திருந்தது. மலையக மக்களின் வரவு சார்ந்த உழைப்பும், அதனால் கிடைத்த வருமானமும் பெருக்கெடுத்தது. 1904 இந்தியாவில் இருந்து ஆட்களைக் கடத்த "கோஸ்ட் ஏஜென்ஸிஸ்" அலுவலகங்களைத் திறந்தனர். இதற்கான செலவில் 25 சதவீதத்தை இலங்கை அரசு வழங்கியது. உற்பத்தியில் அதிக லாபம் ஈட்டிய காலமான 1923 இல் இந்தியா ஆட்கடத்தலை தடை செய்த போது, தோட்ட உரிமையாளர்கள் அதை நீக்க கோரினர். மூலதனத்துக்கு சர்வதேசரீதியாக ஏற்பட்ட நெருக்கடியால் 1930 இல் தேயிலை உற்பத்தியில் மந்தம் ஏற்பட்டபோது, மலையக மக்களை திருப்பியனுப்பினர். மூலதனம் தேவையான போது மந்தைகள் போல் இறக்கவும் ஏற்றவும் மூலதனம் பின் நிற்கவில்லை. இக் காலத்தில் இனவாதம் தெளிவாக மலையக மக்களுக்கு எதிராக பிரதிபலித்தது. அதேநேரம் 1931 இல் இலங்கை மக்கள் தொகையில் 15.4 சதவீதமானவர்கள் மலையக தமிழராக இருந்துள்ளனர். மற்றைய சிறுபான்மை இனங்களை விட பெரிய தேசிய இனமாக மலையக மக்கள் இருந்துள்ளனர். இந்த மக்களில் உழைப்பை சுரண்டியவர்கள் அவர்களுக்காக எதையும் செய்யவில்லை. மாறாக மந்தையாக தொடர எது அவசியமோ அதை மட்டும் செய்தனர். மலையக மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அதேநேரம் கோவில்களும், மதுக்கடைகளும் தாராளமாக உருவாக்கப்பட்டது. அரை அடிமைகளாக வாழ்ந்த மலையகத்தினுள் வெளியார் செல்ல தடையாக இருந்த அத்துமீறல் சட்டம், 1957 இல் தான் நீக்கப்பட்டது.

 

இப்படி அடிமைகளாகவே வாழ்ந்த இந்த மக்களை அடிமைகளாக நிலைநிறுத்தவும், கண்காணிக்கவும் சாதிய அடிமைப் பிளவை பயன்படுத்திய பிரிட்டிசார், உயர் சாதிகளைச் சேர்ந்தோரையே கங்காணியாக நியமித்தனர். அதாவது நிலப்பிரபுத்துவ மத அடிப்படைவாத சாதிய வடிவத்தையே மலையக மக்கள் மேல் நிலைநிறுத்தினர். இதையே மலையக மக்கள் திரட்டிய போது ஒடுக்கப்பட்டவற்றை பாடல்கள் ஊடாக பாடத் தயங்கவில்லை.

 

"கண்டி கண்டி எங்காதீங்கா

கண்டி பேச்சு பேசாதீங்க

சாதி கெட்ட கண்டியிலே

சங்கிலியன் கங்காணி"


மலையக மக்களை கண்காணிக்கவும் சுரண்டவும் இடைத்தட்டாக கங்காணிகள் என்ற புதிய வர்க்கம் உருவானது. இவர்கள் உயர்சாதியாக இருந்ததுடன் மலையக மக்களை அடக்கியாண்டனர். கூலிகள் முதல் அனைத்தையும் இவர்களுக்கு ஊடாகவே கொடுத்ததன் மூலம் அடக்கியாளும் வகையில் படிநிலை வடிவத்தை வெள்ளை நிற காலனித்துவவாதிகள் கையாண்டனர். உழைப்பைச் சுரண்டுவதிலும், அவர்களை அடக்கியாள்வதிலும் பிரித்தாளும் வடிவத்தை, சமூக முரண்பாடுகளில் இருந்து எடுத்து தரகு வடிவத்தில் கையாண்டனர். பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் நிலப்பிரபுத்துவ முறையையும் சாதி வடிவத்தையும் ஒருங்கே பயன்படுத்தி, மலையகமக்கள் மேல் கறுப்பு அதிகார வர்க்கத்தை உருவாக்கினர். இப்படியாக பெரிய மற்றும் சிறிய உயர்சாதி கங்காணிகள் இருந்தனர். 2000க்கும் மேற்பட்ட பெரிய கங்காணிகள் இருந்ததுடன், அவர்கள் ஜமீந்தார்கள் போல் வாழ்ந்தனர். நிலப்பிரபுத்துவ மற்றும் சாதிய வடிவத்துக்குரிய அனைத்து ஒழுக்க வடிவத்தையும் ஈவிரக்கமின்றி இவர்கள் கையாண்டார்கள். கூலியாக 4 சதமும், சில்லறை தொழிலுக்கு 2 சதமும் வழங்கிய இவர்கள், காலை 5.30 முதல் மலை 6.30 மணிவரை வேலை வாங்கினர். இந்த வேலையை சர்வ சாதாரணமாகவே சவுக்கடிகள் மூலம் பெறப்பட்டது. மலையக மக்கள் இந்த உழைப்பின் கொடூரத்தை, சோகத்தை சொல்லிப் பாடத் தயங்கவில்லை.

 

"கோண கோண மலை ஏறி

கோப்பி பழம் பறிக்கையிலே

ஒரு பழம் தப்பிச்சின்னு

ஒதச்சானாம் சின்ன தோர"


"ஊத்தாத அடமழையில்

ஒதறல் எடுக்குதடா - அந்த

தாத்தான் கணக்கப்புள்ள

கத்தி தொலைக்கிறானே

ஏத்தல ஏறி எறங்க முடியுமா

சீத்துபூத்தன் னெனக்கு

சீவன் வதை போகுதையோ

எத்தனை நாளைக்கிதான் - இந்த

எழவ எடுக்கிறது

வெக்கங்கெட்ட நாயிகளும்

எகத்தாளம் போடுதுன்னு

இருந்துதான் பாத்துடுவோம்"


என்று குமுறும் பாடல், சுரண்டலுக்கே சவால் விடுகின்றது. வாழ்வின் நரகலை அனுபவிப்பவன், அதைக் கண்டு சினந்தெளும் பாடல் வரிகள் இவை. ஆனால் இந்த மக்களுக்கு எதிரான வர்க்கமோ தமது கொழுத்த வாழ்வை அனுபவிக்க, இந்தியாவில் ஆள் காட்டிகள் மூலமே ஆட்கள் பிடித்து கடத்தினர். ஆள் காட்டிகள் ஏமாற்றியும் கட்டாயப்படுத்தியும் பிடித்த போது, அங்கு கலவரங்கள் நடந்தன. மக்கள் கடத்தப்பட்ட கிராமங்கள் கண்காணிக்கப்பட்டன. இதில் பெண்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டனர். கண்டி மக்களின் சோகம் வெளியில் தெரிவதை தடுக்க குறிப்பாக பெண்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டனர். மூலதன திரட்டலுக்கு தேவைப்பட்ட உயிருள்ள உழைப்பின் அளவே, ஆளும் வர்க்கத்தின் நனவுகளை யதார்த்தமாக்கியது. சுரண்டலுக்கு தேவையான ஆட்களை கடத்தி வர பல்வேறு வழிகள் கையாளப்பட்டது. மலையக மக்களை கடத்திக் கொண்டு வரும் எண்ணிக்கை பெருகிச் சென்றது. இதற்கு இசைவாக பிரிட்டிசார் கொடூரமான சுரண்டலை தமிழ் நாட்டில் ஏற்படுத்தி பஞ்சத்தை உருவாக்கினர். 1833-34 இல் குண்டூர் பகுதியில் 30 முதல் 50 சதவீதமான மக்கள் பஞ்சத்தால் இறந்தனர். 1876-78 இல் தஞ்சாவூர் பகுதியில் 40 லட்சம் மக்கள் பஞ்சத்தால் கொல்லப்பட்டனர். இதை விட பரவலாக பல இடங்களில் பஞ்சம் மக்களை கொடூரமாக கொன்றது. இந்த சூறையாடும் பிரிட்டிசாரின் வரலாற்றில் இருந்தே மலையக மக்களின் நாடு கடத்தல் இலகுவாக்கியது. மலையகம் மட்டுமல்ல, உலகின் பல பாகத்துக்கும் பிரிட்டிசார் இந்தியா மக்களை நாடு கடத்த முடிந்தது. பல நேரங்களில் செயற்கையாகவே பஞ்சம் வரவழைக்கப்பட்டதுடன், உற்பத்தியில் பாதியை வரியாக பிரிட்டிசார் கோரினர். இந்த மனித விரோத கொடூரங்களின் மூலமே நாட்டை விட்டு மக்களை கடத்தினர்.

