06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

இந்திய கோயபல்ஸ்சுகளும், புலிப் பாசிட்டுகளும்

கூட்டமாக கூடி அம்பலமாகின்றனர். மயக்கம், தயக்கம் அனைத்தும் வெகுளித்தனமாக அம்பலமாகியது. புலிப் பாசிட்டுகளைப் பொறுத்த வரையில், மக்கள் என்பது அவர்களின் தேவைக்கு ஏற்ப பலியிடப்படும் மந்தைகள் என்பதே, அவர்களின் அரசியல் நிலைப்பாடு. இவர்களுக்கு ஏற்பவே மக்களை கோமாளியாக கருதும் இந்திய கோயபல்ஸ்சுகள்.

 

 

புலிகளால் கடத்தப்பட்ட இந்திய மீனவர்களின் கதைதான், மண்ணுக்குள் மண்ணாய் புதைந்து போன பலரின் சொந்தக் கதை கூட. எத்தனை மறுப்புகள், எத்தனை அடாவடித் தனங்கள். இந்த நிலையிலும் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேராக இருக்க, 12 பேரை விடுவித்ததாக புலி ஊடகங்கள் செய்தி பரப்புகின்றன. மீண்டும் இதிலும் அதே கோயபல்ஸ் நாடகம்.

 

12வது நபர் எங்கே? மாலைதீவுக்கு அருகில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய வள்ளம், இந்த மீனவர்களுடையது. அந்த மீனவர்களின் வள்ளத்தில் சென்ற புலிகளிடமிருந்து முதலில் தப்பியவர் தான், 12வது நபர். அந்த வள்ளம் புலிகளுடையது அல்ல. கைது செய்யப்பட்டவர்கள் தமது ஆட்கள் அல்ல என்று புலிகளின் கோயபல்ஸ் அறிக்கை, பாசிச மொழியில் வெளிவந்த போதும், எல்லாம் புஸ்வாணமாகிப் போனது.

 

இப்படித் தான் புலிகளால் வரலாற்றில் பல படுகொலைகள், கடத்தல்கள் அரங்கேற்றப்பட்டது. கோயபல்ஸ் பாணியில் பாசிட்டுக்களுக்கே உரிய வழியில், முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்க முயன்றவர்கள். சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலையை பயன்படுத்தி, புலிகள் நடத்துகின்ற படுகொலைகள், இந்திய மீனவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை.

 

உண்மையில் புலிகளின் ஆயுத முனையில் மனித வரலாற்றை சாதிக்க முடியும் என்ற, அராஜகவாத வலது பாசிச தத்துவமே அனைத்தையும் தீர்மானிக்கின்றது. மக்களின் உயிர்களை இட்டு என்றும் அக்கறைப்படுவதில்லை. சொந்த அமைப்பில் கூட அதே விதி தான். மனித உயிர்கள் என்பது, புலிகளைப் பொறுத்த வரையில் மிக குறுகிய நலனுக்கு உதவக் கூடிய அவர்களின் அடக்கமுறைகளுக்கும் உறுக்கல்களுக்கும் உட்பட்ட விளையாட்டுப் பொருட்கள் தான்.

 

புலிகள் மக்களின் வாழ்வையிட்டு எந்தவிதத்திலும் அக்கறைப் படுவதில்லை. மாறாக மக்கள் தாம் சொல்வதை கிளிப்பிள்ளை போல் சொல்லவேண்டும். இது மக்கள் மேல் திணிக்கப்பட்ட புனிதமான ஒழுக்க விதி. மீறினால் மரணம். இதைவிட மக்கள் தாம் உழைத்த பணத்தை கேள்வியின்றி புலிகளுக்கு தரவேண்டும். இதுதான் அவர்கள் மக்கள் பற்றி கொண்டுள்ள நிலை மட்டுமின்றி, உறவும் கூட.

 

புலிகளால் மக்கள் கூட்டம் கூட்டமாகவே எட்டி உதைக்கப்படுகின்றனர். போராட்டம் என்பது மக்களைச் சார்ந்து, மக்களால் நடத்தப்படுவது என்பதை மறுத்து உறுமுபவர்கள். இதற்கு பலியானவர்கள் பல ஆயிரம். அனைத்தையும் துப்பாக்கி முனையில், படுகொலை வழிகளில் அரங்கேற்றும் லும்பன்களை கொண்ட ஒரு மாபியா இயக்கம. ஓட்டு மொத்தமாக தமிழ் மக்களின் எதிர்காலத்தையே குழிதோண்டிப் புதைப்பதைத் தான், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமாக நடத்துகின்றனர்.

 

இதில் ஒன்று தான் தமிழக மீனவர்கள் மீதான தமிழ் தேசிய வெறியாட்டம். இதற்கு கோயபல்ஸ் புழுகுகள், விளக்கங்கள் எல்லாம் இனியும் கூட பாடை கட்டி வெளிவரும். இங்கு உள்ளது போல், இந்தியாவிலும் புலிகள் வீசும் எச்சில் பணத்துக்கு வாலாட்டும் நாலு நாய்கள், அதை கவ்வி குலைக்காமலா விடப்போகின்றது.

 

இந்திய மீனவர்கள் கடத்தலின் பின், அவர்கள் உயிர் தப்பியது அதிஸ்ட்டம் தான். புலிப் பாசிச வரலாற்றில் அவை புதைந்து மறைந்து போகாது மிதந்தது தற்செயலான விபத்துதான். புலிகளின் படுகொலையில் இருந்து மீனவர்கள் உயிர் தப்பியது என்பது, என்னவாக இருந்தாலும் ஒரு வரலாற்று நிகழ்வுதான். பலர் எப்படி அவர்களின் வரலாறே தெரியாதபடி மண்ணுக்குள் மண்ணாக புலிகளின் வரலாற்றில் வரலாறாகிப் போனார்களோ, அதேபோல் இது போகாமல் தப்பி பிழைத்துள்ளது.

 

உண்மையில் ஜந்து புலிகள் கடலில் வைத்து கைது செய்யப்பட்ட நிகழ்வுடன் தான், இந்த மீனவர்களுக்கு அதிஸ்ட்டமாக மீண்டது. அந்த ஜவருடன் கைது செய்யப்பட்ட படகு தான் முன்னைய மீனவர் படுகொலையை நடத்தியது என்பதை இந்திய மீனவர்கள் அடையாளம் கண்டதைத் தொடர்ந்தே, அவர்களின் தகவலின் அடிப்படையில் கைதும் நடந்தது. அப்போதும் தம்மை சிங்களவராக காட்டிக்கொள்ளவே முயன்றனர். அதைத் தொடர்ந்து தாம் தான் 12 மீனவர்களை கடத்தியது என்பதை ஓத்துக்கொண்டதும், அவர்களுடன் தொடர்பு கொண்ட நிகழ்வு புலியை முதலில் இக்கட்டில் மாட்டிவிட்டது. அப்போதும் அந்த ஜவரும் தமது ஆட்கள் அல்ல என்று கோயம்பல்ஸ் பாணியில் புலிகள் மீண்டும் புளுகினர்.

 

இதன் பின்பும் புலிகள் 12 மீனவர்களை தாம் பிடிக்கவில்லை என்றனர். தாம் தேடுவதாக கூறினர். இறுதியில் தாம் பிடிக்கவில்லை என்று அடித்தே கூறிவிட்டனர். இந்திய பொலிசின் வழமையான குற்றவாளிகள் பற்றிய இட்டுக்கட்டல்களை சாதகமாக கொண்டு, இந்திய கோயபல்ஸ்சுகள் இதை தமிழ் மக்களுக்கு எதிரான சதியாக, தமது சொந்த பாசிச சதியை அவிழ்த்துவிட்டனர்.

 

மீண்டும் ஒரு உண்மை அனைத்தையும் தகர்க்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மாலைதீவில் அவர்களின் கடற்படையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட வள்ளம் இந்த மீனவர்கள் உடையது என்பது அம்பலமானது. அத்துடன் புலிகள் கடத்தி வைத்திருந்த அந்த வள்ளத்தில் இருந்து முதலில் தப்பியோடிய மாலுமி, கடத்தப்பட்ட மீனவர்pல் 12 வது நபர் என்பது வெளி உலகுக்கு அம்பலமானது. இதன் போதும் கூட அந்த வள்ளம் தம்முடையதல்ல என்று புலிகள் மீண்டும் கோயபல்ஸ் பாணியில் அறிக்கை விட்டனர். ஆனால் எல்லாம் அம்பலமாக, தாம் பிடிக்காததென கூறிவந்த அந்த மீனவர்களை விடுவித்தனர்.

 

இப்படித்தான் விடுதலை நாடகம் அரங்கேறியது. இந்த விடையத்தில் வழமை போல் அல்லாது புலிகள் அவர்களை விடுவித்தது என்பது ஆச்சரியமானது. புலிகளின் பாசிச வரலாற்றில் அப்படி நடப்பது அரிதிலும் அரிது. கையும் களவுமாக மாட்டிய நிலையில், இதன் விளைவை தவிர்க்கவே விடுவிக்கும் நாடகம் அரங்கேறியது.

 

இந்திய கோயபல்ஸ்சுள்

 

புலிகளின் இந்த கடத்தல் மற்றும் படுகொலைகளை மறுத்து, சொந்த மக்களுக்கே துரோகம் செய்த கோயபல்ஸ்சுகள் அம்மணமாகி நிற்கின்றனர். புலிகளிடம் கையூட்டு வாங்கிக் கொண்டும், வெளிநாட்டு பயணங்களுக்காகவும் நக்கும் இந்த இழிந்த சமூக விரோதக் கும்பல்கள், எத்தனை எத்தனை அரசியல் பம்மாத்துகளை விட்டவர்கள். புலிகள் எப்படியும் மீனவர்களை உயிருடன் விடாது கொன்று விடுவார்கள் என்ற நம்பிக்கை, அவர்களை குலைக்க வைத்தது.

 

புலிகள் அவர்களை வழமைபோல் கொன்றுவிடுவதை, தமது சொந்த அரசியல் ஆதாயத்துடன் விரும்பினார்கள். அதற்காகவே பிரார்த்தித்தார்கள். இந்த பாசிச எடுபிடிகளாக திரியும் கோயபல்ஸ்சுகள், தமது சொந்த மக்களுக்கு வெட்கமின்றி துரோகம் செய்தனர். புலிகள் அவர்களையும் காப்பாற்ற முடியாது போனது. சொந்த பாசிச மாபியா நடத்தைகளை மூடிமறைக்க முடியாது போய் அம்பலமானார்கள். அவர்கள் தம்மை மட்டுமின்றி, தாம் போட்ட எச்சில் காசில் நக்கிய கோயபல்ஸ் துரோகிகளின் வேட்டியை உருவிவிட்டனர். வரலாறு இப்படித் தான் இந்த நிகழ்வை எழுதும்.

பி.இரயாகரன்
19.05.2007


பி.இரயாகரன் - சமர்