நிலச் சூறையாடலில் தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களையும், பொருளாதார அடிப்படைகளையும் பரந்த தளத்தில் சிங்கள இனவாதிகள் அழித்தொழித்துள்ளனர். இதைத் தமிழ் தேசியம் இன்று வரை எதிர்த்துப் போராடவில்லை. குறுந் தேசியமல்லாத தேசிய போராட்டம் இந்த நிலம் சார்ந்தும், அந்த மக்களின் உழைப்பு சார்ந்தும் போராடியிருக்க வேண்டும். பிரதானமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பை அடிப்படையாக கொண்டு யாழ் தேசியமாகவே குறுந் தேசியம் வளர்ச்சி பெற்றது. சூறையாடப்பட்ட நிலத்தில் வாழ்ந்த மக்களையிட்டும், அவர்களின் அடிப்படை பொருளாதார வளங்கள் சார்ந்தும் தேசியத்தை முன்னெடுக்கத் தவறி, குறுந் தேசியத்தை தனது அரசியலாக்கியது.
தேசிய அழிப்பில் பாரம்பரிய நிலம், அதன் மேலான பொருளாதாரம், அது சார்ந்த பண்பாடுகள், அதை அடிப்படையாகக் கொண்ட மொழி அழிக்கப்பட்டது. தேசிய அழித்தொழிப்பு வரலாற்றில் முக்கியமான இரண்டில் இது ஒன்றாகும். மற்றையது மலையக மக்கள் மேல் நடத்தப்பட்ட ஒடுக்குமுறையாகும். இவை இரண்டிலும் தொடங்கிய இனவழிப்பு விரிவாகி பல்வேறு துறைகளிலும் மாறிச்சென்றது. பெரும்பான்மை சிங்கள இனம் சார்ந்த இனவாதிகள், நீண்ட ஒரு திட்டமிட்ட அழித்தொழிப்பாக இதை நடத்தினர். இதை தமிழ் தேசிய மேட்டுக் குடியினர் ஆதரித்து நின்றதும், அதையே இன்று வரை தேசிய கொள்கையாகக் கொண்டிருப்பதும் இன்றைய தேசிய வரலாறாகும். இனவாதம் தனது முதல் முயற்சியாக தமிழ் இனம் என்ற அடிப்படையை அழிப்பதில் தொடங்கியது. ஒரு இனம் இனமாக இருக்க அவசியமான அடிப்படையான நிபந்தனையான ஒரு நிலத் தொடர், அது சார்ந்த பொருளாதாரம், அதன் மேலான பண்பாட்டு கலாச்சார பிணைப்பு, இதைப் பேணும் வகையில் ஒரு மொழி என்பனவாகும். இவை அற்ற ஒரு இனம் தேசியமாக இருப்பதில்லை. இதை சுயமாக கொண்டிராத இனம, தனது தேசியத்தை ஒருக்காலும் பாதுகாக்க முடியாது.
இதை தகர்ப்பதில் சிங்கள் இனவாதிகள் முழுமுனைப்பாக சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தொடங்கினர். பெரும்பான்மையாக தமிழ் விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட எமது சமூகத்தின் தேசிய பொருளாதாரம் சார்ந்த நிலத்தை பறிப்பதன் மூலம், நிலத் தொடரையும், அதன் மேலான பொருளாதாரத்தையும் தகர்க்க முடியும் என்று கருதினர். இதன் மூலம் பண்பாட்டு கலாச்சாரம் முதல் மொழிவரை சிதைக்க முடியும் என்று கண்டனர். இந்த வகையில் அவர்கள் திட்டமிட்ட நிலப்பறிப்பை நடத்தி, திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை நடத்துவதில் தொடர்ச்சியான வன்முறையை சிறுபான்மை இனங்களுக்கு எதிராக நடத்தினர். எல்லைப் புறங்களில் இனச் செறிவுகள் பாரிய மாற்றத்தை தொடர்ச்சியாக மாற்றியமைக்கப்பட்டது. இயற்கையான குடிபரவல் என்பது மாறாக திட்டமிட்ட இன அழிப்பை நடத்தி, சிறுபான்மை இனங்களின் சொந்த பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்கினர். இதன் போது எமது போராட்டம் எழத் தவறியதே, எமது தேசியத்தின் அடிப்படையான மையத் தவறாகும். இந்த நிலத்தொடர் மீதான போராட்டம் தான், தமிழ் மக்களின் அடிப்படையான மையப் பிரச்சனையும் கூட.
டி.எஸ்.சேனநாயக்காவே திட்டமிட்ட குடியேற்றத்தை தொடக்கிவைத்தார். இலங்கையின் அபிவிருத்தி என்ற பெயரிலும், தேசிய மயமாக்கல் என்ற பெயரிலும் எல்லைப்புற தமிழ் கிராமங்களை சிங்கள குடியேற்றம் மூலம் கைப்பற்றும் முயற்சியை சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக நடத்தினர். 1931 இல் உருவாக்கப்பட்ட முதல் மந்திரி சபையில் காணி அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்காவே, 1948 இல் நாட்டின் பிரதமரானார். இவரே மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்கவும், நாடற்றவராக்கும் பிரஜாவுரிமை சட்டத்தை இனவாத கண்ணோட்டத்தில் அழுல்படுத்தினார். இதே காலத்தில் தான் தமிழ் தேசிய தலைவர் ஐp.ஐp பொன்னம்பலம் இனவாத அரசுக்கு முண்டு கொடுத்து கைத்தொழில் அமைச்சரானார். இதன் தொடர்ச்சியில் தேர்தல் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்கள், இனவாத அடிப்படையில் சிங்கள ஆட்சிக்கு நிரந்தரமாக வழிவகுத்தனர். இதில் சில கூறுகளை எதிர்த்தே ஜே.வி. செல்வநாயகம் தனி கட்சியை ஆரம்பிக்கின்றார். ஆனால் இன்று தேசிய தலைவர்களாக இருவரையும் குறிப்பிடுமளவுக்கு இன்றைய தேசியம் சீரழிந்து காணப்படுகின்றது. (பார்க்க அண்மையில் பிரபாகரன் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டியை) 1948 சுதந்திரம் என்பது பிரிட்டனின் காலனித்துவ தொடர்ச்சியையும், அவர்களின் நலனையும் பேண உறுதியளித்து பெற்றுக் கொண்டதே. இதைத் திசைதிருப்ப இனவாத பிளவை வித்திடுவது மட்டுமே, ஆட்சியை தொடர இருந்த ஒரு நெம்பு கோலாகும். இந்த வகையில் இனச் சிதைவை உருவாக்க சிங்கள இனவாதிகள் திட்டமிட்டனர். தமிழ் அதிகார வர்க்கத்தை பாதுகாக்க தமிழ் இனவாதத்தை எதிர் நிலையில் கைக்கொண்ட வரலாற்று தொடர்ச்சியில், சிங்கள இனம் பெரும்பான்மையாக இருந்ததால் சிங்கள இனவாதம் கொழுவேற்றது.
காலனித்துவ அடிப்படையாகக் கொண்டு ஆட்சியேறிய இனவாதிகள் ஏற்றிய கொடியே இனவாதத்தை பறைசாற்றியது. இலங்கை கொடி ஒரு சிங்கள ஆதிக்க மத அடிப்படைவாத இனவாத கொடியாகும். இக் கொடியின் முக்கிய பகுதி 1815 ம் ஆண்டு நிலப்பிரபுத்துவ கண்டி ஆட்சியின் கொடியில் இருந்தே எடுக்கப்பட்டது. 1948ம் ஆண்டு போலிச் சுதந்திரத்தை ஏற்றபோது கண்டிக் கொடியே பறக்கவிடப்பட்டது. இன்று உள்ள கொடி 1952ம் ஆண்டு இனவாதிகளால் மீளமைக்கப்பட்டது. வாள் ஏந்திய சிங்கம், சிங்கள அரசின் பரம்பரை வழியை உறுதி செய்கின்றது. சிங்கத்தைச் சுற்றி உள்ள நான்கு மூலையில் உள்ள அரச மரம் பௌத்த சமயத்தை முதன்மைப் படுத்துகின்றது. இதற்கு அடுத்து காணப்படும் நீள் சதுர செம்மஞ்சள் பகுதி தமிழர்களையும், அடுத்துள்ள பச்சை முஸ்லீம் மக்களையும் குறிக்கின்றது. மலையக மக்களை ஒட்டு மொத்தமாகவே நிராகரிக்கின்றது. இந்த கொடியின் எழில் ஒருபங்கு செம் மஞ்சளும், இது போன்று பச்சையும் அமைய வேண்டும். இதைச் சுற்றி மஞ்சள் ஓரம் உண்டு. இந்தக் கொடி பௌத்த மதத்துக்கும், சிங்கள பரம்பரைக்கும் முதன்மை வழங்கிய, ஒரு பௌத்த சிங்க இனவாதக் கொடியாக திகழ்கின்றது. இதற்கு மாற்றாகவே இன்றைய தமிழ் தேசியத்தின் பெயரில் உள்ள புலிக் கொடியும் காணப்படுகின்றது. அனைத்திலும் பச்சை இனவாதமும், சிறுபான்மை இனங்கள் மேலான இன வெறுப்பும் மண்டிக்கிடக்கின்றது. மக்களின் உழைப்பு, மக்களின் ஐக்கியம் என்று எதையும் முன்வைத்து, இந்தக் கொடிகளை பறக்கவிடப்படவில்லை.
இனவாத கொடியை பறக்க விட்டவர்கள், இனவொடுக்கு முறையை சிறுபான்மை இனங்கள் மேல் சமூக மயமாக்கினர். இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் சார்ந்து 1931 க்கும் 1943 க்கும் இடையில் 115 லட்சம் ரூபா விவசாய அபிவிருத்திக்கும், 33 லட்சம் குடியேற்றத்துக்கும் என அன்றைய பெறுமதிப்படி ஒதுக்கிய டி.எஸ். சேனநாயக்கா, தமிழ் எல்லையோர குடியேற்றத்தை தொடங்கினார். திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் ஊடாக அம்பாறை 1960ம் ஆண்டு மட்டக்களப்பில் இருந்து பிரிக்கப்பட்டது. 1947க்கும் 1974 க்கும் இடையில் காணி அபிவிருத்தி, நீர்ப்பாசன திட்டம், குடியேற்றத்துக்கு அன்றைய பெறுமதிப்படி 370 கோடி ரூபாவை செலவு செய்துள்ளது. இதில் பெருமளவில் சிங்கள குடியேற்றத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
1952 இல் கல்லோயத் திட்டம் மூலம் பட்டிப்பளை ஆறுக்கு குறுக்கே கட்டிய அணை சேனநாயக்கா சமுத்திரமாகியது. இது திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை விரிவாக்கும் அடிப்படையில் உருவாக்கியது. அழகியபாறை அம்பாறை மாவட்டமாகவும் திரிபடைந்தது போல், சிங்கள குடியேற்றம் சார்ந்து உருவான தேர்தல் தொகுதி திகமடுல்லையானது. 1952 இல் தொடங்கிய கல்லோய குடியேற்றத் திட்டம் போல் திருகோண மலையில் அல்லை - கந்தளாய் குடியேற்ற திட்டம் உருவாக்கப்பட்டது. முசலி - மணலாறு குடியேற்றம் மன்னார் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. அத்துடன் கொண்டைச்சி திட்டம் மூலம் மரமுந்திரிகை திட்டம் அறிமுகமானது. கடற் கரையோர மீன் பிடி சார்ந்தும், முந்திரிகை தோட்டம் என்ற பெயரிலும் சிங்கள குடியேற்றம் உருவாக்கப்பட்டது. வாவுனியாவில் பாவற்குள திட்டம் உருவானது.
1941ம் ஆண்டு டி.எஸ். சேனநாயக்கா கல்லோயத் திட்டத்தை அழுலுக்கு கொண்டு வந்தார். இதன் மூலம் 44 குடியேற்றக் கிராமம் உருவாக்கப்பட்டது. இதில் 38 சிங்கள கிராமமாகும். மிகுதியான ஆறு கிராமங்கள் தமிழ் மொழி பேசுவோருக்கு வழங்கிய போதும், குடியேற்றுத்துக்கு திட்டமிட்டே நீர் வழங்கப்படவில்லை. அல்லது சிங்களப் பகுதியூடாகவே நீர் வழங்கப்படுவதாக இருந்தது. கல்லோயத் திட்டம் தொடங்கும் முன்பு அங்கு 3000 சிங்களவரே இருந்தனர். இது இன்று 146 371 யாக மாறிவிட்டது. 1901 இல் கந்தளாய் பிரதேசத்தில் மொத்த சனத்தொகையில் தமிழர் 79 பேரும், 55 முஸ்லிம்களும், 16 சிங்களவரும் இருந்தனர். 1921 குடிசன மதிப்பீட்டில் ஒரே ஒரு சிங்களவரே அங்கு இருந்தார். 1981 குடிசன மதிப்பீட்டில் சிங்களவர் 31206 பேரும், முஸ்லீம்கள் 4323பேரும், தமிழர் 2001பேருமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட குடியேற்றங்கள் பாரம்பரியமாக வாழும் மக்களை சொந்த மண்ணில் இருந்தும், அவர்களின் பொருளாதார வாழ்வில் இருந்தும் துரத்துவதன் மூலம் தேசிய பண்புகளை அழித்தொழிப்பதை மையமாகக் கொண்டு இருந்தது. இது அம்பாறை மாவட்டத்தின் மொத்த இனவிகிதத்தையே மாற்றியமைத்தது. அம்பாறை மாவட்ட வாக்காளர் எண்ணிக்கையையே தலைகீழாக்கியது.
ஆண்டு முஸ்லீம் வாக்களர் சிங்கள வாக்களர்
1947 37000 2394
1952 42000 3119
1956 44000 3905
1960 52000 23000
1965 57000 31000
1970 62000 39000
1977 68000 46000
1982 87236 75378
இனஅழிப்பில் முஸ்லீம் மக்களின் மண்ணையும் அபகரித்தனர். இனவாதம் மலையக மக்களில் தொடங்கி முஸ்லீம் தமிழ் என்று அனைத்து சிறுபான்மை இனங்களின் பாரம்பரிய பிரதேசங்களை அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் தமிழ் குறுந்தேசியம், அனைத்து சிறுபான்மை இனங்களின் நலன்களை உயர்த்தத் தவறியது. மாறாக அவர்களை எதிரியாகக் காட்டியும், பண்பாட்டு பொருளாதார கூறுகள் மூலம் அவர்களை இழிவாக்கியும் சுரண்டவும், அவர்களை அழித்தொழிக்க சிங்கள இனவாதிகளுடன் ஒரே அணுகுமுறையையே கையாண்டனர், கையாளுகின்றனர். தமிழ் மக்களினதும், சிறுபான்மை தேசிய இனங்களினதும் பாரம்பரிய பிரதேசங்கள் சூறையாடப்பட்ட போது, இதற்காகவும் அந்த ஏழை எளிய மக்களுக்காகவும் யாரும் போராடவில்லை. இடதுசாரிகள் போல் இனத் தேசியவாதிகளும் பாராளுமன்றத்தில் ஒரு கண்டன அறிக்கை விடுவதுடன் இதை ஊக்குவித்தனர். அதே நேரம் காலத்துக்குக் காலம் பாராளுமன்றத்தில் இனவாத அரசுக்கு பக்கபலமாகவும், ஆட்சியில் பங்கேற்றும் பன்றியைப் போல் திகழ்ந்தனர். இந்த இன அழிப்பு இந்த பன்றிகளின் சாக்கடை நாற்றத்தில் செழித்து வளர்ச்சி பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1752.4 சதுர மைல்களாகும். இதில் 1005.96 சதுர மைல்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மூலம் தனி சிங்கள பிரதேசமாக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் சனத் தொகை பரம்பல் இதை துல்லியமாகத் தெளிவாக்குகின்றது. 1981ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எமக்கு திட்டமிட்ட குடியேற்றம் மூலம் மாற்றியமைத்த ஒரு இன அழிப்பை நிறுவுகின்றது.
