இறுதி யுத்தத்துக்கான நாலாவது ஈழப்போர் தொடங்கிவிட்டது என்று, அடிக்கடி புலித்தரப்பாலும் புலிப் பினாமிகளாலும் மகிழ்ச்சியாகவே பரபரப்பூட்டப்படுகின்றது. ஆனால் யுத்த முனைப்புகள் அனைத்தும், அவர்கள் விரும்பும் கோரமான யுத்தமின்றி சப்பென்று பிசுபிசுத்து போகின்றது. இருந்தபோதும் பரந்த தளத்தில் பாரிய தாக்குதல்கள்,
யுத்தப்பிரகடனமின்றி அடிக்கடி இரு தரப்பாலும் நடத்தப்படுகின்றது. யுத்தத்தை நோக்கி முழுமையாக அவர்கள் சென்றுவிட முடியாத நிலையில், இதில் இருந்து மீளமுடியாத வகையிலும், அன்னிய தலையீடுகள் பலமாக உள்ளதையே நிலைமைகள் தெளிவுபடுத்துகின்றது. யுத்தம் வேண்டும் என்ற புலித்தரப்பின் பொதுவான வெறியூட்டும் கருத்துகளுள், பேரினவாதிகளின் ஒரு பகுதியினரின் யுத்த வெறியூட்டலும், அடிப்படையில் மக்கள் விரோதத் தன்மை கொண்டவை. மக்களையிட்டு ஒரு துளி தன்னும் அக்கறைப்படாத, அவர்களை ஏறிமிதித்து, அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்வோரின் யுத்த கோசமாகவே இவை உள்ளது. யுத்தத்தில் ஈடுபடுவோரின் வெற்றி தோல்விகளையிட்டும், மக்களை நிராகரித்தபடி வெளியிடும் யுத்தக் கூச்சலையிட்டும், அவர்களின் கற்பனை பினாற்றல்களையிட்டும், நாம் அதன் போக்கில் அலட்டிக் கொள்ளமுடியாது. இதை நாம் தெளிவாக புரிந்து கொள்வது அவசியம்.
யுத்தம் ஒன்றைச் செய்யக் கூடிய அளவுக்கு, இருதரப்பும் பல ஆயிரம் பேர் கொண்ட படைகளை தமது நோக்கத்துக்காகவே வைத்துள்ளனர். மக்களின் உழைப்பை ஏமாற்றி அபகரித்ததன் மூலம், நவீன ஆயுதங்களால் தம்மை அலங்கரித்தபடி, கொலைவெறியுடன் கொன்றுக் குவிப்பதற்காக கூச்சலிடுகின்றனர். இந்தக் கொலைவெறி யுத்தம் பல ஆயிரம் ஏழை எளிய பெற்றாரின் குழந்தைகளை பலியெடுக்கும் வகையில், இனவெறியூட்டப்பட்டுள்ளது. சுயசிந்தனையற்ற ஒரு கூலிப்பட்டாளமாக, தமது மரணத்துக்கான தூக்குக்கயிறை தாமே திரித்தபடி, கொலைக்களத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். இதற்கு தலைமை தாங்குவோரின் பிள்ளைகளோ தமிழ் சிங்கள வேறுபாடின்றி, மக்களிடம் திருடிய பணத்தில் ஆடம்பரமாக வாழ்கின்றனர். இப்படி யுத்தத்தல் ஈடுபடுத்தப்படும் பிள்ளைகளின் தாய்மை கருப்பையுடன் சூறையாடப்பட, சொந்தக் குழந்தைகள் அதன் மேல் சொகுசாக தமக்குத் தாமே மகுடத்தை சூடுகின்றனர். இந்த நிலையில் பரஸ்பரம் கொன்று, குவிக்கும் இரண்டு இராணுவங்கள், மோதிக் கொள்ளும் போது கிடைக்கும் வெற்றிகள் தோல்விகள் அனைத்தும், மக்களுக்கு எதிரானதாகவே இருப்பதை யாரும் தடுக்கமுடியாது. யுத்தத்தை பற்றிய, அதன் வெற்றி தோல்விகள் பற்றிய எமது நிலை இதுதான்.
