05302023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

திராவிடர் திருப்பாடல்

காலைப் பத்து
வெண்டளையான் வந்த தரவிணைக்
கொச்சகக் கலிப்பா
கிழக்கு மலரணையில் தூங்கிக் கிடந்து
விழித்தான்; எழுந்தான். விரிகதிரோன் வாழி!
அழைத்தார்கள் அன்பால் திராவிடர்கள் உம்மை!
மொழிப்போர் விடுதலைப்போர் மூண்டனவே இங்கே!
விழிப்பெய்த மாட்டீரோ? தூங்குவிரோ மேலும்?
அழிப்பார் தமிழை! அடிமையிற் சேர்ப்பார்!
ஒழிப்பீர் பகையை! நொடியில் மறவர்
வழித்தோன்றும் மங்கையீர், காளையரே வாரீரோ! 1
எழுந்தன புட்கள்; சிறகடித்துப் பண்ணே
முழங்கின! ஏருழவர் முன்செல் எருதை
அழிஞ்சிக்கோல் காட்டி அதட்டலும் கேட்டீர்.
எழுந்திருப்பீர் வீட்டினரே, இன்னும் துயிலோ?
பழந்தமிழர் செல்வம் கலையொழுக்கம் பண்பே
ஒழிந்து படவடக்கர் ஒட்டாரம் செய்தார்
அழிந்தோமா வென்றோமா என்ப துணர்த்த
எழில்மடவீர், காளையரே இன்னேநீர் வாரீரோ! 2
காக்கைக் கழுத்துப்போல் வல்லிருளும் கட்டவிழும்!
தாக்கும் மணிமுரசு தன்முழக்கம் கேட்டீரோ?
தூக்கமோ இன்னும்? திராவிடர்கள் சூழ்ந்துநின்றார்.
தூக்கறியார் வாளொன்றும்! போராடும் துப்பில்லார்.
சாய்க்கின்றார் இன்பத் தமிழைக் குறட்கருத்தை!
போக்கேதும் இல்லா வடக்கர் கொடுஞ்செயலும்
வாய்க்கஅவர் வால்பிடிக்கும் இங்குள்ளார் கீழ்ச்செயலும்
போக்க மடவீரே, காளையரே வாரீரோ! 3
தங்கம் உருக்கிப் பெருவான் தடவுகின்றான்
செங்கதிர்ச் செல்வன்! திராவிடர்கள் பல்லோர்கள்
தங்கள் விடுதலைக்கோர் ஆதரவு தாங்கேட்டே
இங்குப் புடைசூழ்ந்தார் இன்னும் துயில்வீரோ?
பொங்கும் வடநாட்டுப் பொய்யும் புனைசுருட்டும்
எங்கும் தலைவிரித்தே இன்னல் விளைத்தனவே
வங்கத்துக் கிப்பால் குடியரசு வாய்ப்படைய
மங்கையீர், காளையீர் வாரீரோ வாரீரோ! 4
தேர்கலி கொள்ள அமர்ந்து செழும்பரிதி
ஆர்கலிமேற் காட்சி அளிக்கின்றான் கீழ்த்திசையில்
ஊர்மலர்ந்தும் உங்கள் விழிமலர ஒண்ணாதோ?
சீர்மலிந்த அன்பின் திராவிடர்கள் பல்லோர்கள்
நேர்மலிந்தார்! பெற்ற நெருக்கடிக்குத் தீர்ப்பளிப்பார்
86
பார்கலந்த கீர்த்திப் பழய திராவிடத்தை
வேர்கலங்கச் செய்ய வடக்கர் விரைகின்றார்
கார்குழலீர், காளையரே வாரீரோ வாரீரோ! 5
செஞ்சூட்டுச் சேவல்கள் கூவின கேட்டீரோ
மிஞ்சும் இருள்மீது பொன்னொளி வீழ்ந்ததுவே!
பஞ்சணை விட்டெழுந்து பாரீர் திராவிடத்தை
நஞ்சுநிகர் இந்தியினை நாட்டித் தமிழமுதை
வெஞ்சேற்றுப் பாழ்ங்கிணற்றில் வீழ்த்த நினைத்தாரே!
நெஞ்சிளைப் போமோ? நெடுந்தோள் தளர்வோமோ?
அஞ்சுவமோ என்று வடக்கர்க் கறிவிக்கக்
கொஞ்சு குயில்களே, காளையரே வாரீரோ! 6
கோவாழும் இல்லொன்றே கோவிலாம் மற்றவை
நாவாலும் மேல்என்னோம்! நல்லறமே நாடுவோம்
தேவர்யாம் என்பவரைத் தெவ்வ ரெனஎதிர்ப்போம்
சாவு தவிர்ந்த மறுமையினை ஒப்புகிலோம்
வாழ்விலறம் தந்து மறுமைப் பயன்வாங்கோம்
மேவும்இக் கொள்கைத் திராவிடத்தை அவ்வடக்கர்
தாவித் தலைகவிழ்க்க வந்தார் தமைஎதிர்க்க
பாவையரே, காளையரே பல்லோரும் வாரீரோ! 7
மன்னிய கீழ்க்கடல்மேல் பொன்னங் கதிர்ச்செல்வன்
துன்னினான் இன்னும்நீர் தூங்கல் இனிதாமோ?
முன்னால் தமிழ்காத்த மூவேந்தர் தம்உலகில்
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது" என்னும் நன்னாட்டில்
சின்ன வடக்கரும் வால்பிடிக்கும் தீயர்களும்,
இன்னலே சூழ்கின்றார் இன்பத் திராவிடத்துக்
கன்னல்மொழி மங்கையீர், காளையரே வாரீரோ! 8
நீல உடையூடு பொன்னிழை நேர்ந்ததென
ஞால இருளின் நடுவில் கதிர்பரப்பிக்
கோலஞ்செய் கின்றான் இளம்பரிதி! கொண்டதுயில்
ஏலுமோ? உம்மை எதிர்பார்த் திருக்கின்றார்
தோலிருக்க உள்ளே சுளையைப் பறிப்பவரைப்
போல வடக்கர்தம் பொய்ந்நூல் தனைப்புகுத்தி
மேலும்நமை மாய்க்க விரைகின்றார் வீழ்த்தோமோ?
வாலிழையீர், காளையரே வாரீரோ வாரீரோ! 9
அருவி, மலை,மரங்கள் அத்தனையும் பொன்னின்
மெருகு படுத்தி விரிகதிரோன் வந்தான்.
விரியாவோ உங்கள் விழித்தா மரைகள்?
அருகு திராவிடர்கள் பல்லோர்கள் ஆர்ந்தார்
ஒருமகளை ஐவர் உவக்கும் வடக்கர்
திருநாட்டைத் தம்மடிக்கீழ்ச் சேர்க்க நினைத்தார்.
உருவிய வாளின், முரசின்ஒலி கேட்பீர்
வரைத்தோளீர், காளையரே வாரீரோ வாரீரோ! 10
87
விடுதலைப் பாட்டு
மீள்வது நோக்கம் - இந்த
மேன்மைத் திராவிடர் மீளுவ தின்றேல்
மாள்வது நோக்கம் - இதை
வஞ்ச வடக்கர்க்கெம் வாள்முனை கூறும்!
ஆள்வது நோக்கம் - எங்கள்
அன்னை நிலத்தினில் இன்னொரு வன்கால்
நீள்வது காணோம் - இதை
நீண்டஎம் செந்தூக்கு வாள்முனை கூறும்! 1
மீள்வது நோக்கம்...
கனவொன்று கண்டார் - தங்கள்
கையிருப் பிவ்விடம் செல்லுவ துண்டோ?
இனநலம் காண்பார் - எனில்
இங்கென்ன வேலை அடக்குக வாலை!
தினவுண்டு தோளில் - வரத்
திறல்மிக உண்டெனில் வந்து பார்க்கட்டும்!
மனநோய் அடைந்தார் - அந்த
வடக்கர்க்கு நல்விடை வாள்முனை கூறும்! 2
கனவொன்று கண்டார்...
திராவிடர் நாங்கள் - இத்தி
ராவிட நாடெங்கள் செல்வப் பெருக்கம்!
ஒரே இனத்தார்கள் - எமக்
கொன்றே கலைபண் பொழுக்கமும் ஒன்றே!
சரேலென ஓர்சொல் - இங்குத்
தாவுதல் கேட்டெம் ஆவி துடித்தோம்.
வராதவர் வந்தார் - இங்கு
வந்தவர் எம்மிடம் வாளுண்டு காண்பார்! 3
திராவிடர் நாங்கள்...
இராப் பத்து
வெண்டளையான் வந்த இயற்றரவிணைக்
கொச்சகக் கலிப்பா
திருவிளக் கேற்றி இரவு சிறக்க
வருவிருந் தோடு மகிழ்ந்துண வுண்டீர்!
அருகு மடவார் அடைகாய் தரவும்
பருகுபால் காத்திருக்கப் பஞ்சணை மேவித்
தெருவினில் யாம்பாடும் செந்தமிழும் கேட்பீர்!
பெருவாழ்வு வாழ்ந்த திராவிடநா டிந்நாள்
திருகு வடநாட்டார் கையினிற் சிக்கி
உருவழிந்து போகாமே காப்பாற்றல் உங்கடனே. 1
ஆற்றும் பணிகள் பகலெல்லாம் ஆற்றியபின்
சேற்றில் முளைத்திட்ட செந்தா மரைபோலும்
88
தோற்றும் இரவும் சுடர்விளக்கும்! இல்லத்தில்
காற்று நுகர்ந்திடுவீர்; காது கொடுத்தேயாம்
சாற்றுதல் கேளீர்! தமிழை வடநாட்டார்
மாற்றித் தமிழர் கலையொழுக்கம் பண்பெல்லாம்
மாற்றவே இந்திதனை வைத்தார்கட் டாயமென
வேற்றுவரின் எண்ணத்தை வேரறுத்தல் உங்கடனே. 2
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனுமோர்
சிறப்புடைய நம்கொள்கை நானிலத்தின் செல்வம்!
தறுக்கன் வடநாட்டான் தன்னலத்தான் இந்நாள்
நிறப்பாகு பாட்டை நிலைநிறுத்த எண்ணி
வெறுப்புடைய இந்தி விதைக்கின்றான் இங்கே
அறப்போர் தொடுத்திடுவோம் வெல்வோம்நாம் அன்றி
இறப்போம் உறுதி இதுவாகும் என்பீர்
உறக்கம் தவிர்த்துணர்வே உற்றெழுதல் உங்கடனே. 3
தீயில் நிலநீரில் காற்றில் செழுவானில்
ஆயில் குறியில் அறியாப் பெரும்பொருட்குக்
கோயில் தனைஒப்புக் கொள்ளோம்! சுமந்தீன்ற
தாயில் பிறிதோர் பொருட்குத் தலைவணங்கோம்!
வாயில் பொறாமைச்சொல் வையோம்! அவாவெகுளி
தீயிற் கொடுஞ்சொற்கள் தீர்த்தோம்! அறப்பயனே
வாயிற் பருகுவோம். நம்கொள்கைப் பற்றறுக்க
நோயில் நுழைஇந்தி வேரறுத்தல் உங்கடனே. 4
ஒழுக்கம் கெடுக்கும்! உணர்வை ஒடுக்கும்!
வழக்கும் பெரும்போரும் மாநிலத்தில் சேர்க்கும்!
இழுக்கும் தருமதங்கள் யாவும் விளக்கிக்
கொழுக்கும் குருமாரின் கொட்டம் அறுத்துத்
தழைக்கத் தழைக்க நறுங்கொள்கை நெஞ்சிற்
பழுக்கும் படிவாழ் திராவிடர் பண்பை
அழிக்க நினைத்திங்கே ஆளவந்தார் இந்தி
புழுக்கும் படிசெய்தார் போக்கிடுதல் உங்கடனே. 5
எட்டுத் திசையும் பதினா றிடைப்பாங்கும்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு பேரொளிக்கே
எட்டுக் குடப்பசுப்பால் இட்டாட்டு வீரென்னும்
பட்டாடை சாத்தென்னும் பல்பணி பூட்டென்னும்
குட்டி வணங்குமுன்பு பார்ப்பனனைக் கும்பிடென்னும்
மட்டக் கருத்துக்கள் மாளா மடமைஎலாம்
கொட்டி அளக்குமோர் இந்தியினை நம்தலையில்
கட்டுவார் தம்மைஒரு கைபார்த்தல் உங்கடனே. 6
தந்தைமார் பற்பலராய்த் தாயொருத்தி யாய்,மாட்டு
மந்தையுடன் இந்நாட்டில் வந்தவர்கள் நாமல்லோம்!
முந்தைக்கு முந்தை அதன்முந்தை நாளாக
இந்தப் பெருநாடாம் யாழின் இசையாவோம்!
வந்தார்க்கோ நாமடிமை? வந்தார் பொருள்விற்கும்
சந்தையா நம்நாடு? தாயாம் தமிழிருக்க
89
இந்தியோ கட்டாயம்? என்ன பெருங்கூத்தோ?
கொந்துமொரு கொத்தடிமை நீக்கிடுதல் உங்கடனே. 7
புலையொழுக்கம் கொண்டவர்கள் பொல்லா வடக்கர்
தலையெடுத்தார் இன்பத் திராவிடதின் தக்க
கலையொழுக்கம் பண்பனைத்தும் கட்டோ டொழித்து
நிலைபுரட்டி நம்நாட்டை நீளடிமை யாக்க
வலைகட்டி நம்மில் வகையறியா மக்கள்
பலரைப் பிடித்துரா மாயணத்தை மற்றும்
மலிபொய் மனுநூலை வாழ்வித்தார் யாவும்
தொலையப் பெரும்போர் தொடுப்பதும் உங்கடனே. 8
தென்றற் குளிரும், செழுங்கா மலர்மணமும்,
நின்று தலைதாழ்த்தும் வாழையும், நீள்கரும்பும்,
என்றும் எவர்க்குமே போதும்எனும் செந்நெல்
நன்று விளையும் வளமார்ந்த நன்செயும்,
அன்றன் றணுகப் புதிய புதியசுவை
குன்றாத செந்தமிழும், குன்றும் மணியாறும்,
தொன்றுதொட்ட சீரும் உடைய திராவிடத்தை
இன்று விடுதலைச்சீர் எய்துவித்தல் உங்கடனே. 9
"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அ·தொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்" என்ற வள்ளுவர்சொல்
தாழ்வொன் றடையாது தஞ்செயலை நன்றாற்றும்
ஆழ்கடல் முப்பாங் கமைந்த திராவிடத்தில்
வாழ்கின்றார் ஆன வடுத்தீர் திராவிடர்கள்
வாழ்க! நனிவாழ்க! மாற்றார்கள் வீழ்ந்திடுக!
யாழ்கொள் நரம்பும் இசையும்போல் எந்நாளும்
வாழ்க திராவிடமும் வான்புகழும் சேர்ந்தினிதே. 10
திராவிடர் ஒழுக்கம்
சிந்து கண்ணிகள்
தட்டுப் படாதபெரும் - பொருட்கொரு
சாதியும் உண்டோடா? - படுவாய்
சாதியும் உண்டோடா?
மட்டற்ற செம்பொருட்கே - முரண்படும்
மதங்கள் உண்டோடா? 1
எட்டுத் திசைமுழுதும் - விசும்பு,மண்
எங்கும் நிறைபொருட்கே - படுவாய்
எங்கும் நிறைபொருட்கே
கொட்டு முழக்குண்டோ? - அமர்ந்திடக்
கோயில்கள் உண்டோடா? 2
பிட்டுச் சுமந்ததுண்டோ? - நிறைபொருள்
பெண்டாட்டி கேட்டதுண்டோ? - படுவாய்
பெண்டாட்டி கேட்டதுண்டோ?
கட்டைக் குதிரைகட்டும் - பெருந்தேர்
காட்டெனக் கேட்டதுண்டோ? 3
90
பட்டுடை கேட்டதுண்டோ? - பெரும்பொருள்
பண்ணியம் உண்பதுண்டோ? - படுவாய்
பண்ணியம் உண்பதுண்டோ?
அட்டைப் படத்தினிலும் - திரையிலும்
அப்பொருள் காண்பதுண்டோ? 4
பிரமன் என்பதிலும் - மொட்டைத்தலைப்
பிச்சையன் என்பதிலும் - படுவாய்
பிச்சையன் என்பதிலும்
முருகன் என்பதிலும் - திருமால்
முக்கணன் என்பதிலும் 5
வரும் பெருச்சாளி - அதன்மிசை
வருவன் என்பதிலும் - படுவாய்
வருவன் என்பதிலும்
சரிந்த தொந்தியுள்ளார் - பார்ப்பனர்க்குத்
தரகன் என்பதிலும் 6
பெரும் பொருள்உளதோ? - தொழுவதில்
பேறுகள் பெற்றதுண்டோ? - படுவாய்
பேறுகள் பெற்றதுண்டோ?
கரும் பிருக்குதடா - உன்னிடத்தில்
காணும் கருத்திலையோ! 7
இரும்பு நெஞ்சத்திலே - பயன்ஒன்றும்
இல்லை உணர்ந்திடடா - படுவாய்
இல்லை உணர்ந்திடடா!
திரும்பும் பக்கமெலாம் - பெருமக்கள்
தேவை யுணர்ந்திடடா! 8
தீய பொறாமையையும் - உடைமையிற்
செல்லும் அவாவினையும் - படுவாய்
செல்லும் அவாவினையும்
காயும் சினத்தினையும் - பிறர்உளம்
கன்ற உரைப்பதையும் 9
ஆயின் அகற்றிடுவாய் - உளத்தினில்
அறம் பிறக்குமடா! - படுவாய்
அறம் பிறக்குமடா!
தூய அறவுளத்தால் - செயலினில்
தொண்டு பிறக்குமடா! 10
ஏயும்நற் றொண்டாலே - பெரியதோர்
இன்பம் பிறக்குமடா! - படுவாய்
இன்பம் பிறக்குமடா!
தீயும் குளிருமடா - உனையண்டும்
தீயும் பறக்குமடா! 11
வாயில் திறக்குமடா - புதியதோர்
வழி பிறக்குமடா - படுவாய்
வழி பிறக்குமடா!
ஓயுதல் தீருமடா - புதியதோர்
ஒளி பிறக்குமடா! 12
91
தாயொடு மக்களடா - அனைவரும்
சரிநிகர் உடைமை - படுவாய்
சரிநிகர் உடைமை
தேயும் நிலைவிடுப்பாய் - இவையே
திராவிடர் ஒழுக்கம். 13
அன்னை அறிக்கை
(திராவிடம்)
என்னருமை மக்களே இன்பத் திராவிடரே
இன்னல் வடக்கர்களை எள்ளளவும் நாடாதீர்!
உங்கள் கலைஒழுக்கம் மிக்க உயர்ந்தனவாம்
பொங்கிவரும் ஆரியத்தின் பொய்க்கதைகள் ஒப்பாதீர்!
ஏமாற்றி மற்றவரை, ஏட்டால் அதைமறைத்துத்
தாமட்டும் வாழச் சதைநாணா ஆரியத்தை
நம்புவார் நம்பட்டும் நாளைக் குணர்வார்கள்
அம்பலத்தில் வந்ததின்றே ஆரியரின் சூழ்ச்சியெலாம்.
பிச்சை எடுப்பவர்கள் பேரதிகா ரம்பெற்றால்
அச்சத்தால் நாட்டில் அடக்குமுறை செய்யாரோ?
ஆட்சி யறியாத ஆரியர்கள் ஆளவந்தால்
பாட்டாளி மக்களெல்லாம் பாம்பென்றே அஞ்சாரோ?
மிக்க மதவெறியர் மேல்நிலையை எய்திவிட்டால்
தக்க முŠலீமைத் தாக்கா திருப்பாரோ?
உங்கள் கடமை உணர்வீர்கள்; ஒன்றுபட்டால்
இங்கே எவராலும் இன்னல் வருவதில்லை!
ஏசு மதத்தாரும் முŠலீம்கள் எல்லாரும்
பேசில் திராவிடர்;என் பிள்ளைகளே என்றுணர்க!
சாதிமதம் பேசித் தனித்தனியே நீரிருந்தால்
தோதுதெரிந் தாரியர்கள் உம்மைத் தொலைத்திடுவார்!
ஆரியரின் இந்தி அவிநாசி ஏற்பாடு
போரிட்டுப் போக்கப் புறப்படுங்கள் ஒன்றுபட்டே!
ஆண்டேன் உலகுக்கே ஆட்சிமுறை நான்தந்தேன்
பூண்ட விலங்கைப் பொடியாக்க மாட்டீரோ?
மன்னும் குடியரசின் வான்கொடியை என்கையில்
இன்னே கொடுக்க எழுச்சி யடையீரோ!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166b.htm#6._திராவிடர்_திருப்பாடல்