மலையக மக்களின் கடும் உழைப்பே, இலங்கையின் அனைத்து இனங்களினதும் சமூக வாழ்வை நலன்களை உயர்த்தின. மலையக மக்கள் பிழியப்பட்டு கிடைத்ததை உறிஞ்சி வாழ்ந்த மற்றைய இனங்கள், அந்த மக்களை தொடர்ச்சியாக கேவலப்படுத்தவும் ஒடுக்கவும் பின்நிற்கவில்லை. மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வையும் பற்றி புரிந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களை இலங்கையின் ஒரு தேசிய இன மக்களாக அங்கீகரிக்காத தேசியம், சிறுபான்மை இனமான தேசிய இறைமைக்காக போராட தேசியம் அடிப்படையிலேயே பிற்போக்கானது.

 இலங்கையில் திட்டமிட்ட தொடர்ச்சியான இனவழிப்பு வரலாற்றை இந்த மக்களுக்கு எதிராகவே, தமிழ் மற்றும் சிங்கள இனவாதிகள் கூட்டாக தொடங்கி வைத்தனர். இதை நீண்ட வரலாற்றுப் போக்கில் மூடிமறைத்ததன் மூலமும், மௌனம் காத்ததன் மூலமும் இன அழிப்பை ஊக்குவித்தனர். குறுந் தமிழ் தேசியம் இன ஒடுக்கமுறைக்கு எதிராக ஆயுதமேந்திய போதும், இந்த மக்களையிட்டு அக்கறைப்படவில்லை. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1987 இல் செய்து கொண்ட ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் கூட, இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகளை ஏற்றி வரும் கப்பலில் மலையக மக்களை நாடு கடத்துவது என்றே ஒப்பந்தம் வரையறுக்கின்றது. ஒரு இனத்தின் நலனுக்காக மற்றைய இனத்தை பலியிடுவது இதில் மையமாகின்றது. இன்று வரை தமிழ் தேசியம் இது பற்றி எதைத்தான் செய்துள்ளது. இன்றைய இன நெருக்கடியை மலையக மக்களில் இருந்தே நாம் புரிந்து கொள்ள முடியும்.

 

 மலையக மக்களின் பிரச்சனையும், எல்லையோர தமிழ் விவசாயிகளின் நிலப்பிரச்சனையும் சமகாலத்தில் தொடங்கியதுடன், திட்டமிட்ட வகையில் நீண்ட ஒரு இனவழிப்பாக நடத்தப்பட்டது, நடத்தப்படுகின்றது. இதை குறுந் தேசியம் என்றுமே தேசியத்தின் மையப் பிரச்சனையாக்கவில்லை. மேல்மட்ட யாழ்ப்பாணத்தானின் பிரச்சனையில் இருந்து தேசியத்தை புரிவதால், இலங்கையின் தேசிய பிரச்சனையை ஒருக்காலும் தீர்க்க முடியாது. மலையக மக்களின் இரத்தத்தை பிழிந்து எடுத்து தான், இலங்கையின் அனைத்து வளங்களையும், மற்றைய இனங்கள் பயன்படுத்தின என்றால் மிகையாகாது. இலங்கை ஏற்றுமதி வருவாயை கூட்டித் தந்த இந்த மக்களின் உழைப்பு, மற்றைய இனங்களின் நலனுக்காக வாங்கிய கடனுக்காக கடன் மற்றும் வட்டியை கட்டுகின்றது. 1988 இல் வட்டி மற்றும் கடனுக்காக மொத்த ஏற்றுமதியில் 28 சதவீதத்தை கட்டினர். இது தீவிரமடைந்து 2001 இல் வட்டிக்காக மட்டும் இலங்கையில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாவுக்கும் 25 சதத்தையும் கட்டத் தொடங்கினர். இதுவே 2002 இல் 35 சதத்தையும் கட்டும் நிலைக்கு இலங்கை தேசியம் மறுகாலனியாகி வருகின்றது. வட்டி கட்டும் பெரும் பொறுப்பை மலையக மக்களின் கடும் உழைப்பு வழங்குகின்றது. காலனித்துவவாதிகள் உலகெங்கும் மனிதனையே கடத்திச் சென்று சூறையாடி உழைப்பும், காலனிகளை சுரண்டி கொழுத்து உருவான மேற்கத்திய வளங்களும் எப்படி உருவானதோ, அது இலங்கைக்குள்ளும் பொருந்தும். மலையக மக்களை சூறையாடி அனுபவிப்பதை மற்றைய இனங்கள் அங்கீகரித்ததுடன், அதையே ஒரு இயங்கியல் போக்காக்க மலையக மக்களை இழிநிலைக்குத் தள்ளினர். இதனால் இந்த மலையக மக்களை வரலாற்று ரீதியாக சுருக்கமாக தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.


காலனித்துவம் கால்பட்ட எல்லா இடங்களிலும் மனிதனை வேட்டையாடி கொன்று போட்டதன் மூலம் மண்ணின் மக்களுக்கு பசியையும் கடும் உழைப்பையும் தண்டனையாக்கிய, தன்னையும் தனது நலனையும் தக்கவைத்ததுடன் சூறையாடியதை சொந்த நாட்டுக்கு கடத்தினர். காலனிகளைச் சூறையாட கடுமையான எதிர்ப்புகள் உருவான போதும், அந்த மண்ணின் மைந்தர்கள் சுயபொருளாதார பலம் பெற்று இருந்த போதும், உழைக்கும் அடிமை மனிதர்களை வெளியில் இருந்து கொண்டுவந்து தேசிய வளங்களை சூறையாடுவது என்ற வழியை கையாண்டனர். உழைக்கும் அடிமைகளை வெளியிடங்களில் இருந்து கொண்டு வரவும் இரு பிரதான வழிகளைக் கையாண்டனர்.


1.பலாத்காரமாக மனிதர்களை அடிமையாகக் கடத்துவது ஒரு ஜனநாயக உரிமையாகியது. 2.ஆசை காட்டியும், நிர்ப்பந்தம் கொடுத்தும் மனிதர்களை சொந்த பிறப்பு மண்ணில் இருந்தே அகன்றியெடுத்து கடத்துவது அரையடிமை வழி. இதற்காக உள்ளுரளவில் இருந்த வர்க்க, இன, மத, நிற, சாதி முரண்பாடுகளை பயன்படுத்தினர். இந்த வகையில் மலையக மக்களின் ஏற்ற தாழ்வான சாதியம் மற்றும் வறுமையை பயன்படுத்தியும் இந்த அரை அடிமைகள் கடத்தப்பட்டனர். இதை ஊக்குவிக்க மறைமுகமாக வறுமையை உருவாக்கியும், சாதிய கொடுமையை அகலமாக்கியும் தாழ்ந்த சாதி மக்களை அரை அடிமைகளாக கிராமப்புறங்களில் இருந்துகடத்தப்பட்டனர்.

 

1823ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 14 கூலிகளின் உழைப்பை, கோப்பிச் செய்கையில் முதலிட்டதன் ஊடாக சுரண்டிக் கிடைத்த 600 பவுண்ட் பணத்தை சொந்தமாகப் பெற்ற காலனித்துவ வெள்ளையன் கதாநாயகன் ஆகியதால், அரை அடிமை கூலிகளை நாடு கடத்தி வரும் வரலாறு தொடங்கியது. தேயிலை றப்பர் தோட்டத்துக்கு முன்னமே டச்சுக்காரர் கறுவாபட்டை உற்பத்தி சார்ந்து, 10000 இந்தியத் தமிழர்களை கொண்டு வந்ததாக தகவல் உள்ளது. ஆனால் அது பற்றிய தரவுகள் முழுமையாக கிடைக்கவில்லை. மலையக மக்களின் வரலாறு 1823 இல் தொடங்குகின்றது. 1824 இல் 5000 ஏக்கரில் 10000 பேர் இந்த கோப்பிச் செய்கைக்குள் ஈடுபடுமளவுக்கு மூலதனம் வீங்கியது. இந்த கோப்பி உற்பத்தியூடாக 1980 வரை மலையக மக்களின் உயிரையும், உழைப்பையும் கொள்ளையிட்ட வரலாறே, மனித அவலத்தில் பிறந்த கோப்பி கதையாகியது. இந்த உற்பத்தியில் மலையக தொழிலாளர்களின் உழைப்பை மூலதனம் உறிஞ்சி பெற்றபோது, சவுக்கடியே அதிகாரத்தின் சட்டப+ர்வ வடிவமாகியது. இந்த கோப்பிச் செய்கையில் மூலதனம் வரைமுறையின்றி சுரண்டி கொழுத்த போது உற்பத்தியின் அளவும் சுரண்டும் தொழிலாளர் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துச் சென்றது. இது 1845 இல் 25198 ஏக்கராகவும், 1847 இல் 50071ஏக்கராகவும், 1848 இல் 60000 ஏக்கராகவும், 1871 இல் 196000 ஏக்கராகவும், 1878 இல் 273000 ஏக்கராகவும், 1881 இல் 256000 ஏக்கராகவும் மாறியது. இந்த கோப்பிச் செய்கை மலிவான அரையடிமைக் கூலியை அடிப்படையாகக் கொண்டு கிடைத்த கொள்ளையில், ஆட்சியமைப்பில் காலனித்துவ நிர்வாகிகளாக செயற்பட்ட அனைத்துப் பிரிவினரும் இதில் முழுமையாக ஈடுபட்டனர். குறிப்பாக ஆள்பதி, இராணுவத்தினர், நீதிபதி, கிறிஸ்துவ மதகுருமார், அரசு நிர்வாகத்தினர் குறிப்பிடத்தக்கவர்கள். சூறையாடுவதற்கு வசதியாக சூறையாடுபவர்களின் நலன் சார்ந்து பல போக்குவரத்து பாதைகளும், அபிவிருத்திகளும் செய்யப்பட்டன. இதையும் மலையக மக்களின் அரை அடிமை உழைப்பை சவுக்கடிகளின் வரித் தளும்புகளில் இருந்தே எழுந்தன. பாலங்கள், வீதிகள், புகையிரதப் பாதைகளை போடுவதில் இந்த அரை அடிமைகள் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. இந்த கோப்பிச் செய்கை சார்ந்து கிடைத்த ஒவ்வொரு சதத்துக்கும் பின்னாலும், அதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் அபிவிருத்திகளின் பின்னால் மலையக மக்களின் அரை அடிமை வரலாறு காணப்படுகின்றது.

 

இன்று சிங்கள மக்கள் சரி தமிழ் மக்கள் சரி குறுந் தேசிய இனவாதம் பேசி உரிமை கொண்டாடும் வீதிகள் முதல் அனைத்து வசதிகளிலும் மலையக மக்களின் உழைப்பு படிந்து கிடக்கின்றது. உலகெங்கும் பருகிய மற்றும் பருகும் கோப்பி முதல் தேனீர் வரை மலையக மக்களின் இரத்தமும் அதன் சுவையும் கலந்து கிடக்கின்றது. இதை உன்னால் நம்ப முடியவில்லையா? இனவாதத்தை வரலாறாக கொண்ட உனது கல்வி அறிவில், இவை எல்லாம் உனக்கு திட்டமிட்டே உனக்கு மறுக்கப்படுகின்றது. ஏன்னெனில் தமிழ் சிங்கள குறுந் தேசியவாதிகள் அனைவரும் ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாகவே அன்று முதல் இன்றுவரை நக்கித் திரிபவர்கள். இதனால் இதை உனக்கு மறைப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர். அதை மறைக்கவே இன மோதலையும் இன அழிப்பையும் தேசியமாக, இதை வீரமாக்கி உன்னை மந்தையாக்கிவிடுகின்றனர். இதை உனது கோரிக்கையாக்கி உன் மீது சுமத்தி மந்தையாக்கிய வரலாற்றையே, நாம் இனவாத எல்லைக்குள் தெரிந்து வைத்துள்ளோம்.

 

இந்தியாவின் சாதிய கொடூரத்தின் அழுங்கு பிடிக்குள்ளும், கத்துவட்டிக்காரன் சூறையாடலுக்குள்ளும், உற்பத்தி மீது 50 சதவீத வரியை கோரி உருவான சமூக நெருக்கடிகளிடையே இடை தரகர்களின் வர்க்க நலன் சார்ந்து ஏமாற்றப்பட்ட மக்களே மலையக மக்களாவர். இந்த வரலாற்று பின்னணியில் இலங்கைக்கு கடத்தும் வரலாறு தொடங்கியது. இந்தியக் கரைகளை நோக்கி அவர்களின் அரை அடிமைப்பயணம் நடையாகவே தொடங்கியது. அவர்கள் தம்முடன் எடுத்து வந்த பொருட்களை கடற்கரையை வந்தடைய முன்பே வழிப்பறி திருடர்களிடம் பறிகொடுத்தனர். அங்கிருந்து சிறு வள்ளங்கள் மூலம் உயிரைக் கையில் பிடித்தபடி அடிமைப் பயணம் ஆரம்பமானது. இப்படி அரை அடிமைகளாக கடத்தப்பட்ட மக்கள், மன்னார் கரைகளில் இறக்கப்பட்டு அடர்ந்த இருண்ட காடுகள் ஊடாக மலையகம் நோக்கி கால்நடையாக கடத்தப்பட்டனர். இப்படி மலையகம் வந்து சேரும் போது, வந்தவர்களில் 25 சதவீதமானவர்கள் அடிமைப் பயணத்தின் போதே கொல்லப்பட்டனர். இந்த அடிமைப் பயணத்தில் வள்ளம் கவிழ்வதிலேயே மரணம் தொடங்கியது. மன்னாரில் இருந்து தொடங்கிய கால் நடையாக அடர்ந்த இருண்ட காடுகளில் ஊடேயான பயணத்தில், மிருகங்களுக்கு உணவாகும் மனித அவலம் தொடங்கியது. வழிநடைப் பயணத்தில் உணவும், நீரும், மருத்துவ வசதி இன்றி இறந்த அடிமைகள் மேல்தான் மலையக வரலாறு தொடங்கியது. இந்த வழிநடைப்பயணத்தில் மலேரியா கோர தாண்டவமாடியது. உடல் நிலை காரணமாக நடந்து செல்ல முடியாதவர்கள், ஒரு குவளை தண்ணீர், ஒரு வாய் சோற்றுப் பருக்கையுடன் பாதை வழியில் மிருகத்துக்கு உணவாக கைவிட்டுச் செல்ல மூலதனம் கோரியது. அவர்கள் கையை நீட்டி தம்மை அழைத்துச் செல்லக் கோரி கதறிய கதறல் காடுகளையே உலுப்பியது. ஆனால் சவுக்குகள் அதை தடுத்து நிறுத்தின. இடை வழியில் இறந்தவர்கள் பாதை வழியில் விடப்பட்டனர். குழந்தையின் தாய் இறந்த போது எல்லாம் குழந்தை உயிருடன் கைவிடப்பட்டது. சவுக்கடியில் தொடர்ந்து முன்னேற முடியாதவர்கள் கைவிடப்பட்டனர். இப்படி இறந்தவர்களையும் உயிருடன் கைவிடப்பட்டவர்களையும் மிருகங்கள் கடித்துக் குதறப்பட்டு எஞ்சிய எலும்புக் கூடுகள், பிந்திய தமது அடிமைப் பயணத்தை தொடங்கியவர்களின் பாதை வழி அடையாளமாக மாறியது. ஒரு நூற்றாண்டாக இந்த மனித அவலம் தொடர்ந்தது.

 

