06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

இந்து மதம் வேண்டுமா? அல்லது தீண்டாமை ஒழிய வேண்டுமா?

இந்து மதம் என்பதும், தீண்டாமை என்பதும் ஒரே பொருளை உடையதாகுமே தவிர இரண்டும் வேறு வேறு அல்ல என்பதை நம் மக்கள் உணர வேண்டுகிறேன். தீண்டாமை என்பதே ஜாதி காரணமாய் ஏற்பட்டதே தவிர அதற்கு வேறு காரணமோ, ஆதாரமோ இல்லை. தீண்டாமை என்பதே ஒரு ஜாதியானை மற்றொரு ஜாதியான் (மனிதனுக்கு மனிதன்) தொடக்கூடாது என்பதற்குத் தான் நாம் பயன்படுத்துகின்றோமே ஒழிய, மற்றெதற்கு பிரஸ்தாபத் தீண்டாமையைப் பயன்படுத்துகிறோம்? அதுவும் அப்படிப் பயன்படுத்துவதும் இந்துக்கள் என்னும் இந்து மதத்தாருக்குள் இருந்து தான் வருகிறதே ஒழிய யாருக்குள் இருந்து வருகிறது?

 

ஆகவே தீண்டாமை இந்துமதத்தின் காரணமாக இந்துக்கள் என்பவர்களுக்குள் மாத்திரம் ஜாதி காரணமாக மேல் ஜாதி என்பவர்களுக்கும், கீழ் சாதி என்பவர்களுக்கும் மாத்திரம் ஜாதி காரணமாக இருந்து வரும் காரியமே தவிர தீண்டாமை மதத்திற்கும், ஜாதிக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை மக்கள் நல்லவண்ணம் சிந்தித்துப்பார்த்தால் விளங்காமல் போகாது. ஆகவே ஜாதியை வைத்துக் கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும், இந்துமதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும் என்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிர சிறிதும் அறிவுடைமை ஆகாது என்பது என் கருத்து.

 

நம் வாழ்வில் ஜாதியும், மதமும் இன்று பார்ப்பானிடமும், கோவிலினிடமும், கடவுளினிடமும் தான் இருந்து வருவதை நல்லவண்ணம் உணருகிறோம். அதாவது கடவுளால் தான் நாம் இந்துவாகிறோம். பார்ப்பானால் தான் சூத்திரனாகிறோம். நாம் ஒரு இந்து என்றால் நமக்கு நாம் கண்ணால் கூடப் பார்க்க முடியாத, காதால் கூடக் கேட்க முடியாத, 'வேதம்', 'சாஸ்திரம்' ஆகியவற்றையும் நம்மை இழிமகனாக்கும்.

 

தருமங்களையும், பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மனைவிகளாகிய சரஸ்வதி, இலட்சுமி, பார்வதிகளையும், மகன்களும் அவதாரங்களுமாகிய கந்தன், கணபதி, இராமன், கிருஷ்ணன்களையும், தேவர்களாகிய இந்திரன் முதலியவர்களையும், இவர்களது நடத்தைகளையும் இவற்றைக் குறிக்கும் புராணங்கள், இதிகாசங்கள், நெற்றிக்குறிகள் முதலியவற்றையும் நம்பியாக வேண்டும். இவ்வளவு தானா? மற்றும் பாகவதம், விஷ்ணுபுராணம், பக்த விஜயம், பெரியபுராணம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் கதைகளையும் நம்பியாக வேண்டும்.

 

பிறகு மாரி, காளிகளையும் எல்லா கோயில், குளம், தீர்த்தங்களையும் நம்பியாக வேண்டியதோடு, மற்றும் ஜோசியம், ஜாதகம், கைரேகை, சாமத்திரிகாஷணம் நாள், காலம், நேரம், முகூர்த்தம், சகுனம், பல்லி விழுதல், பல்லி சொல்லுதல், பேய், பூதம், மந்திரம், சாந்தி கழித்தல், சூரியன் கதை, சந்திரன் கதை, கிரகணகதை முதலியவற்றையும் நம்ப வேண்டும். இவற்றில் எதை நம்பாவிட்டாலும் இந்துவாக மாட்டோமா?

 

இந்த நிலையில் உள்ள இந்துவும், சூத்திரனுமாகிய நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொன்னால் அதில் புத்தியோ, சாத்திய அறிவோ இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆகவே மானமுள்ள அருமைத் தமிழ் மக்களே! நமக்கு உண்மையில் தீண்டாமை என்னும் ஜாதிக் கேடும் - இழிவும் நீங்க வேண்டுமானால் இந்து மதத்தைவிட்டு நீங்கியாக வேண்டும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதோடு அதற்கு ஆதாரமும் இல்லை. இந்து மதம் இந்துச் சட்டம் (இந்துலா) இந்து ஆட்சி (காங்கிரஸ் ஆட்சி) என்பவை எல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சி ஆகுமே அல்லாமல் தமிழ்நாட்டில் தமிழனுக்கு என்று – சூத்திரன் தீண்டப்படாதவன் என்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது. மாற்றமடையவும் முடியாது.

 

ஆகவே தமிழன் தனக்கு இந்துமதம் வேண்டுமா? சூத்திரப்பட்டமும், தீண்டாமையும் ஒழிய வேண்டுமா? என்பதைப் பற்றி அறிவோடு மானத்தோடு நல்லவண்ணம் சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மானம் பெறுவதும், ஈனஜாதித்தனம் ஒழிவதும் அவசியம் என்றுபட்டால்:

 

முதலாவதாக நெற்றிக்குறியை ஒழித்துத் தள்ளுங்கள். இரண்டாவதாக கோவிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மூன்றாவதாக எந்தவித இந்துமதப் பண்டிகையையும் கொண்டாடாதீர்கள். பார்ப்பானைப் "பிராமணன்" என்று சொல்லாதீர்கள். பிறகு மற்றதைப் பார்ப்போம்.

 

(12-05-1969 'விடுதலை'யில் தந்தை பெரியார் தலையங்கம். பெரியார் களஞ்சியம். ஜாதி- தீண்டாமை பாகம்:12 என்ற நூலில் இருந்து…. பக்கம்:250)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_29.html