வீரத்தாய் அச்சிடுக மின்-அஞ்சல் காட்சி 1[மணிபுரி மாளிகையில் ஓர் தனி இடம். சேனாபதிகாங்கேயனும் மந்திரியும் பேசுகின்றனர்]சேனாபதி:மன்னன் மதுவினில் ஆழ்ந்து கிடக்கின்றான்!மின்னல்நேர் சிற்றிடை ராணி விஜயாநமக்கும் தெரியாமல் எவ்விடமோ சென்றாள்.அமைப்புறும் இந்த மணிபுரி ஆட்சிஎனக்கன்றோ! அன்றியும் என்னரும் நண்ப!உனக்கே அமைச்சுப் பதவி உதவுவேன்!மந்திரி:ஒன்றுகேள் சேனைத் தலைவ! பகைப்புலம்இன்றில்லை; ஆயினும் நாளை முளைக்கும்.அரசியோ வீரம், உறுதி அமைந்தாள்!தரையினர் மெச்சும் சர்வ கலையினள்!சேனாபதி:அஞ்சுதல் வேண்டாம் அவளொரு பெண்தானே!மந்திரி:நெஞ்சில்நான் பெண்ணை எளிதாய் நினைக்கிலேன்.சேனாபதி:ஆடை, அணிகலன், ஆசைக்கு வாசமலர்தேடுவதும், ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும்,அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும்கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம்,மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர்பகுதி!ஆனமற் றோர்பகுதி ஆண்மை எனப்புகல்வேன்!எவ்வாறா னாலும்கேள்! சேனையெலாம் என்னிடத்தில்!செய்வார்யார் நம்மிடத்தில் சேட்டை? இதையோசி!மந்திரி:[சிரித்துச் சொல்வான்]மானுஷிகம் மேல்என்பார், வன்மை உடையதென்பார்ஆன அதனை அளித்ததெது ? மீனக்கடைக்கண்ணால் இந்தக் கடலுலகம் தன்னைநடக்கும்வகை செய்வதெது? நல்லதொரு சக்திவடிவமெது? மாமகளிர் கூட்டமன்றோ? உன்சொற்கொடிது! குறையுடைத்து! மேலும் அதுகிடக்க;மன்னன் இளமைந்தன் எட்டு வயதுடையான்,இன்னும் சிலநாளில் ஆட்சி எனக்கென்பான்!சேனாபதி:கல்வியின்றி யாதோர் கலையின்றி, வாழ்வளிக்கும்நல்லொழுக்க மின்றியே நானவனை ஊர்ப்புறத்தில்வைத்துள்ளேன்; அன்னோன் நடைப்பிணம்போல் வாழ்கின்றான்.இத்தனைநாள் இந்த இரகசியம் நீயறியாய்!மந்திரி:ஆமாமாம் கல்வியிலான் ஆவி யிலாதவனே!சாமார்த்திய சாலி தந்திரத்தில் தேர்ந்தவன்நீ!உன்எண்ணம் என்னசொல்? நான்உனக் கொத்திருப்பேன்!முன்னால் செயப்போவ தென்ன மொழிந்துவிடு!சேனாபதி:ராசாங்கப் பொக்கிஷத்தை நாம்திறக்க வேண்டும்;பின்தேசத்தின் மன்னனெனச் சீர்மகுடம் நான்புனைந்தேஆட்சிசெய வேண்டும்என் ஆசையிது! காலத்தைநீட்சிசெய வேண்டாம்; விரைவில் நிகழ்விப்பாய்!மந்திரி:பொக்கிஷத்தை யார்திறப்பார்? பூட்டின் அமைப்பைஅதன்மிக்க வலிமைதனைக் கண்டோ ர் வியக்கின்றார்.தண்டோ ராப் போட்டுச் சகலர்க்கும் சொல்லிடுவோம்அண்டிவந்து தாழ்திறப்பார்க் காயிரரூ பாய்கொடுப்போம்.சேனாபதி:தேவிலை!நீ சொன்னதுபோல் செய்துவிடு சீக்கிரத்தில்ஆவி அடைந்தபயன் ஆட்சிநான் கொள்வதப்பா!காட்சி 2 [சேனாதிபதி அரச குமாரனாகிய சுதர்மனை மூடனாக்கிவைக்கக் கருதிக் காடுசேர்ந்த ஓர் சிற்றூரில் கல்வியில்லாத காளிமுத்து வசத்தில் விட்டு வைத்திருக்கிறான்.கிழவர் ஒருவர் காளிமுத்தை நண்பனாக்கிக்கொண்டுஉடன் வசிக்கிறார்.]காளிமுத்து:என்னா கெழவா? பொடியனெங்கே? இங்கேவா!கன்னா பின்னாஇண்ணு கத்துறியே என்னாது?மாடுவுளை மேய்க்கவுடு! மாந்தோப்பில் ஆடவுடு!காடுவுளே சுத்தவிடு! கல்விசொல்லித் தாராதே!கிழவர்:மாட்டினொடும் ஆட்டினொடும் மன்னன் குமாரனையும்கூட்டிப்போய் வந்திடுவேன்; குற்றமொன்றும் நான்புரியேன்!மன்னன் மகனுக்குக் கல்வியோ நல்லறிவோஒன்றும் வராமேஉன் உத்தரவு போல்நடப்பேன்!காளிமுத்து:ஆனாநீ போய்வா, அழைச்சிப்போ பையனையும்ஓநாயில் லாதஇடம் ஓட்டு!காட்சி 3[கிழவர் ஓர் தனியிடத்தில் சுதர்மனுக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்கிறார்.]கிழவர்:விற்கோலை இடக்கரத்தால் தூக்கி, நாணைவிரைந்தேற்றித் தெறித்துப்பார்! தூணீ ரத்தில்,பற்பலவாம் சரங்களிலே ஒன்றை வாங்கிப்பழுதின்றிக் குறிபார்த்து, லட்சி யத்தைப்பற்றிவிடு! மற்றொன்று, மேலும் ஒன்றுபடபடெனச் சரமரரி பொழி! சுதர்மா,நிற்கையில்நீ நிமிர்ந்துநிற்பாய் குன்றத் தைப்போல்!நெளியாதே! லாவகத்தில் தேர்ச்சி கொள்நீ!சுதர்மன்:கற்போர்கள் வியக்கும்வகை இந்நாள் மட்டும்கதியற்றுக் கிடந்திட்ட அடியே னுக்குமற்போரும், விற்போரும், வாளின் போரும்வளர்கலைகள் பலப்பலவும் சொல்லித் தந்தீர்!நற்போத காசிரியப் பெரியீர், இங்குநானுமக்குச் செயும்கைம்மா றொன்றும் காணேன்!அற்புதமாம்! தங்களைநான் இன்னா ரென்றேஅறிந்ததில்லை; நீரும்அதை விளக்க வில்லை.கிழவர்:இன்னாரென் றென்னைநீ அறிந்து கொள்ளஇச்சையுற வேண்டாங்காண் சுதர்மா. என்னைப்பின்னாளில் அறிந்திடுவாய்! நீறு பூத்தபெருங்கனல்போல் பொறுத்திருப்பாய்; உன் பகைவன்என்பகைவன்; உன்னாசை என்றன் ஆசை!இஃதொன்றே நானுனக்குச் சொல்லும் வார்த்தைமின்னாத வானம்இனி மின்னும்! அன்புவெறிகாட்டத் தக்கநாள் தூர மில்லை!காட்சி 4 [சுதர்மனும் கிழவரும் இருக்குமிடத்தில் தண்டோ ராச்சத்தம் கேட்கிறது.]தண்டோ ராக்காரன்:அரசாங்கப் பொக்கிஷத்தைத் திறப்பா ருண்டா?ஆயிரரூபாய் பரிசாய்ப் பெறலாங் கண்டீர்!வரவிருப்பம் உடையவர்கள் வருக! தீம்!தீம்!மன்னர்இடும் ஆணையிது தீம்தீம் தீம்தீம்!கிழவர்:சரிஇதுதான் நற்சமயம்! நான்போய் அந்தத்தறுக்குடைய சேனாதி பதியைக் காண்பேன்வரும்வரைக்கும் பத்திரமாய் இரு!நான் சென்றுவருகிறேன் வெற்றிநாள் வந்த தப்பா!காட்சி 5 [மந்திரியின் முன்னிலையில் கிழவர் அரசாங்கப் பொக்கிஷத்தைத் திறந்தார். மந்திரி கிழவரைக் கூட்டி கொண்டுசேனாதிபதியிடம் வந்தான்.]மந்திரி:தள்ளாத கிழவரிவர் பொக்கி ஷத்தின்தாழ்தன்னைச் சிரமமின்றித் திறந்து விட்டார்!சேனாபதி:கொள்ளாத ஆச்சரியம்! பரிசு தன்னைக்கொடுத்துவிடு! கொடுத்துவிடு! சீக்கி ரத்தில்!மந்திரி:விள்ளுதல்கேள்! இப்பெரியார் நமக்கு வேண்டும்.வேலையிலே அமைத்துவிடு ராசாங் கத்தில்!சேனாபதி:உள்ளதுநீ சொன்னபடி செய்க, (கிழவரை நோக்கி) ஐயா,ஊர்தோறும் அலையாதீர்! இங்கி ருப்பீர்!கிழவர்:அரண்மனையில் எவ்விடத்தும் சஞ்ச ரிக்கஅனுமதிப்பீர்! என்னால்இவ் வரசாங் கத்தில்விரைவில்பல ரகசியங்கள் வெளியாம்! என்றுவிளங்குகின்ற தென்கருத்தில்! சொல்லி விட்டேன்.சேனாபதி:பெரியாரே, ஆவ்வாறே! அட்டி யில்லை.மந்திரி:பேதமில்லை, இன்றுமுதல் நீரு மிந்தஅரசபிர தானியரில் ஒருவர் ஆனீர்.அறிவுபெற்ற படியாலே எல்லாம் பெற்றீர்!காட்சி 6 [சேனாபதி காங்கேயன், தானே மணிபுரி அரசனென்றுநாளைக்கு மகுடாபிஷேகம் செய்துகொள்ளப் போகிறான். வெளிநாட்டரசர்களும் வருகின்ற நேரம். மந்திரி நாட்டின் நிலைமையைச் சேனாபதிக்குத் தெரிவிக்கிறான்.]மந்திரி:மணிபுரி மக்கள்பால் மகிழ்ச்சி யில்லை!அணிகலன் பூண்கிலர் அரிவை மார்கள்!பாடகர் பாடிலர்! பதுமம் போன்றஆடவர் முகங்கள் அழகு குன்றின!வீதியில் தோரணம் விளங்க வில்லை!சோதி குறைந்தன, தொல்நகர் வீடுகள்!அரச குலத்தோர் அகம் கொதித்தனர்!முரசு எங்கும் முழங்குதல் இல்லை!சேனாபதி:எனக்குப் பட்டம் என்றதும், மக்கள்மனத்தில் இந்த வருத்தம் நேர்ந்ததா?அராஜகம் ஒன்றும் அணுகா வண்ணம்இராஜ சேவகர் ஏற்றது செய்க!வெள்ளி நாட்டு வேந்தன் வரவை,வள்ளி நாட்டு மகிபன் வரவைக்கொன்றை நாட்டுக் கோமான் வரவைக்குன்ற நாட்டுக் கொற்றவன் வரவைஏற்றுப சரித்தும் இருக்கை தந்தும்போற்றியும் புகழ்ந்தும் புதுமலர் சூட்டியும்தீதற நாளைநான் திருமுடி புனையஆதர வளிக்க அனைத்தும் புரிக!மந்திரி:ஆர வாரம்! அதுகேட் டாயா?பாராள் வேந்தர் பலரும் வரும்ஒலி!சேனபதி:லிகிதம் கண்ட மன்னர்சகலரும் வருகிறார் சகலமும் புரிகநீ!காட்சி 7 [அயல்நாட்டு வேந்தர்கள் வந்தார்கள்; சேனாபதி அவர்களை வரவேற்றுத் தனது மகுடாபிஷேகத்தை ஆதரிக்க வேண்டுகிறான்.]சேனாபதி:மணிபுரியின் வேந்தனார் மதுவை யுண்டுமனங்கெட்டுப் போய்விட்டார்; விஜய ராணிதணியாத காமத்தால் வெளியே சென்றாள்.தனியிருந்த இளங்கோமான் சுதர்மன் என்பான்,அணியாத அணியில்லை! அமுதே உண்பான்.அருமையுடன் வளர்த்துவந்தும் கல்வி யில்லை.பிணிபோல அன்னவன்பால் தீயொ ழுக்கம்பெருகினதால் நாட்டினரும் அமைச்சர் யாரும்என்னைமுடி சூடுகென்றார். உங்கட் கெல்லாம்ஏடெழுதி னேன்நீரும் விஜயம் செய்தீர்;சென்னியினால் வணங்குகின்றேன். மகுடம் பூணச்செய்தென்னை ஆதரிக்க வேண்டு கின்றேன்மன்னாதி மன்னர்களே, என்விண் ணப்பம்!மணிமுடியை நான்புனைந்தால் உம்மை மீறேன்!எந்நாளும் செய்நன்றி மறவேன் கண்டீர்!என்னாட்சி நல்லாட்சி யாயி ருக்கும்!வெள்ளிநாட்டு வேந்தன்:[கோபத்தோடு கூறுகிறான்]காங்கேய சேனாதி பதியே நீர்ஓர்கதைசொல்லி முடித்துவிட்டீர்; யாமும் கேட்டோ ம்தாங்காத வருத்தத்தால் விஜய ராணிதனியாக எமக்கெல்லாம் எழுதி யுள்ளதீங்கற்ற சேதியினைச் சொல்வோம், கேளும்!திருமுடியை நீர்கவர, அரச ருக்குப்பாங்கனைப்போல் உடனிருந்தே மதுப்ப ழக்கம்பண்ணி வைத்தீர்! அதிகாரம் அபகரித்தீர்!மானத்தைக் காப்பதற்கே ராணி யாரும்மறைவாக வசிக்கின்றார்! அறிந்து கொள்ளும்!கானகம்நேர் நகர்ப்புறத்தில் ராஜ புத்ரன்கல்வியின்றி உணவின்றி ஒழுக்க மின்றிஊனுருகி ஒழியட்டும் எனவி டுத்தீர்.உம்எண்ணம் இருந்தபடி என்னே! என்னே!ஆனாலும் அப்பிள்ளை சுதர்மன் என்போன்ஆயகலை வல்லவனாய் விளங்கு கின்றான்.வள்ளிநாட்டு மன்னன்:[இடை மறுத்து உரைக்கின்றான்.]சுதர்மனை நாம்கண்ணால் பார்க்க வேண்டும்;சொந்தநாட் டார்எண்ணம் அறிய வேண்டும்.இதம்அகிதம் தெரியாமல் உம்மை நாங்கள்எள்ளளவும் ஆதரிக்க மாட்டோ ம் கண்டீர்!கொன்றைநாட்டுக் கோமான்:[கோபத்தோடு கூறுகிறான்]சதிபுரிந்த துண்மையெனில் நண்பரே, நீர்சகிக்கமுடி யாததுயர் அடைய நேரும்.குன்றநாட்டுக் கொற்றவன்:[இடியென இயம்புவான்]அதிவிரைவில் நீர்நிரப ராதி என்பதத்தனையும் எண்பிக்க வேண்டும் சொன்னோம்!.சேனாபதி:[பயந்து ஈனசுரத்தோடு]அவ்விதமே யாகட்டும் ஐயன்மீர்! போசனத்தைச்செவ்வையுற நீர்முடிப்பீர் சென்று.காட்சி 8 [சேனாபதி மந்திரியிடம் தனது ஆசாபங்கத்தைத்தெரிவித்து வருந்துவான்.]சேனாபதி:வரைமட்டும் ஓங்கி வளர்ந்தஎன் ஆசைதரைமட்டம் ஆயினதா? அந்தோ! தனிமையிலேராணி விஜயா நடத்திவைத்த சூழ்ச்சிதனைக்காண இதயம் கலக்கம் அடைந்திடுதே!வேந்தன் மகனுக்கு வித்தையெல்லாம் வந்தனவாம்!ஆந்தை அலறும் அடவிசூழ் சிற்றூரில்போதித்த தார்?இதனைப் போயறிவோம் வாவாவா!வாதிக்கு தென்றன் மனம்.மந்திரி:பொக்கிஷந் திறந்தஅந்தப் புலனுறு பெரியார்எங்கே?அக்கிழ வர்பால்இந்த அசந்தர்ப்பம் சொல்லிக்காட்டிஇக்கணம் மகுடம்பூண ஏற்றதோர் சூழ்ச்சிகேட்போம்;தக்கநல் லறிஞரின்றித் தரணியும் நடவாதன்றோ![கிழவர் காணப்படாத தறிந்து மந்திரி வருந்துவான்:]திருவிலார் இவர்என்றெண்ணித் தீங்கினைஎண்ணி, அந்தப்பெரியாரும் நம்மைவிட்டுப் பிரிந்தனர் போலும்!நண்பா!அரிவையர் கூட்ட மெல்லாம் அறிவிலாக் கூட்டம்என்பாய்,புரிவரோ விஜயராணி புரிந்தஇச் செயல்கள்மற்றோர்!சேனாபதி:இன்னலெலாம் நேர்க! இனியஞ்சப் போவதில்லை.மன்னன்மக னைப்பார்ப்போம் வா!காட்சி 9 [கிழவர் சுதர்மனுக்கு வாட்போர் கற்பிக்கிறார்.இதனை ஒரு புறமிருந்து சேனாதிபதியும் மந்திரியும் கவனிக்கிறார்கள்.]சேனாபதி:தாழ்திறந்த அக்கிழவன் ராச தனயனுக்குப்பாழ்திறந்து நெஞ்சத்தில் பல்கலையும் சேர்க்கின்றான்.வஞ்சக் கிழவனிவன் என்னருமை வாழ்க்கையிலேநஞ்சைக் கலப்பதற்கு நம்மைஅன்று நண்ணினான்.வாளேந்திப் போர்செய்யும் மார்க்கத்தைக் காட்டுகின்றான்.தோளின் துரிதத்தைக் கண்டாயோ என்நண்பா![சேனாபதி கோபத்தோடு சுதர்மனை அணுகிக் கூறுவான்:]ஏடா சுதர்மா! இவன்யார் நரைக்கிழவன்?கேடகமும் கத்தியும்ஏன் ? கெட்டொழியத் தக்கவனே!சுதர்மன்:என்நாட்டை நான்ஆள ஏற்ற கலையுதவும்தென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர்; ஆசிரியர்!சேனாபதி:உன்நாட்டை நீஆள ஒண்ணுமோ சொல்லடா!சுதர்மன்:என்நாட்டை நான்ஆள்வேன்! எள்ளளவும் ஐயமில்லை![சேனாபதி உடனே தன் வாளையுருவிச் சுதர்மன்மேல்ஓங்கியபடி கூறுவான்:]உன்நாடு சாக்கடே! ஓடி மறைவாய்!பார்!மின்னுகின்ற வாள்இதுதான்! வீச்சும் இதுவே![கிழவர் கணத்தில், சேனாபதி ஓங்கிய வாளைத் தமதுவாளினால் துண்டித்துக் கூறுவார்:]உருவியவாள் எங்கே? உனதுடல்மேல் என்வாள்வருகுதுபார், மானங்கொள்! இன்றேல் புறங்காட்டு![என வாளை லாவகத்தோடு ஓங்கவே, சேனாபதி தன்னைக் காத்துக்கொள்ள முடியாமலும், சாகத்துணியாமலும் புறங்காட்டி ஓடுகிறான். கிழவரும் சுதர்மனும் சபையை நோக்கி ஓடும் சேனாபதியைத் துரத்திக்கொண்டு ஓடி வருகிறார்கள்.]காட்சி 10 [கூடியுள்ள அயல்நாட்டு வேந்தர்களிடம் சேனாபதி ஓடிவந்து சேர்ந்தான். அவனைத் தொடர்ந்து கிழவரும், சுதர்மனும் உருவிய கத்தியுடன் வந்து சேர்கிறார்கள்.]வெள்ளிநாட்டு வேந்தன்:ஆடுகின்ற நெஞ்சும், அழுங்கண்ணு மாகநீஓடிவரக் காரணமென் உற்ற சபைநடுவில்?சேனா பதியே, தெரிவிப்பாய் நன்றாக![சேனாபதி ஒருபுறம் உட்கார்தல்.]மானைத் துரத்திவந்த வாளரிபோல் வந்துகுறித்தெடுத்துப் பார்க்கின்றீர்; நீவிர்யார் கூறும்?[என்று பெரியவரை நோக்கிக் கூறிப் பின்அயல்நின்ற சுதர்மனை நோக்கிக் கூறுவான்:]பறித்தெடுத்த தாமரைப்பூம் பார்வையிலே வீரம்பெருக்கெடுக்க நிற்கின்றாய் பிள்ளையே, நீயார்?கிழவர்:இருக்கின்ற வேந்தர்களே, என்வார்த்தை கேட்டிடுவீர்!மன்னர் குடிக்கும் வழக்கத்தைச் செய்துவைத்தும்,என்னை வசப்படுத்த ஏற்பாடு செய்வித்தும்,செல்வனையும் தன்னிடத்தே சேர்த்துப் பழிவாங்கக்கல்வி தராமல் கடுங்காட்டில் சேர்ப்பித்தும்பட்டாபி ஷேகமனப் பால்குடித்தான் காங்கேயன்!தொட்டவாள் துண்டித்தேன். தோள்திருப்பி இங்குவந்தான்![தான் கட்டியிருந்த பொய்த்தாடி முதலியவைகளைக் களைகிறாள், கிழவராய் நடித்த விஜயராணி.]தாடியும்பொய்! என்றன் தலைப்பாகை யும்பொய்யே!கூடியுள்ள அங்கியும்பொய்! கொண்ட முதுமையும்பொய்!நான்விஜய ராணி! நகைக்கப் புவியினிலேஊனெடுத்த காங்கேயன் ஒன்றும் உணர்கிலான்!கோழியும்தன் குஞ்சுதனைக் கொல்லவரும் வான்பருந்தைச்சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத தொல்புவியில், ஆடவரைப்பெற்றெடுத்த தாய்க்குலத்தைப் பெண்குலத்தைத் துஷ்டருக்குப்புற்றெடுத்த நச்சரவைப் புல்லெனவே எண்ணிவிட்டான்!வெள்ளி நாட்டரசன்:[ஆச்சிரியத்தோடு கூறுவான்:]நீரன்றோ அன்னையார்! நீரன்றோ வீரியார்!ஆர்எதிர்ப்பார் அன்னையார் அன்பு வெறிதன்னை!வள்ளிநாட்டு மகிபன்:ஆவி சுமந்துபெற்ற அன்பன்உயிர் காப்பதற்குக்கோவித்த தாயினெதிர், கொல்படைதான் என்செய்யும்?கொன்றைநாட்டுக் கோமான்:அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்என்னும் படிஅமைந்தீர்! இப்படியே பெண்ணுலகம்ஆகுநாள் எந்நாளோ? அந்நாளே துன்பமெலாம்போகுநாள், இன்பப் புதியநாள் என்றுரைப்பேன்!அன்னையெனும் தத்துவத்தை அம்புவிக்குக் காட்டவந்தமின்னே, விளக்கே, விரிநிலவே வாழ்த்துகின்றேன்!குன்றநாட்டுக் கொற்றவன்:உங்கள் விருப்பம் உரைப்பீர்கள்; இவ்விளையசிங்கத்திற் கின்றே திருமகுடம் சூட்டிடலாம்!தீங்கு புரிந்த, சிறுசெயல்கள் மேற்கொண்டகாங்கேய னுக்கும் கடுந்தண் டனையிடலாம்!ராணி:கண்மணியே! உன்றன் கருத்தென்ன நீயேசொல்!சுதர்மன்:எண்ணம் உரைக்கின்றேன்! என்உதவி வேந்தர்களே,இந்த மணிபுரிதான் இங்குள்ள மக்களுக்குச்சொந்த உடைமை! சுதந்தரர்கள் எல்லாரும்!ஆதலினால் இந்த அழகு மணிபுரியைஓதும் குடியரசுக் குட்படுத்த வேண்டுகின்றேன்!அக்கிரமம் சூழ்ச்சி அதிகாரப் பேராசைகொக்கரிக்கக் கண்ட குடிகள் இதயந்தான்மானம் உணர்ந்து, வளர்ந்து, எழுச்சியுற்றுக்கானப் புலிபோல் கடும்பகைவர் மேற்பாயும்!ஆதலினால் காங்கேயன் அக்ரமமும் நன்றென்பேன்;தீதொன்றும் செய்யாதீர் சேனா பதிதனக்கே!மன்னர்கள்:அவ்வாறே ஆகட்டும் அப்பனே ஒப்பில்லாய்!செவ்வனே அன்புத் திருநாடு வாழியவே!சேய்த்தன்மை காட்டவந்த செம்மால்! செழியன்புத்தாய்த்தன்மை தந்த தமிழரசி வாழியவே!சுதர்மன்:எல்லார்க்கும் தேசம், எல்லார்க்கும் உடைமைஎலாம்எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக!வல்லார்க்கும் மற்றுள்ள செல்வர்க்கும் நாட்டுடைமைவாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக!வில்லார்க்கும் நல்ல நுதல்மாதர் எல்லார்க்கும்விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே! http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaviyam.htm#1.3.%20வீரத்தாய் முந்தைய அடுத்த