உலகில் புலிகள் மட்டும் தான் இதை செய்யும் அளவுக்கு, மனவக்கிரத்தைக் கொண்டவர்கள். சொந்த மக்களையே யுத்த முனையில் நிறுத்தி, அவர்களை தமக்காக சண்டை செய் என்று நிர்ப்பந்திக்கின்ற புலி அரசியல் தான், புலிகள் சொல்லும் மக்கள் யுத்தம். மறுபக்கத்தில் பேரினவாதத்தின் பொதுவான அழித்தொழிப்பில் மக்களைக் குறிப்பான இலக்காக்கி, அதை வைத்துப் பிரச்சாரம் செய்ய முனையும் பிரச்சார யுத்தம்.
இப்படி புலிகள் தமது இறுதிக் காலத்தை எதிர்கொள்வது எப்படி என்று தெரியாது திணறுகின்றனர். கண்மூடித்தனமான பலாத்காரமான நடிவடிக்கைகள் ஊடாக, தமது சொந்த அழிவை மேலும் துரிதப்படுத்துகின்றனர். இப்படி மக்களை யுத்தமுனையில் நிறுத்தி, மக்கள் பயிற்சி, முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி என்று கூறிக்கொண்டு, வீங்கி வெம்பிய தமது சொந்தப் படங்களை வெளியிடுகின்றனர்.
அன்று அமைதி-சமாதானம் ஒப்பந்தத்தை மீற, யாழ்குடாவில் மக்கள் படையின் பெயரில் வீங்கி வெம்பிய புலிகள் நடத்திய தாக்குதல் தான், இன்று புலியின் சொந்த அழிவு வரை வந்து நிற்கின்றது. அந்த மக்கள் படையைச் சேர்ந்த புலிகள் தான், பெருமளவில் காணாமல் போனவர்களும, கொல்லப்பட்டவர்களுமாவர். இதனால் புலிகள் தாம் அல்லாத பிரதேசங்களில் காணாமல் போய்விட்டனர்.
உண்மையில் தவறு எங்கேயோ இருக்க, அதை தீர்க்கும் வகையில் சுயவிமர்சனத்தை புலிகள் செய்யவில்லை. மாறாக மக்களை தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வந்துள்ளனர். சண்டையில் மக்கள் ஈடுபடுவதைத் தவிர, தப்பிச் செல்ல வேறு மார்க்கம் இல்லை என்று மக்களை யுத்த முனையில் வைத்து நிர்ப்பந்திக்கின்றனர். இப்படி நிர்ப்பந்தித்தும், கட்டாயப்படுத்தியும், கடத்திச்சென்றும், மக்களுக்கு புலிகள் கட்டாயப் பயிற்சி வழங்குகின்றது.
யாரிடம் தம் குழந்தைகளை பறிகொடுத்தனரோ, அவர்களையே புலிகள் யுத்த முனைக்கு அழைத்துச் செல்கின்றது புலியின் வங்குரோத்து அரசியல். காணாமல் போன தமது குழந்தைகளை, தந்தைமாரும் தாய்மாரும் யுத்த முனையில் சந்திக்க வைக்கும் புலிகளின் அரசியல் அறிவு இப்படி வீங்கி புழுக்கின்றது.
தாய் தந்தைமாருக்கு பயிற்சி வழங்கும் காட்சிகள் மூலம் கட்டமைக்கும் புலி உளவியல், உண்மையில் எதிர்மறையானது. மக்கள் பயிற்சி வித்தையை, புலிகள் முதல் முறையாக காட்டவில்லை. அமைதி சமாதானம் காலம் முழுக்க, இப்படி காட்டியவர்கள் தான்.
ஒருபுறம் அகதிகளை காட்டியும், மறுபுறம் இந்த பயிற்சிகளைக் காட்டியும், புலம்பெயர் நாடுகளில் மறுபடியும் பணம் திரட்டும் அரசியல் நடக்கின்றது. பாவம் அகதிகள். அவர்களின் துயரத்தின் பெயரில் பணம் திரட்டப்படுகின்றது. ஆனால் அது மக்களுக்கு செல்லாது என்பது, பகுத்தறிவுள்ள வரலாறறிந்த அனைவருக்கும் தெரியும்.
1. புலியை நன்கு புரிந்து கொண்டவர்களுக்கு தெரியும்.
2. திரட்டப்படும் பணம் அகதிகளுக்கு பொருளாக செல்ல முடியாத வகையில், வன்னி பேரினவாதிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உழைப்பை, தமிழ் மக்களை பணயமாக வைத்து மறுபடியும் சுரண்டும் புலிகள். மறுபக்கத்தில் தாம் தப்பிப்பிழைக்க, தமிழ்மக்களை யுத்தத்தில் பலியிடுவதைத் அவர்களின் அரசியல் வழிகாட்டுகின்றது.
இந்த வகையில் தமிழ்மக்களைத் தமது யுத்த இலக்குக்குள் செறிவாக்கி, கொண்டு வந்துள்ளனர். யுத்தம் நடைபெறாத பிரதேசத்து மக்களையும் அகதியாக்கி, ஒரு இடத்தில் குவித்துள்ளனர். இந்தப் புலி அரசியலையும், புலியின் பலியிடும் கொள்கையையும், பேரினவாத அரசு உடன் புரிந்து கொண்டு செயலாற்றுவது தான், இதில் புலிக்கு கிடைத்துள்ள முதல் தோல்வி. புலிகள் மக்களைப் பலியிட, தமது யுத்த இலக்குக்குள் கொண்டு வரும் மக்களையிட்டு, பேரினவாத அரசு தனக்கு அக்கறை இருப்பதாக காட்டத் தொடங்கியுள்ளது. அரசு இதை அம்பலப்படுத்த, சர்வதேச நிறுவனங்களுடன் சேர்ந்து, தமக்கு அக்கறை இருப்பதாக அந்த அரசியல் நாடகத்தை நடத்தத் தொடங்கியுள்ளது.
இந்த யுத்த இலக்கில் உள்ள மக்கள் யத்தமற்ற தமது பிரதேசத்துக்கு பாதுகாப்பாக வரமுடியும் என்றும், உரிய பாதுகாப்பை தன்னால் வழங்க முடியும் என்ற உறுதியையும், சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து ஒரு திட்டத்தை அறிவிக்கின்றது. இப்படி புலிகளின் பலியிடும் யுத்ததந்திரத்தை, அவர்களின் சொந்தத் தலையிலேயே அள்ளிப் போட பேரினவாதம் தயாராகிவிட்டது.
இப்படி மக்களை யுத்த முனையில் கொன்றுபோட புலியும், அரசும் தயாராகவே உள்ளது. யார் அதை பொறுப்பேற்பது என்பதில் தான், சதிகளையும் சூழச்சிகளையும் திட்டமிட்டு இருதரப்பும் செய்கின்றனர். இதிலும் தோற்கப் போவது புலிகள் தான். இதைத்தான் புலிகள் அரங்கேற்றி வருகின்றனர்.
பி.இரயாகரன்
21.08.2008