யுத்தம் ஏற்படுத்தும் வாழ்வியல் இழப்புகள், மனித இழப்புகள் அனைத்தும் மக்களின் வாழ்வை சூறையாடி அழிப்பதில் தான் மையங் கொள்கின்றது. மீட்சியற்ற மனித வாழ்வை உருவாக்கி, சூனியமாக்குகின்ற மனித அவலத்தை கொலைகார யுத்தம் ஏற்படுத்துகின்றது. அப்பாவி ஏழை எளிய குழந்தைகளை பலியிட்டு, மனித நாகரிகத்துக்கு எதிரான வக்கிரத்தைப் புகுத்தி, மக்களுக்கு எந்த விடிவையும் பெற்றுத்தராத யுத்தத்தை மனித இனத்தின் மீது திணிப்பதை நாம் அங்கீகரிக்க முடியாது. தமிழ்பேசும் மக்களின் நலனை அடிப்படையாக கொண்ட ஒரு தீர்வுக்காக நியாயமான யுத்தத்தை புலிகள் ஒருநாளுமே நடத்தவே முடியாது. மாபியாத்தனத்தையும், அராஜகத்தையும் கொண்டு தமிழ்மக்களை அடக்கியொடுக்க, ஒரு யுத்தம் புலிகளுக்கு அவசியமாகி நிற்கின்றது. மனித இழிவைப் புகுத்தி, மனித அடிமைத்தனத்தை ஏற்படுத்தி, தமது சொந்த நலன்களை அடையவே, தமிழ் மக்களைப் பலியிடப்படுவதையே இந்த யுத்த முனைப்பின் மூலம் நாம் காண்கின்றோம்.
பாசிசப் புலிகள் நடத்தமுனையும் யுத்தம், பேரினவாதிகளின் இன வெறியாட்டத்துக்கு தீனி போடுகின்றதே ஒழிய அதை ஒழித்துக்கட்ட முடியாது. புலிகளின் இருப்பு பேரினவாதத்தின் இருப்பில் எப்படி தங்கியுள்ளதோ, அதுவே தலைகீழாகவும் பொருந்துகின்றது. நியாயமான மக்கள் யுத்தத்தை புலிகள் நடத்த முடியாது, அனைத்து சமூக அடிப்படையும் இழந்து மாபியா பாசிட்டுகளாகவே மாறிநிற்கின்றனர். புலிகளின் ஆதரவுத் தளம் மாபியாத்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், பொறுக்கி வாழும் கும்பல் அதன் பின்னால் யுத்தவெறியுடன் கூச்சலிடுகின்றது.
யுத்தத்தின் மூலம் தீர்வு என்றும், இறுதி யுத்தம் என்றும், தலைவரின் முடிவுக்காக தவம் கிடந்து காத்திருப்பதாக கூறும் இவர்களின் யுத்த வெறிக் கூச்சல் ஒருபுறம், மறுபக்கத்தில் இறுதி யுத்தம் இன்னமும் பிரகடனப்படுத்தப்படவில்லை. இறுதி யுத்தம் மூலமான தீர்வு என்கின்றார்களே! அந்த தீர்வு என்ன? அது எப்படி சாத்தியம்? பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியாதவர்கள், அதில் பேரினவாத அரசை வெல்ல முடியாதவர்கள், எப்படி யுத்தம் மூலம் தீர்வைப் பெறுவார்கள்? பேச்சுவார்த்தை மேசையைவிட்டு ஒருதலைப்பட்சமாக ஓடிவந்தவர்கள், யுத்தத்தின் பின்னணியில் எப்படி எந்த வழியில் வெல்வார்கள். அரசியல் ரீதியான தோல்வி கண்மூடித்தனமான யுத்தவெறியாகுமே ஒழிய, ஒரு அரசியல் தீர்வைத் தராது. இந்த நிலையில் தான், முட்டாள்தனமாக யுத்தம் மூலம் தீர்வு காணமுடியும் என்கின்றனர். இப்படி யுத்தம் பற்றி கற்பனையில் கனவுலகில் புலித்தேசியத்தை நகர்த்த முனைகின்றனர்.
மீண்டும் யுத்தத்தை நோக்கி செல்வதில் போட்டி போடுகின்றனர். யார் முதலில் யுத்தத்தைத் தொடங்கியது என்பதை சொல்லாத வகையில், யுத்தத்தை தொடங்கி நடத்துவதில் தான் கவனம் கொள்கின்றனர். அங்கு கூட தார்மீக நேர்மை கிடையாது. இரகசியமான முழுமையற்ற ஒரு மட்டுப்படுத்தப்பட்ட யுத்தத்தை முன் கூட்டியே தொடங்கிவிட்டனர். வெளியில் தத்தம் நேர்மையற்ற போலித்தனத்தை மூடிமறைக்க அமைதி சமாதானம் பற்றி புல்லரிக்கும் வகையில், மயிர்பிளக்கும் பினாமி வாதங்கள். யுத்தநிறுத்தம் தொடர்வதாக கூறிக் கொண்டு, யுத்த முனைப்பை தூண்டுகின்றனர். யுத்த நிறுத்தம் தொடர்வதாக கூறிக்கொண்டு, இரண்டுதரப்பு தத்தம் அரசியல் நேர்மையையும் அம்மணமாகவே மானவெட்கமின்றி தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.
நோர்வேயும், உலகமும் யுத்தநிறுத்த ஒப்பந்த பேப்பரை கையில் தூக்கி காட்டியபடி தம் பங்குக்கு புலம்பி அழுகின்றனர். அவர்களாகவே வலிந்து கையெழுத்திட்ட ஒப்பந்த விதிகளை நேர்மையாக கடைப்பிடிப்பார்கள் என்று எம்மை நம்புமாறு கூறமுனைகின்றனர். அதைக் காட்டி சிணுங்குகின்றனர். இரண்டு பாசிச அமைப்புகள், தாம் செய்த ஒப்பந்தத்தை நேர்மையாக எப்படித் தான் கடைபிடிக்க முடியும்? ஒரு தரப்பு மக்களின் விடுதலைக்காக நேர்மையாக செயல்படுவதாக இருந்தால், அது வேறுவிதமாக அமையும். நியாயமான யுத்தத்துக்கு கூட பாசிசம் வலிந்துதள்ளும். ஆனால் இரண்டு பாசிட்டுகள் சூழ்ச்சிகளும், சதிகளும், நியாயமற்ற கோரிக்கையினுள்ளும், யுத்த நிறுத்த மீறலையே ஆணையில் வைக்கும். இதுவே நிகழ்ந்தது. மக்களை இடையில் நிறுத்தி பந்தாடுவதன் மூலம் அவர்களை கொன்று குவிப்பதே நிகழ்கின்றது.
தாமாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை அவர்களே தான் கையெழுத்திட்டனர் என்ற வகையில், அவர்களே சந்தேகிக்க வண்ணம் அதை அவர்களே மறுத்தளித்தனர். பாசிச அமைப்புகள் என்ற வகையில், அதை நடைமுறைப்படுத்துவதில் தமக்கேயுரிய ஜனநாயகவிரோத உணர்வுடன் அதை மறுதளித்தனர். இந்த ஒப்பந்தம் மக்களுக்காக, மக்களின் நலனை அடைப்படையாக கொண்டு உருவானவையல்ல. தத்தம் குறுகிய நலகைன அடிப்படையாகக் கொண்டு, குறுகிய நோக்கத்தை ஈடுசெய்யும் வகையில், மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது. மக்களை நலனை அடிப்படையாக கொண்டு ஒப்பந்தம் உருவாக்கப்பாடத நிலையில், மக்களுக்கு எதிராகவே அது இருந்தபோதும் கூட, அவர்கள் செய்து கொண்ட அவர்களின் ஒப்பந்தத்தை அவர்களே மீறுவது மன்னிக்க முடியாத மனிதவிரோதக் குற்றமாகும்.
யுத்தநிறுத்த மீறல் என்பது, ஆரம்ப முதலே அதன் அத்திவாரமாக இருந்தது. தமிழ்பேசும் மக்களின் ஜனநாயகத்தை அங்கீகரிக்க மறுத்த அரசும் புலிகளும், இதற்காக ஒருங்கே கடிவாளமிட்டனர். சாதாரண மனிதன் தன் கருத்தை சொல்ல முடியாத பாசிச சூழலில், இந்த ஒப்பந்தம் இலகுவாக மீறப்படுவது ஒரு நிகழ்சியாக உலகம் அங்கிகரித்தது. பேச்சுவார்த்தையின் உள்ளடக்கமும், கோரிக்கைகளும் மக்களுக்கு தெரியாத வகையில் இரகசியமாக்கப்பட்டன. அந்தளவுக்கு அவை மக்கள் விரோதத் தன்மை வாய்ந்தவையாக, அதுவே பேரம் பேசலுக்குள்ளாகியது. மனிதனின் அடிப்படை உரிமைகளை அங்கிகரிக்காத, அதை நடைமுறைப்படுத்தாத ஒப்பந்தம், அதைப்பற்றி பேச மறுப்பவர்கள், இயல்பாகவே ஒப்பந்தத்தை மீறுவதை அடிப்படையாக கொண்டு கொலைவெறியாட்டமாடினர். இதற்கு உலக நாடுகள் ஒத்தூதியது.
பாசிசக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட பேரினவாதம் ஒரு அரசாக இருந்தமையால், இயல்பாகவே ஓப்பந்த மீறல்களை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி மிதமாக நடந்து கொண்டது. அதாவது ஓப்பந்தத்தை கடைப்பிடிப்பதன் மூலம், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியது. மாறாக மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்ட பாசிசப் புலிகள், அரசு அல்லாத ஒரு அராஜகக் கும்பலாக இருந்தால், ஆரம்ப முதலே ஒப்பந்தமீறலையே சதா தமது அரசியலாகக் கொண்டிருந்தனர். அமைதி சமாதானம் நிலவிய ஒவ்வொரு நாளும், சராசரியாக ஒருவரைப் புலிகள் கொன்றனர். இதுபோன்று பலவற்றை பலதளத்தில் மக்களுக்கு எதிராகவே புலிகள் செய்தனர். பணத்தை திரட்டுவதில் மாபியா வழிமுறையை ஆணையில் வைத்து, கோடிகோடியாக மக்களின் உழைப்பைத் திருடினர். மக்கள் மூச்சக்கு கூட வரிவிதித்தனர். இந்தத் திருட்டைத் தான் அவர்கள் அரசியல் வேலையென்றனர்.
சுனாமியை உருவாக்கிய மனித பிணங்களைக் காட்டி, அவர்களுக்கு உதவ என்று கூறி, அந்த மக்களுக்கு என்று மக்கள் கொடுத்த பல நூறு கோடி பணத்தை திருடி ஏப்பமிட்டனர். அதில் ஒருபகுதி யுத்தவெறி கூச்சல் ஊடாகவே, மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது.
இப்படியான மக்கள் விரோதிகள் தாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தையே மறுத்தனர். கடத்தல், சித்திரவதை, கொலை, கொள்ளை, கப்பம், வரி என்று எண்ணில் அடங்காத மனித அவலத்தையே, தமிழ் மக்கள் மீது திணித்தனர். இதையே அவர்கள் அரசியல் என்றனர். மாற்றுக் கருத்து, அவர்களுடன் முரண்பாடாக கதைத்தல், பணம் தரமறுத்தல் என அனைத்துக்கும் அவர்கள் கொடுத்த பரிசோ, கைதும் சித்திரவதையும் கொலையுமாகும். இதை அனுபவித்தது எதிரிகள் அல்ல, தமிழ் மக்களே. இப்படி யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல் நடந்தபோது, மக்கள் வாயே திறக்கமுடியாத மந்தைக் கூட்டமாக அடிபணியும் இழிந்தவராக்கப்பட்டனர். இப்படி ஒப்பந்தம் ஒரு தலைப்பட்சமாக புலிகளால் பந்தாடப்பட்டது. மறுபக்கத்தில் இராணுவம் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்முறை போன்றவற்றில் ஈடுபடுவதை முற்றாக நிறுத்தியிருந்தது. புலிகள் மட்டும் இதை குத்தகைக்கு எடுத்து, அதையே அரசியல் என்றனர்.
பேரினவாதம் புலிகளின் இந்த மக்கள் விரோத வக்கிரத்தை ஊக்குவித்து, தமிழ் மக்களிடம் இராணுவம் நல்ல பிள்ளையாகவே தன்னைக் காட்டிக் கொண்டது. சூழ்ச்சியை அடிப்படையாக கொண்டு, புலிகளின் அரசியலற்ற இராணுவ பேரங்களுக்குள் வெற்றிகரமாகவே புலிகளை தொடர்ச்சியாக தனிமைப்படுத்தினர். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை புலிகள் பேசமறுத்து, புலிப்பிரச்சனைiயை மட்டும் புலிகள் பேச, இதுவே பேரினவாதத்தின் வெற்றிகரமான பேரினவாத அரசியலாகியது. புலிகள் கண்மண் தெரியாத வேகத்தில் தோல்விகளைச் சந்தித்தனர். ஆனால் அதை நியாயமாக மக்கள் முன் முன்வைக்க முடியாத வகையில், புலிப் பேரங்களுக்குள் முடங்கிப் போனார்கள். புலியே தமிழ் மக்கள் என்ற புலிப் பாசிசத்தை, பேரினவாதம் தனக்கு சார்பாக மாற்றிக் கொண்டது. புலியின் பாசிசத்தைக் காட்டி, அதை உலகளாவில் தனிமைப்படுத்தியதன் மூலம், தமிழ் மக்களையே குறிவைத்து தனிமைப்படுத்தினர்.
இதன் மூலம் பேரினவாதம் தமிழ் மக்களின் உரிமையை மறுத்தனர். புலியையும் மக்களையும் ஒன்றாக காட்டி, புலிகளின் பாசிசத்தின் மூலம் தமிழ் மக்களையே இழிவுபடுத்தியது. தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை மறுத்தனர். அனைத்தையும் புலியாக காட்டி, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்துக்கு தீனி போட்டனர். இந்த இனவாதத் தீ, தீக்கொழுந்தாக மாறி தமிழ் பிரதேசத்திலும், தமிழர் அல்லாத பிரதேசத்திலும் இனப்பிளவுகளை ஆழமாக்கியது. இருந்தபோதும் மிகக் கவனமாகவே இராணுவ ரீதியாக இதை கையாளாத வகையில் செயற்பட்டது. புலிகள் அளவுக்கு பாரிய யுத்த நிறுத்த மீறலை பேரினவாத அரசு செய்யவில்லை. வழமையான கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பாலியல் வன்முறைகள் நடைபெறுவதை முற்றாக நிறுத்தியது. இது அறவே இல்லாத பொதுச் சூழலே, பொதுவாக தமிழ் பிரதேசத்தில் நிலவியது. அரசியலற்ற இராணுவ நடத்தைகளை அடிப்படையாக கொண்ட புலித் தேசியம் அரசியலில், தொடர்ந்தும் இந்தநிலை நீடித்தால் என்ன நடக்குமோ என்ற அச்சம் அதுவே கிலியாக மாறியது.
,அரசியல் ரீதியாக இனவாத அரசுடன் பேரம் பேசும் அரசியல் ஆற்றலை இழந்த புலிகள், அதில் இருந்து ஒருதலைப்பட்சமாக தாமாக விலகிக் கொண்டனர். பேசுவதையும், கோருவதையும் பகிரங்கமாக முன்வைத்து தம்பக்க நியாயத்தை பேசமுடியாத அளவுக்கு, குறுகிய நலன் கொண்ட மக்கள் விரோதக் கோரிக்கையாகவே புலிகளின் அரசியல் கோரிக்கைகள் சிதைந்துபோனது. பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகவே இது நடந்தேறியது. பேரினவாதம் தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கையை பேசுவதற்கு பதில், குறுகிய புலிக்கோரிக்கையை பேசியதன் மூலம் அரசியல் இலாபம் அடைந்தனர். இதன் மூலம் அரசு, அரசியல் மற்றும் இராணுவ ரீதியாகவே பலம் பெற்றது. அமைதி சமாதானத்தை கடைப்பிடிப்பதாக உலகுக்கு காட்டிக் கொள்வதிலும் வெற்றிபெற்றது. புலிகளின் அரசியல் ரீதியான இருப்பே கேள்விக்குள்ளாகியது. இதில் இருந்து தப்பிப்பிழைக்க இராணுவத்தை சீண்டுவது அவசியமாகியது. இராணுவத்தை உசுப்பிவிட்டு, அதன் கோரமுகம் தம்மை விட கோரமானதாக காட்டவிரும்பி இராணுவத்தை சதா கிண்டிக்கிளறினர். தம்மை இராணுவத்தைவிட மேன்மையானவராக காட்டிக் கொள்வது புலிக்கு முன் நிபந்தனையாகியது. இராணுவம் மீதான சீண்டுதலை புலிகள் வலிந்து தொடங்கினர். சதா இராணுவத்துடன் மோதல் நடப்பதாக காட்டுவதும், இராணுவம் மக்களை துன்புறுத்துவதாக காட்டுவது புலியின் இராணுவ அரசியலுக்கு அவசியமாகியது.
மக்களின் அரசியல் உரிமை என்ற அரசியல் எல்லைக்குள் போராடுவதை தவிர்த்து, குறுகிய இராணுவ வாத்துக்குள் இராணுவத்தைச் சீண்டினர். தொடர்ச்சியான சீண்டுதல்கள் மூலம், இராணுவத்துடன் வலிந்து பல மோதல்களை மக்களின் பெயரில் உருவாக்கினார்கள். இராணுவம் செய்தது போன்று சம்பவங்கைள புலிகளே செய்து, அதைத் திரித்து இராணுவத்துக்கு எதிரானதாக மாற்றினர். இப்படி இராணுவத்துடான மோதல்கள், சீண்டல்கள் மூலமான எதிர்வினைகளைக் கொண்டே, தம்மை அரசியல் ரீதியாக தக்கவைக்க முனைந்தனர். ஆனால் இதிலும் அவர்கள் வெற்றி பெறமுடியவில்லை. இராணுவம் அரசு என்ற வடிவில் கொண்டிருந்த கட்டுப்பாட்டை, அரசாக அல்லாத அராஜகவாத குழுவின் செயற்பாட்டால் வெற்றி கொள்ளமுடியவில்லை.
இதனால் இராணுவத்தைக் கொல்லுதல், இராணுவத்தை தாக்குதல் என்ற வடிவிற்கு புலிகள் நிலைமையை மாற்றினர். அனைத்தையும் தமிழ் மக்கள் செய்வதாகவே பசப்பினர். திடீர் தாக்குதலை நடத்தினர். அதையும் மக்களின் மேல் அபாண்டமாகவே போட்டனர். இப்படி இராணுவம் மீதான ஒரு தலைப்பட்சமான தாக்குதல்கள், கொலைகள் ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கியது. கிளைமோர், கைக்குண்டு வெடிப்பு அன்றாட அரசியல் நிகழ்ச்சியாக மாறியது. இராணுவம் எதிர் வன்முறையின்றி அமைதிகாத்தது. இருந்தபோதும் கூட, இதிலும் இராணுவம் ஒரு நெகிழ்ச்சிப் போக்கைக் கையாண்டது. புலிகள் இதன் மூலம் கூட, தம்மையும் தமது கட்டமைப்பையும் பெரியளவில் தக்கவைக்க முடியவில்லை. புலிப் பினாமிகளுக்கு மட்டும், இது உற்சாகம் தருவதாக இருந்தது. மக்கள் இதில் இருந்து விலகி அமைதியை விரும்பினர். புலியின் தாக்குதலுககு எதிரான அபிப்பிராயத்துடன் மௌனமாகவே வாழவேண்டிய அளவுக்கு அவர்கள் மேல் படுகொலைகளை புலிகள் தீவிரமாக்கினர்.
புலிகள் தாக்குதலை படிப்படியாக இராணுவம் மீது விரிவுபடுத்தினர். இராணுவமும் புலிப்பாணியில் செயற்படத் தொடங்கியது. இனம் தெரியாத படுகொலைகளை, இனம் தெரியாத கடத்தலை புலியின் வழியில் தொடங்கினர். புலிகளைப் போல் ஊடுருவித் தாக்குதல் என்ற வடிவத்தைத் தொடங்கினர். இதில் இராணுவமும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றது. இதற்கு முன்னை நாள் துரோகக் குழுக்களையும், கருணா குழுவின் ஒருபகுதியையும் கூட பயன்படுத்திக் கொண்டது. இதைவிட கருணா குழு மட்டும் தனது தனித்துவமான புலிகள் மேலான தாக்குதலை மட்டும் உரிமை கோரியது. மற்றவைகளை இனம் தெரியாத தாக்குதலாகவே, புலிகளின் பதிலில் பதிலளித்தனர். புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் புலியின் சுதந்திரமான நடமாட்டத்தை இதன் மூலம் சிதைத்து வருகின்றனர். இப்படி ஒரு இரகசியமான யுத்தத்துக்கு புலிகள் பாணியில் இராணுவம் முன்னேறியது.
இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தொடர்ச்சியான கொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று புலிகள் கூறியதன் மூலம், அதன் பாதுகாப்புக்கு இராணுவமே பொறுப்பு என்று கூறியதன் மூலம், புலிகள் அல்லாத பிரதேச கண்காணிப்பை அதிகரிக்கவைத்தனர். கடத்தல், காணாமல் போதல், கொலைகள் அன்றாட நிகழ்ச்சியாக்கினர். யார் ஏன் கொல்லப்பட்டனர், கடத்தப்பட்டனர் என்ற தகவல்கள் அனைத்தையும், குறித்து குற்றம்சாட்ட முடியாத வகையில் அனைத்தையும் புலிகள் மாற்றி அமைத்தனர். அதற்கு தாமும் இரையாகினர். மக்கள் படைகள், பெயர் பலகையற்ற துண்டுப்பிரசுரப் பேர்வழிகளின் அறிக்கைகள் கூட படிப்படியாக காணாமல் போனது.
உண்மையில் புலிகள் பாணியில் இராணுவமும் தன் வழியை தீர்மானித்துக் கொண்டு செயலாற்றியது. யுத்த நிறுத்த மீறல்கள் இனம் தெரியாதவையாகி அதுவே நாற்றமெடுக்கும் வண்ணம் பெருகியது. யுத்த நிறுத்தம், அமைதி, சமாதானம் புலிகள் மற்றும் இராணுவத்துக்கு இடையில் சிக்கிக் கொண்டது.
புலிகளின் தாம் இருந்த நிலையில் இராணுவத்தை சீண்ட எடுத்த முயற்சிகள் பெருமளவில் வெற்றி பெறமுடியவில்லை. எல்லாம் கமுக்கமாக அடங்கிப் போனநிலையில் தான், யுத்தத்தை தூண்டும் வகையில் பாரிய தாக்குதல்கள் இராணுவ முகாங்களை நோக்கி முடுக்கிவிடப்பட்டது. இதையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இராணுவம் கையாண்டது. மாவீரர் செய்தியில் பிரபாகரன் கூறியது போல், ஒரு இராணுவத் தாக்குதலை தொடங்க புலிகள் எடுத்துவந்த பல முயற்சிகள், மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ எதிர்வினை மூலம் புலிகளை அதற்குள் முடக்கினர்.
யுத்தத்தை நோக்கிய நகர்வுகளைக் கூட, எதிர்வினையாக காட்டி இராணுவம் மட்டுப்படுத்தியது. புலிகளின் தாக்குதல் எல்லைக்குள், இரணுவத்தின் எதிர்வினைகள் விரிவானதாக நடத்தி மட்டுப்படுத்துகின்றனர். இப்படி ஒரு முன்முயற்சி கொண்ட புலிகளின் இராணுவ நடவடிக்கை முன்னேற முடியாது தேங்கி விடுகின்றது. இன்று நடந்து கொண்டிருப்பது இதுதான். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் இப்படி இராணுவவாதத்துக்குள் காணாமல் போய்விடுகின்றது. எல்லாம் புலி மயமாகி அதற்குள் அஸ்தமாகி வருகின்றது. இதில் மீட்சி என்பது தமிழ்மக்கள் தமது விடுதலைக்காக தாமே போராடுவதில் மட்டுமே அமைதியையும் சமாதானத்தையும் அடையமுடியும். இதற்கு மாற்று வழி கிடையவே கிடையாது.
பி.இரயாகரன்
16.08.2006