ஈழத்து மானுட துன்பவியல் என்பது, மரணித்தவரை போலியாக போற்றுவதாகின்றது. மனித இனத்துக்கு கேடு இழைத்தவர்களை எல்லாம், சமூக கதாநாயகராக வரலாற்றின் முன் காட்ட முனைகின்றனர். இப்படி அண்மையில் பாலசிங்கம் போல் மரணித்த இரத்தினசபாபதியின் மரணத்தை,
புலியெதிர்ப்புக் கும்பல் தங்களது இழிந்து போன அரசியல் விபச்சாரத்துக்காக உச்சிமோந்தனர். ரீ.பீ.சீ துயரத்தின் பெயரில், முன்னாள் இன்னாள் ஈரோஸ் எடுபிடிகளைக் கொண்டு, அரசியல் விபச்சாரத்தையே அரற்கேற்றினர்.
இவர்கள் எல்லாம் மானம் கெட்டவர்கள். எந்த ஒரு சுயவிமர்சனமும் கிடையாது. தமிழ் இனம் விடுதலையின் பெயரில் இன்று சந்திக்கும் இழிநிலைக்கு செல்ல, நாங்கள் எப்படி பங்காளியாக இருந்தோம் என்ற, எந்தவொரு மீள்பார்வையும் கிடையாது. தமிழ் இனம் இன்று சிதைந்து செல்லும் வரலாற்றுக்கு காரணமான காரிய காரணங்களையே, மீளவும் போற்றுவது நிகழ்கின்றது. இதன் மூலம் புல்லுரூவிகள், அரசியல் பிழைப்பு நடத்துவதே அரங்கேறுகின்றது. புலியெதிர்ப்பின் பின்னால், இதற்கு பவுடர் ப+சி சிங்காரிக்க வைத்து, தம்மைப் போல் மக்களையும் விபச்சாரத்தை செய்ய கோருகின்றனர்.
மனித அவலங்களை எல்லாம் மூட்டையாக கட்டி, தமது சொந்த மடியில் வைத்துள்ள, தமிழ் இனத்துக்கு என்ன நடந்தது? இவைகளை புலிகளால் மட்டுமே நடந்தாக காட்டுவது என்பது, மோசடிக்காரர்களின் நடத்தை நெறியாகும். புலிகள் அல்லாத மற்றவர் தரப்பினால் தமிழ் இனம் சிதையவில்லையா, சீரழியவில்லையா? நீங்கள் சொல்லுங்கள்!
தமிழ் மக்களின் அவலங்கள் அனைத்தும், பேரினவாதத்தால் தான் என்கின்றனர் புலிகள்.. புலியெதிர்ப்புக் கும்பல் தமிழ் இனத்தின் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் புலிகள் என்கின்றனர். தமிழ் மக்களின் துன்பத்துக்கு காரணம் நாங்கள் அல்ல என்று சொல்வதே, இவர்களின் தன்முனைப்பாக தம்மைத்தாம் நியாயப்படுத்துகின்ற ஒரு இழிவான அரசியலாகவுள்ளது. இதைத் தான் அவர்கள் தத்தம் ஜனநாயகம் என்கின்றனர்.
சரி மக்களுக்கு எதைப் பெற்றுக்கொடுக்க இதை சொல்லுகின்றீர்கள் என்று கேட்டால் எம்மைப் பார்த்து முறைக்கின்றனர். ஆக மிஞ்சினால் மக்களுக்கு சமாதானம் என்கின்றனர். அதைப் புலிகள் தமிழீழத்தில் என்கின்றனர். புலியெதிர்ப்பு அணி ஒரு அரசியல் தீர்வு மூலம் புலியை அழித்தல் என்கின்றனர். இப்படி ஆளுக்குயாள் சமதானம் பற்றியும், தீர்வு பற்றியும் பிதற்றுகின்றனர். பாவம் மக்கள். இப்படி ஒரு அரசியல் விபச்சாரத்தை கொடிகட்டிப், பறக்க விடுகின்றனர்.
இப்படி அரசியல் ரீதியாக எப்போவோ செத்துப் போன இரத்தினசபாபதியை, மறுபடியும் அவரின் பிணத்தையே தூக்கி நிமிர்த்தி அரசியல் ரீதியாக உயிர்கொடுக்க முனைகின்றனர்.
'ஈழத்து தந்தை", 'ஈழத்து பிதா" என்றெல்லாம் புலிக்கு போட்டியாக பட்டம் கொடுத்து தலைகுப்புற மக்களை வீழ்த்த முனைகின்றனர். ஈழப்போராட்டத்தின் முன்னோடி என்கின்றனர். மார்க்சியத்தை ஈழப் போராட்டத்தில் முன்வைத்ததில் முதன்மையானவர் என்கின்றனர். இப்படி பற்பல. கற்பனைக்கு எட்டிய வகையில் புகழ்ந்து மேய்கின்றனர். மேய்ந்தவர்கள் எல்லாம், தம்மை மார்க்சியவாதிகள் என்று கூறிக்கொள்கின்றனர். ஏகாதிபத்திய துணையுடன், புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை விடுவிக்கும் அரசியல் விபச்சாரம் தான், இவர்களின் மார்க்சியமாக உள்ளது. இப்படி கடந்தகாலம் முதல் சோடை போனவர்கள், உப்புச் சப்பற்ற சொற் சிலம்பங்கள் மூலம், வரலாற்றை மட்டுமல்ல எதார்த்த உலகத்தை காலுக்கு கீழ் போட்டு மிதிக்கின்றனர்.
இரத்தினசபாபதியின் தனிப்பட்ட அரசியல் வாழ்வும், அவரின் தலைமைத்துவ பண்பு பற்றிய விமர்சனங்கள் கூட கடுமையானவை. இருந்தபோதும், அவர் அரசியலில் அனாதையாகிப் போனதால், அவை அவசியமற்ற ஒன்றாகவுவுள்ளது.
மாறாக நிகழ்காலத்திலும், கடந்தகால அதே அரசியலை முன்வைத்து பிழைக்க முனையும் நாய்கள் குலைப்பதால், அந்த அரசியல் போக்கு மீது விமர்சனம் அவசியமாகின்றது. பிரதானமானதும் மையமானதுமான அரசியல் விடையங்கள் மீது மட்டும் நாம் குறிப்பாக பார்ப்போம்.
1. ஈரோஸ் தங்களை மார்க்சிய இயக்கமாக காட்டிக்கொண்டனர். ஆனால் அவர்கள் தனிநபர் பயங்கரவாத இயக்கமாக, ஒரு பாசிச இயக்கமாக, மார்க்சியத்துக்கு எதிரான இயக்கமாக இருந்தனர்.
2. ரூசிய சமூக ஏகாதிபத்தியத்தை சோசலிச நாடாகக் கூறிக்கொண்டு, அவர்களின் எடுபிடி அரசியலை நடத்தினர். ரூசியாவின் ஆசிய ஏஜண்டாக செயற்பட்ட இந்தியாவின், கூலிக் குழுவாக செயற்பட்டது. அந்தளவுக்கு ஈரோஸ் அரசியல் மக்கள் விரோதத் தன்மை கொண்டதாக இருந்தது. இதற்கு சிவப்பு வண்ண மார்க்சிய முலாம் அடித்தனர். ஆசிய பிராந்தியத்தின் பேட்டை ரவுடியான இந்தியா, ஆசிய மக்களின் விடுதலைக்கு எதிரான மிகப்பெரிய ஒரு சக்தி. குறிப்பாக இந்திய மக்களுக்கு எதிரான சக்தி. இதன் பின்னால் ஒரு மார்க்சிய இயக்கம் என்று கூறிக்கொள்பவர்கள், ஒரு கூலிக் குழுவாக மட்டும் தான் இருக்க முடியும்.
3. இயக்க மோதல்களின் போது, மக்களின் ஜனநாயக போராட்டங்களில் சந்தர்ப்பவாத நிலை எடுத்தனர். எப்போதும் பிற்போக்கை ஆதரித்தனர். கொள்கை ரீதியாக இயக்க மோதலை சாதகமாக கொண்டு, அவர்கள் அழியும் போதும் தமது பாசிச சர்வாதிகாரத்தை நிறுவும் கனவுடன் சந்தர்ப்பவாதிகளாக காத்துக்கிடந்தனர்.
இந்த வகைகளே பிரதான போக்காக ஈரோசின் அரசியல் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரிந்த அனைத்துக் குழுவிலும் இவ் அரசியல் சாரம் காணப்பட்டது.
ஈரோஸ் படித்த பாசிட்டுகளைக் கொண்ட சந்தர்ப்பவாத கூலிக் குழு
ஈரோஸ் ஒரு பாசிச இயக்கமே. தனிநபர் பயங்கரவாத இயக்கமே. அவர்களின் இயக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதில் தோல்வி பெற்ற போது, இலகுவாக புலிகளுடன் ஒன்று கலக்க முடிந்தது என்றால், அது ஒரு மார்க்சிய இயக்கமல்ல என்பதால் தான்.
