கல்வியைப் போல் வேலை வாய்ப்பு பிரச்சனைகளையும் முன்வைத்தே தமிழ் தேசியம் தன்னை முன்னிலைப்படுத்தியது. அனைவருக்கும் வேலை வழங்கு என்ற அடிப்படையான கோசத்துக்கு பதில், சிலருக்கான வேலையில் அதிகம் எமக்கு வேண்டும் என்ற இன அடிப்படைவாதமே இந்த தேசிய பிரச்சனையில் மையமான கோசமாகியது. தேசியத்தை கட்டமைக்கும் போது தமிழ் மக்கள் என்ற பொதுமைப்படுத்தல் ஊடாகவே, தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறையை சுட்டிக்காட்டினார்கள். தமிழ் மக்களிடையே உள்ள பின்தங்கிய பிரதேசங்கள், சிறுபான்மை இனங்கள், தாழ்ந்த சாதிய மக்களின் விகிதத்துக்கு ஏற்ப, அவர்களின் வேலை வாய்ப்பு பற்றி மூச்சுவிடவில்லை. இங்கும் கல்வியைப் போல் யாழ் உயர் வர்க்கங்களின் ஆதிக்கத்தைக் கோரினார்களே ஒழிய, அனைத்து தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தவில்லை. வேலைவாய்ப்பை குறிப்பாக காட்டி முன்னிலைப்படுத்திய எமது தேசிய போராட்டம், பின்வரும் அடிப்படையான வழிகளில் பிற்போக்கான அம்சத்தை தேசியத்தில் வளர்த்தெடுத்தது.

 

1.தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையை தவறாக இதன் மூலம் இனம் காட்டி இதை முன்னிலைப்படுத்தியது.

 

2.தமிழ் மக்களின் வேலை வாய்ப்பில் யாழ் அல்லாத மக்களின் நலனை மூடிமறைத்ததுடன், அவர்களுக்காக போராட தயாரற்று இருந்தது.

 

3.அனைத்து மக்களுக்கும் வேலைக்கான உத்தரவாதத்தை வழங்கு என்று கோரிப் போராட மறுத்தது.

 

4.வேலையில் காணப்படும் அதிகார வர்க்கப் போக்கை மாற்ற கோரியிருக்க வேண்டும். (இந்த அதிகார வர்க்கப் போக்கு ஒட்டு மொத்த இலங்கையில் தமிழர்கள் ஆதிக்கத்தில் இருந்த போது, யாழ் உயர் குடிகள் மற்றும் உயர் வர்க்கங்கள் அல்லாத மற்றைய மக்களின் மேல் முறைகேடாகவே அதிகாரத்தைக் கையாண்டனர். இது சாதி, பிரதேசவாதம், இனவாதம் என்ற அனைத்துத் துறையிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனவாத விரிவாக்கத்தில் இதன் பங்கு கணிசமானது.

 

இதை அடிப்படையில் தமிழ் தேசியம் மறுத்து, யாழ் ஆதிக்க பிரிவுகளின் நலன் சார்ந்து குறுந்தேசிய போராட்டமாகியது. தேசியத்துக்கான யுத்தம் தொடங்கியதில் இருந்து, சிங்களம் ஆட்சி மொழியாகியதில் இருந்தும், ஆங்கில அறிவுபெற்ற யாழ் தமிழரின் உத்தியோகங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டது. இது யுத்த சூழலுக்குள் ஆழமான வேலை இழப்பை தமிழர் தரப்பில் சந்தித்துள்ளது. வேலையில் இருந்தோர் கூட நாட்டை விட்டு வெளியேறிய நிகழ்வு (இது இனவாதப் போக்கு முகம் கொடுக்க முடியமாலும் ஒருபுறம் நிகழ மறுதளத்தில் குட்டி பூர்சுவா வர்க்க நலன் சார்ந்தும் நடந்தது. தமிழரின் வேலை வாய்ப்புகள் சமகாலத்தில் குறைந்து செல்கின்றது. இவை அனைத்தையும் வரலாற்று ரீதியாக ஆராய்வோம்.