மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்து மறைந்திட்டான்;
மெல்லஇருட் கருங்கடலில் விழுந்த திந்தஉலகும்!
தோற்றியபூங் காவனமும் துளிரும்மலர்க் குலமும்
தோன்றவில்லை; ஆயினும்நான் ஏதுரைப்பேன் அடடா!
நாற்றிசையின் சித்திரத்தை மறைத்தஇருள், என்றன்
நனவிலுள்ள சுந்தரியை மறைக்க வசமில்லை!
மாற்றுயர்ந்த பொன்னுருக்கி வடிவெடுத்த மங்கை
மனவெளியில் ஒளிசெய்தாள் என்னதகத் தகாயம்!

புன்னையின்கீழ்த் தின்னையிலே எனைஇருக்கச் சொன்னாள்.
புதுமங்கை வரவுபார்த் திருக்கையிலே, அன்னாள்,
வண்ணமலர்க் கூட்டத்தில், புள்ளினத்தில், புனலில்,
வானத்தில்,எங்கெங்கும் தன்னழகைச் சிந்திச்
சின்னவிழி தழுவும்வகை செய்திருந்தாள்! இரவு
சேர்ந்தவுடன் என்னுளத்தைச் சேர்ந்துவிட்டாள்! எனினும்
சன்னத்த மலருடலை என்னிருகை ஆரத்
தழுவுமட்டும் என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?

என்னுளத்தில் தன்வடிவம் இட்டஎழில் மங்கை
இருப்பிடத்தில் என்னுருவம் தன்னுளத்திற் கொண்டாள்;
மின்னொளியாள் வராததுதான் பாக்கியிந்த நேரம்
வீறிட்ட காதலுக்கும் வேலிகட்டல் உண்டோ ?
கன்னியுளம் இருளென்று கலங்கிற்றோ! கட்டுக்
காவலிலே சிக்கிஅவள் தவித்திடுகின் றாளோ!
என்னென்பேன் அதோபூரிக் கின்றதுவெண் ணிலவும்!
எழில்நீல வான்எங்க ணும்வயிரக் குப்பை!

மாலைப்போ தைத்துரத்தி வந்தஅந்திப் போதை
வழியனுப்பும் முன்னிருளை வழியனுப்பி விட்டுக்
கோலநிலா வந்திங்கே கொஞ்சுகின்ற இரவில்
கொலைபுரியக் காத்திருக்கும் காதலொடு நான்தான்
சோலைநடுவே மிகவும் துடிக்கின்றேன்; இதனைத்
தோகையிடம் போயுரைக்க எவருள்ளார்? அன்னாள்
காலிலணி சிலம்புதான் கலீரெனக் கேளாதோ?
கண்ணெதிரிற் காணேனோ பெண்ணரசை யிங்கே?

தண்ணிலவும் அவள்முகமோ! தாரகைகள் நகையோ!
தளிருடலைத் தொடும்உணர்வோ நன்மணஞ்சேர் குளிரும்!
விண்ணீலம் கார்குழலோ! காணும் எழிலெல்லாம்
மெல்லியின்வாய்க் கள்வெறியோ! அல்லிமலர்த் தேனின்
வண்டின்ஒலி அன்னவளின் தண்டமிழ்த்தாய் மொழியோ!
வாழியஇங் கிவையெல்லாம் எழுதவரும் கவிதை!
கண்டெடுத்தேன் உயிர்ப்புதையல்! அதோ வந்துவிட்டாள்!
கண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaathal.htm#dt114