தாய்ப்பால் குழந்தைக்கான ஒரு அற்புதமான உணவு என்பதும், அதற்கு இணையான மாற்று உணவு உலகிலேயே இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

 

குழந்தைக்கு ஒவ்வாமை நோய் வராமல் காக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, அதிக அறிவுடன் வளர உதவுகிறது, வைரஸ் பாக்டீரியா தாக்குதலிலிருந்து காக்கிறது என்றெல்லாம் தாய்ப்பாலில் மகத்துவம் குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் பல்வேறு வடிவங்களில் இதுவரை வெளிவந்திருக்கின்றன.

 

கூடவே தாயின் உடல் எடையிழப்புக்கு உதவுகிறது எனவும், தாய்க்கு புற்று நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது எனவும், எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது எனவும் பாலூட்டுதலின் பயன்களையும் அறிவியல் நிரூபித்துள்ளது.

 

இப்போது பிரிட்டனில் நிகழ்த்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பள்ளி செல்லும்போது பதட்டமில்லாமல் செயல்படுவார்கள் எனவும், மன அழுத்தத்தைத் தாங்கும் வலிமை படைத்தவர்களாக இருப்பார்கள் எனவும் புதிய ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

சுமார் 9000 குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு தாய்ப்பாலின் தேவையை இன்னொரு பரிமாணத்தில் முக்கியத்துவப் படுத்துகிறது.

 

சமூகத்தின் சூழலை ஏற்று உள்வாங்கி செயல்படுதலுக்கும், பரிச்சயமற்ற சூழலில் கூட பதட்டமில்லாமல் செயல்படுவதற்கும் வேண்டிய மன தெளிவை குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் சக்தி வழங்குகிறது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

 

இது பாலூட்டும் போது நிகழும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான தொடுதல் உறவினாலோ, அல்லது பாலில் இருக்கும் உன்னத சக்தியினாலோ நிகழ்ந்திருக்கலாம். எப்படியெனினும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பள்ளிக்காலங்களில் ஏற்படக் கூடிய பதட்டம், மன அழுத்தம் அனைத்தையும் எளிதில் கடந்து விடுகின்றனர் என்பது மட்டும் திண்ணம்.

தாய்ப்பால் ஊட்டவேண்டுமா, வேண்டாமா என யோசிக்கும் தாய்மார்களுக்கு இந்த ஆய்வு முடிவு ஒரு வழிகாட்டியாய் இருக்கும். இருக்கவேண்டும்.

http://sirippu.wordpress.com/2008/08/20/breastfeeding/