ஒரு வார காலமாக இலங்கை வாழ் மலையக மக்கள் நடத்தும் அடிப்படைப் தேவைகளுக்கான போராட்டம் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவும் ஆச்சரியப்படவும் வைத்திருக்கிறது...


வார இறுதிப் பத்திரிகையில் மலையகச் சாரல் மற்றும் மலையகம் பற்றிய செய்திகளைப் பார்க்காத அல்லது என்னைப் போன்றவர்களைப் போல் இறுதியாகவே அவற்றை வாசிக்கும் பலர் இப்பவெல்லாம் எடுத்தவுடனேயே மலையக செய்திகளைப் படிப்பதைப் பாாக்க முடிகிறது..


ஈழத் தமிழர்களான நாங்கள் உரிமைப் பிரச்சினை பற்றி கதைக்கவும் கவலைப்படவும் போராடவும் செய்யும் போது அந்த மக்கள் பன்னெடுங் காலமாக அடிப்படை வசதிகள் இன்றி அரசியல்வாதிகளையும் தொழிற்சங்கங்களையும் நம்பி எத்தனை நாளைக்குத் தான் இருப்பது???


ஒரு நாளைக்கு 135 ரூபாவில் என்ன தான் செய்ய முடியும்?... ஒருத்தருக்கே போதாத பணத்தில் ஒரு குடும்பத்தை கொண்டு நடத்த முடியுமா? அந்த மக்களின் உழைப்பில் வரும் வருவாய் அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு இருக்க வேண்டாமா? 4 நாள் வேலை செய்யாமையால் மில்லியன் கணக்கில் நட்டமாம் கம்பெனிக்காரர்களுக்கு... அரசாங்கத்துக்கும் தான்.. அதன் பிறகாவது அவர்களது முக்கியத்துவத்தை உணர்ந்த கொள்ள வேண்டாமா?

இப்பக் கூட மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களையும் இந்தப் போராட்டங்களையும் ஆரம்பித்து வைத்தோம் என்ற பெயரை நிலைநாட்டுவதில் தான் அரசியல்வாதிகளின் கவனம் இருக்கிறதே தவிர அவர்கள் வேண்டும் 300 ரூபா சம்பளப் பணத்தைப் பெற்றுக் கொடுப்பதிலல்ல....

போன ஞாயிற்றுக்கிழமை சக்தியின் மின்னல் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரும் பிரதியமைச்சரமான முத்து சிவலிங்கம் கதைத்தவற்றைப் பார்க்கும் போது என்ன மனிதர் இவர் என்று எரிச்சல் தான் வந்தது.... அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதில் காட்டும் அக்கறையை தங்களை தெரிவு செய்த மக்களின் நலன்களில் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறதேயில்லையே... "மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள்... அவர்கள் எந்தளவுக்கு முயல்கிறார்கள், அவர்களால் 300 பெற முடிகிறதா என்று பார்ப்போம்" என்று சொல்கிறார்.... அது வரை தற்காலிகமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தப் பிரச்சினையில் இருந்த விலகி இருப்பதாக முடிவெடுத்துள்ளதாம்.. சவால் போன்ற தொனியில் சொல்லாமல் அமைதியாக சொல்வது போல் சொன்னாலும் இது சவால் இல்லாமல் வேறென்ன? ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், அதைவிட ஒரு பிரதியமைச்சர் தன் மக்களின் அடிப்படைத் தேவைகளுடன் விளையாடுகிறாரா? மக்கள் தங்களை மீறி செயற்படுகிறார்கள் என்ற ஆத்திரத்தின் வெளிப்பாடு போலத் தான் எனக்குத் தோன்றிச்சு...

போதாதற்கு மலையக மக்கள் முன்னணியின் பெ.இராதகிருஸ்னன்... தன்னை காப்பாற்றிக் கொள்ள பல இடங்களில் முத்து சிவலிங்கத்துடன் ஒத்துப் போனாலும் அதே தேவைக்காக அவர் பொய் சொல்கிறார் என்று இவரும் இவர் பொய் சொல்கிறார் என்று அவரும் இரண்டு பேருமே பொய் சொல்கிறார்கள் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும்... தொலைக்காட்சியின் மெகா சீரியல் பாத்திரங்களை மிஞ்சி நடிக்கிறார்கள்...

அனைத்துக்கும் இந்த கேவலமான அரசியல்வாதிகளையும், சுரண்டும் தொழிற்சங்கங்களையும் நம்பி இருக்காமல் தங்கள் கோரிக்கைகளை தாங்களாக கவனத்துக்கு கொண்டு வந்தமைக்கும் அதில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்...

 

http://paavais.blogspot.com/2006/12/blog-post_13.html