 

இப்படி இலங்கைக்கு கடத்தப்பட்ட மக்கள் எண்ணிக்கை

 

1. தோட்டங்களின் எண்ணிக்கை  

 2. தோட்டங்களில் உள்ள சகல மக்களும்

3. ஆண்கள்

 4. பெண்கள்
5. தோட்ட வேலையில் ஈடுபடுத்தப்பட்ட மலையக மக்கள்
6.தோட்டத்தில் மலையக மக்களின் வீதம்

 

வருடம்          1                       2                       3                            4                             5                         6

1871               995              123 643            81 362                 42 292                  109 444               88.5

1901             1857             441 601          246 922               194 679                  436 622               98

1911             1833             513 467          278 867               234 909                  440 285               85

1921             2367             568 850          300 867               267 983                  493 944               86

1931             3288            768 934           416 387                373 547                  692 540               87

1946                 -                851 359                -                                -                        665 853               78

1953                -             1 008 563                -                                 -                        809 084               79

1963                -              1 146 297                -                                -                         943 793               82

1971                -              1 161 611               -                                -                          951 785               82

 

 புகையிரத திணைக்களத்தில் தோட்டத் தொழிலாளர்கள் எண்ணிக்கை

 1903               1904                 1905                1906            

 2804                1941                4274                1873

 

பொது வேலைத் திணைக்களத்தில் தோட்ட தொழிலாளர்கள்

 

மாகாணம்                      1901          1902             1903             1904          1905             1906               1907

மத்திய மாகாணம்   4648          12470            6750             7398        12368           20175            21651

ஊவா மாகாணம்          45              362                941               533          1479              2664              2463

சப்ரகமுவ மாகாணம் 86              86               156              3640              86              1528               3126

மேல் மாகாணம்            -                  75                   -                    -                  -                   21                      -

 


இலங்கையின் வீதிகள், புகையிரதப்பாதைகள், குளங்கள் என்று அடிப்படையான நிர்மாணங்களில் மலையக மக்கள் ஈடுபடுத்தப்பட்டதை மேலுள்ள புள்ளிவிபரங்கள் நிறுவுகின்றன. இந்த நிர்மாணங்கள் அனைத்தும் மூலதனத்தை பிரிட்டனுக்கு கடத்திச் செல்லவும், மக்களை அடக்கியாளவும், அதிகமாக சுரண்டவும் அதை கடத்திச் செல்லவும் உருவாக்கப்பட்டது. மக்களை சவுக்கடிகள் மூலமும் நாய்களின் கண்காணிப்பின் கீழும் சுரண்டிய போது, அந்த மக்கள் சோகம் தாளாது அதை பாடத்தான் செய்தார்கள்.

 

"பாதையிலே வீடிருக்க

பழனிச் சம்பா சோறிருக்க

எருமே தயிரிருக்க

ஏனன வந்தே கண்டிச் சீமை"

 

பழைய வாழ்வில் இருந்த மகிழ்ச்சி இந்த வாழ்வில் இல்லை என்பதை தெளிவாக தமது சோகத்தை சொல்லிப் பாடும் போதே படம் பிடித்துக் காட்டுகின்றனர். இந்தப் பாடல் வீட்டுக்கு அருகிலேயே பாதையோடு வாழ்ந்த அந்த மக்கள், அடர்ந்த காடுகளில் வாழும் நரகல் வாழ்வை தெளிவுபடவே காட்டிவிடுகின்றனர். நல்ல சோறை, மாட்டு தயிருடன் உண்ட வாழ்வை இழந்து ஏன் இங்கு வந்தோம் என்றதன் மூலம், இந்த மக்களின் அடிப்படைத் தேவையைக் கூட காலனித்துவ பிரிட்டிசார் தீர்க்க முற்படவில்லை என்பதை சொல்லிவிடுகின்றனர். மாறாக பெரும் செல்வத்தை இந்த மக்களின் உழைப்பில் இருந்து உறிஞ்சியவர்கள், அதை மற்றைய இனத்துக்கு சலுகை கொடுத்து அடக்கியாளவும் பிரிட்டனுக்கு கடத்திச் சென்றதன் மூலம், இந்த மக்கள் நரகல் வாழ்வை வாழ்ந்ததை காட்டுகின்றது.