இனப்பிரிவு சனத் தொகை விகிதாசாரம்
முஸ்லீம்கள் 161 481 41.6
சிங்களவர் 146 371 37.6
தமிழர் 78 315 20.1
1981 க்கு முந்திய மக்கள் தொகை இனரீதியாக எப்படி திட்டமிட்டு அழிக்கப்பட்டது என்பதை புள்ளிவிபரங்கள் தெளிவாக்குகின்றன. மட்டக்களப்பு மாவட்டம் இன்றைய அம்பாறை மாவட்டம் உள்ளடக்கிய ரீதியாக காணப்படும் இனம், பரம்பல், தெளிவாகவே இனவாதிகளின் இன அழிப்பையும் மௌனம் காத்த தமிழ் குறுந் தேசிய இனவாதிகளிள் யாழ் மையவாத தேசியத்தையும் அம்பலம் செய்கின்றது.
ஆண்டு தமிழ் மொழி பேசுவோர் சதவீதம் சிங்கள மொழி பேசுவோர். சதவீதம்
1827 99.62 0.00
1881 93.27 4.75
1891 93.20 5.21
1901 92.34 5.21
1911 92.95 3.74
1921 93.12 4.56
1946 92.55 5.83
1953 87.54 11.52
அம்பாறை மாவட்டம் (1963 க்கு பின் தனி மாவட்டமானது)
ஆண்டு தமிழ் மொழி பேசுவோர் சதவீதம் சிங்கள மொழி பேசுவோர். சதவீதம்
1963 70.22 29.37
1971 69.47 30.18
1981 62.03 37.64
மட்டக்களப்பு மாவட்டம் (புதிய அம்பாறை மாவட்டம் நீங்களாக)
ஆண்டு தமிழ் மொழி பேசுவோர் சதவீதம் சிங்கள மொழி பேசுவோர். சதவீதம்
1963 95.60 3.35
1971 94.66 4.49
1981 95.95 3.21
திட்டமிட்ட இன அழிப்பை திட்டமிட்ட குடியேற்றம் மூலம் மட்டக்களப்பு எல்லையோரங்களில் தொடங்கிய இனவாதிகள், அதை இன ரீதியாக அறுவடை செய்ய அம்பாறையை தனிமாவட்டமாக்கினர். சுதந்திரத்துக்கு பின் பாரிய குடியேற்ற திட்டங்கள் மூலம், தமிழ் முஸ்லீம் பாரம்பரிய பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டன. தமிழ், முஸ்லீம் விவசாயிகள் அந்த மண்ணில் இருந்து படிப்படியாகத் திட்டமிட்டே அகற்றப்பட்டனர். ஆனால் இந்த இனவாதத்தை எதிர்த்து போலி இடதுசாரிகள் முதல் இனத் தேசியவாதிகள் வரை போராடவில்லை. பாராளுமன்ற கதிரை கிடைக்கும் என்ற ஒரு நிலைகளில் போராடும் போலி இடதுசாரிகள் முதல் இனத் தேசியவாதிகளே இனங்களை பிளந்து குளிர்காய்ந்தனர். நிலத்துடன் வாழ்வை நடத்தி உழைக்கும் விவசாய மக்கள் மேல் கொண்டிருந்த இழிவான சமூக கண்ணோட்டமும், வர்க்க வெறுப்பும் அந்த மக்களையிட்டும், மக்களின் தேசிய மற்றும் பொருளாதார நலனை முன்வைத்தும் போராடவில்லை. மாறாக இந்த இனவாத வர்க்க சமூக அழிப்பின் மேல் குளிர்காய்ந்தார்கள். இந்த திட்டமிட்ட குடியேற்றம் பல்வேறு பிரதேசங்களின் ஒரு தொடர் கதையாக இருந்த போது, போலி இடதுசாரிகள் முதல் போலி தேசியவாதிகள் ஈறாக இதில் கும்மாளம் போட்டனர். இது இன்றுவரை இந்த அடிநிலை மக்களின் வாழ்வின் ஆதாரங்கள் மேல், இந்த தேசியத்தை முன்வைக்கவில்லை, முன்வைக்கப் போவதுமில்லை. தேசிய இனங்கள் மற்றும் சிறுபான்மை இனங்களின் பாரம்பரிய வாழ்விடங்கள், அவர்களின் பொருளாதாரங்கள் இன வரலாற்றில் அழிக்கப்பட்டது. இதை மேலும் ஆராய்வோம்.
திருகோணமலையில் கந்தளாய், மொறவேவ, அல்லை, பதவியா போன்ற சிங்கள குடியேற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. கந்தளாய், மொறவேவத் திட்டமிட்ட இனக் குடியேற்றத்தில் 2300 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். இப்படித் தொடர்ச்சியான குடியேற்றங்கள் நடத்தப்பட்டன. திருகோணமலையில் 1880 இல் 935 சிங்கள மக்களே வாழ்ந்தனர். இது 1981 இல் 86341 யாக அதிகரித்துள்ளது. சிங்கள மக்கள் இன்று இந்த மாவட்டத்தில் பெருபான்மை இனமாகிவிட்டனர். 1880 இல் 14 மடங்கு தமிழ் இனத்தைவிட குறைவாக இருந்த சிங்களவர், இன்று பெரும்பான்மை இனமாகிவிட்டனர். திருகோணமலையில் நடந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை ஆராய்வோம்.
