அனைத்து சுயாதீனத்தையும் இழந்துவிட்ட தமிழ் இனம், புலியினதும் அரசினதும் கோரப்பற்களுக்கு இடையில் சிக்கி அழிகின்றது. அகதியானலும் சரி, அமைதியின் பெயரில் அரசு புலி என்று யார் ஆண்டாலும் சரி, தமிழ் மக்கள் மலடாக்கப்பட்டு ஊமையாக்கப்பட்டுள்ளனர். எங்கும் எல்லையற்ற மனித அவலம்.
மனிதம் சந்திக்கின்ற சொந்த துயரத்தை யாரும் பேச முடியாது. தேசியத்தின் பெயரில், பயங்கரவாதத்தின் பெயரில், எல்லாம் அடக்கி ஒடுக்கப்படுகின்றது.
இன்று பேரினவாதம் நடத்தும் இனவழிப்பு யுத்தமோ, புலிகளின் பாசிச அரசியலின் மேல் அரங்கேற்றப்படுகின்றது. புலிகளும் தமிழ் மக்களுக்கும் இடையில் உள்ள பாரிய முரண்பாட்டை பயன்படுத்தியே, புலிகள் ஒழித்துக்கட்டப்படுகின்றனர். மறுபக்கத்தில் இதன் மூலம் தமிழ் இனத்தின் சுயநிர்ணயம் என்ற கோரிக்கைக்கு அடிப்படையாக இருந்த, சமூக பொருளாதார அடிக்கட்டுமானங்கள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தலைமை முதல், அதன் சமூக பொருளாதார கூறுகளை எல்லாம் அழித்துவிட்டனர்.
புலிகள் அழித்ததை ஆதாரமாகக் கொண்டு, பேரினவாதம் அதன் சமூகக் கூறுகளையே இல்லாதாக்கி வருகின்றது. பேரினவாதத்துக்கு தொண்டு செய்யும் கைக் கூலித்தனம் தான் தமிழ் அரசியல் என்றால், தமிழ் இனம் பேரினவாதத்தின் தயவில் பிழைத்துக் கொள்ளவேண்டும். இதைத்தான் பேரினவாதம் புலியெழிப்பின் ஊடாக செய்கின்றது. இதை பேரினவாதம் செய்ய, வழியேற்படுத்திக் கொடுத்தது புலிகளின் அரசியல்.
தமிழ்மக்கள் புலிகளை வெறுக்கின்ற வகையில், புலிகளின் பாசிச அரசியல் கடந்த 30 வருடமாக ஆட்டம் போட்டது. எத்தனை உயிர்களை வெட்டியும் கொத்தியும் சுட்டும் கொன்றனர். இதன் மூலம் மனிதம் சந்தித்த துயரங்கள், உளவியல் அவலங்கள் தான், இன்று புலிகளை அழிக்கின்றது. இதைத்தான் பேரினவாதம் புலி ஒழிப்பாக அறுவடை செய்கின்றது. தமிழ் மக்களால் புலிகள் எப்போதோ தோற்கடிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதைப் பேரினவாதம் தனது சொந்த வெற்றியாக்க பாரிய இராணுவ முன்னெடுப்பாக்கியுள்ளது.
மக்களுக்கு எதிரான புலிகளின் பாசிச மாபியா நடத்தைகளை அடிப்படையாக முன்னிறுத்தி, புலிகளை சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்தி விட்டனர். இந்தியா முதல் ஏகாதிபத்தியங்கள் வரை, புலிக்கு எதிராக திட்டமிட்டு இயங்குகின்றது. உலகளவில் புலிகள் தனிமைப்பட்டு, ஒரு மாபியா பாசிச கும்பலாக எஞ்சிக் கிடக்கின்றனர். எஞ்சியுள்ள மாபியாக்களும் பினாமிகளும் தான், உலகளாவிய புலியின் அரசியல் ஆதாரமாக அடிப்படையாகவும் உள்ளது.
இந்த நிலையில் ஏகாதிபத்தியமும், பிராந்திய வல்லரசும் பேரினவாத அரசை ஆதரிக்கின்றன. இதைப் பயன்படுத்தி பேரினவாதம் யுத்தத்தை முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில் புலிகளை மக்கள் ஆதரிக்க முடியாத வகையில், பாசிட்டுக்களாக தம்மைத் தாமே தனிமைப்படுத்தி நிற்கின்றனர்.
தமிழ் மக்கள் தமது சொந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாத வகையில், அவர்களுக்கு எதிராக செயல்பட்டனர். புலிகள் அவர்களை ஈவிரக்கமின்றி ஒடுக்கினர். சுய குரல்கள் இன்றி தமிழ் இனம் ஊமையாக, புலிகள் மட்டுமே அனைத்துமாக உறுமினர்.
புலிகள் பார்வையில் தமிழ் மக்கள் என்பது, தமது மாபியாத் தனத்துக்கும் பாசிசத்துக்கும் தலையாட்டும் எடுபிடிகளாக இருத்தல் தான். இந்த எல்லைக்குள் தமிழ் மக்களைச் செயலற்ற புலிப் பொம்மையாக்கினர்.
புலிகள் தம்மைத் தாம் இப்படி தனிமைப்படுத்தி தமிழ் மக்களிடம் தாமாகவே அம்பலமாகினர். மவுனமாக்கப்பட்ட தமிழ் மக்களோ, புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடித்தனர். இதைத் தான், தனது சொந்த வெற்றியாக்க பேரினவாதம் பாரிய இராணுவ தாக்குதலை நடத்தி வருகின்றது. புலிகள் தமது சொந்த தளங்களையும், பிரதேசங்களையும் இழந்து வருகின்றனர்.
மக்களின் வாழ்வுடன் தொடர்பற்ற இந்த புலி-அரசு யுத்தத்தில், தமிழ் மக்கள் சிக்கி சிதைகின்றனர். யுத்தத்தில் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் புலிகள் தப்பிப்பிழைக்க, மக்களை பணயப்பொருளாக நிறுத்துகின்றனர்.
தமிழ்மக்கள் யுத்தமற்ற பிரதேசத்துக்கு செல்லமுடியாத வகையில் பணயப் பொருளாக்கப்பட்டுள்ளனர். அவர்களை தமது சொந்த சிறையில் அடைத்து வைத்துள்ள புலிகள், அவர்கள் தப்பியோடாத வண்ணம் கடும் கட்டுப்பாடுகளை போட்டுள்ளனர். இந்த மக்களிடம் தான் தோற்றுப்போன புலிகள், இன்று அவர்களை தமக்கு மனித கேடயங்களாகவும் யுத்த கருவிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். கட்டாய இராணுவ பணி முதல், யுத்தப் பகுதியில் தம்முடன் வாழவேண்டும் என்ற வகையில் அடக்குமுறைகளை ஏவிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பேரினவாதம் பாரிய இராணுவ முன்னெடுப்புடன், மக்கள் மேல் வெடி குண்டுகளை விதைக்கின்றது. தமிழ் மக்கள் தப்பியோட வழிதெரியாது, புலிக்கு பின்னாலும் முன்னாலும் தப்பியோடுகின்றனர்.
பேரினவாதம் மற்றும் புலிக்கு இடையில் சிக்கிவிட்ட மக்கள், ஒரு பாரிய மனித அவலத்தை எதிர்கொள்கின்றனர். சொந்த வாழ்விடத்தை எல்லாம் துறந்து, அடிப்படை வசதிகளை எல்லாம் இழந்து, அன்றாடம் ஒரு நேரக் கஞ்சிக்கே அல்லற்படும் மனித அவலம். மறுபக்கத்தில் இரண்டு துப்பாக்கிகளுக்கும் இடையில் சிக்கி ஊமையாகி நிற்கின்றனர். இப்படி மக்களுக்கான போராட்டம், தவறான அரசியல் தலைமையால் தவறாகி மக்களை அழித்துவிட்டது.
கேட்பாரற்ற அனாதைகளாக தமிழ் மக்கள். இதை வைத்து பிழைக்கும் கூட்டம் மட்டும், இன்னமும் மக்களை சுரண்டித் தின்னுகின்றது.
பி.இரயாகரன்
19.08.2008