இது ஏகாதிபத்தியத்தால் தனது சொந்த பொருளாதார நலன் கருதி உருவாக்கப்பட்டது. இஸ்லாமியர் என்ற பொது அடையாளம், அங்கு வாழும் மக்களை, இஸ்லாமிய மதத்தில் பிறந்தவர்களை எல்லாம் உள்ளடக்கிவிடாது. மக்களை மதத்தின் ஊடாக அடையாளப்படுத்துவது மிகப் பெரியளவிலான அடிப்படைத் தவறாகும்.
இலங்கையில் இப்படி மதத்தின் ஊடாக அடக்கியாள, அவர்களை தவறாக அடையாளப்படுத்தி அடக்கிய வரலாற்று எம்முன்னுள்ளது. இந்தியாவை இந்து என்று மேற்கில் அடையாளப்படுத்துவது எப்படி தவறாக உள்ளதோ, அப்படித்தான் இதுவும். இது ஆதிக்கம் பெற்ற மொழியும் புனைவுமாகும். இஸ்லாமியர் என்ற அடிப்படை பதத்துடன் ஒரு கட்டுரையை மய+ரன் எழுதியிருந்தார். அதையொட்டி சிறிரங்கன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
மய+ரன் இஸ்லாமியர் என்ற பதத்தை பொதுவாக பயன்படுத்துவதே தவறானதாகும். இஸ்லாமியர் என்பது இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களை மட்டும் குறிக்கின்றது. இஸ்லாமியனாக பிறந்த அதை பின்பற்றாதவர்களையும், அந்த சமூகத்தில் இஸ்லாமை மறுத்து போராடுபவர்களை இது எப்படிப் பொதுமைப்படுத்தும். இஸ்லாமியர் என்பது ஏகாதிபத்தியத்தால், அவர்களை இழிவுபடுத்தவும், பொதுவாக அடையாளப்படுத்தி ஒடுக்கவும் பயன்படுத்தும் ஒரு சொற்தொடராகும். இந்த சொற்றொடரை அடிப்படையாக கொண்டு, பகுத்தாய்வது, கருத்துச் சொல்வது தவறாகும்.
ஏகாதிபத்தியங்கள் புலியின் மக்கள் விரோத வன்முறையை தமிழனின் போராட்டமாக பொதுவாக சித்தரித்து, தமிழன் மீதான பொது ஒழுக்குமுறையை பொதுவாக வகைப்படுத்தி செய்தியை வெளியிடுவதன் மூலம் திடட்மிட்டு செயற்படுகின்றன. நேபாள மாவோயிஸ்ட்டுகளை நேபாளிகள் போராட்டம் என்று கூறுவதில்லை. மாறாக மாவோயிஸ்ட்டுகள் என்று குறிப்பாக்கினர். யாரை அழிப்பது, எப்படி அழிப்பது என்பதில் நுணுக்கமாக கருத்தைக் கட்டமைக்கின்றனர். இதுதான் இஸ்லாமியர் என்ற பதம் கையாளும் அரசியல் வடிவமாகும். இஸ்லாமியர் என்ற பதம், மேற்கில் நாசி வலதுசாரிய அரசியலில் கூட மிக தீவிரமாக மாறி, அது உள்நாட்டு அரசியலைக் கூட தீர்மானிக்கின்றது.
இஸ்லாமியர் என்பது இஸ்லாம் மதத்தில் பிறந்து, அதை பின்பற்றாதவர்களையும் ஏகாதிபத்தியம் உள்ளடக்குகின்றது. பெரும்பான்மை இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் நாடுகளில் வாழும், சிறுபான்மையினரையும் உள்ளடக்குகின்றது. இஸ்லாம் என்பது ஒரு சமூகமே அல்ல. அது ஒரு நாடு அல்ல. அது பல பண்பாடுகளை, பல மத முரண்பாடுகளையும், இஸ்லாமுக்குள் கூட பல பிரிவுகளைக் கொண்ட, பல வேறு நாடுகளை உள்ளடக்கிய வகையில் இஸ்லாமிய பதம் பயன்படுத்தப்படுகின்றது. உண்மையில் பொது அடையாளமே இவர்களுக்கு இடையில் கிடையாது. இந்த நிலையில் பொதுவான விமர்சனம் என்பது தவறானது. இஸ்லாமிய அடையாளம் பற்றிய விமர்சனமே முதன்மையானதாக உள்ளது. இந்த மாயை உடைக்கப்பட வேண்டும். ஏகாதிபத்திய ஆதிக்கம் பெற்ற கருத்து தளத்தில் இருந்து, இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் அடையாளமாக மாறியது வியப்பேது! இது ஏகாதிபத்தியத்தால் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக கட்டமைக்கப்பட்டு, தமது சொந்த எடுபிடிகளாக மாற்றிய ஒரு திடட்மிட்ட கருத்து மாயையாகும். இதனடிப்படையில் பல இஸ்லாமிய கோட்பாடுகளை அமெரிக்காவின் உளவு நிறுவமான சி.ஐ.ஏ கூட உருவாக்கியது.
உண்மையில் மதப்பிற்போக்களார்களும், தீவிர வலதுசாரிகளும், ஏகாதிபத்திய விசுவாசிகளும் இஸ்லாம் என்ற மத அடையாளத்தின் ஊடாக தம்மை ஒருங்கிணைக்க முனைந்த போது, படுபிற்போக்கான மக்கள் விரோதிகளாகவே உருவானார்கள். மக்கள் இவர்களின் எதிரிகளாக இருந்தனர். மக்களை சுரண்டுவது இவர்களின் அடிப்படைக் கோட்பாடாக இருந்தது. சமூக பிற்போக்கின் சின்னங்களாக இருந்தனர். இஸ்லாம் என்ற பதம் இவர்களை ஒரு அணியாக்கி, முரண்பாடற்ற முரணற்ற சமூகமாக மாற்றிவிடவில்லை.
மத அடிப்படைவாதத்துடன் உருவாவர்கள், மக்களின் அபிலாசைகளுடன் முரண்பட்டே இருந்தார்கள். புலிகள் எப்படி மக்களின் அபிலாசைகளுடன் முரண்பட்டு அவாகளின் எதிரியாக உள்ளனரோ அப்படித் தான் இது. இந்து மத அடிப்படைவாதிகள், சாதிகளை கையாள்வது போல் இதுவும் பொருந்தும். மத அடிப்படைவாதத்தின் போக்கில், சமூகம் இருப்பதில்லை. இஸ்லாம் அடிப்படைவாதம் இதில் இருந்து விதிவிலக்கல்ல.
இந்து, இஸ்லாம், ய+த, கிறிஸ்ததுவ அடிப்படை வாதங்கள் அனைத்தும் ஒரே தன்மை வாய்ந்தவை. இது உலகளாவிய சமூக பொருளாதார போராட்டத்தின் ஏற்ற இறக்கத்துடன் ஒன்று கலந்ததாகும். இதனால் தீவிரமானதாகவும் மற்றது மென்மையானதாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கின்றது. சமூக பொருளாதாரத்தில் மதம் எந்தளவுக்கு இணக்கத்துடன் ஒத்திசைந்து செல்லுகின்றதோ, அந்தளவுக்கு மதம் தன்னை ஒருமைப்படுத்துகின்றது. இல்லை என்றால் முரண்படுகின்றது. போராடாடுவதாகக் காட்டுகின்றது.
இன்று உலகின் பொருளாதாரத்தை தீhமானிப்பதில் எண்ணை வகிக்கம் முக்கிய பங்கு, ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் அச்சாக உள்ளது. எண்ணை வளம் பெருமளவில் உள்ள நாடுகளில் பெரும்பான்மை மக்கள் இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுவதால், அங்கு ஏகாதிபத்தியம் நடத்தும் வரைமுறையற்ற சூறையாடலை மக்கள் எதிர்கொள்ளும போது, இஸ்லாம் எதிர்வினையாற்றுவதன் மூலம் தான் அதன் இருப்பை தக்க வைக்க முடிகின்றது. தென் அமெரிக்காவில் கிறிஸ்துவ மதம் போல் இது செயலாற்றுகின்றது. பொதுவாக மக்கள் நலன் சார்ந்த எதிர்வினை பின்தள்ளப்பட்டுள்ள நிலையில், அடிப்படைவாதிகளான இஸ்லாமியவாதிகளின் கையோங்குகின்றது. ஒப்பீட்டளவில் வலதுசாரிகளான புலிகள் போல்.
இவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது, செல்வத்தை தமக்கிடையில் பகிர்வதில் உள்ள முரண்பாடு தான். இதனால் வலது அடிப்படைவாத தீவிரவாதம், ஏகாதிபத்தியதின் நலனுக்கு இசைவானதாக மாறுகின்றது. இப்படி உருவாகும் மத அடிப்படைவாதத்தை, ஏகாதிபத்தியம் தனது சொந்த எதிரியாக காட்டுவதன் மூலம், மக்கள் தமது சொந்த அதிகாரத்துக்கான சொந்த போராட்டத்தின் மூலம் வருவதை தடுக்க முனைகின்றது.
இந்த வகையில் இஸ்லாமிய தீவிரவாதம் போன்றவற்றை வளர்த்தெடுத்து, பின் தமக்குள் மோதிக்கொள்வது இயல்பானது. இந்தியாவில் சீக்கிய போராட்டத்தின் போது, இது போன்ற குழுக்களை வளர்த்தனர். பங்களாதேச பிரிவினையின் போது கூட, இந்தியா இது போன்ற குழுக்களை வளர்த்தது. இலங்கையில் இந்தியா இது போன்ற குழுக்களை வளர்த்தது. உலகில் இவ்வாறு பல உதாரணம் உண்டு. இந்த வகையில் தான் தன்னார்வக் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. பின் அவற்றுடன் மோதின. நட்பும், முரண்பாடும் உள்ளடக்கத்தில் வளங்களை பகிர்வதில் ஏற்படுகின்றது.
இஸ்லாம, அமெரிக்கா தலைமையிலான உலக ஆக்கிரமிப்பை தீர்க்கும் மாற்றல்ல. தொல்லை கொடுக்கலாம். தொல்லைகள் நிலத்தை மேலும் பண்படுத்தவே உதவுகின்றது. உண்மையில் இஸ்லாம் ஏகாதிபத்திய நலன்களுடன் ஒன்றிணைந்து, மனித உழைப்பை கொள்ளையடிக்கும் கோட்பாட்டுடன் தான் இயங்குகின்றது. ஏகாதிபத்திய சுரண்டல் கொள்கைக்கு மாற்று என்பது, மக்கள் தமது கையில் அதிகாரத்தை பெறுவதற்கான போராட்டம் மட்டும் தான் அதற்கு வழிகாட்ட முடியும். மக்கள் தமது சொந்த அதிகாரத்தை கோருவதை நோக்கி, வழிகாட்டும் அரசியல் தெரிவு தான் மாற்றாகும்.
இரண்டாவது இஸ்லாமிய மக்கள் எதற்கும் இணங்க மாட்டார்கள் அல்லது அதற்குள் நிற்பவர்கள் என்ற கருத்து தவறானது. மக்கள் என்ற வகையில் எதார்த்த வாழ்வியல் உண்மைகளை, மதங்கள் முரணற்ற வகையில் தீர்ப்பதில்லை. முரணற்ற கொள்கை கோட்பாடுகளை கொண்ட ஒரு பன்மை சமூகமாக, எல்லோரையும் போல் உள்ளனர். இஸ்லாமியரை மட்டும் இதற்குள் வகைப்படுத்தி பார்ப்பது தவறாகும். பொதுவாக இஸ்லாமில் பிறந்து, அதை இஸ்லாமை பின்பற்றாத மக்கள் விமர்சனத்துடன் போராடத்துடன் வாழ்கின்றனர். இஸ்லாமிய கோட்பாடுகள் பல பிளவாக, பிளந்து பிய்ந்து போயுள்ளது. பல ஆயிரம் பண்பாடுகள் முதல், பல பத்தாயிரம் வேறுபாடுகள் அவர்களிடையே வாழ்வு சார்ந்துண்டு. இது அனைவருக்கும் பொருந்தும். அடையாளம் காணும் நடைமுறை, அனைவருக்கும் பொருந்தும். இணக்கமற்றவனின் வேறுபாடு தான், மற்றவனை தனித்துவமாக்குகின்றது. இலங்கையில் தமிழர் தரப்பின் இழிவான கடந்தகால நிகழ்வுகள், இலங்கை முஸ்லிம்களை தனிமைப்படுத்தி அவர்களை வேறுபட வைத்தது. இதற்கு அடிப்படைவாதங்கள் புத்துயிர் பெற்று துணைநிற்கின்றது. எமது தமிழர் தரப்பில் அனுமான் கோயில்கள் எப்படித் திடீரென்று யாழ் குடா முதல் எங்கும் முளைத்தன! இப்படி வரலாறு காணப்படுகின்றது. கடந்த ஒரு சில நூற்றாண்டுக்கு முன் கிறிஸ்தவ மதம் மேற்கில் நடத்திய கொடூரங்கள், அவை பின்பற்றிய முறைகள் இஸ்லாமிய இன்றைய முறையைவிட கொடூரமானவை.
இந்து அடிப்படைவாதம் சாதியத்தின் பெயரில் செய்யும் கொடூரங்களைவிட குறைவானவை. இந்து என்ற அடையாளத்தை கொண்டோர், சாதிய ஒழுங்கை பின்பற்றும் வடிவம், அதைப் பாதுகாக்கும் அடிப்படையை விட இஸ்லாம் எந்தவிதத்திலும் மோசமானதல்ல.
சர்வதேச பொருளாதார கட்டமைப்பில் முட்டி மோதும் ஏகாதிபத்தியங்களின் நலன் சார்ந்த கருத்துகள், ஆதிக்க மொழியாகவும் அதுவே கருத்தாகவும் இருப்பதால், இஸ்லாம் பற்றி மட்டும் தவறாகப் பேசப்படுகின்றது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். ஆனால் இஸ்லாமை மட்டும் காட்டுமிராண்டித்தனமானதாக காட்டப்படுகின்றது. காட்டுமிராண்டித்தனம் பன்மைத்தன்மை வாய்ந்தவை. அது இஸ்லாமுக்கு வெளியிலும் உள்ளது. அது இந்துவின் சாதியாக இருக்கலாம், யூத அடிப்படைவாதமாக இருக்கலாம், இவை விரிவான தளத்தில் உள்ளது. ஏகாதிபத்திய பொருளாதாரமே சகிப்புத் தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமானது. வருடாந்தம் ஏகாதிபத்திய பொருளாதாரம் 10 கோடி உயிர்களை நரைவேட்டையாடுகின்றது. ஆனால் பொதுவான சமூக கருத்தியல் அதற்கு ஆதரவாக உள்ளது. இஸ்லாம் அடிப்படைவாதம் இதற்கு கிட்ட கூட நெருங்கவே முடியாது.
பி.இரயாகரன்
21.05.2006