ஆண்டு சிங்களவர் தமிழர் முஸ்லிங்கள்
1881 935 14394 5746
1891 1109 17117 6426
1901 1203 17 069 8258
1911 1138 18 913 9529
1921 1496 18138 12662
1946 15706 30433 22136
1953 15296 34035 27748
1963 39950 51060 41950
1971 55308 67516 60698
1981 86341 86743 74403
சிறுபான்மை இனங்களை திட்டமிட்டு பெரும்பான்மை இனம் சார்ந்து இனவாதிகள் நடத்திய அழித்தொழிப்பு ஒரு தொடர்ச்சியான ஒரு சமூக நடவடிக்கையாக நடந்து வந்துள்ளது. சிறுபான்மை இனங்களின் நிலப்பறிப்பு நடந்தபோதும், அந்த மக்களின் பொருளாதாரம் சூறையாடப்பட்ட போதும் எமது தேசியம் எழுச்சி பெறவில்லை. மாறாக யாழ் நலன்களில் இருந்தே தேசியம் முன்வைக்கப்பட்டது. அதையே இன்றும் தேசியம் கோரி ஆயுதமேந்தியுள்ளது. ஒரு இனஅழிப்பின் வரலாறு பாரிய இனவழிப்பு ஊடாகவே நகர்ந்து வந்துள்ளது. 1901 ஆண்டு இலங்கையை ஒன்பது மாகாணங்களாக பிரித்த போது வடக்கு 8700 சதுரக் கிலோ மீற்றராகவும் (இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 13 சதவீதமாக), கிழக்கு 10 440 சதுர கிலோ மீற்றராகவும் (மொத்த நிலப்பரப்பில் 16 சதவீதமாகவும்) இருந்தது. இங்கு வாழ்ந்த சனத்தொகை முறையே 340 936 யாகவும் (இலங்கை சனத்தொகையில் 10 சதவீதமாகவும்), 173 602 யாகவும் (இலங்கை சனத்தொகையில் 5 சதவீதமாகவும்) இருந்தனர். 1948 போலிச் சுதந்திரத்தை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் இருந்து 509 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு நீக்கப்பட்டு, புதிய மாகாண அமைப்பு உருவானது. 1901இல் தமிழரின் மரபுவழித் தாயகமான 29 சதவிகித நிலப்பரப்பு இருந்தது. இது 1995 இல் 17 வீதமாக குறைந்து போனது. அதாவது சுதந்திரத்தின் பின்பு கிழக்கில் 7 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பையும், வடக்கில் இருந்து 500 சதுர கிலோ மீற்றர் பரப்பையும் திட்டமிட்ட இனக் குடியேற்றம் மூலம் சிங்கள மயமாக்கினர். 1901 இல் தமிழர் வாழ் நிலப்பரப்பு 19100 ச.கிலோ மீற்றராக இருந்தது. 1901 இல் 65 சதவீத கடற்கரைகளும் தமிழர் நிலப்பரப்பில் காணப்பட்டது. ஆனால் இன்று அவை முற்றாக குறைக்கப்பட்டுள்ளது. 1948 இல் கிழக்கு மாகாணத்தில் 5 சதவீதமாக இருந்த சிங்கள மக்கள், 1995 இல் 24 சதவீதமாக அதிகரித்துள்ளனர். கிழக்கு மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட குடியேற்றத்தினை ஆராய்வோம்.
கிழக்குமாகாணம் % கிழக்குமாகாணம் % திருகோணமலை% திருகோணமலை %
தமிழ் மொழி சிங்கள மொழி தமிழ் மொழி சிங்கள மொழி
1827 99.24 0.53 98.45 1.53
1881 93.82 4.66 90.72 4.21
1891 93.89 5.06 91.44 4.3
1901 91.80 5.05 89.04 4.22
1911 93.40 3.76 90.54 3.82
1921 93.95 4.53 92.13 4.38
1946 87.80 9.87 75.09 20.68
1953 85.50 13.11 78.8 18.22
1963 79.25 19.6 69.89 28.9
1971 78.61 20.7 70.2 28.8
1981 74.40 24.92 65.38 33.62
கிழக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியாக இனங்களின் இயல்புத் தன்மையும் திட்டமிட்ட குடியேற்றமும்
திரு திரு திரு திரு மட்ட-அம் மட்ட-அம் மட்ட-அம் மட்ட-அம்
சிங்களவர் தமிழர் முஸ்லீம் ஏனையோர் சிங்களவர் தமிழர் முஸ்லீம் ஏனையோர்
1921 3 % 55.2 % 38.1 % 3.5 % 4.5 % 53.3 % 39.7 % 2.3 %
1946 20.6 % 44.5 % 30.5 % 3.7 % 5.9 % 50.3 % 42.2 % 1.6 %
1971 28.8 % 38.2 % 32 % 1 % 17.7 % 46.4 % 35.2 % 0.6 %
கிழக்கு மாகாணத்தின் மக்கள் தொகை
ஆண்டு சிங்களவர் வீதம் தமிழர் வீதம் முஸ்லீம் வீதம்
1827 250 1.3 34758 75.65 11533 23.55
1881 5947 4.5 75408 61.53 43.001 30.65
1891 7512 4.75 87701 61.55 51206 30.75
1901 8778 4.7 96926 57.5 62448 33.15
1911 6906 3.75 101181 56.2 70409 36.0
1921 8744 4.5 103551 53.5 75992 39.4
1946 23456 8.4 146 059 52.3 109024 39.1
1953 46470 13.1 167898 47.3 135322 38.1
1963 109690 20.1 246 120 45.1 185750 34.0
1971 148 572 20.7 315 560 43.9 248567 34.61
1981 243 358 24.9 409 451 41.9 315201 32.2
கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றம் பாரம்பரியமாக வாழ்ந்த மக்களை படிப்படியாக சொந்த மண்ணில் இருந்து அகற்றுவதாக இருந்தது. இதன் மூலம் பல செறிவான இனக் குடியேற்றத்தை நடத்தியதன் மூலம், குறித்த பிரதேசங்களை பிரித்தெடுக்கவும் இனவாத அடிப்படையில் பெரும்பான்மையினரின் நலனை மையமாகக் கொண்ட மாகாணங்களும் உருவாக்கப்பட்டது. திட்டமிட்ட சிங்கள குடியேற்றமும் அதன் அதிகரிப்பும்.
தமிழர் தமிழர் சிங்களவர் சிங்களவர் சிங்கள சனதொகை அதிகரிப்பு
1953 1971 1953 1971
யாழ்ப்பாணம் 477 304 673 043 6 183 20 402 14 219
மட்டக்களப்பு 130 381 246 582 31 174 94 153 62 979
திருகோணமலை 37 517 73 255 15 296 55 308 40 192
புத்தளம் 9010 30 994 31 587 309 298 277 711
மேலுள்ள புள்ளி விபரங்கள் எப்படி திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மூலம் ஒரு இன அழிப்பை சிங்கள இனவாதிகள் நடத்தினர் என்பதை தெளிவாக காட்டுகின்றது. புத்தளத்தில் 1953 க்கும் 1971 க்கு இடையில் தமிழ் மக்களின் சன தொகை அதிகரிப்பு அண்ணளவாக மூன்று மடங்காக இருக்க, சிங்களவர் தொகை 9 முதல் 10 மடங்காக அதிகரித்துள்ளது. மட்டக்களப்பில் தமிழர் சனத் தொகை அண்ணளவாக இரண்டாக அதிகரிக்க சிங்கள மக்களின் தொகை மூன்று மடங்காகியுள்ளது. திருகோணமலையில் தமிழர் தொகை இரண்டு மடங்காக அதிகரிக்க சிங்களவர் தொகை 3.5 மடங்காக அதிகரித்துள்ளது. இதில் சில குறித்த பகுதிகள் பல மடங்காகவும், எல்லை கிராமங்களில் முற்றாகவே மாற்றி அமைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர் தொகை அதிகரித்துச் செல்ல, தமிழர் தொகை குறைந்து வருகின்றது. இதுவே புத்தளத்திலும் நடந்தது.
புத்தளம் தேர்தல் தொகுதியில் 1958க்கும் 1976க்கு இடையில் தேர்தல் திணைக்கள அறிக்கைப்படி இனங்களின் விகிதம்
ஆண்டு சிங்களவர் முஸ்லீங்கள் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் ஏனையோர்
1958 34.7 41.0 18.9 - 5.4
1976 37.9 38.5 19.9 2.9 0.73
புத்தள மாவட்டத்தில் 1981 இல் எடுத்த மக்கள் தொகை கணிப்பீடுகள்
ஆண்டு சிங்களவர் முஸ்லீங்கள் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் ஏனையோர்
1981 82.6 9.7 6.7 0.6 0.4
உண்மையில் புத்தளம் முற்றாக மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. எல்லையோர மீன்பிடி அபிவிருத்தி மற்றும் பல்வேறு திட்டங்களின் பெயரில் திட்டமிட்ட இன குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. தமிழர் மற்றும் முஸ்லீம்களின் வாழ்விடங்கள் சூறையாடப்பட்டன. சுதந்திரத்துக்கு முன் வரை இயல்பான மக்களின் குடிபெயர்ச்சிகள் இப்பிரதேசங்களில் இருந்துள்ளது. ஆனால் போலிச் சுதந்திரத்துக்கு முன் தொடங்கி சுதந்தித்தின் பின் திட்டமிட்ட குடியேற்றம் ஒரு போக்காக இனவழிப்பாக மாறியது. திருகோணமலையில் 1921 இல் 4.6 சதவீதமாக இருந்த சிங்கள மக்கள் 1971 இல் 28.8 யாகவும், மட்டக்களப்பு அம்பாறையில் 4.5 இல் இருந்து 17.7யாகவும் மாறியது. இந்த திட்டமிட்ட குடியேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எமது போராட்டம் ஆரம்பிக்க தவறியதே, எமது போராடத்தின் அடிப்படையான திசை விலகலாகும. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் மட்டுமல்ல, கிழக்கில் வாழும் தமிழ் மொழி பேசும் 32.4 சதவீதமான முஸ்லீம் மக்களின் நிலங்களும் இன அழிப்பின் ஊடாக சூறையாடப்பட்டன. தமிழ் பேசும் முஸ்லீம் மக்களையும் தமிழ் தேசியம் எதிரியாக காட்டிய போது அம்பாறையில் வாழும் 41.6 சதவீதமானவர்களையும், திருகோணமலையில் வாழும் 29.0 சதவீதமானவர்களையும், மன்னாரில் வாழும் 26.6 சதவீதமானவர்களையும், மட்டக்களப்பில் வாழும் 24 சதவீதமானவர்களையும், வவுனியாவில் வாழும் 6.9 சதவீதமானவர்களையும், முல்லைத்தீவில் வாழும் 4.9 சதவீதமானவர்களையும், யாழ்ப்பாணத்தில் வாழும் 2.4 சதவீதமானவர்களையும், புத்தளத்தில் வாழும் 9.7 சதவீதமானவர்களையும் நேரடியாக தமிழீழ எல்லைக்குள்ளேயே எதிரியாக மாற்றியது. தமிழ் குறுந் தேசியத்தின் பிற்போக்கான போராட்ட அடிப்படையே நண்பர்களையும் எதிரியாக்கியுள்ளது. தமிழ் தேசிய எல்லைக்குள் வாழ்ந்த சிறுபான்மை இனங்களை எதிரியாக மாற்றிய யாழ் உயர் வர்க்க தேசியம், அந்த மக்கள் உள்ளிட்ட உழைக்கும் பிரிவின் நிலத்தை பெரும் தேசிய இனவாதிகள் திட்டமிட்டு சூறையாடியபோது, அதற்காக போராட முன்வரவில்லை. அதை வரலாற்று ரீதியாக அடையாளம் கண்டு, அந்த மக்களுடன் அந்த மக்களின் பிரச்சனைகளுடாக தன்னை ஆயுதபாணியாக்கவில்லை.
