தலைவாரிப் பூச்சூடி உன்னைப் -- பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? -- நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?
விலைபோட்டு வாங்கவா முடியும்? -- கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? -- நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

படியாத பெண்ணா யிருந்தால் -- கேலி
பண்ணுவார் என்னைஇவ் வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! -- என்
கண்ணல்ல? அண்டைவீட் டுப்பெண்க ளோடு!
கடிதாய் இருக்குமிப் போது -- கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!
கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு -- பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt147