எந்த ஒரு மனிதனும் திடீரென்று புனிதனாகி விடுவதுமில்லை, தீவிரவாதமுள்ள அரக்கனாகவும் மாறிவிடுவதுமில்லை. சமூகத்தில் நிகழும் சம்பவங்களும், வாழ்வில் அமையும் சூழ்நிலைகளுமே மனிதனின் வாழ்வில் திருப்பு முனைகளை ஏற்படுத்தி விடுகின்றன. இவைகள் ஊழ்வினையால் தான் ஏற்படுகின்றன என்று எடுத்துக்கொண்டால், அது ஒரு பகுத்தறிய வேண்டிய சிந்தனை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். பகுத்தறிவுப் பகலவனான ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று அவரது வாழ்க்கை குறிப்பில் இவ்வாறு...

 

"கங்கை ஆற்றின் கரையில் உள்ள இந்துக்களின் புனித நகரமான காசி நகரை (வாரணாசி) இவர் அடைந்தார். அங்கோ அன்ன சத்திரங்களில் இந்து மதத்தின் மற்றச் சாதியினர்க்கு அனுமதி மறுக்கப்பட்டுப் பார்ப்பனர்க்கு மட்டுமே தனிமதிப்புடன் உணவு வழங்கப்பட்டதால், திராவிட இனத்தவரான இவரால் எளிதாகச் சத்திரத்து இலவச உணவைப் பெற முடியவில்லை.சில நாள்கள் மிகக் கடுமையாகப் பட்டினியால் வாடிய இந்த எழில் தோற்றம் உள்ள இளைஞர் இராமசாமி, வேறு எந்த நேரிய வழியும் தோன்றாத நிலையில், ஓர் அன்ன சத்திரத்தில் நுழைவதற்கு முயன்றார். ஆனால் இவரது கரிய மீசை காட்டிக் கொடுத்து விட்டது. எனவே, வாயில் காவலாளி சத்திரத்திற்குள் இவர் நுழைவதைத் தடுத்ததுடன், முரட்டுத்தனமாகத் தெருவிலே இவரைத் தள்ளிவிட்டான்.

 

அந்த நேரம், சத்திரத்தின் உள்ளே விருந்து முடிந்து விட்டதால், எஞ்சிய சோற்றுடன் எச்சில் இலைகள் தெருவிலே வீசி எறியப்பட்டன. கடந்த சில நாள்களாக வாட்டிய கடும் பட்டினியோ, அந்த எச்சில் இலைச் சோற்றைத் தெரு நாய்களுடன் போட்டியிட்டுத் தின்பதற்குக் கட்டாயப்படுத்தியது இராமசாமியை. அவ்வாறு அந்தச் சோற்றைத் தின்னும் பொழுதே சத்திரத்தின் வெளிப்புறச் சுவரில் பொறிக்கப்பட்ட எழுத்துகளை இவர் விழிகள் பார்த்தன. அவையோ இந்த உண்மையை வெளிப்படுத்தின:

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பணக்கார வணிகரான திராவிட இனத்தவரே அந்தச் சத்திரத்தைக் கட்டியவர். ஆயினும், மிக உயர்ந்த சாதியாரான பார்ப்பனர், தங்களுக்கு மட்டுமே தனி உரிமை கொண்டதாக அதில் குடியேறிவிட்டனர்; இலவச உணவு உண்டனர். திடீரென்று இந்த இளைஞரின் மனத்தில் சில கேள்விகள் தீப்பொறிகளாகத் தெறித்தன. “ஒரு திராவிட அறப்பணியாளர் பணத்தில் கட்டப்பட்ட சத்திரத்தில் திராவிட இனத்தவர் உணவு அருந்துவதைப் பார்ப்பனர் தடுப்பது ஏன்? திராவிடரைப் பட்டினிச் சாவுக்கே தள்ளும் அளவுக்குத் தங்களின் கொடுமையான சாதி முறையை விடாப்பிடியாகக் கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வளவு இரக்கம் இல்லாமலும் மதவெறியோடும் பார்ப்பனர் நடந்து கொள்ள வேண்டுமா?”இந்த வினாக்களுக்கு உரிய நியாயமான விடைகள் பெரியாரின் அறிவுக் கூர்மையான சிந்தனைக்குக் கிடைக்கவில்லை.

 

காசியில் துளி அளவும் இரக்கம் அற்றுப் பார்ப்பனர் இழைத்த அவமானம் பெரியார் உள்ளத்தில் ஆழமான காயத்தை உண்டாக்கிற்று. அதுவே ஆரிய இனத்தின் மீதும் அவர்களின் படைப்புகளான கணக்கற்ற கடவுள்கள் மீதும் அழுத்தமான வெறுப்பு நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது. மிக உயர்ந்த ‘புனித நகரம்’ ஆகப் பார்ப்பனரால் போற்றப்படுவதுதான் காசி என்னும் வாரணாசி. ஆயினும் அங்கே காணப்பட்ட மிகமிக அருவருப்பான ஒழுக்கக்கேடான நடவடிக்கைக் காட்சிகளும், பரத்தைத் தொழிலும் (விபச்சாரமும்), ஏமாற்றுதலும், பகற்கொள்ளையும், கெஞ்சிப் பிச்சை கேட்கும் கூட்டங்களும், கங்கை ஆற்றில் மிதந்து செல்லும் பிணங்களும் புனித நகரம் என அழைக்கப்படும் அந்தக் காசியை வெறுக்கும்படியாகவே பெரியாரைத் தூண்டின. அதன் விளைவாக, தமது துறவு வாழ்க்கை பற்றி எழுந்த மறு சிந்தனை, இவர் தமது குடும்ப வாழ்க்கைக்கே திரும்பிச் செல்வதற்கு வழி கோலிவிட்டது.

 

இவர் ஈரோடு திரும்பியதும், இவர்தம் தந்தையார் தமக்குள்ள வணிக உரிமைகள் அனைத்தையும் இரண்டாவது மகனான இவருக்கே ஒப்படைத்தார். தமது மிகப்பெரிய நிறுவனத்திற்கும் ‘ஈ.வெ. ராமசாமி நாயக்கர் மண்டி’ என மறுபெயர் சூட்டிவிட்டார்." காசி சத்திரத்தில் நடந்த இச்சம்பவம், ஈ.வெ.ரா.என்ற நாயக்கனை சரித்திர நாயகனாக மாற்றியது எனலாம். அன்று தாழ்த்தப்படத் தொடங்கிய தாழ்த்தப்பட்ட சமுதாயக் கொடுமைகள் இன்று வரை தாழ்த்தப்பட்டு, தாழ்த்தப்பட்ட சமுதாயங்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது. இன்றைய இளைய சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டியது பெரியார் என்ற அன்றைய இளைஞனின் அறிவொளியைத் தான். இனி சாதிகள் சாகட்டும். சமத்துவம் பெருகட்டும்.

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_18.html