ஏன் தமிழ் தேசியம் இந்த திட்டமிட்ட குடியேற்றத்தை எதிர்த்துப் போராடவில்லை. உண்மையில் இதற்காகவே தமிழ் தேசியம் போராடியிருக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சனையின் அடிப்படையே இதில் தான் அடங்கியுள்ளது. இதை இன்றைய தேசியவாதிகள் முதல் அனைவரும் மறுத்து நிற்பது ஏன்? சிங்கள இனவாதிகள் தமிழ் இனத்தை அழிக்க உருவாக்கிய மிகவும் திட்டமிட்ட இனவாதச் செயலாகும். தமிழ் தேசிய தலைவர்கள் என்றும் சிங்கள தேசியவாதிகள் என்றும் பறைசாற்றிய பிழைப்புவாதிகள், கண்டு கொள்ளத் தவறியதை இன்னொரு சமகால நிகழ்வுடன் ஒப்பிட முடியும். பேச்சுவார்த்தை ஊடாகவே புத்தளத்தில் 25000 ஏக்கர் மரமுந்திரிகை உற்பத்தி செய்ய, 40 கோடி ரூபாவை நோர்வேநாட்டு பன்நாட்டு நிறுவனம் ஒன்று முதலிட்டு உள்ளது. இதுபோன்று இலங்கையில் மற்றொரு நீர்ப்பாசன குடியேற்ற திட்டமாக 400 கோடி டொலரில் உருவாக்கிய மகாவலி நீர்த் தேக்கத் திட்டம் சார்ந்து, ஒரு லட்சம் ஏக்கர் நிலம் வெளிநாட்டு பன்நாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்டது. இதை இன்று வரை தமிழ் தலைமை போல் சிங்கள தலைமையும் தேசியத்தின் பெயரில் பேசியது கிடையாது. இந்த மகாவலித் திட்டம் பன்நாட்டு கம்பனிக்கு சொந்த மண்ணை தாரைவார்த்த அதே வேகத்தில், சிங்கள குடியேற்றத்தை வடக்கு கிழக்கு நோக்கி நகர்த்துவதை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. சிங்கள மக்களின் நிலங்களை வெளிநாட்டு கம்பனிக்கு தாரை வார்த்தபோது, சிங்கள தேசியவாதிகள் தமிழ் தேசிய வாதிகள் போல் கண்ணை மூடிக்கொண்டுதான் தேசியத்தை பற்றிப் பிதற்றினர்.
தமிழ் பாரம்பரிய பிரதேசம் திட்டமிட்ட சிங்கள குடியேற்ற ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்ட போது, தமிழ் தேசிய போராட்டம் உருவாகவில்லை. ஏன்னெனின் இந்த தமிழ் பாரம்பரிய பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயிகளும், அடிமட்ட கூலிபெறும் ஏழைக் கூலிகளுமே. அத்துடன் சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். அந்த மக்களின் உழைப்பு மற்றும் வளங்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்ட போதும் சரி, அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்த போதும் சரி, இதை மறைமுகமாக தமிழ் தேசியம் முண்டுகொடுத்தனர். தேசியத்துக்கு தலைமை தாங்கியவர்கள் வர்க்க ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் விவசாயிகளுக்கும் கூலிகளுக்கும் எதிரானவர்களாக இருந்தனர். எல்லையோரங்களில் இருந்த மக்கள் பெரும்பாலானவர்கள் சொந்த நிலம் கொண்ட ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளாக இருந்தனர். ஆனால் தமிழ் தேசிய தலைவர்கள் நிலப்பிரபுத்துவ மற்றும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்தமையால், வர்க்க ரீதியாக அந்த மக்களுடன் தம்மை அடையாளம் காணமுடியாததுடன், தமது எதிரி வர்க்கமாகவே தமிழ் குறுந் தேசியம் எப்போதும் கருதியது, கருதி வருகின்றது. இன்று புலிகளின் குறுந் தேசியத்திலும் கூட இதுதான் அதன் அரசியல் அடிப்படையாகும்.
எல்லையோரங்கள் நெடுகிலும் நிலத்துடன் வாழ்ந்த விவசாயியும் சரி, மீன்பிடிப்பை அடிப்படையாகக் கொண்ட மீனவர் வாழ்விலும் சரி, அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடம் சார்ந்து கொண்டிருந்த சுயபொருளாதாரம் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்புக்குள்ளான நிகழ்வே, உண்மையான தேசியத்தின் மையக் கூறாகும். இதைக் கொள்கை ரீதியாக கூட இன்று தேசியவாதிகள் முதல் போலி இடதுசாரிகள் வரை ஏற்றுக் கொள்ளவில்லை. தேசிய தலைமைகள் யாழ் மையவாதத்தில் இருந்தே உருவானது. யாழ் குறுந் தேசிய பண்பாடாக இருந்த பிரதேச இழிவு கண்ணோட்டம், முஸ்லீம் எதிர்ப்புடன் கூடிய இன மற்றும் மத பிரமைகள், சாதி பற்றிய பெருமித உணர்வு, உழைப்பு பற்றிய இழிவான கண்ணோட்டம், உழைக்கும் மக்களின் நிறம் பற்றிய இழிவு என்பன இணைந்து, உண்மையான தமிழ் தேசியம் அழிக்கப்பட்ட போது மௌனமாக அங்கீகரித்து, அதனை செயல்படுத்த பலமுறை இனவாத அரசில் அங்கம் வகித்து நக்கிப்பிழைத்தனர்.
நடந்து கொண்டிருக்கும் குறுந் தேசிய போராட்டம் யாழ் மையவாத நலன்களில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து, எழுந்த ஒரு எதிர்வினைதான். இதில் ஒன்று தான் தரப்படுத்தல். யாழ் அல்லாத தமிழ் பிரதேச மக்களின் பல்கலைக்கழக கல்வி மறுக்கப்பட்டு இருந்தபோது எழாத தேசிய உணர்வுகள், யாழ் மையவாத நலன்களுக்கு பல்கலைக்கழகம் சார்ந்து பாதிப்பு ஏற்பட்ட போதே குறுந் தேசியமாக உயிர்த்தெழுந்தது. இங்கும் யாழ் அல்லாத மக்களின் நலனில் இருந்து அல்ல என்பது, இன்று வரை நிதர்சனமான உண்மையாகும். இதை யாரும் மறுக்க முடியாது. ஒரு அமைதி திரும்பும் போது தரப்படுத்தல் நீக்கப்படுமாயின், யாழ் அல்லாத தமிழ் பிரதேச மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கு இன்றைய தமிழ் தேசிய வாதிகளே வேட்டு வைப்பார்கள். ஏன் தமிழீழம் கிடைக்குமாயின் அங்கு பல்கலைக்கழக அனுமதி திறமையின் அடிப்படையிலா? அல்லது பிரதேச அடிப்படையிலா? எனின், இங்கு யாழ் மையவாத தமிழ் குறுந்தேசியம் திறமையையே முன்னிலைப்படுத்தும். மற்றைய பின்தங்கிய தமிழ் பகுதிகள் புறக்கணிக்கப்படும் என்பது, நாம் சொல்ல வேண்டியதில்லை.
தேசியம் தனது திசைவிலகலால் குறுகிய நலனை முன்னிலைப்படுத்தியது. தமிழ் பிரதேசம் நிலத்தொடர் சார்ந்து அபகரிக்கப்பட்ட போது, அதில் தேசிய பொருளாதாரம் அழிக்கப்பட்டது. அந்தப் பொருளாதாரம் சார்ந்து மக்களின் வாழ்வு சூறையாடப்பட்டது. இந்த மையமான விடையத்தை தேசியம் முன்னெடுக்கத் தவறிய வரலாற்று தொடர்ச்சியில் தான், எமது தேசியம் ஏகாதிபத்திய நுகத்தடியில் தொங்குகின்றது. எமது தேசியத்தில் பெரும்பான்மையான விவசாயிகள் தமது சொந்த பொருளாதாரம் சார்ந்து, சொந்த உள்சுற்றுச் சந்தை சார்ந்து வாழ்ந்த இந்த மக்களின் நலனையே தமிழ் தேசியமாகக் கொண்டிருக்க வேண்டும். தேசியம் என்பது சொந்த உற்பத்தி சார்ந்து, சொந்த சந்தையைச் சார்ந்து வாழ்வதைக் குறிக்கின்றது. அதாவது தேசிய பொருளாதாரம் என்பது அந்த மக்களின் உற்பத்தி மற்றும் உழைப்பு சார்ந்து அடையாளம் காணப்படவேண்டும் இதை எமது போராட்டம் இன்று வரை தேசியத்தின் பெயரில் புறக்கணித்தே வருகின்றது. மாறாக ஏகாதிபத்திய கைக்கூலிகளாக, ஏகாதிபத்திய சூறையாடலுக்கு ஏற்ற தமிழீழம் என்றும், இஸ்ரேலிய கனவுகள் பற்றியும் சிங்கப்பூர் சொர்க்கம் பற்றியுமே தமிழ் தேசியம் மார்புதட்டுகின்றது. இந்த யாழ் மையவாத பூர்சுவா கண்ணோட்டத்தையே அடிப்படையாகக் கொண்டு தேசியம் பிரதிபலிக்கின்றது. இந்த தேசியம் பொருளாதாரம் பற்றி தொடர் கட்டுரை ஒன்றில் விரிவாகப் பார்ப்போம்.
எமது தேசிய நிலம் சூறையாடப்பட்ட போதும், மக்களின் தேசிய வளங்கள் பறிக்கப்பட்ட போது, அந்த மக்களின் பொருளாதார வாழ்வு அழிக்கப்பட்ட போது உருவாகாத தேசியம், எப்படி சரியான தேசியமாக இருக்க முடியும். குறைந்த பட்சம் அந்த மக்களின் நலன்களை இன்று கூட அடையாளம் காணவும், அதை மையமான கோசமாகவும் முன் வைத்து அவர்களை அணிதிரட்டாத போது, இந்த தேசியம் ஏகாதிபத்தியத்திடம் சரணடைவது தவிர்க்கமுடியாது. தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையின் அடிப்படையே இதில் தான் தங்கியுள்ளது.