06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

இனச் சுத்திகரிப்பு நடத்தும் பாசிட்டுகள்

இனத் தன்மை வாய்ந்த பாசிசம் என்பது, இனத்தூய்மையையும் இனவழிப்பையும் முன்வைக்கின்றது. இலங்கையில் இது பலதரம் நன்கு நிறுவப்பட்டுள்ளது. பலர் கொழும்புச் சம்பவத்தை நாசிக்கால வரலாற்றுடன் ஒப்பிட, அவசரமாக கொடுக்கைக் கட்டிக்கொண்டு ஓடுகின்றனர்.

 சொந்த மண்ணில் இதுபோன்ற எந்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அதில் ஈடுபட்டதால் பல பொறுக்கிகளுக்கும் அவை தெரிவதில்லை.

 

இன்று கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வு, காலகாலமாக தமிழர் பற்றி சிங்கள பேரினவாதிகளின் கொள்கையின் அடிப்படையில் அரங்கேறியது. அதுவும் சிங்கள பேரினவாதிகளுக்கே தலைமை தாங்கும் சிறிய சர்வாதிகார குழுவின் தலைமையில் நடந்துள்ளது. இந்த குழுவின் தலைமையிலான பாசிட்டுகள் தான் இன்று நாட்டை ஆளுகின்றனர்.

 

இந்த இனச் சுத்திகரிப்பு இன்று நடத்தியவர்களை கண்டிக்கும் தகுதி, இன்று இலங்கை அரசியல் வரலாற்றில் உள்ள யாருக்கும் கிடையாது.

 

1948 இல் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்து நாடுகடத்திய போது, இதே இனசுத்திகரிப்பே காரணமாக இருந்தது. அன்று நாடு கடத்த வேண்டிய இடம் மற்றொரு நாடாக இருந்ததால், உடன் நாடு கடத்தப்படவில்லை. அந்த வெட்கக்கேடான செயலுக்கு பாய் விரித்தவர்கள், அதில் படுத்து அரசியல் விபச்சாரம் செய்தவர்கள் எல்லாம், ஏன் இன்னும் அவர்களின் அரசியல் வாரிசுகள் எல்லாம் இன்று கொழும்பு நடவடிக்கையைக் கண்டிக்கின்றனர். அரசியல் விபச்சாரம் இப்படி தான் காலத்துக்கு காலம் புழுக்கின்றது.

 

பின்னால் ஜே.வி.பி இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற தலைப்பில், மலையக மக்களை எதிரியாக்கியே அரசியல் செய்தவர்கள். அவர்களை நாடு கடத்திய போது, அதை ஆதரித்து நின்றவர்களின் அரசியல் விபச்சாரம், இனசுத்திகரிப்பு தான். இதே ஜே.வி.பி இன்றுவரை தமிழரின் அடிப்படை உரிமையை மறுக்கும், தீவிர இனவாதிகள். இன்று அவர்கள் கூட இதைக் கண்டிக்கின்றனர்.

 

மிகக் கொடூரமான மற்றொரு வரலாறு உண்டு. புலிப்பாசிட்டுகள் வடக்கில் இருந்த முஸ்லீம் மக்களை, இதேபோல் தான் அன்று வெளியேற்றினர். அவர்களையும் தமிழ் மக்கள் என்று கூறிக்கொண்டே, இதைச் செய்தனர். இன்று வரை அவர்களுக்கு எத்தரப்பில் இருந்தும் நிவாரணம் கிடைக்கவில்லை. மந்திரி பதவிகள் முதல் பேச்சுவார்த்தைகள் வரை, மக்களுக்கு நிவாரணங்களைக் கூட வழங்குவதில்லை. அவர்களின் அவலங்களுக்கு முடிவை கட்டிவிடுவதில்லை.

 

இனத்தூய்மை, இனநலன், அதை சுற்றிய சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்ற போர்வையில் நடத்துகின்ற இனவெறி பாசிசம் தான் இவை.

 

இது மட்டுமல்ல. தமிழர்கள் என்ற காரணங்களுக்காக சிங்கள இராணுவம் தமிழ் கிராமங்களை மொத்தமாகவே கொன்று போட்ட பல பத்து சம்வங்களும், இந்த மண்ணில் தான் நடந்தது. இதே அடிப்படையில் சிங்களவர், முஸ்லீங்கள் என்ற காரணத்துகாக, தமிழ் புலிகள் சில பத்து கிராமங்களை மொத்தமாக கொன்றதும், இந்த மண்ணில் தான் நடந்தது. இதை விட எத்தனை இனக்கலவரங்கள் எத்தனை சம்பவங்கள்.

 

வெட்கம் கெட்ட முறையில் இன்று கொழும்பு நிகழ்ச்சியைக் கண்டிப்பவர்கள், மனித உரிமைகள் பற்றி அழுபவர்களினால் தான், இவை கடந்தகாலத்தில் நடத்தப்பட்டது அல்லது இவர்களின் துணையால், நடந்தப்பட்டவை. இன்றும் ஒரு பக்க சார்பாகத்தான், மற்றொன்றை ஆதரித்தபடியே தான் இதைக் கண்டிக்கின்றனர். உண்மையில் தமிழ் மக்களின் உரிமையை மறுக்கின்றவர்கள் இவர்கள். அது தமிழர் தரப்பாக இருந்தாலும் சரி, சிங்களவர் தரப்பாக இருந்தாலும் சரி, இந்த உண்மையே அனைத்துக்குமான அடிப்படையாகும்.

 

இவை அனைத்தும் தத்தம் இனத்தைக் காப்பாற்றவே என்று கூறியபடி நடத்துகின்றனர். சக மனிதனை இழிவாடுகின்ற, அவனை துன்பப்படுத்துகின்ற இவர்கள், உண்மையில் தனது சொந்த இன மக்களைக் கூட நேசிப்பது கிடையாது. அன்றாடம் தமது வாழ்வுக்காக போராடும் அப்பாவி மக்களை, நரைவேட்டையாடியவர்கள் இவர்கள். இவர்களின் நேர்மை, ஒழுக்கம், அவர்களின் இலட்சியம் அனைத்தும் பொய்யும் புரட்டும் நிறைந்தவையாகும்.

 

சிங்கள பேரினவாதிகளுக்கு தலைமை தாங்கும் பாசிட்டுகள், கொழும்பில் இருந்து தமிழரை அகற்றல் என்ற இனச்சுத்திகரிப்பையும் முன்வைத்தனர். அதன் பின்னர் அதற்கு எதிரான எதிர்வினைகள் கூட ஒரு தலைப்பட்சமானவை தான். எத்தனை கண்டனங்கள். எத்தனை அறிக்கைகள். எத்தனை போராட்டங்கள்.

 

உண்மையில் இப்படி எதிர்வினையாற்றி கண்டித்தவர்களில் பலர், கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள். மக்களின் முதுகில் குத்தியே பிழைப்பவர்கள். அரசியல் நேர்மை, அரசியல் ஒழுக்கம் எதுவுமற்றவர்கள். மக்களுக்காக செயலாற்றுபவர்களல்ல. நாயில் வாழும் உண்ணிகள். அன்று முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வை, இதில் எத்தனை பேர் கண்டித்தனர். இன்று வரை அதைக் கண்டிக்கத் திராணியற்றவர்கள் தான் இவர்கள். இன்றுவரை அந்த மக்கள் வாழ்வை இட்டு ஒரு துளி அக்கறை கூட கிடையாது. இப்படிப்பட்ட அரசியல் பொறுக்கிகள் தான், கொழும்பில் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டிக்கின்றனர். எங்கு இருந்து இரத்தம் குடிக்க வசதியோ , அதற்கேற்பவாறான ஓட்டுண்ணிகள் தான் இந்த பாசிச ஜென்மங்கள்.

 

கொழும்பில் இருந்து தமிழ் இன சுத்திகரிப்பை நடத்திய பாசிட்டுகள், 4மணி நேரம் தான் அவகாசம் வழங்கியதாக சில உண்ணிகள் இரத்தம் வடிய புலம்புகின்றன. அன்று புலிகள் 24 மணி நேரம் வழங்கித் தான் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய மனிதாபிமானம் பற்றி பேச முனைகின்றனர்.

 

இப்படி ஒப்பீட்டு பாசிசம் பற்றி, சில உண்ணிகள் நியாயவாதம் பேச முனைகின்றனர். ஐஜயோ பாவம், அன்று புலிகள் 24 மணி நேரம் வழங்கியது ஏன்? எதற்கு? அந்த மக்களின் சொத்தைக் கொள்ளை அடிக்கத்தான். அவர்களின் முழுச்சொத்தையும் கண்டுபிடித்து திருடவே அவ்வளவு நேரம் எடுத்தது. ஆண் பெண் குழந்தைகள் என வேறுபாடின்றி, ஒவ்வொருவராக நிர்வாணமாக்கி அவர்களின் உழைப்பைத் திருட 24 மணி நேரம் புலிக்கு தேவைப்பட்டது. ஒன்றா! இரண்டா! ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் சொத்தையும் திருடி அல்லவா, அவர்களை அனுப்பியவர்கள் புலிகள். கொழும்பில் அந்த திருட்டு நடக்காததால் 4 மணி நேரம் போதுமானது. ஒப்பீட்டில் பார்த்தால், புலிகள் நாசி காலத்தில் யூதர்களின் சொத்தை திருடிய வடிவில், திருடிய பின்பே நாடு கடத்தினர்.

 

இப்படிப்பட்ட அயோக்கியர்கள், அயோக்கியர்கள் தான். மக்களின் வாழ்வை சிதைத்து அதைத் தின்பவர்கள். இதில் அவர் இவர் என்று, பக்கச்சார்பு என்ன வேண்டிக் கிடக்கின்றது. எல்லா மக்கள் விரோதிகளும் தமக்குள் தாம் புழுத்துக்கிடப்பதே, இன்றைய இலங்கை அரசியல். ஆயுதம் ஏந்தினால் என்ன! ஏந்தாவிட்டால் என்ன! இவர்கள் மக்களின் வாழ்வை திருடித் தின்னும் பக்காத் திருடர்கள் தான். இதற்கு ஏற்பவே இலட்சியம், அரசியல் என்பதெல்லாம்.

இன்று இந்த கொழும்பு இனச் சுத்திகரிப்புக்கு பொறுப்பான ஜனாதிபதியோ கடைந்தெடுத்த நல்ல நடிகர். இந்த பாசிச சர்வாதிகார குழுவுக்கு ஏற்ற ஜனாதிபதி. அவர் நாட்டுக்கு ஜனாதிபதி அல்ல. இந்த இரகசிய சதிக்குழுவுக்குத் தான் ஜனாதிபதி. பிரபாகரன் போலவே தான். பிரபாகரன் எப்படி தமிழ் மக்களுக்கு தலைவராக இல்லாது, தனக்குத் தானே தலைவராக இருக்கின்றார். தன்னைச் சுற்றிய ஒட்டுண்ணிக் கும்பலுக்குத் தலைவராக இருக்கின்றார்.

 

இப்படித்தான் இலங்கை ஜனாதிபதி மகிந்தா. நாட்டில் நடக்கின்ற விடையங்கள் தெரியாத, பச்சைக் குழந்தை தான் இலங்கை ஜனாதிபதி. அப்படி நடிக்கின்ற கடைந்தெடுத்த பாசிட். செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் கொல்லப்பட்ட போது, கொன்றவர்களின் பாதுகாப்புடன் சென்று அஞ்சலி செலுத்தியவர். மட்டக்களப்பில் பலாத்காரமாகவே ஜயரைக் கொண்டு மாலை போட வைத்து மகிழ்ந்த ஜனாதிபதி. இப்படி மாலை போட வைத்த ஜயரை, மறைமுக வினையாக புலிகளைக் கொண்டு கொன்றவர் தான் இலங்கை ஜனாதிபதி.

 

சமூக விரோத பொறுக்கிகள் ஜனாதிபதியாகும் போது, சிறு குழுவின் பாசிசம் சர்வாதிகாரமாகின்றது. கொழும்பு முதல் நாட்டின் எல்லைவரை சொந்த இரகசிய குழு கடத்தல்கள் கொலைகள் செய்வது பற்றி தெரியாது போல், நடிக்கின்றவர்கள் இவர்கள். பின் இது பற்றி கண்டனம், விசாரணைகள் என்பன எல்லாம் பொறுக்கித்தனத்தின் உச்சம். பாசிசத்தின் தலைமைப் பண்பு இதுதான். தனக்கு தெரியாது போல் நடிக்கின்ற, பாசிச கோமாளித்தனம்.

 

இப்படி நாட்டில் நடப்பது தெரியாது போல் பாசாங்கு செய்யும் ஜனாதிபதி, ஒரு நாட்டின் தலைவர், அன்றாட செய்தி பத்திரிகையைக் கூட படிக்காதவரா? அப்படி நினைத்துக் கொண்டு, சில உண்ணிகள் ஜனாதிபதியின் மனிதாபிமான மகிமை பற்றி புலம்புகின்றன. எதுவும் நாட்டின் தலைவருக்கு தெரியாது போல் காட்டுகின்ற அரசியல் வித்தைகள். இதைக் காவிக் கொண்டு குலைக்கும் புலியெதிர்ப்பு நாய்கள். ஏதோ ஜனாதிபதியின் கருணையால் ஜனநாயகம் வந்துவிட்டதாக பாசாங்கு செய்கின்ற அரசியல் பிழைப்பு. நீ ஜனாதிபதியானால் அல்லது பிரபாகரனானால் என்ன செய்வாய் என்று மடக்கும், புலியெதிர்ப்புக்கு அரசியல் வழிகாட்டுவோரின் (ரீ.பீ.சீ முதல் டக்கிளஸ்சின் இதையவீணை வரை புலம்பும்) அரசியல் பிழைப்பு. மக்களில் நம்பிக்கை இழந்து, பிரபாகரன் ஜனாதிபதி என்று அதற்குள் குலைக்கும் அரசியல் நக்குண்ணித் தனம்.

 

மறுபக்கத்தில் ஜனாதிபதிக்கு எதுவும் தெரியாது என்று நம்பிக் கொண்டு, அனைவரும் அறிந்த பிரச்சனைக்கு மகஜர்கள், தெளிவுபடுத்தல்கள். எல்லாம் தெரிந்ததாக கூறும் கடவுளிடம் முறையிடுவது போல், அதாவது குருட்டு கடவுளிடம் முறையிடுவது போல்தான் இதுவும். ஜனாதிபதிக்கு கண்ணைத் திறந்து காட்டும் அபிசேகங்கள். பாசிசத்தின் எடுபிடிகள் தான், இப்படி அங்குமிங்குமாக அரசியல் சாக்கடையில் நெளிகின்றனர். இதுவே இன்றைய இலங்கையில் அரசியல் எதார்த்தம்.

பி.இரயாகரன்
10.06.2007


பி.இரயாகரன் - சமர்