மலையகத்தை ஒரு வளமிக்க பூமியாக்க சொந்த உடலை வழியெல்லாம் உரமாக்கிய படி தான் மலைகளில் கால்களை வைத்தனர். மலையகத்தின் மலை முகட்டை நோக்கி கால்களை எடுத்து வைத்த போது, அவர்களுக்கே அந்நியமான கடும் குளிர் புதிய பலிகளைக் கோரியது. மனிதர்கள் முன்பு செல்லாத அடர்காடுகளை நோக்கிய மலையக மக்களின் காலடிகளும், அந்த காட்டை பண்படுத்திய கைகளும், கடுமையான சூழலுக்குள் தம் உடலை நிலத்தில் உரமாக்கியபடி தான் இலங்கையின் முதல் ஏற்றுமதி வருவாயைத் தந்த உற்பத்திகளை உருவாக்கினர். அவர்கள் கால்படாத, கை தொடாத, உடலை விதையாக்காத மலையகம் எதுவுமில்லை. அமெரிக்காவில் நீக்ரோ அடிமைகளை சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்று பருத்தி தோட்டங்களில் மூலதனத்தை உருவாக்கியது போல், மலையக அரையடிமைகளை சவுக்குமுனையில் நிறுத்தி உருவான றப்பர் மற்றும் தேயிலை தோட்டத்தின் மூலம் மூலதனம் திரட்டப்பட்டது. இந்த மண்ணை வளப்படுத்திய போது இறந்தவர்களின் கணக்கு வரலாறு இல்லை. கூலிகள் என்று மூலதனத்தால் நாகரீகமாக அழைக்கப்பட்டவர்கள், தம்மைத் தாம் பலியிட்டு உருவாக்கிய மலையகத்துக்காக அலையலையாக கொண்டு வரப்பட்டனர். ஒவ்வொரு சதத்தையும் லாபமாக அதிகமாக பெறுகின்ற ஒவ்வொரு தரமும், மலையக மக்கள் தம்மைத் தாம் மூலதனத்துக்காக சுயதியாகம் செய்ய வைத்தனர். இந்த வகையில் 1842 இல் 14000 பேரும், 1843 இல் 31000 பேரும், 1844 இல் 71000 பேரும், 1845 இல் 67000 பேரும் இந்தியாவில் இருந்து அரை அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டனர். இப்படி வருடாவருடம் மூலதனத்தை பெருக்க ஆயிரக்கணக்கில் கொண்டு வரப்பட்டனர். இறந்தவர்கள் போக மலையகத்தில் மலையக மக்களின் எண்ணிக்கை 1827 இல் 10000 மாகவும், 1847 இல் 50000 மாகவும், 1877 இல் 146000 மாகவும் அதிகரித்தது. 1926ம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டளைச் சட்டம் ஒன்றின் படி ஆரம்பத்தில் மலையகம் வந்தவர்களில் 100 க்கு 40 பேர் சூழல் சார்ந்து இறந்ததை உறுதி செய்கின்றது. 1841 க்கும் 1849 க்கு இடையில் 70000 பேர் அதாவது 25 சதவீதத்தினர் மரணமடைந்ததாக கொழும்பு ஒப்சேர்வர் தனது பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளது. மலையகம் உருவான வரலாற்றையே நாம் இங்கே காண்கின்றோம்.

 

சிங்கள மக்கள் வாழ்ந்த சொந்த நிலங்களில் இந்த மலையகம் உருவாகவில்லை என்பதை, இந்த மரணங்கள் தெளிவுபடவே எமக்கு நிறுவுகின்றது. சிங்கள இனவாதிகளின் பொய்யை இந்த மரணங்கள் மூலமே அந்த மக்களின் மூதாதையர் உறுதி செய்கின்றனர். மூலதனம் தனது சொந்த நலன் சார்ந்து, லட்சக்கணக்கான மக்களின் பிணங்கள் மேல் மூலதனத்தை உருவாக்கி, அதை கொள்ளையிட்டு பிரிட்டனுக்கு கடத்தியது. இதன் போது இதற்காக மனித அவலத்தைச் சந்தித்த மலையக மக்கள் எந்தவிதத்திலும் குற்றவாளிகள் அல்ல. ஆனால் தமிழ் சிங்கள இனவாதிகள் முதல் மேல்தட்டு வர்க்கத்தினர் அவர்களுக்கு செய்த கொடூரம், பிரிட்டனின் கால்களை நக்கியதன் தொடர்ச்சியாகவே இருந்தது, இருந்து வருகின்றது. சிங்கள மக்கள் மலை அடிவாரங்களிலேயே தம்மை தாம் அந்த மண்ணுடன் பிணைத்து நின்றனர். சிங்கள மலையக மக்கள் முரண்பாடு என்று எதுவும் அன்று உருவாகவில்லை. நிலம் தாராளமாக பரந்து விரிந்து கிடந்தது. அத்துடன் மலையகத்தின் கடுமையான சூழலுக்கு ஏற்ற நிலையில், சிங்கள மக்களின் வாழ்வியல் அமைந்து இருக்கவில்லை. மாறாக நல்ல நட்புறவு நிலவியது. சிங்கள மலையக மக்களிடையே இயல்பான திருமணங்கள் கூட நிகழ்ந்துள்ளது. இது போல் முஸ்லீம் மக்களிடையேயும் இந்த உறவு இருந்துள்ளது. இதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் கிராமிய பாடல்களே காலம் கடந்தும் ஆதாரமாக உள்ளது.

 

"சிங்களக்குட்டி அடி செவத்தக்குட்டி ரன்மெனிக்கே

ஒன்னாலே என் உசிரு என் தங்க ரத்தினமே

வீணாகப் போகுதடி என் தங்க ரத்தினமே"


"நானூறு ஆளுக்குள்ளே

நடுவே நிற்கும் துலக்கக் குட்டி

விரல்கள் பத்தும் தேயிலையில்

விழிகள் ரெண்டும் எம்மேல்"


இது போன்ற பல பாடல்கள் உண்டு. உழைப்பு, உபைபின் தன்மை, இனங்களின் கலப்பு, உழைப்பில் மற்றைய இனங்களின் பங்கு பற்றிய போது உருவான உறவுகள், மனித அவலம், சாதிக் கொடுமை, உயர் வர்க்கத்தின் அடக்குமுறை, எதிர்த்து நிற்றல் என்று எண்ணற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை கிராமிய பாடல்களாகக் கொண்டு பாடல்கள் பாடப்பட்டன. இன்றும் அவைகள் வரலாறாக உள்ளன. மூலதனத்தின் கொடுமை தாங்காது மலையகத்தில் இருந்து தப்பியோடுபவர்கள் வேட்டையாடப்பட்டனர். இது அமெரிக்கா கறுப்பின அடிமைகளுக்கும் நிகழ்ந்தது. 1865 இயற்றப்பட்ட அடிமைச் சட்டம் ஒன்று வேலையை விட்டு நீங்குவது தண்டனைக்குரிய குற்றமாக பிரகடனம் செய்தது. தப்பியோடிவர்களை பிடித்து வந்து சாட்டையால் விளாசப்பட்டனர். அத்துடன் பொலிசில் ஒப்படைத்தனர். இப்படி தப்பி ஓடுபவர்களை தடுக்க கடி நாய்கள் பயன்படுத்தப்பட்டன. மந்தைகளை கட்டுப்படுத்தி வளர்க்கும் வடிவத்தையே பிரிட்டிசார் கையாண்டனர். அயர்லாந்து மக்களின் உழைப்பையும் வாழ்வையும் வழங்கிய விவசாய மண்ணில் இருந்து துரத்தி பிரிட்டிசார், அந்த மண்ணில் மந்தை வளர்ப்பை உருவாக்கிய போது கிடைத்த அதே அனுபவத்தைக் கொண்டே, மலையக மக்களை மந்தை நிலைக்குள் வைத்திருந்தனர். இந்த மந்தைக்குரிய அரையடிமை வாழ்வை நீடிக்க "துண்டு" முறை அழுலில் இருந்தது. இது 1921 லேயே நீக்கப்பட்டது. மலையக மக்களின் சோக வரலாற்றில் உருவான அவர்களின் பிணங்களின் மேல்தான், இலங்கையின் தேசிய வளங்கள் கட்டியமைக்கப்பட்டன. மலையக மக்களின் உழைப்பின் ஊடாக உருவான ஏற்றுமதியில் கிடைத்த வருமானம், அந்த மக்களின் நலனுக்காக ஒருநாளும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக மற்றைய இனங்களுக்கே வழங்கப்பட்டது. மலையக மக்களின் இரத்தத்தை குடிக்கும் அட்டைகளான ஒருசிலருக்கு சலுகை வழங்குவதன் மூலம், இதைத் தொடரமுடிகின்றது. இன்று பன்நாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக தொழிலாளியைச் சுரண்டி மேற்கு தொழிலாளிக்கு சலுகை வழங்குவது போல், மலையகம் சூறையாடப்பட்டு இலங்கையில் மற்றைய இனத்துக்கு சலுகை வழங்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணம் அதிக சலுகை பெற்றது. யாழ் பாடசாலைகளுக்கான மூலதனத்தை தேயிலைத் தொழிலாளர்களின் இரத்தத்தில் இருந்து கறந்தனர். இதன் மூலம் அவர்களையே ஒடுக்க யாழ் உயர் வர்க்கத்தையே பிரிட்டிசார் உருவாக்கினர். இதைப் போல் சிங்கள மேட்டுக் குடிகளையும் உருவாக்கினர். இதையே பிரிட்டிசார் தமது ஆட்சி மையங்கள் நிலவிய பிரதேசங்கள் எங்கும் கையாண்டனர். இந்த வகையில் மலையக மக்கள் இந்த நாட்டையும், பிரிட்டனையும் வளப்படுத்த வழங்கிய உழைப்பினை ஆராய்வோம்.