பண்டு தமிழ்ச் சங்கத்தை
உண்டு பண்ணிய மன்னன் சீரெல்லாம்,
விண்டு புகழ்ந்து பாடி
இன்னும் வியக்கின்றார் இப் பாரெல்லாம்.

அண்டும் புலவர்க் கெல்லாம்
அந்நாள் மன்னர் கொடுத்த கொடைதானே,
தண்டமிழ் இந்நாள் மட்டும்
சாகாமைக்கே அடிப்படை மானே!

புலவர் நினைப்பை யெல்லாம்
பொன் னெழுத்தால் பதித்து நூலாக்கி,
நலம் செய்தா ரடிமானே
நம் தமிழ்வேந்தர் நம்மை மேலாக்கி!

இலை என்று புலவர்க்கோ
எடை யின்றிப் பொன்தந்தார் மூவேந்தர்,
கலை தந்தார் நமக் கெல்லாம்
அதனால் இன்றைக்கு நாம்தமிழ் மாந்தர்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt144