Language Selection

இது எம்மை நோக்கி எழுப்பப்பட்டுள்ள ஒரு கேள்வியும் கூட. வடக்கு – கிழக்கை உள்ளடக்கிய தமிழ் தேசியம், தனது சுயநிர்ணயத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்த தவறியதால், அது சிதைந்து சீரழிந்து விட்டது. இதை வெறும் புலிகள் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய அனைத்துப் பெரிய குழுக்களும், தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி போராடவில்லை. பின்னால் இதை முன்னிறுத்தி புலிக்கு எதிராக அவாகள் போராடவில்லை. நான் நாம் மட்டும் இதை தொடர்ச்சியாக முன்னிறுத்தினோம்.

 

இப்படி புலி அழிப்புக்கு முன்னும் பின்னும், அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராகத் தான் இயங்கின. இன்று பலரும் கருதுவது போல், புலிகள் மட்டும் இதைச் செய்யவில்லை. தமிழ் இனத்தின் அடிப்படை உரிமைக்கான போராட்டம், அனைவராலும் சிதைக்கப்பட்டது. இந்த நிலையில் இதை மொத்தமாக செய்து முடிக்கும் வகையில், புலிகளின் பாசிச சர்வாதிகாரம் அனைத்தையும் தன்வசப்படுத்தி அழித்தது.

 

அது தமிழ் மக்களின் பெருமூச்சுகளுக்குக் கூட, தனது படுகொலை அரசியல் மூலம் பதிலளித்தது. தமிழ் இனத்தில் எஞ்சி இருந்த சமூகக் கூறுகள் அனைத்தையும் நலமடித்தது. தமிழ் இனம் சொல்லி அழக் கூட நாதியற்ற நிலைக்கு, அவர்களை அரசியல் அனாதையாக்கி விட்டுள்ளளர்.

 

மாபியாத்தனமும், பாசிசமும் தேசியமாக, தமிழ் இனம் வரைமுறையின்றி எல்லா வடிவங்களிலும் சுரண்டப்பட்டது. சொத்து முதல் கருத்து வரை, தமிழ் மக்களிடம் விட்டுவிடாது சுரண்டப்பட்டது.

 

மறுபக்கத்தில் குறைந்தது 30000 பேர் போராட்டத்தின் பெயரில் கொல்லப்பட்டனர். 10000 பேர் துரோகிகள் பெயரில் கொல்லப்பட்டனர். 100000 மக்கள், போராட்டத்தின் பெயரில் கொல்லப்பட்டனர். சித்திரவதைகளிலும், சிறைகளிலும் ஒரு இனத்தின் ஆன்மா அழிக்கப்பட்டது. பலதரப்பட்ட உளவியல் நெருக்கடிகளின் ஊடே, தமிழ் இனம் ஊனமாக்கப்பட்டது. பெற்றோரை பிரிந்தவர்கள், குழந்தையைப் பிரிந்தவர்கள், கணவனை பிரிந்த பெண்கள், மனைவியைப் பிரிந்த கணவன், இப்படி பிரிவின் ஒலங்கள் வானை முட்டின. கணவனை இழந்த விதவைகள், மனைவியை இந்த கணவன்கள் சோகங்கள், மறுபக்கத்தில் பாலியல் உணர்வை நலமடித்து மறுத்த வக்கிரம், இனத்தின் இயல்பையே ஊனமாக்கியது. உழைப்பை, தமது பரம்பரை சொத்தை, பண்பாட்டை எல்லாம் இழந்து, ஒரு அனாதை இனமாகியுள்ளது. இப்படி எத்தனை எத்தனை மனித அவலங்கள் சோகங்கள்.

 

இதை இயக்கங்கள் தம் பங்குக்கு விதைத்தன. புலிகள் தாம் விதைத்ததையும் சேர்த்து, மொத்தமாக அறுவடை செய்தனர். தமிழ் மக்கள் இவர்கள் மூலம், எந்த ஆறுதலையும் அடையவில்லை. மாறாக நிம்மதியை இழந்தனர். தம் வாழ்வை இழந்தனர். தமிழ் இனம், தனது அடிக்கட்டுமானத்தின் சகல அடிப்படையையும் இழந்துவிட்டனர்.

 

இந்த இடத்தில் எதிர்காலத்தில் தமிழ்மக்களுக்கு என்ன நடக்கும்? என்ற கேள்வி, உள்ளடகக்த்தில், இன்று ஏதோ தமிழ் மக்களிடம் ஏதோ இருப்பதாக நம்புகின்ற அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றது. தமிழ் இனம் வாயை கூட திறக்க முடியாது, அனைத்தையும் இழந்துவிட்ட ஊமைகள் நிலையில் ஏதோ எதுக்கோ வாழ்கின்றனர். இப்படித் தான் தமிழ் இனம், எதார்த்தத்தில் ஜடமாக உறைந்து கிடக்கின்றனர்.

 

இப்படி இந்த ஊமைச் சமூகத்தின் எதிர்காலம் என்பது, இன்றைய தனது சொந்த அடிமைத்தனத்துக்கு ஏற்ப, எச்சிலைப் பொறுக்கி வாழும் இழிநிலைக்குத் தான் தள்ளப்படுவர். இன்று முஸ்லிம் மக்கள், மலையக மக்களும், பொறுக்கி வாழும் தலைவர்களின் கீழ் எப்படி வாழ்கின்றனரோ, அப்படிப்பட்ட தமிழ் தலைவர்களின் கீழ் தான், தமிழ் மக்களின் அடிமை வாழ்வைத் தான் சுபிட்சமானதாக காட்டப்படும்.

 

இப்படிப்பட்டவர்கள் இன்றைய புலிக்குள் இருந்தும், பல பிள்ளையான்களின் வடிவிலும் உருவாகுவார்கள். பிள்ளையான் ஒரு ரவுடியாக, தாதாவாக கொலை கொள்ளை என்று அரச எடுபிடியாகத் திரிந்தவன், இன்று திடீர் அரசியல்வாதியாகவில்லையா!

 

புலிகள் அரசியல் செய்யும் போது, எதை அரசியலாக செய்கின்றனர். அயன் பண்ணிய சேட்டுப் போட்டு, பேனையை பொக்கற்றில் கொழுவியபடி மக்களுக்குள் வலம் வருவது தான் அவர்கள் அரசியல். வெளிநாடு போனால் ரையைக் கட்டி, போலிஸ் பண்ணி சப்பாத்து போட்டுக் கொண்டு, போவது தான் அரசியல். மக்களை ஊமையாக்கிவிட்டு, இப்படித்தான் அவர்கள் தமிழ் மக்களுக்கு அரசியல் செய்து காட்டியவர்கள்.

 

அங்கிருந்து உருவான பிள்ளையான் தனது ரவுடிசத்தையும் தாதா தனத்தையும் மறைக்க, முதலில் ரையைக் கட்டினான். பின் வெள்ளைவேட்டி கட்டி பழுத்த அரசியல்வாதியாகவில்லையா! முன்னாள் புலம்பெயர் ஜனநாயகவாதிகள் ரவுடி பிள்ளையான் போடும் எலும்புத்துண்டை சுவைத்தபடி பிள்ளையானுக்கு வழிகாட்டுவது போல், பலர் எதிர்காலத்தில் எலும்புக்காக நக்குவார்கள். இப்படித் தான் புலிகளின் மாபியாத் தனத்துக்கு பாசிசத்துக்கு பதில் பிரதியிடப்படும்.

 

ரவுடிகளும், தாதாக்களும் எப்படி இந்தியாவில் அரசியலுக்கு வருகின்றனரோ, அதுபோல் தான் பல பிள்ளையான்கள் எதிர்காலத்தில் தமிழ் இனத்தை இழிவாடியபடி தலைமை தாங்குவார்கள். அரசு போடும் எலும்மை கவ்விக்கொண்டு, அரச எடுபிடிகளாக பவனிவருவார்கள். இந்த ரவுடிகளும், தாதாக்களும, நாலு தாதா இந்திய சினிமா பார்த்தால் போதும், எப்படி அரசியல் பேசுவது என்பதைக் கற்றுக்கொள்வார்கள். இதன் மூலம், பழுத்த அரசியல் தகுதியை பெற்றுவிடுவார்கள்.

 

இப்படி சமூகவிரோத தற்குறிகள் தம் வன்முறை மூலம், தமிழ் இனத்தின் இழிவை தமக்கு சாதகமாக கொண்டு அடக்கியாள்வர்.

 

இன்று புலிகளிடம் இருக்கும் ஆயுதம், இராணுவ பலம் என அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராக எப்படி உள்ளதோ (சிலர் இதை தமிழ் மக்களின் பலம் என்கின்றனர்), அப்படித் தான் புலிகள் இல்லாத போதும் நிகழும். தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு தான், அவர்கள் நடைப்பிணமாகத்தான் வாழ்வார்கள். வாக்கு போடும் உரிமை உண்டு என்று கூறிக்கொண்டு, அதை மட்டும் உரிமையாகக் காட்டிக்கொண்டு, அதையும் தமக்கு மட்டும் போட வைப்பார்கள்.

 

இன்று புலிகள் தாம் மட்டும் தேசியத்துக்காக போராடுவதாக காட்டிக்கொண்டு எதைச் செய்தனரோ, அதையே எதிர்காலத்தில் ரவுடிகளும், தாதாக்களும், பொறுக்கிகளும் தாம் மட்டும் தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு, தம் வாக்கு பெட்டியை நிரப்புவார்கள்.

 

தமிழ் தேசியத்தின் பெயரில் புலிகள் ஆடிய ஆட்டம் போல், கிழக்கு மக்கள், வன்னி மக்கள் என்ற பல பிரிவினைகள் மூலம், பிராந்தியங்களுக்கு ரவுடிகள் தலைமை தாங்குவார்கள்.

 

எதார்த்தம் இதைத் தான் காட்டுகின்றது. இதற்கு எதிரான போராட்டம் என்பது, கருத்தளவில் கூட ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் தான் உள்ளது. தமிழ் இனத்தின் எதிர்காலமோ, இருண்டதாக சூனியமாக உள்ளது. இவர்கள் மேல் ரவுடிகளும், பொறுக்கிகளும், தாதாக்களும் அரசியல் செய்கின்றனர்.

 

ரவுடிகளும், பொறுக்கிகளும், தாதாக்களும் தமது அரசியல் நிகழ்ச்சியை, இணையங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் மட்டுமின்றி, முதலமைச்சர் பதவி வரை அலங்கரித்து வேஷம் போடுகின்றனர்.

 

மக்களுக்காக ஒரு அரசியலை முன்வைக்காத, அவர்களை சார்ந்து செயல்பட மறுக்கின்ற அரசியலைத் தான், புலிக்கு மாற்றாக வைக்கப்படுகின்றது. இது எவ்வளவு மோசமான மக்கள் விரோத அரசியல் என்பதை, குறைந்த பட்சம் சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் கூட இனம் காணாமல், அங்குமிங்கும் சமரசம் செய்கின்றனர். இப்படி மாற்று அரசியல் கருத்துக் கூட, புலிக்கு மாற்றாக இன்று கிடையாது. தமிழ் மக்கள் புலிக்கு பதில், ரவுடிகளும், பொறுக்கிகளும், தாதாக்களும் அடக்கியாளப்படுவதும், அதை ஜனநாயகம் என்ற கூறுகின்ற மக்கள் விரோத ஜனநாயகமும் தான் இன்று கோலோச்சி நிற்கின்றது.

 

புலிக்கு மாற்றாக உள்ள புலம்பெயர் கும்பல்தான், மக்களுக்காக எந்த அரசியலையும் மாற்றாக வைக்காது, தாதா அரசியலுக்காக இயங்குகின்றது. இதுதான் புலிக்கு பதில் பிரதியிடப்படும். இதை இனம் கண்டு, இதற்கு எதிராக போராடாத அனைவரும், இதற்கு துணை போவர்கள் தான். இதை நான், நாம் மட்டும் இன்று சுட்டிக்காட்டிப் போராடும் அவலம்.

 

பி.இரயாகரன்
24.08.2008