கொழும்பில் குண்டு வைத்தது முதல் (உதாரணம் ஆனை மார்க் சோடாக் கம்பனி), தேயிலையில் சையனட் கலந்தது அல்லது கலந்துள்ளதாக மிரட்டியது வரை, ஈரோஸ்சின் தனிமனித பயங்கரவாத செயல்பாடுகள் பலவற்றை உலகம் அறிந்தது. தனிமனித படுகொலை பட்டியல் நீண்டே உண்டு. தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவையின் தலைவர் நெப்போலியனை கொன்றவர்கள். மலையகத்தில் மக்கள் மத்தியில் வேலை செய்வதாக கூறிக் கொண்டு, சென்ற ஈரோஸ், அவரின் படுக்கையை பகிர்ந்தபடி, அவரை படுக்கையில் வைத்து கொன்றவர்கள். இப்படி கொலைகள் ஏராளம்.
ஒரு மார்க்சிய இயக்கம் மக்கள் மத்தியிலான அனைத்து முரண்பாட்டின் மீதும் இயங்குதலாகும். உழைப்பு சுரண்டப்பட்ட நிலையில் வாழும் மக்களை அணி திரட்டுதலாகும். அவர்களை ஆயுதபாணியாக்கி, அவர்களின் அதிகாரத்தை நிறுவுவதாகும். இதற்கான அரசியல் பணி, அதற்கான முனைப்பு ஈரோஸ் அமைப்பிலேயே காணமுடியாது.
படித்த பாசிச கும்பலின் சதிக்குழு தான் ஈரோஸ். புலிக்கு நிகராக தனிநபர் அழிப்பு, குண்டுவைப்பில் ஈடுபட்ட, இந்தியக் கைக்கூலி இயக்கம் தான் ஈரோஸ். இந்தியாவின் அரவணைப்பில் வளாந்த ஒரு கூலிக் குணடர் படைதான். இந்தியா எதை விரும்புகின்றதோ, அதை வாலாட்டி செய்யும் எல்லைக்குள் அவர்களிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள். ஆயுதம் அவர்களிடம் பெற்றவர்கள். இவர்கள் மக்களின் எதிரியாகவே செயற்பட்டவர்கள்.
இப்படி உருவான கூலிக் கும்பல்களும், மக்கள் விரோதிகளும் மக்கள் மேல் வன்முறையை ஏவினர். இதற்கு எதிராக தமிழ் மக்கள் ஜனநாயக போராட்டங்களை 1984 முதல் 1986 வரை தொடர்ச்சியாக நடத்தினர். இதன் போது ஈரொஸ் இயக்கம் அதை எதிர்த்து நின்றது அல்லது அதில் கலந்து கொள்ளாது ஒதுங்கி நின்றது. சந்தர்ப்பத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப நடந்தனர்.
இந்தப் போராட்டங்களை முன்னின்று எடுப்பது என்பது, இவர்களின் மார்க்சியத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இப் போராட்டங்களை குழிபறிக்க இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செயல்பட்டனர். மக்களை அணிதிரட்டுவது இவர்களின் சோவியத் சார்பு அரசியலுக்கு எதிரானது. இந்த வகையில் சதிக் குழுவாகவே செயல்பட்டவர்கள்.
மறுபக்கத்தில் இயக்க மோதல்கள் உச்சத்தை எட்டிய போது, மதில் மேல் பூனையாக காத்துக்கிடந்தனர். புலிகளின் பின்னால் கூடுதலாக சாய்வு காட்டியபடி, இயக்க மோதலில் ஒன்றையொன்று வெல்ல முடியாது என்பது இவர்களின் அரசியல் கணிப்பீடு. அதாவது இயக்க மோதல் ஒன்றையொன்று அழித்து பலவீனமாகும் போது, நாம் பலமாக இருந்து அவர்கள் மீது அதிகாரத்தை நிலை நாட்டுதல் என்ற கொள்கைக்கு அமைவாக காத்துக் கிடந்தவர்கள் தான் இவர்கள்.
மண்ணில் மனிதவிரோத பாசிச வெறியாட்டங்கள் நடந்த போது, இந்தப் மார்க்சிய புளுடாப் பேர்வழிகள் மதில் மேல் பூனை போல் காத்துக் கிடந்தனர். தமிழ் மக்களுக்கு எதிரான அப்பட்டமான சந்தர்ப்பவாதிகள். படித்த பாசிட்டுகள். தனிமனித பயங்கரவாத சதிக் கும்பல் தான் ஈரோஸ். மார்க்சியத்தை பயன்படுத்தி, அதைக் கொண்டு மனித விரோதத்தையே அரங்கேற்றிய அன்னிய கைக்கூலிகள்.
பி.இரயாகரன்
20.12.2006