24 ஆம் தேதி கோவையில் ‘வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா’ பெரியார் திராவிடக் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், இயக்குநர் சீமானின் சிறப்புரையோடு சிறப்பாக நடந்து முடிந்தது.

ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் நமது நிகழ்ச்சியை நடத்தவிடாமல் இருப்பதற்காக, காவல் துறையிடம் பொய் புகார் கூறியும், அரங்க உரிமையாளர்களை மிரட்டியும் இருக்கிறார்கள். அதையும் மீறி 600 க்கும் மேற்பட்டவர்களின் பங்களிப்போடு விழா சிறப்பாக நடந்ததில் மதவெறி கும்பலுக்கு கடுப்பு.

 

கு.ராமகிருஷ்ணன், சீமான், ஆறுச்சாமி

`ராம. கோபலான் பெரிய வீரன்` என்று இல. கணேசன் சொல்வது போல, `கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் கோட்டை` என்ற ஒரு பச்சைப் பொய்யை பரப்பி வைத்திருந்தார்கள், பா.ஜ.க. காரர்களே.

 

(’பெருமாள், திருமால், விஷ்ணு, கண்ணன், ராமன்’ என்று ஒரே ஆளே பல பெயரில் இருப்பது போல், ஒரே கும்பல்தான் ‘பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத்’ என்கிற பெயரில், பெரிய கூட்டம் தன் பின்னால் இருப்பது போன்ற ஒரு `பில்டப்பை` தந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில்.)

 

‘உங்கள் கோட்டையிலேயே வந்து எங்கள் கொடியை ஏற்றுகிறோம்’ என்று அண்ணன் ராமகிருஷ்ணன் தலைமையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ‘கோட்டையிலேயே’ பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 

சீமானின் எழுச்சி உரை மக்களை மகிழ்ச்சியிலும், ஆர்.எஸ்.எஸ். காரர்களை ஆத்திரத்திலும் ஆழ்த்தியது.

 

துப்பாக்கியில் இருந்து தோட்டக்கள் சீறுவதுபோன்ற சீமானின் பேச்சால், ஆர்.எஸ்.எஸ். காரர்களின் ‘மண் கோட்டை’ சிதறி தெரித்தது.

 

‘நமது பகுதியில் வந்து மக்களை தன் வயப்படுத்தி, நமது கோட்டையை தரைமட்டும் ஆக்குகிறானே சீமான்’ என்கிற இயலாமை ஆர்.எஸ்.எஸ். காரர்களின் வெற்று கோபமாக வெளிப்பட்டது.

 

15 பேர் கொண்ட மதவெறி கும்பல் கூட்டத்தில் வந்து குழப்பம் விளைவிக்க, பார்த்து கொண்டிருந்த பொதுமக்களும், சில பெரியார் தொண்டர்களும், அவர்களை நன்கு ‘கவனித்து’ விரட்டி அடித்தார்கள்.

 

இந்த எதிர்ப்புக்குப் பிறகும் இன்னும் எழுச்சியோடு பேசிய சீமானின் உரை, மதவெறி கும்பலை ஆத்திரமூட்டியது. அருகில் போய் எதிர்ப்பு தெரிவித்தால் பொதுமக்களிடம் அடிவாங்க வேண்டி இருக்கும் என்பதால், தூரத்தில் இருந்து ராமனை போன்ற ‘வீரத்தோடு’, மறைந்திருந்து கற்களையும், சோட பாட்டில்களையும் வீசிவிட்டு ஓடியது அந்த ‘வீர’ கும்பல்.

 

தமிழகம் முழுக்க சீமான் எங்கு போய் பேசினாலும், அவர் பேச்சை கேட்டு திகில் அடைகிறது இந்து மதவெறி கும்பல்.

 

காரணம், மக்களிடம் மிக பிரபலமான ஒருவர், பார்ப்பனியத்தையும் இந்து மதத்தையும் சவால் விட்டு பேசுவதும், சீமானின் பேச்சு மிகுந்த வீச்சோடு பல இளைஞர்களை ஒரு பௌதிக சக்தியாக பற்றி கொள்வதையும் அதனால் தங்கள் இருப்பு கால் நழுவி போவதையும் உணர்கிறார்கள் மதவெறி கும்பல்.

 

அதன் பொருட்டேதான் சீமான் எங்கு போய் பேசினாலும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.

 

சீமானின் தமிழ் தேசிய கருத்துகளோடும் ‘எவனோ ஒருவன்’ என்கிற படத்தில் அவருடைய பங்களிப்பு குறித்தும் நமக்கு விமர்சனங்கள் இருந்தாலும் - பிரபலமானவராக இருந்து கொண்டு, அதுவும் சந்தர்ப்பவாதிகளும், சூதாடிகளும், சுயமோகிகளும், சமூகவிரோதிகளும், பதவி வெறியர்களும் நிறைந்த சினிமாவில் இருந்து கொண்டு - பெரியாரின் கருத்துகளுகாகவும், பார்ப்பனிய இந்து மதவெறி கும்பலை எதிர்த்தும் வீதியில் இறங்கி சமரசம் இல்லாமல், தகறாறு செய்ய வந்த ரவுடிகளை நோக்கி, “வாடா, தில்லு இருந்தா மோதி பாருடா, நீயா நானா பாத்துருலாம்” என்று நெஞ்சு நிமிர்த்தி நின்ற சீமானின் துணிச்சல் மரியாதைக்குரியது.

 

இந்து பாசிச கும்பலை எதிர்த்து தீவிரமாக இயங்குகிற சீமானுக்கு, வாழ்த்துகளை சொல்லிக் கொள்வதோடு அவரின் இந்த செயலுக்கு நாம் தீவிர ஆதரவும் அளிப்போம்.

 

http://mathimaran.wordpress.com/2008/08/27/article-112/