06242022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

உலகின் நோக்கம்

உவகை உவகை உலகத்தாயின் கூத்து! -- வந்து
குவியுதடா நெஞ்சில்
உவகை உவகை!

எவையும் தன்னுள் ஆக்கிய பெருவெளி
எங்கும் அடடே தாயின் பேரொளி!
உவகை உவகை!

அவிழும் கூந்தல் வானக் கருமுகிலாய் -- இடையினின்
றலையும் பூந்துகில் பெருவெளி எங்கும் போம்
தவழப் புதுநகை மின்னித் துலங்கும்
தாய்நின் றாடிய அடிஇடி முழங்கும்
உவகை உவகை!

தொடுநீள் வானப் பெருவில் ஒருகையில் -- பெரும்புறம்
தூளா கிடவரு கதிர்வேல் ஒருகையில்
அடுநீள் விழியிற் கனலைப் பெருக்கி
ஆடும் திறல்கண் டோடும் பகைதான்
உவகை உவகை!

அகலொளி விளக்கு நிலவினில் அவள்ஆடும் -- ஆடிநின்
றந்தமி ழின்பத் தென்பாங்கிற் பாடும்
துகளறு விண்மீன் துளிகள் பறக்கத்
துடிஇடை நெளியும் துணைவிழி உலவும்
உவகை உவகை!

அறிவே உயிராய் அதுவே அவளாகி -- மற்றுள
அறமென்ப வெலாம் அழியும் எனவோதிக்
குறியும் செயலும் ஒன்றாய் இயலக்
கூத்தாடுந் தாய் பார்த்திடு தோறும்
உவகை உவகை!

மடமைப் பகைமையும் சாகப் பின்வருமோர் --கொடிதாம்
வறுமைத் தீயும் அலறிப் புறமேக
அடிமைத் தனமே துகள் துகளாக
ஆடுந் தாயவள் நாளும் வாழிய!
உவகை உவகை!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt141