06242022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

ஆறு

நீரற்ற ஆற்றுப்பாதை

இருபக்கம் மண்மே டிட்டும்,
இடைஆழ்ந்தும், நீள மான
ஒருபாதை கண்டேன், அந்தப்
பாதையின் உள்இ டத்தில்
உரித்தநற் றாழம் பூவின்
நறும்பொடி உதிர்த்த தைப்போல்
பெருமணல், அதன்மே லெல்லாம்
கதிரொளிப் பெருக்கம், கண்டேன்!

வழிப் போக்கு

மணல்சுடும்; வழிச்செல் வோர்கள்,
இறங்கியும் ஏறியும் போய்
அணகரை மேட்டின் அண்டை
அடர்மர நிழலில் நின்று
தணலேறும் தம்கால் ஆற்றிச்
சாலைகண் டூரைக் காண்பார்.
அணிநிலம் நடுவில் ஆற்றுப்
பாதை "வான்வில்" போல் தோன்றும்.

வெள்ளம் வருமுன்

வெப்பத்தால் வெதும்பு கின்ற
வெளியெலாம் குளிர்காற் றொன்று
தொப்பென்று குதிக்க, அங்கே
துளிரெலாம் சிலிர்க்கக் கண்டேன்.
எப்பக்கம் இருந்தோ கூட்டப்
பறவைகள் இப்பக் கத்துக்
குப்பத்து மரத்தில் வந்து
குந்திய புதுமை கண்டேன்.

வெள்ளத்தின் தோற்றம்

ஒலிஒன்று கேட்டேன். ஓஓ
புதுப்புனல்! பெரிய வெள்ளம்,
சலசல என்று பாய்ந்து
வரக்கண்டேன் தணல் நிறத்தில்
நிலவொத்த நிறம்க லந்து
நெடுவானின் சுடரும் வாங்கிப்
பொலிந்தது! கோடை யாட்சி
மாற்றிற்றுப் புரட்சி வெள்ளம்.

வெள்ளப் பாய்ச்சல்

பெருஞ்சிங்கம் அரைய வீழும்
யானைபோல் பெருகிப் பாய்ந்து
வரும்வெள்ளம், மோத லாலே
மணற்கரை இடிந்து வீழும் !
மருங்கினில் இருந்த ஆலும்
மல்லாந்து வீழும் ஆற்றில்!
பருந்து, மேற் பறக்கும்! நீரில்,
பட்டாவைச் சுழற்றும் வாளை!

வெள்ளத்தின் வரவறிதல்

கரையோரப் புலத்தில் மேயும்
காலிகள் கடமை எண்ணும்!
தரையினிற் காதை ஊன்றிச்
சரிசரி புதுவெள் ளத்தின்
திரைமோதும் ஒலிதான் என்று
சிறுவர்கள் செங்கை காட்டிப்
பெரியோரைக் கூவு கின்றார்;
பேச்சொன்றே ஒலியோ நீளம்!

வெள்ளத்தின் ஒளி அழகு

இருகரை ததும்பும் வெள்ள
நெளிவினில் எறியும் தங்கச்
சரிவுகள் !நுரையோ முத்துத்
தடுக்குகள்! சுழல்மீன் கொத்தி
மரகத வீச்சு! நீரில்
மிதக்கின்ற மரங்க ளின்மேல்
ஒருநாரை வெண்டா ழம்பூ!
உவப்புக்கோ உவமை இல்லை.

வெள்ளம் எனும் படைக்கு மரங்களின்வாழ்த்து

ஒரேவகை ஆடை பூண்ட
பெரும்படை ஒழுங்காய் நின்று
சரேலெனப் பகைமேற் பாயும்
தன்மைபோல் ஆற்று வெள்ளம்,
இராவெல்லாம் நடத்தல் கண்ட
இருகரை மரங்கள், தோல்வி
வராவண்ணம் நெஞ்சால் வாழ்த்தி
மலர்வீசும் கிளைத்தோள் நீட்டி!

உழவர் முயற்சி

ஆற்றுவெள் ளத்தைக் காணச்
சிற்று஡ரார் அங்கு வந்தார்!
போற்றினார் புதுவெள்ளத்தைப்!
புகன்றனர் வாழ்த்து ரைகள்!
காற்றாகப் பறந்து சென்று
கழனிகள் மடைதி றந்து
மாற்றினார் வாய்க்கால்! மற்றும்
வடிகாலை மறித்தார் நன்றே!

ஆற்று நடை

நோய்தீர்ந்தார்! வறுமை தீர்த்தார்,
நு஡ற்றுக்கு நு஡று பேரும்!
ஓய்வின்றிக் கலப்பை து஡க்கி
உழவுப்பண் பாட லானார்!
சேய்களின் மகிழ்ச்சி கண்டு
சிலம்படி குலுங்க ஆற்றுத்
தாய்நடக் கின்றாள் வையம்
தழைகவே தழைக என்றே!


http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm