நீதியானதும் நியாயமானதுமான ஒரு மக்கள் யுத்தத்தை இனி ஒருநாளும் புலிகளால் நடத்தவே முடியாது. மாறாக அநியாயமான மக்கள் விரோத யுத்தத்தையே புலிகளால் நடத்த முடியும். எப்படி மக்களுக்கான ஒரு பேச்சுவார்த்தையை அவர்கள் நடத்த முடியாதோ,
அதேயொத்த அரசியல் நிபந்தனைதான் ஒடுக்கப்பட்ட மக்கள் யுத்தத்தையும் நடத்த முடியாமைக்கான காரணமாகும். இன்று புலிகள் நடத்த முனைவது, நடத்தப் போவதாக பசப்புவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான யுத்தத்தையல்ல. புலிகள் இன்று நடத்த முனைவது மக்கள் யுத்தமல்ல, மக்கள் விரோத புலி யுத்தத்தையேயாகும். இதை எந்த அடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை யுத்தமாக நியாயப்படுத்த முனைந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமானது இந்த அரசியல் என்ற உண்மையை யாரும் மறுதலிக்க முடியாது. சிங்களப் பேரினவாதம் நடத்துகின்ற மக்கள் விரோத பாசிச யுத்தம் எவ்வளவுக்கு கோரமானதாகவும் இழிவானதாகவும் மாறினாலும் கூட, புலிகளின் யுத்தம் ஒடுக்கபட்ட மக்கள் யுத்தமாக ஒருநாளும் மாறிவிடாது.
எதிர்வன்முறை பற்றி லெனின் 'நாங்கள் வன்முறையை விரும்புவதில்லை. புரட்சியை மிகமிக சமாதான வழிகளில் ஈட்டவே விரும்புகின்றோம். ஆனால் சுரண்டும் வர்க்கம் எமக்கு எதிராக கொடிய அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் போது சுரண்டும் வர்க்கத்தின் வன்முறையை தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வன்முறை மூலம் எதிர்த்து நிற்கின்றோம்" என்றார். போராட்ட நோக்கங்களுடன் கூடிய நியாயத்தை, போராட்ட முறைகளை மனித இனம் ஏற்றுக்கொள்ளும் வகையில் முன்வைத்து போராடுவது அவசியம். ரவுடிகள் போல், மாபியா போல் திணிப்பது போராட்டமாகாது. மனித தர்மமும், மனித நேயமுமற்ற எவையும், நியாயப்படுத்த முடியாதவையாக மாறிவிடுகின்றது.
இன்று அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இராணுவ ரீதியாக புலிகள் வென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கைக்குரிய வாதங்களை விதைக்க முனைகின்றனர். இது பொய்மையிலான ஒரு கானல் நீராகும். அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையில் புலிகள் தோற்றது என்பது, பேரினவாதத்தின் அரசியலால் சூழ்ச்சியால் அல்ல. மாறாக புலிகளின் தவறான அரசியலால் தான், அவர்களை இலகுவாக பேரினவாதிகள் தோற்கடிக்கமுடிந்தது. இதே நிபந்தனை யுத்தத்துக்கும் பொருந்துகின்றது. யுத்ததந்திரத்தில் பலர் கருதுவது போல் அரசியல் பேச்சுவார்த்தை வேறு, யுத்தம் வேறு என்பது முற்றிலும் தவறானதாகும். இரண்டும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை வென்று எடுப்பதில், இவ்விரண்டு கட்டங்களும் நிச்சயமாக வந்து போகின்றன.
சமாதானம் அதையொட்டிய பேச்சுவார்த்தைகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக நடத்தப்படுகின்றன என்ற ஒற்றைப்பரிமாண வாதம், உண்மையில் ஒரு தலைப்பட்சமானது. சமாதானம் பேச்சுவார்த்தை எதிரியை அம்பலப்படுத்தும், ஒரு புரட்சிகரமான ஒரு யுத்ததந்திரம் கூட. எதிரி பற்றி பரந்துபட்ட மக்களின் சுயாதீனமான சொந்த அனுபவத்தை உருவாக்கிக் கொடுக்கவும், யுத்தத்துக்கான முன்தயாரிப்பாகவும் கூட பேச்சுகளை பயன்படுத்தமுடியும். இதற்கு உலகில் பற்பல உதாரணங்கள் உண்டு. எதிரியை இராணுவ ரீதியாக வெற்றிகொள்ள, மேலும் அவர்களை அரசியல் ரீதியாக பெரும்பான்மை மக்கள் முன் அம்பலப்படுத்த, பேச்சுவார்த்தைகள் உதவுகின்றன. இதை நாங்கள் தவறாக கையாளும் போது, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்வைக்காத போது, அதுவே போராட்டத்தை சிதைத்து சின்னபின்னாமாக்கிவிடுகின்றது. ஒரு பேச்சுவார்த்தையை எப்படி கையாள்வது என்பது எதிரி தீர்மானிக்க முடியாத வகையில், மக்களின் அரசியல் அபிலாசைகள் தீர்மானிக்கும் வகையில் நகர்த்துவது அவசியம். இது மக்களின் எதிரியை மண் குப்பிற கவிழ்க்கும். உண்மையான ஒடுக்கப்பட்ட விடுதலை சக்திகளால் தான், பேச்சவார்த்தை எந்த வழியூடாக எப்படி நகரவேண்டும் என்பதை தீர்மானிக்கமுடியும். மாறாக ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இருப்பதற்கு பதில், எமது குறுகிய நோக்கில் தவறாக கையாளும் போது, அதுவே எமக்கு சுமையாக விலங்காகிவிடும். இதுவே புலிகள் விடையத்தில் நடக்கின்றது. இது நேபாளத்தில் நடக்காது.
ஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறைக்கான அரசியல் அடிப்படை
ஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறைக்கான அரசியல் அடிப்படை, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் கோரிக்கையில் அடங்கியுள்ளது. இதை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கமுடியாது. பேச்சுவார்த்தை, யுத்தம் இரண்டிலும் இது அக்கம்பக்கமாக, ஒன்றில் இருந்து ஒன்றுக்கு முன்னேறிச் செல்லுகின்றது. ஒன்றில் சறுக்கி மற்றொன்றில் முன்னேறிச் செல்லவே முடியாது. அது வெற்று கானல் நீராகவே வெளிப்படும்.
இதை நிராகரிக்கும் புலிகள், முன்முயற்சி கொண்ட இராணுவ நடவடிக்கையை ஒருதலைப்பட்சமாக நியாயப்படுத்துகின்றனர். பேரினவாதத்துக்கு எதிராக யுத்தம் தவிர்க்க முடியாதது என்கின்றனர். பேரினவாதத்துக்கு எதிராக யுத்தம் எப்படி தவிர்க்க முடியாதோ, அதேபோல் பேச்சுவார்த்தையும் தவிர்க்கமுடியாது. ஒன்றை நிராகரித்து, ஒன்றை செய்ய முடியாது. அக்கபக்கமாக இரண்டையும் சரியான யுத்ததந்திரத்துடன் பயன்படுத்த தெரிந்து இருக்க வேண்டும். அது தான் மக்கள் தலைமையின் கடமை. மக்கள் எதை முதன்மைப்படுத்தி நிற்கின்றனரோ, அதில் ஊன்றி நின்று எதிரியை அதற்குள் இழுத்து தனிமைப்படுத்தவேண்டும். தமிழ் மக்கள், சிங்கள மக்கள் உள்ளிட, இலங்கை வாழ் அனைத்து மக்களும் சமாதானத்தையும் அமைதியையும் கோருகின்றனர். இதை நிராகரித்துவிட்டு நாம் மட்டும் தனித்து யுத்தத்தை நடத்த முடியாது. இது மாபெரும் மற்றொரு அரசியல் தவறாகவும், அழிவாகவும் முடியும். இந்த மனநிலை இரண்டு படைகளினுள்ளும் காணப்படும். அமைதி சமாதானம் என்பதில் நேர்மையான உளச்சுத்தியான செயற்பாடு மூலம், மக்கள் விரும்பும் அமைதியை சமாதானத்தை எதிரி தரமாட்டான் என்பதை நடைமுறையில் அரசியல் ரீதியாக நிறுவவேண்டும். இதைவிட்டு விட்டு நாங்களே சமாதானத்தினதும் அமைதியினதும் எதிரியாக மாறினால், அதன் விழைவு பாரதூரமானது. வரலாறு மன்னிக்க மாட்டாது.
இந்த நிலையில் தான், புலிகள் ஒடுக்கப்பட்ட முழு இலங்கை மக்களும் விரும்பிய அமைதி சமாதானத்துக்கு எதிராக செயற்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, நீட்சியாக யுத்தம் உடன் வேண்டும் என்று வலிந்து தொடங்குகின்றனர். விடுதலை போராட்டத்துக்கு உடனடியாக இராணுவ ரீதியான செயற்பாடு அவசியம் என்கின்றனர். முன்முயற்றி கொண்ட புலிகளின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி பொருத்தமற்ற வகையில் முரண்பாடாகவே ஓலமிடுகின்றனர். புலிகளின் உத்தியோகப+ர்வ இராணுவப் பேச்சாளர், இராணுவமே ஒரு தலைப்பட்சமாக தம்மைத் தாக்குவதாக கூறுகின்றார். இதற்கு எதிர்வினையைத் தான் புலிகள் செய்வதாக கூறுகின்றார். மறுபக்கத்தில் புலிப் பினாமி இணையங்கள், செய்திச் சேவைகள், அனைத்தும் இராணுவ தாக்குதலின் அவசியம் பற்றி சூழுரைத்தனர். மக்கள் விரும்பிய சமாதானம் அமைதிக்கு புறம்பாக, புலிகள் வலிந்து ஒருதலைபட்சமான தாக்குதலை அரசுபடைகள் மீது நடத்தினர். எப்படி ஒரு தலைப்பட்சமாக பேச்சுவார்த்தையில் இருந்து விலகினரோ, அப்படியே யுத்தநிறுத்தையும் ஒருதலைபட்சமாக மீறினார். இன்று இரண்டையும் முழுமையாக செய்யமுடியாத ஒரு அரசியல் நெருக்கடிக்குள் புலிகள் சிக்கித் திணறுகின்றனர்.
புலிகளின் முரண்பாடாக இராணுவ தாக்குதல் பற்றி கருத்துரைகளை முன்வைத்தபடி தான், இராணுவ தாக்குதல்கள் தவிர்க்க முடியாது என்கின்றனர். மக்கள் விரும்பும் சமாதானம், அமைதியை இராணுவ தாக்குதல் ஊடாகவே அடையமுடியும் என்று ஒரு தலைப்பட்சமாக கூறுகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு நிம்மதியான வாழ்வை பெற்றுத் தரமுடியும் என்கின்றனர். பேரினவாதத்தை எதிர்கொள்ள மாற்றுவழிகள் இல்லையென்கின்றனர். ஆனால் இலங்கையில் வாழும் எந்த இன மக்களும், இந்த முடிவுக்கு வரவில்லை. ஒரு இராணுவ கும்பல்களும், யுத்தத்தினால் இலாபமடையும் பொறுக்கிகளும் தான் யுத்தத்தை நோக்கி ஆகாகா என்று ஓடுகின்றனர்.
யுத்த ஆதரவுக் கருத்தை மக்கள் மேல் திணிக்க முடியாது
யுத்த ஆதரவுக் கருத்தை மக்கள் மேல் திணிக்க முடியாது. யுத்தத்தின் அவலத்தை மக்கள் எதார்த்தமாக சந்திப்பதால், அதற்கு ஆதரவு கொடுத்துவிட மாட்டார்கள். யுத்த வெறியர்கள் வேறு, பரந்துபட்ட மக்கள் வேறு. யுத்த வெறியர்களின் நலன்கள் வேறு, மக்களின் நலன்கள் வேறு.
2002 முதலாக உருவாக்கிய அமைதி சமாதானம் நோக்கிய அமைதி ஒப்பந்தம், எப்போது யாரால் ஏன் தூக்கி வீசப்பட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியாத ஒரு சூனிய நிலையில் தான் யுத்தம் திணிக்கப்பட்டது. அமைதி சமாதான ஒப்பந்தம் கையெழுத்திட்ட மை காய முன்பே, அதை மீறுவதும் தொடங்கியது. புலிகள் அதிகளவில் படுகொலைகளைச் செய்து, தமது பாசிச நடவடிக்கையை அமைதிக்கால செயற்பாடாக்கினர்.
அமைதி சமாதானம் நோக்கிய பேச்சுவார்த்தையில், தமிழ்மக்களின் பிரச்சனைகள் எவையும் பேசப்படவேயில்லை. அரசியல் ரீதியான பேச்சு வார்த்தைக்குப் பதில், தமது குறுகிய இராணுவ நலன்களை முதன்மைப்படுத்திய இராணுவ கோரிக்கைக்குள் தான் பேச்சு வார்த்தைகள் நடந்தன. இராணுவ நலன் சார்ந்த சலுகைகள் பலவற்றை பெற்று அவற்றை புலிகள் அனுபவித்தனர். சிலவற்றில் தொங்கிக் கொண்டு அங்குமிங்கும் இழுக்கப்பட்டனர். இப்படி பேச்சுவார்த்தையை நெருக்கடிக்குள் இட்டுச்சென்றனர்.
பிரச்சனை எங்கே என்பதை புரிந்துகொள்ள முடியாத வகையில், பேச்சுவார்த்தையின் விளைவுகள் அமைந்தன. சில பேச்சுகள் என்ன நடந்தது என்பதே, யாருக்கும் தெரியாத ஒரு விடையமாகியது. இந்த பேச்சுவாhத்தையின் முடிவுகள் என்ன? என்ன நடந்தது? என்று யாரும் திரும்பிப் பார்த்தால் எதையும் புரிந்துகொள்ள முடியாத அரசியல் சூனியம் தான் எச்சமாக எஞ்சிக்கிடக்கின்றது.
கருணா விவகாரம் வந்த போது, இது மேலும் சிக்கலுக்குள்ளாகியது. கருணா குழுவை அழிக்க புலிக்கு உதவிய அரசு, தொடர்ந்தும் புலிகளின் கூலிப்பட்டாளமாக இயங்க மறுத்தனர். புலிகள் இராணுவத்தை தமது கூலிப்பட்டாளமாக இயங்க கோரும் நிபந்தனைகளுடன் தான், பேச்சுவார்த்தை மேலும் நெருக்கடிக்குள்ளாகியது.
இப்படி பேச்சுவார்த்தை வலிந்த நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டது. அமைதி சமாதானம் கொலைக்களமாக மாறி, அன்றாடம் கொலை செய்வதே அரசியலாகியிருந்தது. இதில் இருந்து இராணுவ ரீதியான தாக்குதலை நடத்த கூடிய அரசியல் வெற்றியை புலிகளால் முன்வைக்க முடியாது, வெற்றிடத்தில் புலிகள் திகைத்தனர். அரசியல் ரீதியான ஒரு பேச்சுவார்த்தை மூலம், இராணுவ ரீதியான போராட்டம் தவிர்க்க முடியாது என்பதை நிறுவ முடியாது அரசியல் சூனியத்தில், சதிகளை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தையை வெற்றிகொள்ள முனைந்தனர்.
சதிகளையும், சூழ்ச்சியையும் அடிப்படையாக கொண்ட இராணுவ நெருக்கடியை திணித்து, அதன் மூலம் தமது இராணுவ ரீதியான செயற்பாடுகள் அவசியம் என்று நிறுவ முனைந்தனர். ஆனால் எல்லாம் தொடர்ச்சியாக பிசுபிசுத்துப் போனது. தமது முன்முயற்சி கொண்ட இராணுவ ரீதியான தாக்குதல், பேச்சுவார்த்தையின் தோல்வியால் ஏற்பட்டது என்பதை நிறுவமுடியாது போனது. வலிந்த முன்முயற்சி கொண்ட தாக்குதல் மூலம், நீடித்த ஒரு இராணுவ நெருக்கடியை உருவாக்கினர். ஆனால் இதுவும் புலிகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. மட்டுப்படுத்தப்பட்டதாக, அதேநேரம் புலிகள் தொடர்ச்சியாக தம்மைத் தாம் வலிந்து அம்பலப்படுத்துவதாக அமைந்தது.
நிலைமையை மாற்ற பாரிய தாக்குதலை குறுகிய அரசியல் நோக்கில் நடத்தினர். குறிப்பாக தண்ணீரைக் கட்டுப்படுத்தியதன் மூலம் சண்டையை வலிந்துகோரினர். அதேநேரம் இதைப் பயன்படுத்தி, முன்கூட்டியே திட்டமிட்ட வகையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு இனச் சுத்திகரிப்பு தாக்குதலை நடத்தினர். இப்படி குறுகிய தமது இலாபம், இராணுவ நலன்கள் என்ற அரசியல் எல்லைக்குள், இராணுவ தாக்குதல்கள், புலிகளின் அரசியல் பேச்சவார்த்தை போல் தொடர்ச்சியாக அம்பலமாகியது.
அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாதவர்கள் என்பதை, மறுபடியம் ஒருதலைப்பட்சமான இராணுவ நடவடிக்கை மூலம் நிறுவினர். தமது தோல்வியை மூடிமறைக்க, இராணுவ தாக்குதலை சதிகள் மூலமும் பொய்கள் மூலமும் இட்டுக்கட்டி வீங்கவைத்தனர். இராணுவ தாக்குதல் தொடங்கியவர்களின் குறுகிய நோக்கும், மிக குறுகிய காலத்திலேயே இயல்பாக மீண்டும் தாமாகவே அம்பலமாகி விடுவதை அவர்கள் தவிர்க்க முடிவதில்லை.
பேரினவாதத்தின் நிலையில் வைத்தோ, புலியின் நிலையில் வைத்தோ நாம் பேச்சவார்த்தையை அணுகக் கூடாது
மக்களின் நிலையை வைத்தே பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும். அமைதி சமாதானத்தை பேச்சுவார்த்தை மூலம் அடையமுடியுமா என்பதை, பேரினவாதத்தின் நிலையில் வைத்து மட்டும் மதிப்பிடக் கூடாது. அதேபோல் புலிகளின் நிலையில் வைத்தும் பார்க்கக்கூடாது. மக்களின் நிலையில் நின்று, இன்று இந்தப் பேச்சுவார்த்தையின் வெற்றி தோல்வியை நாம் கற்றுக் கொள்ளவேண்டும். புலிகள் ஒடுக்கப்பட்டோருக்கான ஒரு மக்கள் இயக்கமல்ல. அது மக்களை அடிமைப்படுத்தி, தனது சொந்த குறுகிய நலனை அடிப்படையாக கொண்ட ஒரு பாசிச இயக்கம். பேச்சுவார்த்தை சார்ந்து, அமைதி சமாதானம் நோக்கி அவர்களால் மக்கள் நலன் நோக்கில் நகரவே முடியாது. குறுகிய நலனை அடிப்படையாக கொண்டே நகரும் என்பதால், இயல்பாகவே நெருக்கடிக்குள் புகுந்துவிடுகின்றது.
இதன் நீட்சியில் அரசியல் ரீதியான தோல்வியை மறைக்க, இராணுவ ரீதியான வழிமுறையை பிரயோகிப்பதும், அதை கோருவதும் தொடங்குகின்றது. இராணுவ ரீதியான அணுகுமுறையும், அதேபோன்று மீண்டும் தோல்வியடையும். காலநீடிப்பை இது உருவாக்குகின்றது. இதற்கு வெளியில் மனித இழப்புகள், அகதி வாழ்வு, சொத்திழப்புகள் மூலம், தமது குதர்க்கமான நியாயமற்ற யுத்ததைத் மூடிமறைக்க முடியாது.
பொதுவாக பேரினவாதத்தின் கொடூரத்தை எதிர்கொள்ள, மக்களின் பெயரில் சண்டையைத் தொடங்குவதாக கூறுவதும், கருத்துரைப்பதும் அழுகிப் போன புலி அரசியலின் மொத்த வினையாகும். மிக மோசமான அரசியல் பிழைப்புவாதிகளும், வாய்வீச்சுக் கொலைகாரர்களும் மக்களின் பெயரில் சண்டையை திணிக்கின்றனர். வடக்குக் கிழக்கில் வாழும் மக்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் கூட சண்டையை விரும்பவில்லை என்ற உண்மையை யாரும் கண்டு கொள்வதில்லை.
யார் இதைத் கோருகின்றனர். அரசியல் ரீதியாக அம்பலப்பட்டுள்ள புலிகளும், புலிப் பினாமிகளும், புலியைக் காட்டி வியாபாரம் செய்யும் வர்த்தகக் கூட்டமும் தான் யுத்தம் யுத்தம் என்று கூக்கூரல் இடுகின்றது. இதை தொடங்கிய பின், அதை நியாயப்படுத்தும் கூட்டம் புலம் பெயர் நாட்டில் வாழ்பவர்களின் ஒரு பகுதியினர்தான். வயதுபோய் எந்த பொழுதுபோக்கு மற்றவர்கள் கதைப்பதற்கும், பொழுதுபோக்குக்கும் தமது வாய்வீச்சை விரும்பியவாறு பினாற்றவும், புலம்பெயர் புலி வர்த்தக கும்பலும், வானொலி தொலைக்காட்சிகளில் மைக்கை விழுங்கும் ஊத்தைவாளி பிழைப்புவாதிகளும், எல்லாவிதமான ஓட்டுண்ணிகளும், புலியைச் சொல்லிப் பணம் வசூலித்த ஏதோ ஒரு வகையில் இலாபம் பெறுபவர்களும், ஏதோ இணையம் ஒன்று நடத்த வெளிக்கிட்டவர்களும் தான், யுத்தம் வேண்டும் என்கின்றனர். மக்கள் விரும்பும் மக்கள் யுத்தம் என்கின்றனர். செத்தவீட்டில் ஓப்பாரி வைப்பது போல், இந்த கும்பல் தமக்காக யுத்தம் வேண்டும் என்ற ஒப்பாரி வைக்கின்றது.
யுத்தத்தில் பாதிக்கப்படும் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. பேரினவாதத்தின் கொடூரமான அரசியல் திட்டத்தைக் கூட இனம் காணமுடியாதவராக, அரசியலற்ற மந்தைக் கூட்டமாக மக்கள் நாயிலும் கீழாக அடிமைப்பட்டு வாழுகின்றனர். நவீன சந்தை சார்ந்த இலக்ரோனிக் பொருட்களுடன் தமது கனவுகளை எல்லைப்படுத்தி மக்கள் கிடக்கின்றனர். பொருள் உலக நுகர்வில் சொக்கிக் கிடக்கும் ஒரு சமூக அமைப்பில், சமூக பண்பாட்டு கலாச்சார சிதைவுகளின் அம்மணமாகி வீழ்ந்து கிடக்கும் மக்களுக்கு, யுத்தம் ஏன் என்ற கேள்விக்கு விடைதெரியாது ஒரு நிலையில் யுத்தம் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிக செல்தொலைபேசிகளை உபயோகிக்கும் யாழ் பிரதேசம், அதிக மோட்டார் சைக்கிளை உபயோகிக்கும் யாழ் மக்கள், இது போன்ற அனைத்து நவீன பொருள் உலகத்தில் மட்டும் வாழ்கின்றனர். இதுவே கிளிநொச்சி முதல் கிழக்கு வரையில் செல்வாக்கு செலுத்துகின்றது. புலிகள் கொக்கோகோலா யாழ் பிரதிநிதியாக இருந்தபோதே, இந்த பொருள் உலக அழுகல் உருவாகியது. யுத்தம் கோக்கோகோலாவை குளிர்சாதன பெட்டியில் இருந்து வழங்க மறுத்தால், அதன் விளைவு என்ன? மின்சாரமின்றி குளிர்சாதன பெட்டியே இயங்காது. இப்படி உருவாக்கிய புலிப் பொருளாதாரம், யுத்தத்தை எப்படி ஆதரிக்கவைக்கும். அனைத்து பொருளுக்கும் வர்த்தக சந்தைசார்ந்து, புலிகள் வரி ஊடாக தேசிய உற்பத்தியை அழித்தே அதை ஊக்குவித்தனர். இந்த சமூகத்தின் முன் யுத்தத்தை திணிக்கும் போது, பொருள் உலகம் சார்ந்தே புலியின் மீதான வெறுப்பாக மாறுகின்றது. இப்படி யுத்த வெறுப்பு பலவடிவமாக பரிணாமமாகின்றது.
தமிழ்மக்கள் தமது உரிமைப் போர் என்னவெனத் தெரியாத நிலை. இந்த மக்கள் கூட்டம் எப்படித்தான் இந்த யுத்தத்தைப் புரிந்து கொள்ளும். நாங்கள் அவர்களை விடுவோம், யுத்தத்தை நியாயப்படுத்தும் புலிப்பினாமி எழுத்தாளர்கள் முதல் செய்திகளை சேகரித்து திரிக்கும் புலிப்பினாமிகளுக்கு கூட, தமிழரின் உரிமைப் போராட்டம் பற்றி எதுவும் தெரியாதவர்களாக உள்ளனர்.
மக்களின் உரிமை பற்றி பேசுபவர்களை, தமிழ்மக்களின் உரிமையுடன் சேர்த்தே கொன்று போடுகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதே தெரியாத அவலநிலை. மாறாக பேரினவாத இராணுவ முகாம்கள் மட்டும் பேரினவாதமாக காட்சி அளிக்கின்றது என்பது உண்மையாக இருந்தபோதும், அதை அரசியல் ரீதியாக புரிந்துகொள்ள முடியாத அரசியல் வறுமையில் மக்கள் மந்தைக்கூட்டமாக வாழ்கின்றனர். அவர்களுக்கு தம்மை யார் மேயந்தாலும் ஒன்றுதான். இது அவர்களின் பரிதாபமான அரசியல் நிலை. பேரினவாதம் இல்லை என்றால் புலி இராணுவம் நிற்கும். எந்த மாற்றமுமின்றி நிற்கும். ஆனால் அது மக்களின் வீட்டினுள் புகுந்து புடுங்குவதை மக்கள் சதா காண்கின்றனர். ஆகவே இராணுவங்கள் மாறவேண்டும் என்று, சிங்கள இராணுவத்துக்குப் பதில் தமிழ் இராணுவம் வரவேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. இப்படி நிலைமை படுமோசமாக, அரசியலற்ற மந்தைக் கூட்டத்தின் மீது எந்த அடிப்படையுமற்ற யுத்தம் திணிக்கப்படுகின்றது.
இப்படி பல கேள்விக்கு பதில் தரமுடியாத மாயையில், உலகைக் தலைகீழாக காட்டி சிலர் மக்களை கொன்றும் கொள்ளையிட்டும் பிழைக்கின்றனர். ஏன் தமிழீழம் தேவை என்று நீங்களே உங்களைக் கேட்டுப் பாருங்கள். அது உங்களுக்கே தெரியாது இருப்பது புரியும். ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று கேட்டுப்பாருங்கள். பதில் எதுவும் இருப்பதில்லை. சிங்கள பேரினவாத அரசிடம் இருந்து, எதை அவர்களில் இருந்து மாறுபட கோருகின்றீhகள் என்றால் அதுவும் தெரியாது. அந்தளவுக்கு மந்தைக் கூட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, கப்பம், கடத்தல், அடிதடி, தியாகி, துரோகி, சிங்களவன் என்ற சில சொற்களுக்குள் புலித் தேசியம் மலடாகி வக்கிரமாகி புளுக்கின்றது. இதனால் நியாயமான மக்கள் யுத்தத்தை ஒரு நாளும் நடத்த முடியாது. அநியாயமான மக்கள் விரோத யுத்ததையே நடத்தமுடியும்.
பி.இரயாகரன்
22.08.20006