06242022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

சிற்றுர்

நெடுஞ் சாலை எனை அழைத்து
நேராகச் சென்று, பின்னர்,
இடையிலோர் முடக்கைக் காட்டி
ஏகிற்று ! நானோ ஒற்றை
அடிப்பாதை கண்டேன், அங்கோர்
ஆலின்கீழ்க் காலி மேய்க்கும்
இடைப்பையன் இருந்தான்; என்னை
" எந்தஊர்" என்று கேட்டான்.

புதுச்சேரி என்று சொல்லிப்
போம்வழி கேட்஧ன், பையன்
'இதைத்தாண்டி அதோ இருக்கும்
பழஞ்சேரி இடத்தில் தள்ளி
ஒதிச் சாலையோடு சென்றே
ஓணான் பச்சேரி வாய்க்கால்
குதிச்சேறிப் போனால் ஊர்தான்
கூப்பிடு தொலைவே' என்றான்!

பனித்துளி மணிகள் காய்க்கும்
பசும்புற்கள் அடர் புலத்தில்,
தனித்தனிஅ கலா வண்ணம்
சாய்த்திட்ட பசுக்கள் எல்லாம்,
தனக்கொன்று பிறர்க்கொன் றெண்ணாத்
தன்மையால் புல்லை மேயும்!
இனித்திடப் பாடும் பையன்
தாளம்போல் இச்இச் சென்றான்.

மந்தையின் வெளி அடுத்து
வரிசையாய் இருபக் கத்தில்,
கொந்திடும் அணிலின் வால்போல்
குலைமுத்துச் சோளக் கொல்லை,
சந்திலாச் சதுரக் கள்ளி,
வேலிக்குள் தழைந்தி ருக்கும்;
வெந்தயச் செடிக ளின்மேல்
மின்னிடும் தங்கப் பூக்கள்!

முற்றிய குலைப்ப ழத்தை
முதுகினிற் சுமந்து நின்று
'வற்றிய மக்காள் வாரீர்'
என்றது வாழைத் தோட்டம்;
சிற்றோடு கையில் ஏந்தி
ஒருகாணிப் பருத்தி தேற்ற
ஒற்றைஆள் நீர்இ றைத்தான்,
உழைப்பொன்றே செல்வம் என்பான்.


குட்டையில் தவளை ஒன்று
குதித்தது, பாம்பின் வாயிற்
பட்டதால் அது விழுங்கிக்
கரையினிற் புரளப் பார்த்த
பெட்டைப் பருந்து து஡க்கிப்
பெருங்கிளை தன்னிற் குந்தச்
சிட்டுக்கள் ஆலி னின்று
திடுக்கிட்டு மேற்ப றக்கும்!

இளையவள் முதிய வள்போல்
இருந்தனள் ஒருத்தி; என்னை
வளைத்தனள், 'கோழி முட்டை
வாங்கவா வந்தீர்?' என்றாள்.
விளையாட்டாய்ச் 'சேரி முட்டை
வேகாதே!' என்றேன். கேட்டுப்
புளித்தனள்; எனினும் என்சொல்,
'பொய்' என்று மறுக்கவில்லை!

" என்றேனும் முட்டை உண்ட
துண்டோ நீ" என்று கேட்டேன்.
"ஒன்றேனும் உண்ட தில்லை;
ஒருநாளும் உண்ட தில்லை;
தின்றேனேல் புளித்த கூழில்
சேர்ந்திடும் உப்புக் கான
ஒன்றரைக் காசுக் கென்றன்
உயிர்விற்றால் ஒப்பார்" என்றாள்.

சேரிக்குப் பெரிது சிற்று஡ர்,
தென்ன மா சூழ்ந்திருக்கும்;
தேர்ஒன்று, கோயில் ஒன்று
சேர்ந்த ஒர் வீதி, ஓட்டுக்
கூரைகள், கூண்டு வண்டி
கொட்டில்சேர் வீதி ஐந்தே;
ஊர் இது; நாட்டார்க்கெல்லாம்
உயிர்தரும் உணவின் ஊற்று.

நன்செய்யைச் சுற்றும் வாய்க்கால்
நல்லாற்று நீரை வாங்கிப்
பொன்செயும் உழவு செய்வோன்,
'பொழுதெலாம் உழவு செய்தேன்
என்செய்தாய்' என்ற பாட்டை
எடுத்திட்டான்; எதிரில் வஞ்சி
'முன்செய்த கூழுக் கத்தான்
முடக்கத்தான் துவையல்' என்றாள்.


http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm