06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

சமகால அரசியலில் பச்சோந்தி வேஷம் போட்ட ஒரு பாசிட்டே 'மாமனிதன்" சிவத்தம்பி

நாம் 'மாமனிதன்" என்று பட்டம் கொடுத்தமைக்காக மன்னிக்க வேண்டும். பட்டம் பதவிக்காகவே அன்றாடம் குலைத்து வாழும் அவரை, இதற்காக நாம் அவரை பெருமைப்பட சிறப்பிப்பது தவறானதல்ல. அவர் ஆசைப்பட்டு கடந்தகாலம் ழுழுக்க கட்டிப் பாதுகாத்து வந்த இந்த அரசியல் இலட்சியக் கனவை,

அவர் வாழும் போது கொடுக்க மறுப்பது அவரையே அவதிப்பதாகும். இந்த 'மாமனித"னான பச்சோந்தி தனது சொந்த நிலைக்கு ஏற்ப, அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் வானொலியில், 21.04.2006 அன்று அவர் மக்கள் விரோத பாசிச பேட்டி ஒன்றை வழங்கினார். அதை வீரகேசரி (23.04.2006) மறுபிரசுரம் செய்திருந்தது. இதை முன்னிலைப்படுத்தி புலிகளும், அதை எதிர்த்து புலியெதிர்ப்புக் கும்பல் தேனீயும் ஒரு விமர்சனத்தை முன்னிலைப்படுத்தினர்.

 

'மாமனிதன்" சிவத்தம்பி "புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்" என்கின்றார். இதை சிவத்தம்பி கூற, அதை புலிகள் முன்னிலைப்படுத்தியுள்ளனர். தமிழ் மக்களுக்கு எதிரான, தமது சொந்த அரசியல் நிலையை "மாமனிதன்" சிவத்தம்பியின் உதவியுடன் தமிழ் மக்களுக்கு எதிராகவே புலிகள் பயன்படுத்துகின்றனர். உண்மையில் இந்த குற்றச்சாட்டுக்களை முன்பு தம்முடன் முரண்பட்ட சில தனிநபர்கள் மேலானதாக காட்டி வந்த புலிகள் வரலாற்றில், முதன் முதலாக 'மாமனிதன்" சிவத்தம்பி அடியெடுத்துக் கொடுக்க, அதை மொத்த தமிழ் மக்கள் மேலானதான குற்றச்சாட்டாக மாற்றியுள்ளனர்.

 

புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் காரணம் என்பது 'மாமனிதன்" சிவத்தம்பியின் ஆய்வு முடிவு என்பதால், அதை புலிகள் முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப்படுத்துகின்றார்கள் என்பதால், உண்மையில் அவர்கள் கூறமுனைவது தமிழ் மக்களை எதுவுமற்ற வெறும் கேனப்பயல்கள் என்பதைத் தான்;. புலிகள் மீதான தடைக்கு புலிகளே காரணமாக இருக்கின்றனர். இது ஆய்வாளர் 'மாமனிதன்" சிவத்தம்பியின் அறிவுக்கு தெரியாமல் போய்விடுகின்றது. ஆனால் மக்களுக்கு இது மிக நன்றாக தெரிகின்றது. புலிகள் மீதான தடைக்கு, புலிகளின் மக்கள் விரோத செயல்களே குறிப்பான காரணமாக உள்ளது. ஏகாதிபத்தியம் தனது ஏகாதிபத்திய நோக்கில் தடை செய்யும் போது, மக்கள் நலனில் இருந்து அதைச் செய்யவதில்லை என்பது உண்மைதான். ஆனால் தடைக்கான காரணத்தை மக்கள் விரோத செய்லகள் மீது சுமத்துகின்றனர். அவர்கள் உலக மக்களுக்கு பயப்படுவதால், காரணத்தை தடைக்குரியவர்களின் சொந்த நடத்தையில் இருந்தே தேர்ந்தெடுக்கி;ன்றனர். இது பெரும்பாலான நேரங்களில் பொருந்திவிடுவதில்லை. இதனால் ஏகாதிபத்தியம் அம்பலமாகிவிடுகின்றது. ஆனால் புலிகள் விடையத்தில் அப்படி அல்லாது அது பொருந்திப் போய்விடுகின்றது.

 

இதற்கு மாறாக 'மாமனிதன்" சிவத்தம்பி கூற்றுக்கு கூட, பல்கலைக்கழகத்தில் பாசிட் என்று சிறப்பு பட்டம் கொடுக்கலாம். தமிழர் பரப்புரையை கைப்பற்றி வைத்திருப்பதே புலிகள். இதற்கு வெளியில் யாரும் மூச்சுக் கூட விடவே முடியாது. இதற்கு வெளியில் எல்லாவற்றையும் அழித்து, அவற்றுக்கு துரோக முத்திரை குத்தி அழிப்பது யார்? ஐயா சிவத்தம்பி இதன் மீதான உங்கள் ஆய்வு என்ன? 'என்னைப் போன்ற அப்பாவிகளைப் பிடித்து ஏன் கேள்வி கேட்க வேண்டும்?" என்று கூறி ஒன்றும் தெரியாத அப்பாவி மாதிரி நடித்து தப்பிவிடாதீர்கள். நீங்கள் அப்பாவிகள் அல்ல. மிக கைதேர்ந்த மக்களுக்கு எதிரான நயவஞ்சகர்கள். நீங்கள் எல்லாம் பாசிசத்தின் தூண்கள். நீங்கள் இல்லாமல் புலிகள் இல்லை. ஏன் கேள்வி கேட்டவர்களும், பதில் சொன்னவர்களும் இந்த அரசியலைத்தான் மறுபடியும் மறுபடியம் செய்கின்றனர். தடைக்குரிய பாசிச அரசியலை பாதுகாத்தபடி, தமிழ்மக்களின் நலன்களுக்கான அனைத்து பாதையையும் அடைத்து வைத்துள்ளனர். அன்று மாணவர்களாகிய நாம் உன்னை பல்கலைகழகத்தில் எதிர்கொண்டு பாசிசத்துடன் உனது கணக்கை நாம் தீர்த்த போது, புலிகள் ஒரு துண்டுப்பிரசுரம் மூலம் அதற்கு பதில் தந்தனர்.

 

அதில் அவர்கள் மாணவர்களின் கோரி;க்கையை சுட்டிக்காட்டி அவர்கள் என்ன கூறுகின்றனர்

'1.மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்.

2.மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்." என்ற கோரிக்கை "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்" என்று தமது சொந்த துண்டறிக்கையில் பெருமையுடன் கூறினர். இந்தக் கோரிக்கையை மாணவர்களாகிய நாம் முன்வைத்த போது, நீ மத்தியஸ்தராக வேஷம் கட்டி ஆடியபோது, இந்தக் கோரிக்கையை புலிகளுக்காக நீ ஏற்றுக் கொள்ள மறுத்தாய். இதனால் உனது மத்தியஸ்தத்தை மாணவராகிய நாம் நிராகரித்த போதே, உனதுநிலைக்கு ஆதரவாக "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்" என்று கூறி துண்டுப்பிரசுரத்தில் அடித்து அறிவித்தை நீ மறக்கலாம். ஆனால் உனது பாசிசத்தை நாங்கள் மறக்கவில்லை. அந்த பாசிசத்துக்கு பலரை தொடர்ச்சியாக நாம் இழந்தோம், இழக்கின்றோம். இதன் மீது உனக்கு எந்த சூடு சொறணையும் கிடையாது.

 

இப்படி உனது பாசிசம் மாணவர்களின் போராட்டங்களின் போதே தூக்கில் தொங்கியது. பல்கலைக்கழகத்தை ஏமாற்றி பணம் மோசடி செய்த ஊழல் அதைத் தொடர்ந்து அம்பலமானது. அந்த பணத்தை மீண்டும் பல்கலைகழகத்துக்கு நீ கட்டி பாவமன்னிப்பு பெற்றது மறந்திருக்காது என்று நம்புகின்றேன். மரவள்ளிகட்டை இழுத்தவனுக்கு மரணதண்டனை வழங்கிய ஊழல் ஒழிப்பு தேசியவாதிகள், உங்களைப் போன்றவர்களுக்கு ஏன் மரண தண்டனை வழங்கவில்லை என்று பல்கலைக்கழக மேடையில் நான் கேட்டேன். (புலிகளின் வதைமுகாமில் இருந்த தப்பிய பின்னான எனது உரையில் இதை தெளிவாக கூறியுள்ளேன். கேட்க - புலிகளில் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைக்கழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை) நீயும் அவர்களும் ஒன்றாக இருந்தீர்கள். பாசிட்டாகவே சமூகத்தை புணர்ந்து அழித்தீர்கள். இன்று மக்களைப் பார்த்து கூட்டாகவே குற்றம் சாட்டுகின்றீர்கள்.

 

மானம் கெட்டவர்களே! யாழ் மேலாதிக்க வக்கிரத்தில் உங்கள் மேலாண்மை போற்றப்படுவதில் இருந்து நீங்கள் வரலாற்றில் தப்பிவிட முடியாது. வரலாற்றை தீர்மானிப்பவர்கள் லும்பன்கள் அல்ல, மக்களே அதை மறந்து விடாதீர்கள். சமூக இருப்பின் எல்லாக் கூறுகளையும் அழித்தொழித்த பின், உண்மை இது தான் என்று 'மாமனிதன்" சிவத்தம்பி மூலம் புலிகள் வேடிக்கையாகவே கருத்துரைக்கின்றனர். சமூக இருத்தல் எல்லாம் பாசிசமான பின், துணிவுடன் உன்னால் புலம்ப முடிகின்றது. உலகமக்களுக்கு தமிழ் மக்களின் நிலையை கூறுவதற்கும், விளக்குவதற்கும் உரிய அனைத்து சமூகக் கூறுகளையும் கிள்ளியெறிவதே தேசிய அரசியலாகவுள்ளது. சோழ மன்னனின் கொடுங்கோன்மைபற்றி ஆய்வு செய்யும் சிவத்தம்பிக்கு, நிகழ்கால சோழக் கரிகாலனைத் தெரிவதில்லை. யாருக்கு கதை சொல்ல முனைகின்றீர்கள். தனது வாழ்வின் முதிர்வில் கூட உண்மைகளை மக்களுக்கு சொல்ல முடியாத ஒரு பச்சோந்தி ஆய்வாளராக, பகட்டாக ஒரு 'மாமனித" பாசிட்டாக வாழ்வதில் நீங்கள் பெருமைப்படலாம். ஒரு 'மாமனிதன்" பட்டத்துக்காக மக்களின் முதுகிலும் குத்தி துரோகம் செய்வது தான் இவர்களின் அரசியல் பிழைப்புத்தனம்.

 

இவர் பற்றி விமர்சனம் செய்யும் தேனீ எழுத்தளார் "அவசரப்பட்டு தனது அடையாளத்தினை தொலைத்த அந்த பேராசிரியர்." என்று அந்த புலியெதிர்ப்பு குஞ்சு அழுகின்றது. நாங்கள் எமது பச்சோந்தி தனத்துக்கு ஏற்ப, எப்படி எல்லாம் உங்களை உங்கள் வழியில் கனவு கண்டோம். இப்ப செய்தீட்டிங்களே என்று புலம்பகின்றனர். எதை 'அவசரப்பட்டு" இழந்தார்? எந்த அடையாளத்தை அவர் இழந்தார்? அவரிடம் நீங்கள் நம்பிய அந்த அடையாளம் தான் என்ன? அந்த மக்கள் நலம் தான் என்ன? இன்று, எப்படி ஐயா! அந்த அடையாளத்தை தொலைத்தார்? சிவத்தம்பிக்கு என்ன அடையாளம்; உண்டு? விமர்சகரே! அர்ச்சுனனே! அவசரப்படாத அவரின் சமகால அரசியல் மீதான அவரின் ஆய்வு என்ன? உங்கள் ஆய்வு என்ன? ஒரு பச்சோந்திக்குரிய, ஒரு பாசிட்டுக்குரிய அவசரப்படாத புத்திஜீவித்தனம். நழுவி பிதற்றும் கருத்துகள். இது எல்லாம் பாசிசத்துக்கே உதவுகின்றது. அரசியலில் பச்சோந்தியான சிவத்தம்பியின் ஆய்வுகள், கருத்துகள் மனித இனத்தினை விபச்சாரத்துக்கே வழிகாட்டுகின்றது. சிவத்தம்பி செய்வது எல்லாம், தான் மரணமாகினால் 'மாமனித" பரிசை பிரபாகரன் வழங்கவேண்டும் என்ற அற்ப இழிந்து போன நப்பாசையும், புலியல்லாத தளத்தில் தனது கருத்துக்களை இடதுசாரிய வகைப்பட்டதாக காட்டுகின்ற ஒரு அங்கீகாரமே அவரின் கனவாகி வாழ்வாகவுள்ளது. இதை நோக்கி கருத்துக்களை சளையாது முன்வைத்து, அங்குமிங்குமாக வேஷம் காட்டுகின்றார்.

 

சிவராம் பற்றி எனது கட்டுரைக்கு
'.ஒரு பச்சோந்திக்கு, சந்தர்ப்பவாதிக்கு, பிழைப்புவாதிக்கு, பினாமிக்கு, கொலைகாரனுக்கு, இரட்டை வேடதாரிக்கு 'மாமனிதர்" என்ற கௌரவம் விதிவிலக்கின்றி சிறப்பாகவே பொருந்துகின்றது " என்று நான் தலையங்கமிட்டேன். இதே கருத்துப்பட சிவத்தம்பிக்கும் கூறமுடியும்;. ஒரு பாசிச புத்தியீவியாக, புலிகளின் எல்லா மனிதவுரிமை மீறலுக்கும் இசைந்து இணங்கி வாழும் ஒரு புத்திஜீவியாக, சாரைப் பாம்பாக அங்குமிங்கும் நெளிந்து புரண்டு மனித இனத்தை அழிக்க துணைபோனவர் தான் இந்த 'மாமனிதன்" சிவத்தம்பி.

 

மனிதநேயமற்ற இவர், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கியொடுக்கும் ஒரு புத்திஜீவியாக சமகாலத்தில் வாழ்ந்தபடி, அதற்கு துணை போனவர். மக்களுக்காக வாழும் எந்த சமூக ஆய்வாளனும், உண்மையாக இப்படி வாழமுடியாது. அதைவிட மடிந்து போவது மேல். கடந்தகாலம் பற்றிய ஆய்வுகள் கூட, பல்கலைக்கழக மாணவர்களின் கல்விசார் ஆய்வுகளை சார்ந்து அங்குமிங்கும் திருடியவை தான். இதை சமகாலம் பற்றி அவரின் மதிப்பீடுகள் தெளிவாக அம்பலப்படுத்துகின்றன. அவரின் நூல்கள் ஒடுக்கப்பட்ட வர்க்க சார்பானவையல்ல. மாறாக யாழ் பூர்சுவா கண்ணோட்டம் கொண்டதும், அதிலும் இடது பிரிவைச் சோந்தவைதான்.

 

இந்த ஆய்வு ஐன்மங்கள் தாம் வாழும் காலத்திலான சமூக நெருக்கடிகள் மீது, படுபிற்போக்கான பாத்திரத்தை வகித்து வருகின்றார்கள். அன்றாடம் சாதாரணமாக நேர்மையாக கருத்துரைப்பவர்கள், என் சாதாரணமாக தமக்குள் உரையாடியவர்கள் கூட உண்மையை உரைத்ததாக கொல்லப்படுகின்றனர். ஆனால் 'மாமனிதன்" சிவத்தம்பி போன்றோர் இடதுசாரி குஞ்சம்கட்டியபடி, எந்த நெருக்கடியுமின்றி அரசியலில் விபச்சாரம் செய்தபடி வாழ்கின்றனர் என்றால், எப்படிப்பட்ட பொறுக்கிகளாக இருக்கமுடியும். மானம்கெட்டு, இழந்து போன தமது வாழ்க்கையில், தாம் நேர்மையாக வாழ்வதாக நடிக்க முனைகின்றனர். தமக்கு சில விமர்சனங்கள் உண்டு என்று குஞ்சம் கட்டி காட்டுவதன் மூலம், தமது பாசிச அரசியல் மூலங்களையே பாதுகாக்க முனைகின்றனர்.

 

இப்படி அரசியல் பொறுக்கிகளாக வாழ்ந்தபடி இந்த மனித ஐன்மங்கள் "புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்" என்கின்றனர். எல்லாம் ஒய்ந்த பின்பு மக்களை பார்த்து குற்றம் சாட்டுகின்றனர். என்ன துணிச்சல். மக்களை வாய் பேசமுடியாத ஊமைகளாக்கிய நீங்கள், இன்று மக்களைப் பார்த்து குற்றம் சாட்டுகின்றீர்கள். உங்கள் பாசிச அரசியல் தான் இந்த நிலைமைக்கு காரணம். மக்கள் வேறு புலிகள் வேறு என்று உண்மையைக் கூட புரியாத அரை மக்கு, இப்படிக் கூறுகின்றது. உயர்சாதிய யாழ் பூர்சுவா சமூகத்தின் புத்திஜீவியாக, சமூக ஆய்வாளரான உங்கள் சமூக கவுரவங்களை பாதுகாத்துக் கொண்டு, அந்த சமூகத்தின் இழிந்து வாழ்கின்ற மக்களின் மேல் பாசிசத்தின் பாதுகாப்பில் துணிந்து குற்றஞ்சாட்ட முடிகின்றது. மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக நடத்தும் உங்கள் குறுந்தேசியம் தான், அனைத்துக்குமான சமூகக் காரணமாகும். காரணங்களை மக்கள் மீது குற்றம் சுமத்தும் துணிவு, பாசிசத்தின் மற்றொரு வடிவம். கெடுகெட்ட கயவாளிப்பயல்கள் மட்டும்தான் இப்படிக் கூறி குற்றம்சாட்ட முடியும். இந்தநிலைமைக்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். அது சுயவிமர்சனம்.

 

நீங்கள் செய்யதெல்லாம் என்ன என்பதை, இன்று இருந்து கடந்தகாலம் முழுக்க திரும்பிப் பாருங்கள். மக்களுக்காக நீங்கள் குரல் கொடுத்தீர்களா? அதற்காக போராடினீர்களா? அப்படி போராடியது என்ன? என்னதான் இழப்பு உங்களுக்கு ஏற்பட்டது? யாழ் மேட்டுக்குடியாக ஒரு மயிர் கூட புடுங்கப்படாது வாழ்ந்த உங்கள் நரகல் வாழ்க்கை, தமிழ் மக்களின் இரத்தத்தின் மேலாகவே செழித்து வளர்ந்தது. பாரிய குற்றத்தை புலிகள் மட்டுமல்ல, அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நீங்களும் அதற்கு பொறுப்பாளிகள் தான். குற்றவாளிகள் அவர்கள் மட்டுமல்ல நீங்களும் தான். நீங்கள் இல்லாமல் அவர்கள் இல்லை.

 

உங்களைப் போன்ற பாசிசக் கோட்பாட்டு ஆதரவின்றி, அவர்கள் எதையும் செய்யவில்லை. 1987 இல் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் போது நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு, நான்தான் முதலமைச்சார் என்று கனவு கண்டு நீங்கள் பலருக்கும் புலம்பிய போதே, உனது பாசிசத்தின் கோரமுகங்கள் அலங்கோலமாக நெளிந்ததை பலரும் அறிவர். இன்று நீங்கள் துணிந்து மக்களைப் பார்த்து குற்றம் சாட்ட முடிகின்றது என்றால் என்ன துணிச்சல்.

 

இதை புலிகள் தமது பாசிச செயலை நியாயப்படுத்த, முன்னிலைப்படுத்தி முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கின்றனர். என்ன அரசியல் ஒருமை, ஒற்றுமை. குற்றவாளிகள் எல்லாம் ஒன்றாக கைகோர்த்து நின்று, மக்களை மீண்டும் மீண்டும் எட்டி உதைக்கவே கூட்டாக முனைகின்றனர்.

 

இப்படி ஒரு பாசிட்டாக தன்னை இனம் காட்டும் 'மாமனிதன்" சிவத்தம்பி 'புலம்பெயர் வாழ் தமிழர்களின் பாரிய ஒத்துழைப்பை எவருமே மறுப்பதற்கில்லை. புலம்பெயர் வாழ் தமிழர்கள் மீதான தமிழீழத் தேசியத் தலைமையினது மதிப்பை புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் அனைவருமே அறிந்த ஒன்றாகும்." என்ன புலிவாதம். அன்று பாசிச கவிஞர் புதுவை இரத்தினதுரை பண 'மதிப்பை" புரிந்து கொள்ளாது, போராட்ட 'மதிப்பை" புரிந்து கொண்ட போது பாடினார்

 

"..பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல

தாயகம் தீயல் எரிகையில் விட்டு

விமானத்தில் ஏறி பறந்தவர்

வீரம் இல்லாதவர் நாயிலும் கீழானவர்

சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்

சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால்

விட்டுப் பறந்த கோழைகள் நாளையே

வீடு திரும்பினால் காறியே துப்புவோம்

கப்பல் ஏறி ஜெர்மன், பிரான்ஸ் உடன்

கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்

அப்பு ஆச்சியை கவணம் கவணம் என்று

அங்கேயிருந்துமே கடிதம் எழுதினர்

தப்பிப் பிறந்தவர் தம்பியும் வாவென

தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்

துப்புக் கெட்டவர் அகதி லேபலில்

தூசு தட்டியே காசு பிழைத்தனர்

ஓடியவர் ஓடட்டும் ஊழைச் சதையர்

எல்லாம் பேடியர்கள் ஓடட்டும் போனவர்

போகட்டும் பாய்விரித்தால் போதும்

படுதுறங்கும் இவர்கள் எல்லாம் நாய்சாதி

நாய்சாதி ஓடி நக்கில் பிழைக்கட்டும்

தப்பிப்பறந்து தமிழன் என்று சொல்ல வெட்கி

கப்பலிலே ஏறி கனடாவில் நக்கட்டும் .."

இப்படி எழுதிய பக்கத்தையே விமானமேறி மேற்கு வந்த போது கைவிட்ட கவிஞர் அதை எப்படிக் கவிழ்க்;கின்றார். ~~கவிதை எழுதுவதற்காக அந்த நேரத்தில் நான் பெற்றுக் பெற்றுக் கொண்ட மன உணர்வின் வெளிப்பாடு.... அப்போது போராளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த சமயத்தில் பெருவாரியான இளைஞர்களின் இடம்பெயர்வு எனக்குக் கோபத்தைத் தந்தது. அதே புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்போது புகலிட நாடுகளிலிருந்து உணர்வு குன்றிவிடாமல், எமது போராட்டத்தைத் தாங்குவதில் பெரும் பலமாக இருக்கின்றார்கள்." என்றார். அன்று 'நக்கி" 'பிழைத்த" 'நாய்சாதி", 'நக்கி"ப் 'பிழைக்க" 'பாய்விரி"த்த விபச்சார பணத்தின் 'மதிப்பு" தெரிந்த பின்னால் கவிதையின் தகட்டையே மாற்றிப் போடுகின்றார்.

 

இன்று 'மாமனிதன்" சிவத்தம்பியும் அப்படியே கவிஞர் வழியில் அசகுபிசகு பிரதிபலிக்கின்றார். புலம்பெயர் சமூகம் பற்றிய புலித் தலைமையின் இன்றைய 'மதிப்பு" எப்படி உருவானது. புலம்பெயர் தமிழனின் பணத்தில்தான், அவன் பற்றிய 'மதிப்பு" உருவானது. பணம் பல்லிளிக்கும் போது, பேய்களும் சாத்தான்களும் கூட கூடிநின்று விபச்சாரம் செய்கின்றது. என்ன 'மாமனிதன்" சிவத்தம்பி உனக்கு இது விதிவிலக்கல்லவே!

 

'மாமனிதன்" சிவத்தம்பி கூறுகின்றார் "உயிரைக் கொடுத்த மாவீரர்களுக்கு உயிரைக் கொடுக்க உள்ள போராளிகளுக்கு உந்துசக்தியாக - உயிரோட்டமாக புலம்பெயர் தமிழர்கள்தான் இருக்கிறார்கள்." ஆகா என்ன அருமையான ஆய்வு. ஏழை எளிய குழந்தைகளின் இறப்புக்கு, புலம்பெயர்ந்தவனின் பணம் தான் காரணம் என்பது சொல்லாத மற்றொரு செய்தி. இதை எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகத்தின் மீதான ஒரு குற்றச்சாட்டாக புலிகள் வைத்தாலும் ஆச்சரியமல்ல. பேராசிரியர் தகட்டை மாற்றி சொன்னாலும் சொல்வார். புலம்பெயர் தமிழன் புலம்பெயர் நாட்டில் வாழ்வதற்காக யுத்தத்தை பணம் கொடுத்து நடத்தினான் என்று சொன்னாலும் சொல்வார். போகிறபோக்கில் இது நடக்கும். தற்போதைக்கு தேசிய உணர்வு என்பது புலம்பெயர்ந்தவன் பணம் கொடுத்தல் தான் என்பது 'மாமனிதன்" சிவத்தம்பியின் முடிவு.

 

இந்த பாசிட் தனது ஆய்வில் கூறுகின்றார் 'இப்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் முதிர்வடைந்து சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்." என்கின்றார். முதிர்ச்சி அடைந்து நிற்கின்றது என்கின்றார் "மாமனிதன்" சிவத்தம்பி. இறுதி போராட்டம், இந்தா தமிழீழம் வரப்போகின்றது, இறுதி யுத்தம்;. என்று காட்டுகின்ற அதே பூச்சாண்டியைத்தான் 'மாமனிதன்" சிவத்தம்பியும் பிரதிபலிக்கின்றார். 'மாமனித"னின் ஆய்வு 'முதிர்வடைந்து" நிற்கின்றது என்கின்றார். அதுவும் "சர்வதேசத்தின்" முன் நிற்கின்றது என்கின்றார். 'அதைப் புரிந்து கொள்ள வேண்டும்." என்கின்றார். புலியாகவே சிந்தித்து நுட்பமாக ஒவ்வொரு சொல்லிலும் பிரதிபலிக்கின்றார். அதுசரி யார் இதை புரிந்து கொள்ள வேண்டும்; என்கின்றார்கள்? முட்டாள் மக்களே! உங்களைப் பார்த்து தான் அவர் கூறுகின்றார். என்னைப் போல் புலிகளை நம்புங்கள், விசுவாசியுங்கள் என்கின்றார். இது கிறிஸ்து (கடவுள் பிறக்கவுள்ளார்) வரார், இந்தா வாரார் என்று கூறி, வயிறு வளர்க்க மதம் வளர்க்கும் பிரச்சாரத்தையே அடிப்படையாக கொண்டது. 'மாமனிதன்" சிவத்தம்பி அதையே செய்கின்றார்.

 

ஐயா "மாமனித" ஆய்வாளரே, புலிகளும் கூட இப்படித்தானே கூறுகின்றனர். மக்களை மந்தைகளாக இருந்தபடி, இதை புரிந்து கொள்ளக் கூறுகின்றனர். வெறும் முட்டாள் கூட்டமாக, மரமண்டைகளாக இதை ஒப்புவிக்கும் வகையில் எங்கும் இதே புலம்பலே வைக்கப்படுகின்றது. நீங்களும் அதையே வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போல் குத்தி சொல்ல முனைவது ஏன்? உங்களையே நீங்கள் தேசியப் பற்றாளனாக காட்டி நடிக்கும் இந்த வேஷங்கள் எதற்கு? தமிழ் மக்களின் தேசியத்தை காயடித்துவிட்டு, வேள்விக்கு மக்களை வளர்க்கும் உங்கள் வக்கிரத்தை, மனித இனம் அங்கீகரிக்காது. தேசியம் என்று கூறுவதால், எதுவும் நடந்துவிடாது. 'முதிர்வடைந்து நிற்கின்றது" என்று கூறுவதால் 'சர்வதேசத்தின் முன்" நிற்கின்றது என்று கூறுவதன் மூலம், தமிழ் மக்களை முட்டாளாக்க 'மாமனிதன்" பேராசிரியரின் மண்டை தீவிரமாக முனைகின்றது.

 

இதை நிறுவமுடியாத அங்கலாய்ப்புடன் கூடிய அரிப்பு ஏற்படுகின்றது. "தமிழீழத் தேச விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு உள்ளது. சர்வதேசத்தின் நியாயக் கோட்பாடுகளுக்கும் நிர்பந்தங்களுக்குள்ளும் உள்ளாகி உள்ளது." என்றும் புலம்புகின்றார். ஐயா "சர்வதேசத்தின் நியாயக் கோட்பாடுகளுக்கும் நிர்பந்தங்களுக்குள்ளும்" உள்ளாகி உள்ளது என்கின்றிர்களே, உங்கள் நியாயக் கோட்பாடு என்ன? அதைச் சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு ஏன் மூக்கை இழுத்து புலம்பிக் காட்டுகின்றீர்கள். மானம்கெட்ட அரசியல் பிழைப்பு நடத்தும் விபச்சாரம், உங்களுக்கு இந்த வயதிலும் தேவைதானோ? தமிழ் மக்களின் ஒரு துரோகியாக, மக்களையே காட்டிக் கொடுத்த ஒரு எட்டப்பனாக, பதவிக்கும் பட்டத்துக்கும் ஆசைப்பட்டு குலைப்பதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை.

 

சர்வதேச நியாயக் கோட்பாடுகளை இந்த மனித ஐன்மம் சர்வதேச மனித சமூகத்திடம் இருந்து கண்டு கொள்ளாத ஒரு வலது பாசிட்டாகவே பிரதிபலிக்கின்றார். சர்வதேச ஏகாதிபத்திய கண்ணோட்டம், சர்வதேச நியாயக்கோட்பாடு எதையும் வைப்பதில்லை. இதையே நியாயக் கோட்பாடாக காணும் கண்ணோட்டம், 'மாமனித"ரின் இடதுசாரி வேஷத்தையே நிர்வாணமாக்குகின்றது. புலிகள் என்ற வலதுசாரிய பாசிசத்ததை 'தமிழரின் தமிழீழ விடுதலைப் போராட்டம் முதிர்வடைந்து" என்று கூறி நியாயப்படுத்துகின்ற அரசியல் வக்கிரத்தை பிழைப்புவாதிகள் மட்டும் தான் இப்படி உரைக்கமுடியும்.

 

'மாமனிதன்" சிவத்தம்பி கூறுகின்றார் "சமாதானம், அமைதிப் பேச்சுக்கள் என்ற அழுத்தங்களினூடே தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிற வேளையில் தாயகத்தில் நமக்கிருக்கிற வலிமை சர்வதேச தளத்திலும் இருக்க வேண்டும்." என்கின்றார். வலதுசாரிய பாசிசத்தில் மக்களுக்கான வாழ்வு பற்றி தன்னைப் போல் பேசக் கூடாது என்பதையே, சிவத்தம்பியின் கூற்று கூற முனைகின்றது. சிங்களப் பேரினவாதம் எதை செய்கின்றதோ, அதையே செய்கின்ற அதே அரசியல் வக்கிரம். வலிமை என்கின்றீர்களே, அது என்ன ஐயா? உங்கள் நியாயக் கோட்பாட்டிலே சொல்லுங்களேன். குறைந்த பட்சம் தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையைக் கூட, அந்த மக்களுக்கு எமது போராட்டம் அங்கீகரிக்கவில்லை. பின்பு எப்படி ஐயா, வலிமை எங்கிருந்து வரும்? தாயக மக்களிடம், சொந்த வாழ்வின் மீது எந்த வலிமையும் கிடையாது. அவர்களின் தேசிய பொருளாதாரம் அனுதினமும் தேசியம் பேசுபவர்களால் பேரினவாத்துக்கு இணையாகவே அழிக்கப்படுகின்றது.

 

அது சரி வலிமையுள்ள தாயகத்தில், அதாவது எமது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்கள் தான் என்ன? அதையாவது அவர்கள் வலிமையுடன் சொல்லுகின்றார்களா? அது என்னவென்று கூட அவர்களுக்கு தெரியுமா? ஆய்வாளரே! 'மாமனித"னே! கூறுங்கள் அதை. 'தாயகத்தில் நமக்கிருக்கிற வலிமை" என்று உரிமையுடன் அதுவாகி கூறும் நீங்கள், அந்த வலிமைதான் என்ன என்று சொல்லுங்கள். ஒரு தெருப்பொறுக்கியைப் போல் கூறாதீர்கள். ஒரு தெரு ரவுடியைப் போல், வெட்டியும் சுட்டும் போடும் வலிமையைத்தானே, நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.

 

மக்கள் வலிமையுடன் இருக்கின்றார்களா? பயந்து ஒரு கோழையாக ஊமையாக நசிந்து இழிந்து கிடக்கும் மக்களைப் பார்த்து, அந்த இழிநிலையைத் தான் வலிமை என்கின்றார் "மாமனிதன்". சரி இந்த மக்கள் தமது போராட்டத்தின் தர்க்க நியாயத்தை புரிந்து இருக்கின்றார்களா? வெட்டியும் சுட்டும் போடுகின்றவர்கள், தேசியத்தை அதன் தர்க்க உள்ளடகத்தைப் புரிந்து இருக்கின்றார்களா? ஒரிரு சொற்களுக்குள் எல்லாவற்றையும் உள்ளடக்கி புணர்ந்து போடுபவர்களை வலிமையானவர்கள் என்கின்றீர்களே, எப்படி ஐயா உங்களாலே இப்படி புணர்ந்து சொல்லமுடிகின்றது! இங்கு வலிமை என்பது வக்கிரமான மக்கள் விரோதத்தில் மட்டும் பிறக்கின்றது. சமூகத்தைவிட்டு விலகிய லும்பன் தளத்தில் தான், இவை வலிமையாக மக்களின் அடிமைத்தனத்தின் மீது கட்டமைக்கப்படுகின்றது. இது கொலை கலாச்சாரத்தில் ஆளுமை பெறுகின்றதே ஒழிய, மக்களை வென்றெடுத்த மக்கள் வலிமையல்ல.

 

இந்த வலிமையை நியாயப்படுத்தும் 'மாமனிதன்" கூறுகின்றார் 'கொட்டும் பனியிலும் உறங்கா இரவுகளிலும் கடன்பட்டு செந்நீரைப் போல் உடல் உழைப்பைச் சிந்தி அள்ளி அள்ளி கொடுத்து அரும்பாடுபட்டு வளர்த்த விடுதலைப் பயிரின் அறுவடைக்கு முன்னராக புலம்பெயர் தமிழர்களின் பரப்புரை பலவீனம் எனும் களை இருக்கிறதுதான் என்பது புலம்பெயர் தமிழரது மனசாட்சிக்குத் தெரியும்." என்கின்றார். களை அகற்ற கோருகின்றார். எப்படி ஐயா அது சாத்தியம். 'புலம்பெயர் தமிழர்களின் பரப்புரை பலவீனம் எனும் களை" என்பது படுகொலைகளால் முடியாது. தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கை மீது, சமூகத்தை வென்று எடுத்தலில் தங்கியுள்ளது. சமூகம் தானாக தனக்காக போராடுவதில் தங்கியுள்ளது. நீதியானதும் நியாயமானதுமான போராட்டத்தில் யாரும் கொச்சைப்படுத்த முடியாது. யாரும் தவறாக விளக்கிவிடவும் முடியாது. பரப்புரை என்பது நீதி நியாயங்கள் மீது மட்டும் தான் சாத்தியமானது. உண்மையற்ற நியாயமற்ற கொலைகார அரசியலால் சாத்தியமற்றது. எது சாத்தியம் என்றால், உங்களைப் போன்ற பச்சோந்திகளுக்கு பதவிகளும் பட்டங்களும் பரிசுகளும் காத்திருக்கின்றது.

 

இதற்காகவே அனுதினமும் முக்கால் உறுஞ்சி அலையும் உங்களைப் போன்றோர், நிலைமையை ஆய்வு செய்யும் போது, "இலங்கையில் தமிழரது நிலைப்பாடு பற்றி வெளிநாடுகளில் எடுத்துச் சொல்லப்பட்டு வந்த சில பரப்புரைகள்தான் கனேடியத் தடைக்குக் காரணம்." என்கின்றது. குற்றத்தை சிலரின் மீது போடுகின்ற புலி அரசியலாகவே இது பிரதிபலிக்கின்றது. நாங்கள் காரணமல்ல என்ற வக்கிரம், இங்கு பதவி பட்டங்களின் பின்னால் ஒட்டிக் கொள்ளுகின்றது. 'சில பரப்புரைகள் காரணம்" என்றால், அவை என்ன? அதை புலிகள் செய்யவில்லையா? நீங்கள் அதை ஆதரிக்கவில்லையா? ஐயா மானம் வெட்கத்தை விட்டு, அதையும் சொல்லுங்கள்? உங்கள் அரசியல் போக்கிரித்தனத்தையே இப்படி ஆய்வாக வெளியிடுவது அருவருக்கத்தக்கது. இதற்குள் ஆய்வாளர், பேராசிரியர், என்று மானம் கெட்ட பட்டங்கள் வேறு. இதனுடன் 'மாமனித" பட்டத்துக்கு விடாக்கண்டராக அலையும் துதிபாடித்தனம் வெட்கக்கேடானது.

 

"புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைப் பலவீனம் எனும் களை" அகற்றக் கோருதல் என்பது, அதாவது பாசிட்டுகளின் மொழியில் களை அகற்றல் என்பது, கொலைக்கலாச்சாரம் தான். காலாகாலமாக தேசத்தில் தமிழ் மண்ணில் களை அகற்ற செய்த பரப்புரை என்பது கொலைகள் தான். இதே போன்று கொலைகளைத்தான் புலம்பெயர் நாட்டில் நடத்தி, களை அகற்றக் கோருகின்றார் 'மாமனிதன்" சிவத்தம்பி. நடத்துங்கள். களை அகற்றல் பல ஆயிரம் உயிர்களை காவு கொண்ட வரலாற்றின் தொடர்ச்சியில் முடிவின்றி தொடருங்கள். அப்போது தமிழீழம் பிறக்கும் என்று சிவத்தம்பி போல் நம்புங்கள்.

 

இங்கு பரப்புரை செய்வது பற்றி, ஆய்வாளர் சிவத்தம்பி புலிகள் போல் சிந்தித்து தனது வலதுசாரித்தனத்தையே வெளிப்படுத்துகின்றார். "தமிழ் உரிமைப் போராட்டம் பற்றிய ஒரு கருத்தாதரவு தேடும் கூடம் - கருத்தாதரவு தேடுகிற ஒரு தொழில்முறையாளர்களை- மருத்துவர்கள் - பொறியியலாளர்கள் - வல்லுநர்களைக் கொண்ட குழுமம் கனடாவில் இயங்கவில்லை. தமிழ் மக்களால் சிங்கள மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று கனேடிய அரசாங்கத்திடம் சொல்வதற்கான வலுவான சிங்களக் குழு கனடாவில் உண்டு." என்கின்றார். அதாவது மக்கள் போராட்டம் பற்றி இழிவாக பார்க்கும் கண்ணோட்டம் இது. மக்கள் தான் போராட வேண்டும் என்பதை மறுக்கும் புலிகள் கோட்பாட்டாளராகவே தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றார். அதை நடைமுறைப்படுத்த புலிகளின் தனிநபர் பயங்கரவாத பாணியில் அதாவது ஒரு கொலைகாரக் கும்பல் போன்று ' எல்லா விடயமும் நன்கு அறிந்த 4 பேர் இணைந்து ..." செய்யலாம் என்கின்றார்.

 

படுபிற்போகான மக்கள் விரோத புலிக்கோட்பாடு இது. இங்கு மக்கள் பணம் கொடுத்தால் சரி. மக்கள் பற்றி இந்த 'மாமனித"னுக்கு எந்த அக்கறையும் கிடையாது. நாலு படித்தவர்கள், அதாவது தன்னைப் போன்றவர்கள் நன்கு மக்களை ஏமாற்றத் தெரிந்த அரசியல் பொறுக்கிகள், உலக அரசுகளை ஏமாற்ற முடியும் என்பதே இவரின் விளக்கமாகும். பேரினவாதிகள் அப்படி நாலு பொறுக்கிகளை வைத்திருப்பதாகவும், அதை போல் நாங்களும் பொறுக்க வேண்டும் என்கின்றார் பேராசிரியர். ஒரு நியாயமான போராட்டத்தை நியாயமாக சொல்ல நாலு நாய்கள் தேவையில்லை, மாறாக மக்கள் சொல்வார்கள். மக்களுக்கு எதிரான ஒரு குழுவாக புலிகள் இருப்பதால் இதை நியாயப்படுத்த முடியாது போகின்றது. பதவி வேட்டைகாரர்களும், பட்டத்துக்கு அலைபவர்களும், பொறுக்கித் தின்பவர்களும் புலிகளில் தூண்களாகி நிற்கின்ற ஒரு நிலையில், எப்படித் தான் எமது மக்களின் நியாயமான போராட்டத்தை உலகுக்கு சொல்லமுடியும். சொந்த மக்களுக்கு நியாயத்தை சொல்ல முடியாது மிரளுகின்ற இந்த பச்சோந்திகள், உலகுக்கு சொல்ல என எதுவுமிருப்பதில்லை.

 

நேர்மையாக மக்கள் நலனை முன்னிறுத்த முடியாது மிரளுகின்ற ஒரு நிலையில் அலட்டுவது தான் நிகழ்கின்றது. இதுவே 'என்னைப் போன்ற அப்பாவிகளைப் பிடித்து ஏன் கேள்வி கேட்க வேண்டும்?" என்று கூறி நன்றாக நடிக்கின்றீர்கள். ஐயா! புலியின் கீழ்மட்டத்தில் உள்ள ஒருவன் உண்மையிலே ஒரு அப்பாவி தான்;. அவன் விடுதலை என்ற நம்பிக்கையில் வாழ்பவன். ஆனால் உங்களைப் போன்ற படித்த போராசியர்கள், ஆய்வாளர்கள் அப்பாவிகள் அல்ல. கடைந்தெடுத்த சமூக விரோத பாசிச கும்பல்கள் தான் நீங்கள். உங்களுடன் வரலாறும் மக்களும் நிச்சயமாக கணக்குத் தீர்க்கும்.

 

சிவத்தம்பிக்கு எதிராக தேனீயில் வந்த விமர்சனம், அரசியலற்ற புலியெதிர்ப்பை அடிப்படையாக கொண்டது.'அவசரப்பட்டு தனது அடையாளத்தினை தொலைத்த அந்த பேராசிரியர்." எனறு கூறும் போதே, சமூக விரோத பொறுக்கி பற்றி பிரமையூட்டப்பட்ட விம்பத்தை, மானசீகமாக வழிபடும் தன்மையே எதிரொலிக்கின்றது. புலியெதிர்ப்பின் உள்ளடகத்தில் மட்டும் இது எதிர்ப்பாக மாறுகின்றதே ஒழிய, மக்கள் நலனில் இருந்து அரசியல் ரீதியாக இது வெளிவரவில்லை. அவசரப்படமால் இருந்தால், புலியெதிர்ப்பு இணையத்தளங்கள் பேராசியருக்கு புலிக்கு நிகராக மற்றொரு பட்டத்தை கொடுத்தே இருப்பார்கள். அதை அவர்கள் எப்படி கொடுத்திருப்பார்கள் என்பதை அதே விமர்சகரே கூறுகின்றார்.

 

"தமிழ் மொழியின் வரலாறு, தமிழ் மன்னர்களின் வரலாறு, சமய வரலாறு, கலாச்சார தோற்றம், மொழி உருவாக்கம், மாக்ஸ்சிச லெனின்னிசம், மாவோவிசம், பொருளாதார பன்மைத்துவம், உலகமயமாக்கல், கணணியின் அவசியம் என இவைகளில் எதை எடுத்துக்கொண்டாலும் அதனை ஆழமாக அறிந்து கொண்டு அழகாக விரிவுரை நிகழ்த்தக்கூடிய புத்திஜீவியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஈழத்தமிழர்களில் முதன்மையாக உள்ளவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியாகும். எனது மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரியமனிதராக இருப்பவர்." என்கிறார். இப்படிக் கூறுபவர் எப்படி அரசியல் விமர்சனத்தை வைக்க முடியும்;. சிவத்தம்பியின் கருத்துக்கும் மக்களுக்கும் உள்ள உறவு என்ன என்று எப்படி இவர்களால் ஆராய முடியும். மாறாக புலியெதிhப்பில் குளிர்காய்கின்ற கூதல் விமர்சனத்தையே வைக்க முடிகின்றது.

 

சிவத்தம்பியின் கடந்த இருபது வருடமாக, அதாவது அவரின் சமகாலத்தில் ஆழமான அறிவார்ந்த அழகான அந்த விரிவுரைகள் தான்; என்ன? எதுவுமில்லை. அதற்கு முந்திய 20 ஆண்டுகளில் சாதியப் போராட்டம் முதல் நடந்த இடதுசாரிய போராட்டம் பற்றி அவரின் நிலைப்பாடு தான் என்ன? சமகாலத்தின் மீது வாழாத, வாழ முடியாத ஒட்டுண்ணி இவர்கள்.

 

எதையும் முன்வைக்க முடியாத கமுக்கப் பேர்வழிகள் மட்டுமின்றி சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள். உங்களைப் போன்றவர்களின் அதாவது நீங்கள் கூறுவது போல் 'மதம், கட்சிகளுக்கு அப்பால்பட்டு தமிழ்மீது ஆர்வம் உடைய இளையசமுதாயம் உங்களிடம் இருக்கும் அறிவாற்றலை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்துடனேயே வாழ்ந்து வருகின்றார்க"ளின் ஆசானாகும். இங்கு உங்களுக்கும் அந்த கமுக்கப் பேர்வழிக்கும் இடையில் உள்ள முரண்பாடு புலியை ஆதரிப்பதா? அல்லது எதிர்ப்பதா? என்பதே ஒழிய அரசியலால் அல்ல. கோட்பாட்டு ரீதியாக அல்ல. உங்கள் அரசியல் பொழுது போக்குக்கு ஏற்ப, அவர் பற்றிய பிரமைகளே உங்களிடம் எஞ்சிக்கிடக்கின்றது. சமூகத்தை பற்றிய விடையங்கள் மக்களின் விடுதலைக்காக அல்ல என்பதை, எவ்வளவு தெளிவாக நீங்கள் புரிந்து வைத்திருக்கின்றீர்களோ, அதையே அவரும் கடந்தகாலத்தில் மிக நேர்த்தியாக செய்தவர். சமகாலம் மீது மௌனம் சாதித்த படி ஒரு பாசிட்டாகவே அவர் செயல்பட்டவர்.

 

அவரின் சமகாலமல்லாத கடந்தகால நிகழ்வுகள் மீதான அவரின் விமர்சனம், பூர்சுவா வர்க்கத்தின் இடதுபிரிவின் அங்கலாய்ப்பை, எமது சமூகத்தின் பலவீனங்கள் மீது நிறுவியவர். உப்புச் சப்பற்ற ஆய்வில், பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் கிடையாது. மனித இனத்துக்கு தெரியாத விடையங்களை புரட்டிப் போட்டு பிரமிப்பை ஏற்படுத்தும் விற்பன்னர். ஒரு மாஐpக்காரன் போல், மக்களின் அறியாமையில் தனது குதிரையை ஒட்டுபவர்.

 

அதனால் தான் அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த சமூக கொந்தளிப்பான விடையங்கள் மீது மௌனம் சாதிக்கின்றார். பச்சோந்தி போலே மேய்ந்து புலம்புகின்றார். பிற்போக்குவாதிகளுடன் கூடிக் கொள்கின்றார். யாழ் மேட்டுக்குடிகளின் ஆதிக்கம் பெற்ற கருத்தின் பின், தனது சகவாழ்வை, சமகால வாழ்வின் மீது ஒட்டியவர், ஒட்டி வருபவர். மிகவும் அவலம் நிறைந்த சமகாலத்தில் கருத்துச் சொல்ல வக்கற்றவன், எப்படிபட்டவன் என்றால் ஒரு பொறுக்கிதான். அனைத்து விடையத்தின் மீதான அறிவு என்று உங்களைப் போன்றோர் சிபார்சு செய்யும் போது, அதன் விளைவு என்ன. சிவத்தம்பி புலியைப்பற்றி சொன்ன அதே பேட்டிக்கு, ஒத்த ஒரு வினைவுதான் இங்கு உள்ளது. இதையே சிவத்தம்பி பற்றி நீங்கள் சொல்வதன் மூலம் நிகழுகின்றது. பட்டத்தின் கயிறு இடைவெளியின்றி தொங்குவதால், அங்கிருந்து இங்குவரை ஒரு அரசியல் நீட்சியாகவுள்ளது.

 

உங்கள் அந்த அரசியல் எப்படி ஒருங்கிணைந்துள்ளது எனப் பார்ப்போம். "கனேடிய அரசு புலிகளை தடைசெய்வது என எடுத்த முடிவானது ஈழத்தமிழர்களுக்கு எதிராக எடுத்த முடிவல்ல. புலிகளின் மனிதாபிமானம் அற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எடுத்த முடிவாகும். அவர்களின் அரசியல் படுகொலைகள், மாற்றுக்கருத்துக்கு மதிப்பளிக்காமை, மக்களின் அடிப்படை உரிமைகளில் முதன்மையான வாக்களிக்கும் உரிமையினை மறுத்தல், சிறுவர்களை படையணியில் சேர்ப்பதன் மூலம் சர்வதேச சட்டங்களை மீறுதல், புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டி பணம் சேர்த்தல் போன்ற புலிகளின் அத்துமீறல்களுக்கு எதிராக கனேடிய அரசு எடுத்த முடிவே புலிதடைச்சட்டமாகும். கனேடிய அரசின் இந்த முடிவானது ஒரு தற்செயலாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதும் ,உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் முதன்மையான ஜனநாயக போக்கினை கடைப்பிடிக்கும் நாடு கனடா என்பதும் உங்களுக்கு தெரியாதது அல்ல." புலிகளின் தடையை கனடா அரசாங்கம் இப்படி சொல்லி செய்தது என்பதற்கு அப்பால், கனடா ஒரு ஜனநாயக வேஷம் போட்ட ஏகாதிபத்தியம் என்பதையே இது மூடிமறைக்கின்றது. இந்த தடையில் ஏகாதிபத்திய தன்மை இருப்பதை இருவருமே கூட்டாக அரசியல் ரீதியாக மறைக்கின்றனர். சிவத்தம்பியைப் போல் கனடா பற்றிய மிகை மதிப்பீட்டை போலியாக முன்வைக்கின்றது. புலியின் தடைக்கு புலியின் நடத்தைகளை காரணமாக முன்வைக்கின்றது என்றால், அதில் ஏகாதிபத்திய அரசியல் தன்மையை இழப்பதில்லை. புலியின் நடவடிக்கை இதை தாண்டியது என்பதால் மட்டும் தான் உண்மை. புலிகள் மனிதவிரோத நடவடிக்கை இல்லாது, சுரண்டலுக்கு எதிராக ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்வைத்து, ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தியிருந்தால் கனடா தடை செய்யாதா? இது பற்றி கனடா என்ன நினைக்கும். ஏகாதிபத்திய விசுவாசிகளே! நீங்கள் சிவத்தம்பியை விமர்சிக்க முன், கனடாவின் ஏகாதிபத்திய தன்மைபற்றி தெளிவாக மக்களுக்கு கூறுங்கள்.

 

நீங்கள் ஏகாதிபத்திய விசுவாசிகள் என்பதால் தான் "உண்மையில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் ஜனநாயக சக்திகளுக்கு கிடைத்த வெற்றியே இந்த புலிகள் மீதான தடையாகும்" என்கின்றீர்கள். ஜனநாயக சக்திக்கு வெற்றி என்று நீங்கள் பீற்றும் புலித் தடை, உண்மையில் மக்களின் வெற்றியல்ல. மக்களின் அடிமைத்தனத்தின் மீதான மற்றொரு அடி. புலிகளின் அடிமைத்தனத்தில் இருந்து, மற்றொரு ஏகாதிபத்தியத்தின் அடிமைச் சின்னம் செதுக்கப்படுகின்றது அவ்வளவே. மக்கள் தமது வெற்றியை சொந்த அதிகாரத்தின் மூலம் மட்டும்தான் சாதிக்க முடியும். ஜனநாயகவாதியின் கடமை அதை எடுத்துச் சொல்வது தான். மாறாக வாலாட்டும் நாய்கள் போல் ஏகாதிபத்தியத்துக்காக புலியைப் பார்த்து குலைப்பதல்ல.

பி.இரயாகரன்
01.05.2006


பி.இரயாகரன் - சமர்