அகவல்

ஏலாது படுக்கும் எண்சாண் உடம்பை,
நாலுசாண் அகன்ற ஓலைக் குடிசையில்
முழங்கால் மூட்டு முகம்வரச் சுருட்டி,
வழங்கு தமிழரசு வளைத்த வில்லெனக்
"கிடப்பவன்" பகலெல்லாம் கடுக்க "உழைப்பவன்"
"குடியா னவன்"எனக் கூறு கின்றனர்
முடிபுனை அரசரும், மிடிஇலாச் செல்வரும்!

அக்குடி யானவன் அரசர் செல்வரோடு
இக்கொடு நாட்டில் இருப்பதும் உண்மை!
அழகிய நகரை அவன்அறிந் ததில்லை
அறுசுவை உணவுக்கு - அவன் வாழ்ந்த தில்லை!
அழகிய நகருக்கு - அறுசுவை உணவை
வழங்குதல் அவனது வழக்கம்; அதனை
விழுங்குதல் மற்றவர் மேன்மை ஒழுக்கம்!

"சமைத்தல்" "உழைத்தல்" சாற்றும் இவற்றிடை
இமைக்கும் நேரமும் இல்லை ஓய்வு - எனும்
குடியா னவனின் குறுகிய காதில்
நெடிய ஓர்செய்தி நேராய் வந்தது:
"உலகிற் பெரும்போர்" "உலகைப் பெறும்போர்"
"உலகின் உரிமை உறிஞ்சும் கொடும்போர்
மூண்டது மூண்டது மூண்டது - ஆகையால்
ஆண்தகை மக்கள் அனைவரும் எழுக"
அந்த ஏழையும் ஆண்தகை தானாம்!

ஒருவன் ஆண்தகையை உற்றறி யத்தகும்
திருநாள் வாழ்க - எனச் செப்பினான் அவனும்!

அருமை மகனுக்கு - ஒருதாய் சேர்த்தல் போல்,
பெருங்கடல் அளக்கும் பெரும்போர்க் கப்பல்,
குண்டுகள் கொடிய வண்டிகள் சாப்புகை,
வண்டெனப் பறக்கும் வான ஊர்திகள்,
அனைய அனைத்தும் அடுக்கடுக் காக
மறைவினில் சேர்த்து வைத்த இட்லர்,
இறைமுதல் குடிகள் யார்க்கும் போர்வெறி
முடுக முடுக்கித் திடீரென எழுந்தான்!

பெல்ஜியம் போலந்து முதல்நல்ல நாடுகள்
பலவும் அழித்துப் பல்பொருள் பெற்றான்.
முடியரசு நாடு குடியரசு கொள்ள
முடியும் என்பதை முடித்த பிரான்சை
வஞ்சம், சூழ்ச்சியால் மடக்கி ஏறி
அஞ்சாது செல்வம் அடியொடு பறித்தான்.
இத்தாலி சேர்த்தே இன்னல் சூழ்ந்தவன்,
கொத்தாய் ஆசியக் கொள்கையை நாடும்
ஜப்பான் போக்கையும் தட்டிக் கொடுத்தான்.
ஆங்கில நாட்டையும் அமெரிக் காவையும்
எரிக்க நினைத்த இட்லர் என்னுங்
"குருவி" நெருப்புக் குழியில் விழுந்தது!

எத்தனை நாட்டுச் சொத்துக் குவியல்!
எத்தனை நாட்டில் இருந்த படைகள்!
எத்தனை நாட்டில் இருந்த காலாட்கள்!
அத்தனையும் சேர்த்து - அலைஅலை யாக
உருசிய நாட்டை அழிக்கச் செலுத்தினான்!
உலகின் உயிரை ஒழிக்கச் செலுத்தினான்!
பெரிதினும் மிகவும் பெருநிலை கண்ட
உருசிய நாட்டை ஒழிக்கச் செலுத்தினான்!
மக்கள் வாழ்வின் மதிப்பு இன்னதென,
ஒக்க வாழும் உறுதி இதுவென,
முதிய பெரிய முழுநிலத் திற்கும்
புதிய தாகப் புகட்டிய நாட்டில்
செலுத்தினான் இட்லர்; தீர்ந்தான்; முற்றிற்று!

உருசிய நாட்டின் உடைமையைக் கடமையை
மக்கள் தொகையால் வகுத்தே, வகுத்ததை
உடலில் வைத்தே உயிரினால் காக்கும்
உருசி யத்தை இட்லர் உணர்கிலான்!

ஜப்பான் காரன் தன்கொடி நாட்ட
இப்பெரு நாட்டின் எழில்நக ரங்களில்
குண்டெறி கின்றான்; கொலையைத் தொடங்கினான்!
பண்டை நாள்மறத் தொண்டுகற் கண்டென
நாய்க்குட்டி நாடுகள் நன்று காணக்
காட்டிய தமிழகம் கைகட்டி நிற்குமா?
ஊட்டத் தோளை ஓலைத்தோ ளென்னுமா?

இந்த நாட்டின் இருப்பையும், மூச்சையும்,
வந்துள பகையை வாட்டும் படையாய்
மாற்றி அமைத்து வைத்தனர் அன்றோ?
முகத்தைப் பின்னும் முன்னும் திருப்பாது
விடியுமுன் எருதின்வால் அடிபற் றிப்பகல்
முடிவினில் எருதின் முதுகிற் சாய்ந்து
வருங்குடி யானவன் அருகில்இச் செய்தி
வலியச் சென்று வாயைத் திறந்தது!-

எழும்அரசர், செல்வர், எதிரிஇம் மூன்றுக்கு-
உழைக்க வேண்டும்அவ் வோலைக் குடிசை!
உச்சியி னின்றும் ஓராயிரம் அடிக்கீழ்
வைச்ச கனலும் மலைமேல் வழிதல்போல்,
அந்த நெஞ்சத்தில் ஆயிரம் ஆண்டுமுன்
குவியப் புதைந்த அவியா மறக்கனல்,
அக்குடி யானவன் அழகிய தோளிலும்,
விழியிலும் எழுந்து மின்ன,அவ் வேழை
எழுந்தான்; அவனுக்கு - இதற்குமுன் வைத்த
இழிநிலை, அதன்பயன் என்னும் வறுமை
இவை,அவன் காலை இழுத்தன கடித்து!

மெத்தை வீடு, மென்மை ஆப்பிள்,
முத்தரிசி பாலில் முழுங்கிய சோறு,
விலைதந்து தன்புகழ் விதைக்கும் ஆட்கள்,
இவற்றி னின்றுதான் இன்பமும் அறமும்,
துவங்கும் என்று சொல்லல் பொய்ம்மை!

இதைஅவன் கண்ட தில்லை; ஆயினும்
அக்குடி யானவன் எழுந்தான்
நிற்க வில்லை; நிறைந்தான் போரிலே!

(வையப் போரில் ரஷ்யாவை ஜெர்மனி
தாக்கத் துவங்கியபோது எழுதியது.)

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt260