பெரியாரை தனியுடைமை ஆக்கிய நிழல் அரசியல்வாதி(para politician)

நான் எனது சிறு அகவை முதல் விடுதலை இதழினை படித்து வருகிறேன். அப்பொழுதெல்லாம் அறிவுக்குத்தேவையான பெரியாரின் கருத்துக்கள் நிரம்ப வரும். 1996 காலகட்டத்தில் அதன் ஆசிரியர் பெரியார் பெயாரால் தான் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்ற பெரியாரின் கொள்கைகளை விட்டுவிட்டு பெரியாரியத்துக்கு எதிரான பார்ப்பன நடிகையின் அரசியல் குருவாக பொறுப்பேற்று விடுதலை இதழை பார்ப்பன நடிகைக்கு துதிபாடும் இதழாக மாற்றினார். அதன் பின்பு பெரியாரின் கருத்துக்கள் விடுதலை இதழில் வருவது குறைந்தது. விடுதலை என்ற பெயரில்(லேபிளில்) நமது எம்.ஜி.ஆர் இதழின் செய்திகள்தான் வந்தது.


அக்கால கட்டத்தில் பெரியார் திடல் கட்டடங்களை தனது மகனுக்கு கொடுத்து கோடி கோடியாக சம்பாதித்து அமெரிக்காவிலும் அலுவலகம் திறந்தனர் தனது மகனின் நிறுவனத்துக்கு. இப்பொழுது பெரியார் திடலில் MNC நிறுவனங்களை அவர் மகன் நடத்தி வருகிறார்.

இவற்றையெல்லாம் காப்பாற்ற முதல்வர் கலைஞருடன் இப்பொழுது இணைந்து கொண்டார். இப்பொழுது விடுதலை என்ற லேபிளில் முரசொலி இதழின் செய்திகள்தான் வருகிறது. பெரியாரின் கருத்துக்களை விடுதலை இதழில் தேடிப்பார்த்தால் ஏதோ ஒரு மூலையில் ஒன்றோ இரண்டோ செய்திகள் இருக்கும்.

சில நாட்களுக்கு முன்னதாக அவர் கொண்டாடிய பிறந்தநாள் நிகழ்ச்சியை பெரியார் அவர்கள் உயிரோடு இருந்து பார்த்திருந்தால் தான் வைத்திருந்த கைத்தடியை ஓங்கியிருப்பார்.

பெரியார் தனது சொத்தாக சொன்ன தனது கருத்துக்களையும் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் பாமர மக்கள் வாங்கும் விலையில் இதுவரை வெளியிடவில்லை. பாமர மக்கள் வாங்கும் விலைக்கு விடப்பட்ட பல புத்தகங்கள் அய்யா உயிரோடிருந்த பொழுது வெளியிடப்பட்டவை.

அய்யாவின் கருத்துக்கள் அனைத்து மக்களிடமு செல்ல வேண்டும் என்று எண்ணிய பெரியாரிய கொள்கை கொண்ட அமைப்புகளும் தனி நபர்களும் தங்கள் சொந்த முயற்சியில் பெரியாரின் கருத்துக்களும் எழுத்துக்களும் அனைத்து மக்களையும் சென்ற அடைய வேண்டும் என்ற நல்ல நோக்கில் செயல்பட்டுவருவது பிடிக்காத துணை அரசியல்வாதி(para politician) ஒருவர் பெரியாரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் தனியாருக்கு சொந்தமென்று வழக்கு தொடுக்கப்போவதாக அறிக்கை விடுத்துள்ளார்.

பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பானது பெரியாரின் கொள்கைகளை எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லாத காரணத்தால் பெரியாரின் கொள்கைகளால் ஆரம்பிக்கப்பட்ட பெரியாரிய அமைப்புகள் இந்த வேலைகளை தங்கள் தோள்மீது போட்டுக்கொண்டு செய்து வருகின்றனர்.

இவர்கள் பெரியாரிய தொண்டர்கள் பெரியாரிய வியாபாரிகள் அல்ல.

யார் பெரியாரிய வியாபாரி என்பது இந்த மக்களுக்கு தெரியும்.

கலைஞர் அய்யா அவர்கள் பெரியாரின் எழுத்துக்களை அரசுடைமை ஆக்க எண்ணிய பொழுது அதை தடுத்தவர் யார் என்பதும் மக்களுக்கு தெரியும்.

பெரியார் கொள்கைகளை கொண்டவர்கள் இன்னும் இங்குள்ளார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

பெரியாரின் தொண்டர்கள் எந்த வழக்கையும் சந்திக்கத்தயார்.

பெரியாரியமே வெல்லும்!

 

http://aazhikkarai.blogspot.com/2008/08/para-politician.html