வெண்ணி லாவும் வானும் போலே
வீரனும்கூர் வாளும் போலே
வெண்ணிலாவும் வானும் போலே!

வண்ணப் பூவும் மணமும் போலே
மகர யாழும் இசையும் போலே
கண்ணும் ஒளியும் போலே எனது
கன்னல் தமிழும் நானும் அல்லவோ?
வெண்ணிலாவும் வானும் போலே!

வையகமே உய்யு மாறு
வாய்த்த தமிழ் என்அரும் பேறு!
துய்யதான சங்க மென்னும்
தொட்டிலில் வளர்ந்த பிள்ளை
(தம்) கையிலே வேலேந்தி இந்தக்
கடல் உலகாள் மூவேந்தர்
கருத் தேந்திக் காத்தார்; அந்தக்
கன்னல் தமிழும் நானும் நல்ல
வெண்ணிலாவும் வானும் போலே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt143