Language Selection

புதிய ஜனநாயகம் 2008

"கொகேசியர்கள்", அமெரிக்கா, கனடாவில் வாழும் ஐரோப்பிய-வெள்ளை இனத்தவர்களை குறிக்க அந்தச் சொல்லை பயன்படுத்துகின்றனர். ரஷ்யாவுக்கும், ஈரானுக்கும் இடையில், மேற்கே கருங்கடலையும், கிழக்கே கஸ்பியன் கடலையும் கொன்ட பிரதேசமே "கொகேசியா" என்ற பொதுப்பெயரில் அழைக்கப் படுகின்றது. சரித்திர காலகட்டத்துக்கு முந்திய, ஐரோப்பா நோக்கிய ஆரியர்களின் குடிப்பரம்பல், கொகேசியாவில் இருந்தே ஆரம்பமாகியதாக நம்பப்படுகின்றது. ஆரியர்களின் பூர்வீக பூமி, இன்று பல்வேறு மொழிகளை பேசும் இனங்களாக பிரிந்து, ஒருவருக்கொருவர் சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர்.

 

 

 

இன்று அமெரிக்கா-ரஷ்யா பனிப்போருக்குள் சிக்கி, செய்திகளில் அடிபடும் ஜோர்ஜியாவும் ஒரு கொகேசிய நாடு தான். அதன் வடக்கத்தய மாகாணங்களான அப்காசியா, ஒசேத்தியா ஆகியனவற்றில் வாழும் மக்கள் ஜோர்ஜியாவுடன் இணைந்திருக்க விரும்பவில்லை. அப்காசிய, ஒசெத்திய மொழிகள் ஜோர்ஜிய மொழியில் இருந்து வேறு பட்டவை. இதிலே ஒசெத்தியர்களின் மொழி ஈரானின் பார்சி மொழிக்குடும்பத்தை சேர்ந்தது. பண்டைய மன்னர் கால ஆட்சி அலகுகளில் இருந்து, தேசிய அரசுகளை நோக்கி கொகேசியா 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாற்றமடைந்தது. 19 ம் நூற்றாண்டில் விரிவடைந்து கொண்டு போன ரஷ்ய ஏகாதிபத்தியம், கொகேசிய நாடுகளையும் கைப்பற்றி, தனது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்திருந்தது. பின்னர் 1917 ல் லெனின் தலைமையில் கம்யூனிச புரட்சி கண்ட போல்ஷெவிக் கட்சியினர், முன்னாள் ரஷ்ய சாம்ராஜ்யத்தை, "சோவியத் யூனியன்" என்ற அதிகார அலகின் கீழ் கொண்டு வந்தனர். முன்னரே தனித்துவ அரசியல் அதிகாரம் கொண்டிருந்த பெரிய நாடுகள் "சோவியத் சோஷலிச குடியரசு" அந்தஸ்து பெற்றன. ஜோர்ஜியாவும் அவற்றில் ஒன்று.


சுமார் 150 மொழிகள் பேசும் மக்களை கொன்ட சோவியத் யூனியனை 15 குடியரசுகளாக பிரித்து விட்டால் மட்டும் இனப்பிரச்சினை தீர்ந்து விடப்போவதில்லை. இதனால் தமக்கென தனித்துவமான நிலப்பரப்பையும், மொழியையும் கொன்ட பிற சிறுபான்மை இனங்களின் நலன் கருதி, பல சுயாட்சிப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இனத்தால் ஜோர்ஜியரான ஸ்டாலின், சோவியத் அதிபரான பின்பு தான், இனங்களுகிடையே ஆன அதிகாரப்பரவலாக்கல் பூர்த்தியடைந்தன. அதன் அர்த்தம், ஸ்டாலின் காலத்தில் இனப்பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டது என்பதல்ல. ஆனால் இன்று நாம் காணும் தேச, பிரதேச எல்லைகள் யாவும் ஸ்டாலினால் வரையப்பட்டவை. குறிப்பிட்ட தேசம் அல்லது மாநிலம், குறிப்பிட்ட மொழி பேசும் மக்களை மட்டுமே கொண்டது போல தோற்றம் காட்டுகின்றது. ஆனால் அயல் நாடொன்றின் வேற்று மொழி மாகாணம், வேண்டுமென்றே ஒவ்வொரு குடியரசுக்குள்ளும் சேர்க்கப்பட்டது. அந்தந்த குடியரசுகளில் குறிப்பிட்ட இனத்தின் ஆதிக்கம் பெருகி, பிராந்திய பேரினவாத சக்திகள் தலை தூக்குவதை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு, அவ்வாறு செய்யப்பட்டது.

 

அப்காசியாவும், தென் ஒசெத்தியாவும் சுயாட்சி ஆட்சியலகை கொண்ட, ஆனால் "ஜோர்ஜிய சோவியத் குடியரசின்" பகுதிகளாக ஸ்டாலினால் இணைக்கப்பட்டது. இதைத்தான் இன்று ஜோர்ஜிய அரசாங்கமும், அமெரிக்கா உட்பட்ட சர்வதேசமும் "ஜோர்ஜியாவின் நிலப்பரப்பின் மீதான இறைமை" என்று கூறுகின்றனர். இதையே தான் அன்று கொசோவோ மீதான உரிமையை, செர்பியா வலியுறுத்தியது. அமெரிக்கா எல்லாவற்றிற்கும் இரண்டு வகை அளவீடு வைத்திருப்பது, ஏற்கனவே தெரிந்த விடயம் தான். மேற்குலக ஊடகங்கள் தற்போதைய ஜோர்ஜிய பிரச்சினை, புத்தின் தலைமையிலான இன்னாள் ரஷ்ய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டதாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்கின்றன. உண்மை மிகவும் சிக்கலானது.

 

"சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது, 21 ம் நூற்றாண்டின் துயரங்களுக்கு வழிசமைத்துள்ளது." என்று முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி புத்தின் சொன்ன போது, அவர் சோவியத் யூனியனை மீளகட்டமைக்க விரும்புவதாக மேற்குலகம் பரிகசித்தது. ஆனால் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைகள், புதிய யுத்தங்களை உருவாக்குகின்றன, என்பதையே அன்று புத்தின் எதிர்வு கூறியிருந்தார். சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஜோர்ஜியா ஒரு வருடத்துக்கேனும் சுதந்திரமான குடியரசாக இருந்தது. அப்போது உருவாகிய ஜோர்ஜிய தேசியவாதம், பேரினவாதமாகி அயலில் இருந்த அப்காசிய, ஒசெத்திய சிறுபான்மை இனங்களை படுகொலை செய்து, அவர்களின் நிலங்களை பலாத்காரமாக இணைத்தது. அப்போது நடந்த இனப்படுகொலையில் ஒசெத்திய சனத்தொகையின் எட்டில் ஒரு பங்கு அழிந்தது. இதனால் போல்ஷேவிக்குகளுடன் கூட்டுச் சேர்ந்த ஒசெத்தியர்கள், ஜோர்ஜியரை அடக்கி சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

 

ஆரம்பத்தில் அப்காசியா தனி சோவியத் குடியரசாக இருந்தது. பின்னர் அது ஜோர்ஜியாவுடன் இணைக்கப்பட்டது. தற்போது அங்கீகரிக்கப்படாத தனிநாடாக பிரிந்துள்ள அப்காசியா, தன் சொந்தக்காலில் நிற்கும் வல்லமையை பெற்றுள்ளது. அதற்கு மாறாக பூகோளரீதியாக பல பிரதிகூலங்களை கொண்ட ஒசேத்தியா, ஒன்றில் ஜோர்ஜியாவில் அல்லது ரஷ்யாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை. மேலும் தமது தாயகம் இரண்டாக பிளவுற்றிருப்பதாக (வடக்கு பகுதி ரஷ்யாவுடனும், தெற்கு பகுதி ஜோர்ஜியாவுடனும்) ஒசெத்தியர்கள் குறைப்படுகின்றனர். இருப்பினும் வரலாறு நெடுகிலும் ஜோர்ஜிய பேரினவாத தாக்குதல்களுக்கு முகம் கொடுத்த ஒசெத்தியர்கள், ரஷ்யாவுடன் சேர்ந்து இருப்பதையே விரும்புகின்றனர்.

 

அண்மைக்கால பிரச்சினை 1991 ம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்தது. அப்போது தான் சோவியத் யூனியன் உடைந்ததை பயன்படுத்தி சுதந்திர நாடாகிய ஜோர்ஜியா, அப்காசியா, ஒசேத்தியா ஆகியவற்றின் சுயாட்சி ஆட்சியதிகாரத்தை இரத்து செய்து, ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. அதன் எதிரொலியாக அப்காசியா, ஒசெத்திய விடுதலை இயக்கங்கள் தோன்றி, ஜோர்ஜிய படைகளுடன் சண்டையிட்டு, தமது பிரதேசங்களை மீட்டனர். அவர்களுக்கு ரஷ்யா ஆதரவளித்து வந்தது மட்டுமல்லாது, சமாதான பேச்சுவார்த்தைக்கு துணை புரிந்ததுடன், சமாதானத்தை நிலை நாட்டும் பொருட்டு, (ஐ.நா. ஆசீர்வாதத்துடன்) தனது படைகளை அனுப்பியது. ஆனால் அதற்கு முன்னரே, ஜோர்ஜிய இராணுவம், விடுதலைப்படைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்று ஓடிவிட்டதால்; அப்காசியா மற்றும் ஒசெத்தியாவில் வாழ்ந்து வந்த ஜோர்ஜிய மொழிபேசும் மக்கள் அடித்து விரட்டப்பட்டனர். இவர்கள் தற்போதும் அகதிகளாக ஜோர்ஜியாவின் பிற பகுதிகளில் 15 வருடங்களுக்கு மேலாக தங்கியுள்ளனர்.

 

பல வருடங்களாக கிடப்பில் இருந்த ஜோர்ஜிய பேரினவாதம் இன்றைய அதிபர் மிகையில் சாகாஷ்விலி பதவிக்கு வந்த பின்னர் மீள உயிர்த்தது. ஒரு சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த சாகாஷ்விலி, ஒரு தீவிர அமெரிக்க பக்தர். அமெரிக்காவில் கொலம்பிய பலகலைக்கழகத்தில் சட்டம் படித்தால் மட்டுமே அமெரிக்க விசுவாசியானாரா? அல்லது வேறு காரணம் உண்டா தெரியவில்லை. முன்னெப்போதும் இல்லாதவாறு, அமெரிக்காவின் ஆலோசனையும், நிதியும் ஜோர்ஜிய இராணுவத்தை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அவ்வாறு அமெரிக்காவினால்(போதாக்குறைக்கு இஸ்ரேலினால்) பயிற்சி அளிக்கப்பட்ட தனது இராணுவம், ரஷ்ய வல்லரசையும் எதிர்த்து நிற்கும் வலிமை வாய்ந்தது, என்று சாகஷ்விலி நம்பியதன் விளைவு தான், ஒசேத்தியா மீதான "முட்டாள்தனமான" இராணுவ சாகசம். ஒசெத்திய போருக்கு, ரஷ்யாவின் மீது பழி போடும் அமெரிக்க அரசு, தான் ஜோர்ஜியாவிற்கு மறைமுக தூண்டுதல் அளித்ததை மறைத்து வருகின்றது. ஜோர்ஜிய படைகள் சண்டையிடாது பின்வாங்கி விட்டதால், தற்போது மேற்கத்தைய ஊடகங்களை வைத்து ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

 

ஜோர்ஜியாவிற்கு இராணுவ பதிலடி கொடுப்பதற்கு, ரஷ்யாவுக்கு பல காரணங்கள் உள்ளன:

1. அப்காசியா மற்றும் ஒசேத்தியா தனி ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கிய போதும், அவற்றை அங்கீகரிக்கவில்லை. காரணம், ரஷ்யாவினுள் இருக்கும் பிற மொழிச்சிறுபான்மையினர் இதனை முன்னுதாரணமாக்கி தனி நாடு கேட்கக் கூடாது என்ற முன் எச்சரிக்கை உணர்வு.

2. ஜோர்ஜிய படைகளுக்கு அஞ்சி ரஷ்யாவுக்குள் ஓடும் ஒசெத்திய அகதிகள் எதிர்காலத்தில் தலையிடியை கொடுக்கலாம்.

3. சர்வதேச மட்டத்தில் செர்பியாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, கொசோவோவுக்கு சுதந்திரம் வழங்கிய தன்னிச்சையான செயல் ரஷ்யாவை ஆத்திரமடைய செய்துள்ளது. கொசோவோ சுதந்திர தனிநாடாக முடியுமானால், ஏன் மாற்ற நாடுகளால் முடியாது என்ற தார்மீக கேள்வி எழுவது இயற்கை.

4. தனக்கு அருகில் ஜோர்ஜியா என்ற குட்டி நாடு, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு இடம்கொடுப்பதுடன், நேட்டோவிலும் சேர விரும்புவது.

5. இதுவரை ரஷ்ய ஆதிக்கத்தில் இருந்த கஸ்பியன் கடல் பகுதி எண்ணை, எரிவாயு விநியோகம், வேறு வழியாக குழாய் போட்டு திசை திருப்பப்படுவது.

 

பொருளாதார வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும், ஏகாதிபத்திய போட்டி தனியாக பார்க்கப்பட வேண்டிய விடயம். சோவியத் யூனியன் காலத்தில் விருத்தியடைந்த எண்ணை, எரிவாயு அகழ்வு வேலைகள், மத்திய ஆசியா மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகளில் தான் அதிகம் இடம்பெற்றன. அதாவது அங்கிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் எண்ணெயும், எரிவாயுவும் குழாய்கள் மூலமாக ரஷ்யா சென்று, பின்னர் அங்கிருந்து தான் அனைத்து சோவியத் பகுதிகளுக்கும், கிழக்கு ஐரோப்பாவுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. சோவியத் யூனியன் உடைந்த பிறகும், இந்த குழாய்கள் மீது ரஷ்யாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. புதிதாக சுதந்திரமடைந்த அசர்பைஜான் தானே எண்ணையை சர்வதேச சந்தையில் நேரடியாக விற்கும் நோக்கில், அமெரிக்காவுடன் சேர்ந்து பாக்கு(அசர்பைஜான்)-திபிலிசி(ஜோர்ஜியா)- செய்ஹன்(துருக்கி) குழாய் அமைத்து மேற்குலகிற்கு ஏற்றுமதி செய்ய விரும்பியது. ஜோர்ஜியாவில் எண்ணை இல்லாத போதும், அந்நாட்டினூடாக குழாய் அமைக்கும் நோக்குடன் அமெரிக்கா, ஜோர்ஜிய அரசியலில் தலையிட்டு செல்வாக்கு செலுத்தியது. இதே போன்ற காரணத்திற்காக தான், அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்தது.

 

மேற்குறிப்பிட்ட உண்மைகள் யாவும், மேற்குலகிற்கு தெரியாத விடயங்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியளித்த விடயம் என்னவெனில், அமெரிக்கா போன்றே "உலக போலீஸ்காரன்" வேலை செய்ய கிளம்பி விட்ட ரஷ்யாவின் நடத்தை. ஒரு பக்கம் இது அமெரிக்கா நடந்து கொண்ட முறையின் எதிர்வினை என்பதை அவசர அவசரமாக மறைக்க வேண்டிய தேவையுள்ளது. மறுபக்கம் சோவியத் யூனியனின் மறைவுக்கு பின்னர், உலகில் ஒற்றை வல்லரசாக ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவுக்கு போட்டியாக, ரஷ்யா என்ற புதிய(அல்லது மீள உயிர்த்த) வல்லரசின் தோற்றம். இதனால்வருங்கால உலகநடப்புகள் தாம் எதிர்பார்த்த பாதையில் போகப்போவதில்லை என்ற கவலை. எதிர்பாராத அதிர்ச்சி தந்த விளைவாக, மேற்கத்திய ஊடகங்களே பனிப்போர் பற்றி, வல்லரசு போட்டி பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன.

http://kalaiy.blogspot.com/2008/08/blog-post_25.html