சமூகத்தின் சீரழிவு எந்தளவுக்கு பண்பாடு கடந்து தரம் தாழ்ந்து செல்லுகின்றதோ, அந்தளவுக்கு சமூகம் மீதான வன்முறை பல வழிகளில் திணிகப்படுகின்றது. இதன் பொது அதிகாரத்தின் மொழி முதல் அதன் சொந்த நடைமுறைவரை

அனைத்தும் ஈவிரக்கமற்ற வகையில் கொடூரமான வகையில் தன்னைத்தான் காட்டிக்கொள்ள விரும்புகின்றது. சமூகத்தின் உயிர்துடிப்புள்ள எந்த சுயாதீனமான செயலையும், அதன் முளையிலேயே சிதைத்துவிடும் ஒரு சமூக வக்கிரத்தை உருவாக்கி, அதில் தான் தாலாட்டு பெறுகின்றனர். ஒரு மனிதனின் ஜனநாயக உரிமையை மக்களின் பெயரில் துப்பாக்கி முனையில் குத்தகை எடுத்து அதை மறுக்கும் இவர்கள், தன்னிலை விளக்கமாகவே இந்த ஜனநாயகம் மக்களுக்கு இபபோது அவசியமற்றது என்று புலம்புவது இன்றைய எதார்த்தமாகியுள்ளது. சமூகத்தின் ஜனநாயகத்துக்கு பயந்த கோழைகளின் உளறலாகவே இது வெளிப்படுகின்றது. சமூகத்துக்கு பயந்த கோழைகள் எப்படி இயங்குவார்கள் என்பதை மாhக்ஸ் அழகாகவே "கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடத்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்." என்றார். இது தான் இன்று எம்மண்ணில் அனைத்து கூறுகளிலும் காணப்படுகின்றது.

 

திறந்த விவாத இணையத் தளங்களில் முனவைக்கப்படும் கருத்துக்கு பதிலளிக்க வக்கற்ற அனாமதேயங்களின் அணுகுமுறைகள், எமது தமிழ்தேசியத்தில் புளுத்துக் கிடக்கும் பாசிச பண்பாட்டையே தெளிவாக வெளிப்படுத்துகின்றது. சமூகம் (மக்கள்) சார்ந்து முன்வைக்கும் கருத்துக்கு, அவர்கள் பதிலளிக்க முடியாது மூச்சுத் திணறுகின்றனர். இதனால் கருத்தை முன் வைத்தவனை அமெரிக்காவின் நாயாகவும், இலங்கை அரசின் எடுபிடிகள் என்றும் பலவிதமாக தமது கற்பனை திறனுக்கு ஏற்ப பற்பலவாக எழுதுகின்றனர். அதேநேரம் எழுதுவதற்கு தண்டனையாக படுதூசணத்தால் திட்டி தீர்க்கின்றனர். இதன் போது அம்மாவை, சகோதரியை, மனைவியை, மகளை புணர்வோம் என்று, தமிழ்தேசிய வக்கிரத்தை வீரவசனமாக்கி எழுதுகின்றனர். கொலைகாரன், கொள்ளைக்காரன், பல பெண்ணை கற்பழித்தவன் என்று கூட எழுதுகின்றனர். இப்படித்தான் பல ஆயிரம் தியாகத்துடன் கூடிய எமது தமிழ் தேசியம், மாற்றுக் கருத்தை எதிர்கொள்ள கற்றுக் கொடுக்கின்றது.

 

சமூக கருத்துக்கு பதிலளிக்க வக்கற்ற நிலையில், சமூகத்தின் மாற்றுக் கருத்துகளை சமூகத்தின் எதிரியின் கருத்தாக, மொட்டையாகவே அடிப்படையும் ஆதாரமுமற்ற வகையில் முத்திரை குத்துகின்றனர். அதேநேரம் இந்த அநாமதேயக் கும்பல், மிக நெருங்கிய உறவுப் பெண்களை பாலியல் வன்முறை செய்வதாக கூறுவதும், கருத்தாளனை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்துவதுமே, இன்று எமது தமிழ் தேசியமயமாகிப் போனதை நாம் எதார்த்தத்தில் எங்கும் இடைவெளியின்றி காண்கின்றோம்.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் எழுதியவனின் கருத்துடன் தொடர்பற்ற தாயை, சகோதரியை, மனைவியை, மகளை பாலியல் ரீதியாக புணர்ந்ததாகவும், புணரப்போவதாக கூறும் போது, அவர்கள் என்னதான் குற்றத்தைச் செய்தார்கள். இது தான் தமிழ் தேசியத்தின் தணியாத தேசிய தாகமோ! மற்றொரு பக்கத்தில் எழுதியவனின் நெருங்கிய உறவாக உள்ள இந்த நான்குவகைப் பெண்களுக்கு, வேறு சகோதரர்களும், சகோதரிகளும் உள்ளனர். அவர்களில் சிலர் புலியாகவும், புலி சார்பு நிலைப்பாட்டை கொண்டு செயல்படுவர்களாக உள்ளனர். இதன் மூலம் புலியின் தாயை, புலியின் சகோதரியை, புலியின் மனைவியை, புலியின் மகளையும் பாலியல் ரீதியாக புணரப் போவதாக அனாமதேய குறுந் தமிழ் தேசியவாதிகள்; கூறுகின்றனர். இதையெல்லாம் புலிகள் கண்டிக்க மறுக்கும் மறுபக்கத்தில் இது தேசியத்தில் பொதுவாக அரங்கேறத்தான் செய்கின்றது. இதை எழுதியவனின் புலி சார்பு உறவினர் கண்டு கொள்ளாமல் இருப்பதும் இதில் நிகழ்கின்றது. இங்கு என்ன ஒற்றுமை. என்ன தேசிய பண்பாடு.

 

உண்மையில் புலிகள் கருத்துக் கூறமுடியாத எல்லா தளத்திலும், அவர்கள் தமது சர்வாதிகார அடக்குமுறையை ஏவமுடியாத அனைவர் மீதும், இந்த தேசிய வக்கிரத்தையே அரங்கேற்றுகின்றனர். எதிரி பற்றிய நிலைப்பாட்டை, வெறுமனே புலி ஆதரவு எதிர்ப்பு என்ற தளத்தில் மிகக் கொச்சைத்தனமான வகையில் குறுக்கி, அதை அரசியல் ரீதியில் அணுக முடியாது தூற்றுகின்றனர்.

 

புலிகள் இயக்கம் மக்கள் நலன் சார்ந்தாக இருந்தால், அவர்கள் இப்படி ஒரு நாளுமே தூற்ற முடியாது. பெண்விடுதலை பற்றி வாய்கிழிய மேற்கோள் இட்டு அறிக்கை செய்யும் புலிகள் ஒருபுறம், மறுபக்கம் புலி சார்பாக மிகக்கேவலமாக பெண்கள் மீது கொச்சையான தூசணத்தில் பாலியல் வன்முறை செய்யப் போவதாக கூறுகின்றனர். இதுதான் குறுந்தமிழ் தேசியத்தின் இரட்டை வேடம்;. நேர்மையற்ற இந்த வேடம் அனைத்து துறையிலும் நேர்மையற்று பொது அணுகுமுறையில் காணப்படுகின்றது. இதை அடிப்படையாக கொண்ட தமிழ் தேசியம், எப்படி மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கமுடியும். உண்மையில் பெண் விடுதலையை புலிகள் நேசித்தால், இப்படி ஒரு நாளுமே தேசியத்தின் பெயரில் பெண்களை கேவலப்படுத்துவதை அனுமதிக்க மாட்டார்கள். இதற்கு எதிராக கொதித்தெழவேண்டும்.

 

புலிகளின் போராட்டம் சரி, அவர்களின் தியாகமும் சரி மக்களின் நலன் சார்ந்ததாக இருத்தல் என்பது, அவர்களாலேயே எப்போதும் எங்கும் மறுதலிக்கப்படுகின்றது. மக்கள் நலன் என்பது வெற்றுக் கோம்பைகளில் இருந்து உருவாகுவதில்லை. மக்கள் நலன் என்பது, மக்களுக்காக எதைச் செய்யப் போகின்றோம் என்பதை தெளிவாக பிரகடனம் செய்து, அதை நடைமுறைப்படுத்துவது தான். இதை விடுத்து தலைவர் செய்வார், அவருக்கு எல்லாம் தெரியும், தமிழீழம் கிடைத்த பின்பு மக்களின் நலனை பூர்த்தி செய்வோம் என்று கூறும் பம்மாத்து விதண்டாவாதங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை.


எல்லாவற்றையும் செய்வார் என்று கூறும் உங்கள் தலைவர், தற்செயலாக இயற்கையாகவே மரணித்தால் என்ன நடக்கும். தியாகங்கள் முதல் தமிழீழத்தின் பின் மக்கள் நலன் பேணப்படும் என்று கூறிய அனைத்தும் அர்த்தமற்ற ஒன்றாகிவிடும்;. உண்மையில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மீது, புலிகளுக்கு சிறிதளவு கூட அக்கறை கிடையாது. மக்களின் வாழ்வு சார்ந்த சமூகப் பொருளாதார கூறுகள் ஒன்றாக இருக்க, புலிகளின் சமூகப் பொருளாதாரக் கூறுகள் வேறு ஒன்றாகவே உள்ளது. அதாவது மக்களின் சமூக வாழ்வியல் போக்குக்கு எதிராகவே புலிகளின் வாழ்வியல் உள்ளது. இதனால் தான் புலிகள் மக்களின் ஜனநாயகத்தை மறுத்த, பாசிச சர்வாதிகாரத்தை சமூகம் மீது பொதுவாகவே திணிக்கின்றனர். பின்பு தமிழீழத்தின் பின்பே சாதியத்தையும்;, பிரதேசவாதத்தையும், ஆணாதிக்கத்தையும், வர்க்க ஏற்றத் தாழ்வையும் ஒழிக்கப் போவதாகவும், அதேநேரம் தாம் ஜனநாயகத்தை மக்களுக்கு வழங்கப்போவதாக புலம்புகின்றனர்.
இவற்றை மக்களின் பெயரில் கூறிக் கொள்வது இங்கு நிகழ்கின்றது.


இதை நாம் விமர்சிக்கும் போது அப்பட்டமான அவதூறுகளை முத்திரையாக்கி, பாலியல் வன்முறையை செய்யப் போவதாக அனாமதேயங்கள் வக்கரித்து கொக்கரிக்கின்றனர். பெண்கள் பற்றி கேவலமான வக்கிரம். பெண் புலியாக உள்ள ஒவ்வொரு பெண்ணையும், இந்த தேசிய வீரர்கள் ஒரு பாலியல் பண்டமாகத் பார்ப்பதால் தான், அவர்களின் தேசிய மொழி இப்படி வக்கிரமாக கொப்பளிக்கின்றது. எல்லாப் பெண்களையும் புணரும் தேசிய சந்தர்ப்பத்துக்காக, காத்துகிடக்கும் ஒரு சமூக வக்கிரமாக இது பிறப்பெடுக்கின்றது.

 

இதை பொதுவாக புலிகளை ஆதரிக்கும் மிதவாதிகளும், புலிகள் மாறியுள்ளதாக கூறி நக்கித் திரிவோரும், புலிகள் திருந்திவிட்டதாக கூறும் பச்சோந்திகளும் இதை ஒருநாளுமே கண்டு கொள்வதில்லை. இதை மறுத்து போராடுவதில்லை. இதை மறைமுகமாக ஆதரிப்பதே இங்கு நிகழ்கின்றது. பினாமிகளாகவே நக்கித் திரியும் எல்லாக் கூட்டங்களும், இதற்கு ஏதோ ஒரு விதத்தில் துணைபோபவர்கள் தான். வேடங்களும், வேஷகளும் மறுபட்டாலும், இவர்களின் நோக்கம் ஒன்றாகவே உள்ளது. சமூகத்தின் முரண்பட்ட கூறுகளையும், அது சாhந்த மற்றுக் கருத்தை முடக்க வேண்டும் என்;ற குறிக்கோலில், அனைத்து வழிவகைகளையும் கையாளப்பட வேண்டும் என்பதில் இவர்களுக்கு எந்தவிதமான மாறுபாடே கிடையாது. நடிப்பதைத் தாண்டி, இவர்கள் சாமபேதம் எதையும் பார்ப்பதில்லை.

 

சமூகத்தின் வாழ்வியலாக உள்ள சமூக பொருளாதார நலன்களை நாங்கள் உயர்த்தி நிற்கின்றோம் என்ற உண்மையை இதனுடாக ஒருநாளும் மழுங்கடித்துவிட முடியாது. நமது கண்ணுக்கு முன்னே நடந்துள்ள, நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் மீதுதான், நாம் எப்போதும் கருத்துக் கூறுகின்றோம். நடைபெறாத எவற்றின் மீதும், நாம் கற்பனையில் கருத்துக் கூறுவதில்லை. வடக்கு கிழக்கு தொடங்கி இலங்கை முதல் உலகம் வரை நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிகள் மீதே கருத்துரைக்கின்றோம்;. இதை சொல்லக் கூடாது என்பதே இன்றைய தேசியமாக உள்ளது. இதை முடக்க ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை புனைவது முதல் பாலியல் ரீதியாக புணரப்போவதாக கூறுவதும், கொன்று விடுவதும் தான், இன்றைய புலிகளின் தேசிய ஜனநாயகமாக உள்ளது.

 

நங்கள் வடக்கு கிழக்கு தொடங்கி இலங்கை முதல் உலகம் வரை நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிகள் மீது கருத்துக்களை கூறும் போது, வெறுமனே புலியெதிர்ப்பு அணியைப் போல் புலிகள் பக்கத்தை மட்டும் விமர்சிப்பவர்கள் அல்ல. மாறாக ஏகாதிபத்தியம் முதல் அரசியல் துரோகத்தைச் செய்யும் குழுக்கள் வரை விமர்சிப்பவர்களாக நாம் உள்ளோம். நாங்கள் கம்யூனிஸ்ட்டுக்கள் என்பதால், எமக்கு மக்கள் நலன் மட்டுமே எப்போதும் முக்கியமானது. இதில் நாம் எதையும் பாகுபாடு காட்டுவதில்லை. சந்தர்ப்பவாதமாக எமக்கு நாமே மூகமுடியை போட்டுக் கொள்வதில்லை. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறியது போல் "கம்யூனிஸ்ட்டுகள் தத்துவார்த்தக் கொள்கை என்பது யாரோ ஒரு மகானால் - எப்போழுதோ கண்டுபிடிக்கப்பட்ட ஒன்ற அல்ல. மாறாக இது வாழ்க்கை அனுபவத்தில் - நமது கண்ணுக்கு முன்னே நடந்துள்ள, நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டங்களில் இருந்து எழுந்த விஞ்ஞான ரீதியான பொதுவான முடிவுகளே ஆகும்." எதார்த்தம் சார்ந்த இந்த உண்மை இருந்தே, எமது அனைத்து எழுத்துகளும் கருத்துகளும், நடைமுறைகளும் முன்வைக்கப்படுகின்றன. தவறுகள் திருத்திக் கொள்ளப்படுகின்றன.


சமகாலத்தில் நாங்கள் எமது கட்டுரைகளில் எம்மை நாமே கம்யூனிஸ்ட்டுகள் என்று அறிவித்ததில்லை. அதேபோல் மேற்கோள்களை காட்டுவது குறைவு. மாறாக எம்முன் நடக்கின்ற, நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளின் மீதான, விமர்சன ரீதியான மக்கள் சார்பான எமது அணுகுமுறைகள் தவிர்க்க முடியாது எம்மை கம்யூனிஸ்ட்டாக இருப்பதை மீன்டும் உறுதி செய்கின்றது. உலகெங்கும் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட்டுகளும் இந்த ஒருமித்த பார்வை கொண்டிருப்பதால், எமக்கு இடையில் ஒரு உற்சாகமான ஒருமித்த முடிவை எப்போதும் வந்தடைகின்றோம்.

 

இந்த வகையில் ஏகாதிபத்தியம் மற்றும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு எதிராக மிக கடுமையாக எழுதுகின்றோம். எமது முதன்மை எதிரி இவர்களே என்பதை தெளிவாகவே அம்பலப்படுத்தி வருகின்றோம். சமகாலத்தில் ஏகாதிபத்தியத்தையும், இலங்கை பேரினவாதத்தையும் மிக கடுமையாக விமர்த்தவர்களில் நானே இலங்கையில் முதன்மையானவன்;. இன்று யாரும் இதை இலங்கையில் செய்யவில்லை. ஏன் இலங்கை அரசை விமர்சிப்பதை புலிகள் கூட செய்ய முடியவில்லை. இதனடிப்படையில் சில நூறு கட்டுரைகள் எழுதியுள்ளேன். தொடர்ச்சியாக எழுதி வருகின்றேன். மிக விரைவில் ஏகாதிபத்தியத்தை அப்பலப்படுத்தும் வகையில் உலகமயமாதலுக்கு எதிராக மூன்றுக்கு மேற்பட்ட நூல்களை அடுத்தடுத்து வெளியிடவுள்ளேன்.

 

நாங்கள் அரசையும், ஏகாதிபத்தியத்தையும் விமர்சிப்பதை தடுக்க வகையில், குருட்டுக் கண்ணுள்ள புலிகளின் முயற்சியாகவுள்ளது. இதைத்தான் பிரான்சின் அரசியல் பொலிசும் செய்ய முனைந்தது, செய்ய முனைகின்றது. பிரான்சு அரசியல் பொலிஸ் என்னை தமது அலுவலகத்துக்கு அழைத்து, உத்தியோக பூர்வமற்ற ஒரு நிலையில் குறிப்பாக ஏகாதிபத்தியத்தையும் இலங்கை அரசையும் எதிர்த்து எழுதுவதை உடன் நிறுத்தக்கோரியது. இதைத் தான் மீண்டும் புலிகள் செய்ய முனைகின்றனர். என்ன ஒற்றமை, என்ன ஜக்கியம். மக்களின் சமூகபொருளாதார நலன்களை முதன்மைப்படுத்தி எமது எழுத்து சார்ந்த நடைமுறையை, ஆளும் வர்க்கங்களால் சகிக்கமுடியவில்லை. பிரான்சு ஏகாதிபத்தியம் முதல் புலிகள் வரை இதைத்தான் பொதுவாக சமூகம் சார்ந்தவர்கள் மீது கையாள முனைகின்றது.

 

இதில் தமிழ் தரப்போ ஒரு படி மேலே நிற்கின்றனர். நாலு தூசணத்தை விட்டால் வெட்டுவன் கொத்துவன் மண்டையில் போடுவன் என்கின்றது. இதைத் தாண்டி இவர்கள் எதையும் தெரிந்து கொள்ள முடியாத மரமண்டைகளாக இருக்கின்றனர். இதையிட்டு நாம் அலட்டிக் கொள்ளமுடியாது தான். ஒரு விவாதத்தில் கூட கலந்து கொள்ளத் தெரியாத அடிமுட்டாள்கள், தமக்கு தெரிந்த அந்த நாலு தூசணத்தால் எழுதுவதைத் தாண்டி எதையுமே சமூகத்துக்கு தர வக்கற்றவர்களாக உள்ளனர். இந்த முட்டாள்களுக்கு பதிலளிப்பதை விடுத்து, இந்த மாதிரியான லும்பன்கள் சமூகத்தில் புரையோடிப்போய் காணப்படுவது என்பது, தமிழ் தேசியத்தின் தேசிய கொடையாகவே உள்ளது.

 

இந்த மாதிரி நாலு தூசணத்தை வைத்து புலம்பும் கும்பலுக்கு பதிலளிப்பதும், போட்டிக்கு பதிலளிப்பதும் அவசியமற்றதுதான். ஆனால் இந்த போக்கின் சமூக வேர்கள் என்ன என்பதை ஆராய்வது மிக அவசியமானது.

 

1. உண்மையில் சமூக விரோத லும்பன்களாக உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய நபர்கள், பெரும்பாலும் புலிகள் இயக்க உள்சுற்று மொழிகளில் இருந்தே உருவாக்கப்படுகின்றனர். அதாவது பயிற்சி, கட்டளைகள், அடங்கி நடக்க கோரும் மொழியாடல் அனைத்தும், புலிகளில் இதுவே இன்றைய மொழியாக உள்ளது. நீங்கள் கூர்மையாக அவதானித்தால், இது அமெரிக்கா இராணுவத்தின் அடக்குமுறை மொழியாடல் கூட. அமெரிக்கா இராணுவத்தினை காட்டும் ஆங்கில சினிமாவில் கூட இது தெளிவாக அப்பட்டமாக உள்ளது.

 

2.இன்று புலம்பெயர் நாடுகள் முதல் வடக்குகிழக்கு வரை அன்றாடம் நடக்கும் குழு மோதல்கள், வன்முறைகளின் ஊற்று முலமே இந்த வலதுசாரிய புலி அரசியலின் இருந்தே உருவாகின்றது. சாதாரணமாக நடக்கும் வெட்டும் கொத்தும் கூட, அவர்களின் வாழ்வியலில் பாழாகிப் போன ஒரு சின்ன விடையமாகவே உள்ளது. அத்துடன் அவர்களின் இரசனைக்குரிய ஒன்றாகவே இது மாறிப் போய்விட்டது.

 

3.எப்போதும் தூசண மொழியாடல் சார்ந்த வார்த்தைகள், பெண்களையே குறிப்பாக வன்முறைக்கு உள்ளாக்குகின்றது. இது இந்த ஆண்களின் அன்றாட பாலியல் சார்ந்த வாழ்வியல் நெருக்கடியும், உளவியல் பிரச்சனையும் கூட. அதாவது இது ஒரு ஆணாதிக்கம் சார்ந்த ஆண்களின் மனநோய் கூட. பெண்களை கற்பழித்தல் முதல் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் அன்றாட நடைமுறைகளில் ஈடுபடுபவர்களே, இப்படியான மொழியை இலகுவாக கையாளமுடிகின்றது. மற்றொரு பக்கத்தில் அதை செய்ய விரும்பமுள்ளவர்களினதும், இந்தவாய்ப்பு கிடைக்காதவர்களின் கற்பனை வளமுள்ளவர்களின் விருப்பமாகவும், அவர்களின் வக்கிரமாகவும் உள்ளது.

 

4.இந்த மாதிரி தூசணத்தாலும், வன்முறையாலும் அணுகுவதன் மூலம், இந்தச் சமூகத்தில் எதை அவர்கள் சாதிக்க நினைக்கின்றனர். அறிவியல் ரீதியாக சமூகத்தை தெரிந்து கொள்ளவும், விவாத இணையங்களின் பக்கம் பெண்களை வருவதை இதன் மூலம்; தடுக்கவும் விரும்புகின்றனர். மக்களின் சமூக அறிவை தெரிந்து கொள்ளமுடியாத வகையில், தமக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இதன் மூலம் தெளிவாகவே சொல்ல முனைகின்றனர்.

 

5.இவர்கள் தமிழ் மக்களின் ஏகபோகத் தலைவர்களாக தம்மைத்தாம் கூறிக் கொள்கின்றனர். தமிழ் மக்களையே இழிவுபடுத்தி அடக்கியாளும் அதிகாரத்தை இவர்கள் கைப்பற்றினால், இந்த தூசணப் பேராசிரியர்கள் எதைத் தான் சமூகத்துக்கு தருவார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. தமிழீழத்தின் அதிகாரம் செலுத்தும் ஒரேயொரு தேசிய மொழி இதுவாகத்தான் இருக்கும்.
6.நான் புலிகளின் வதை முகாமில் இருந்துடன், அவர்களின் சித்திரவதைகளை சந்தித்தவன். அந்த வதை முகாமில் இருந்து தப்பியவன்; என்ற வகையில், புலிகளின் தேசிய மொழியை நன்கு அறிந்தவன். அங்கு புலிகளின் மொழியே தூசணமாகவே இருந்தன. (16.07.1987 ரயாகரன் புலிகளின் வதைமுகாமில் இருந்து தப்பி தலைமறைவாக வாழ்ந்த வாழ்வை கைவிட்டு பகிரங்கமான 21.08.1987 அன்று பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை இணையத்தில் பார்க்க முடியும்.) அவர்களின் உத்தியோகபூர்வமான கட்டளைகள் முதல் அனைத்தும் துசணமின்றி இருப்பதில்லை. அவர்களுக்கு இடையில் கூட இது விதிவிலக்காக இருப்பதில்லை. விசாரணை, தண்டணை முதல் அனைத்தும் இந்த மொழியூடாகவே இருந்தது.

 

7.சமூக முரண்பாடுகளையும், சமூக இடைவெளிகளையும் எதிர்கொண்டு தீர்க்க வக்கற்ற கோழைகள் இப்படி அணுகுவது இயல்பானது. சமூகம் பற்றி எதையும் தெரிந்து கொள்ளாத வரை, முரண்பாடுகளை தூசணத்தினினால்; தூற்றுவதே அவர்களுத் தெரிந்த ஒரேயொரு கொள்கையாகும்;. அல்லது போனால் மண்டையில் போடுவதன் மூலம் கோரிக்கை எழுவதை தடுக்க முனைகின்றனர்.
8.புலிகளுக்கு ஆதரவாக மிதவாதமாக கருத்துகளை முன்வைப்பவர்கள், தமது அணி சார்பாக இப்படி அனுகும் போது, மௌனமாக அதை அங்கீகரித்தபடி தான் தம்மையும் தமது மிதவாதக் கருத்தையும் வெளிப்படுத்த முனைகின்றனர். அவர்கள் இந்த மாதிரியான சமூக விரோத அணுகுமுறையை கண்டிப்பதில்லை. உண்மையில் இந்த இரு பிரிவும் நகமும் சதையுமாகத்தான் கூடி நிற்கின்றனர். இது முன்பு புளாட்டில் அரசியல் பிரிவும் இராணுவப் பிரிவும் ஒருங்கிணைத்து மக்களுக்கு எதிராக எப்படி செயல்பட்டதோ அப்படியே உள்ளது.

 

"கொடுமையின் சுமை அழுத்தும்போது மனிதன் ஊமையாகிவிடுகின்றான்" பின்பு அவன் பெயரில் ஊர்வலம், அறிக்கை, மொழி என அனைத்தையும் புணர்ந்து புனைந்து விடுகின்றனர். கருத்தை கருத்தாக எதிர்கொண்டு கருத்துக்கு பதிலளிக்க வக்கற்ற போன நிலையில், எட்டப்பன் என்றும் நாய் என்றும் கைக்கூலி என்றும் துற்றவே முடிகின்றது. யார் நாய், யார் எட்டப்பன் யார் கைக்கூலி என்பதை எல்லாம், வரலாற்றில் யாருக்கும் மிகச் சரியாக பொருத்தும் என்பதை, காலம் தெளிவாகவே உங்கள் போன்றவர்களுக்கு பதிலளிக்கும். இதை யாரும் தடுத்து நிறுத்தமடியாது. வினைவிதைத்தவன் தான் வினையைத் தான் அறுக்க முடியும்.

 

பேரினவாதத்தின் சமூக பொருளாதார உள்ளடகத்தை புலிகள் விமர்சிப்பதில்லை. அதில் அவர்களுக்கு இடையில் நீக்கலற்ற ஒரு ஒற்றுமை. சந்திரிக்கா என்ற சிங்கள பேரினவாதியினை நான் விமர்சித்துள்ள அளவுக்கு, புலிகள் கூட இதுவரை விமர்சிக்கவில்லை. இன்றைய சிங்கள அனைத்துக் கட்சிகளையும், நாம் தெளிவாகவே சிங்கள பேரினவாதிகளாகவே விமர்சித்து வந்துள்ளோம்;, விமர்சித்து வருகின்றோம். எனது கட்டுரையின் பெரும்பகுதி பேரினவாதத்துக்கு எதிராகவே எழுதப்பட்டுள்ளது. நாங்கள் பேரினவாதத்தை மட்டுமல்ல, ஏகாதிபத்தியங்களையும் கூட சேர்த்தே தான் விமர்சிக்கின்றோம்.

 

இதை மூடிமறைக்க தூசணத்தில் திட்டி தீர்ப்பதுதான் தமிழ்மொழி வளர்ச்சி என்றால், அதைத் தான் தமிழ் தேசியத் தலைவர் தமிழீழத்தின் மொழியாக்க உள்ளார் என்றால், அதை தராளமாக விரிவாகச் செய்யுங்கள். தூசணம் என்பது பெண்களை பாலியல் ரீதியாக இழிவாக்கி கொச்சைப்படுத்துவதே. இப்படிக் கொச்சைப்படுத்தியா விடுதலைப்புலிகள் பெண்களை அணிதிரட்டினார்கள். தமிழீழச் சட்டம் இப்படி கூறுவதை தண்டணைக்குரியதாக சரியாகவே வரையறுக்கின்றது. ஆனால் அந்த தேசியத்தின் பெயரில் நீங்கள் கூறுவது முரணாது. புலிகள் சட்டங்கள் புலிக்கு பொருந்தது என்பதைத் தான், மீண்டும் இவை நிறுவுகின்றன.

 

தமிழ்மொழியை இப்படித் தான் வளர்தெடுக்க வேண்டும் என்று, தமிழ் தேசியம் வழிகாட்டுகின்றதா! இதைத்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனியாத தமிழீழத் தாகம் என்கின்றாரா! இந்த தேசிய மொழிக்காகத்தான இவ்வளவு தியாகம் செய்து போராடுகின்றனர்.!


நாங்கள் அப்படி ஒரு நாளும் கருதவில்லை. நீங்கள் அப்படிக் கருதினால், அதை நாங்கள் மொழித் துரோகம் என்போம். தமிழன் தமிழில் கதைப்பதை மறுக்கும் தேசியத்தை, எப்படி மௌனமாக அங்கிகாரிக்க முடியும். துசணத்தால் கதைக்கும் தமிழன் நாடு எங்கே உள்ளது. உங்கள் அப்பா அம்மா துசணத்தையா தமிழ் மொழியாக உங்களுக்கு பாலுட்டி தாலாட்டடில் கற்றுத் தந்தனர் அல்லது உங்கள் தேசிய தலைவர்கள் அப்படிக் கற்றுத்தந்தனரா?. உங்கள் மனைவி, அக்கா, தங்கச்சி முதல் அப்பா அம்மாவுடன் தூசணத்தால் தான் கதைப்பீர்களோ?

 

மனிதன் சார்ந்த சமூக உறவுகள் சிதைந்து போகின்றன. இதற்கு பதிலாக பண உறவுகள் முதன்மை அடைகின்றன. அறிவு, முதுமை, சமூக ஆற்றல், அனுபவம், பெரியவர்கள் என்ற வடிவில் நீடித்த சமூக அந்தஸ்தும், சமூக அறிவு சாhந்த பண்பும் மறுக்கப்படுகின்றது. மாறாக பணம் சார்ந்த அந்தஸ்தும், தனிமனித வழிபாட்டு பண்பும் அறிவின் சூனியத்தில் திணிக்கப்படுகின்றது. சமூக கண்ணோட்டம் சிதைந்து அதனிடத்தில் சுயநலம் முதன்மை பெறுகின்றது. லும்பன் வாழ்க்கை முறையுடன் கூடிய லும்பன் பண்பை, பணப் பண்பாட்டையும் தேசிய கூறாக்கி அதையே சமூகப்பண்பாடாக்குகின்றது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மொத்த விளைவுகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

 

பல பத்தாயிரம் உயிர் தியாகங்களுடன் தொடங்கிய தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்குவது பண்பாட்டு கலாச்சார சிதைவைத்தான். ஒரு இனத்தின் சமூக அடிப்படையையே அழிக்கின்றது. இதுவே பாரிய உளவியல் சமூகச் சிக்கலை உருவாக்குகின்றது. தற்கொலைகளையும், மனநோய்களையும், குடும்பச் சிதைவுகளையும், சமூகப் பிளவுகளையும், சமூக அறியாமையும் நிரந்தரமாக்குகின்றது. தமிழ் சமூகம் தமது சொந்த அறியாமையில் சூனியத்தை நோக்கி ஒடுகின்றது. இதில் நாம் கொடூரமாகவே குதறப்படலாம் சிதைக்கப்படலாம், ஆனால் மனிதனின் சமூகக் கூறு வரலாற்றில் இதை நிரந்தரமாக அனுமதிப்பதில்லை.

27.08.2005