மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையை, இதுவரை அரசியலில் ஈடுபடுகின்ற எவரும் ஏற்றுக் கொண்டது கிடையாது. அரசியலை மக்கள் ஊடாக பார்க்கும் எமது நிலைக்கும், மற்றவர்களின் மக்கள் விரோத நிலைக்கும் இடையிலான அரசியல் வேறுபாடு, அரசியல் சாரமாக உள்ளது. நாங்கள் மட்டும், மக்கள் தான் புலிகளைத் தோற்கடிக்கின்றனர் என்பதை தனித்துச் சொல்லுகின்றோம். புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி, மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை நம்ப முடிவதில்லை. உண்மையில் இங்கு புலிகள் மட்டும் தோற்கடிக்கப்படுவதில்லை, புலியெதிர்ப்பும் தோற்கடிக்கப்படுகின்றது.

முடிவு, அரசியலில் பொறுக்கிகளும், சமூக விரோதிகளும், கால்தூசு துடைக்கத் தயாரான கும்பல்களும், தமது சொந்த வேஷத்தைக் களைந்து தனிமைப்பட்டு வெளிப்படுகின்றனர். இவர்கள் மக்களை ஒடுக்கும் அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து, தாம் பொறுக்கித் தின்பதே மக்கள் சேவை என்கின்றனர்.

 

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை இரண்டு தளத்திலும் மறுக்கின்றனர்.

 

1. புலிகள் இதை மறுக்கின்றனர். புலிகள் இன்னமும் கொண்டுள்ள இராணுவபலம், உளவு அமைப்பின் திறன், உதிரியான பாசிச லும்பன்களை இன்னமும் ஒருங்கிணைத்துள்ள ஸ்தாபன வடிவம், புலிகளை தோற்கடிக்க முடியாது என்ற நம்பிகையை இன்னமும் புலிக்கு கொடுக்கின்றது. இப்படி புலிக்கு எதிரியாக உள்ள பெரும்பான்மை நம்புகின்றது.

 

2. புலியெதிர்ப்பு, அரசு தான் புலிகளை தோற்கடிப்பதாக நம்புகின்றது. ஆனால் இது எப்படி சாத்தியமானது என்பதும், புலிகள் என்ன செய்கின்றனர் என்ற அங்கலாய்ப்பில் உளறுகின்றனர்.

 

புலிகள் பதுங்கின்றனரா, புலி பதுங்குவது பாய்வதற்குத் தான், என்று எப்படி எந்தக் கதை சொன்னாலும், விளைவு ஒன்று உண்டு. மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையை, இவர்களால் சீரணிக்க முடிவதில்லை. இது அவர்களின் அரசியலுக்கு அஸ்தமனமாகின்றது.

 

புலி சரி, புலியெதிர்ப்பு சரி, மக்களை தமது சொந்த எதிரியாகவே பார்த்தனர், பார்க்கின்றனர். இதனால் மக்கள் தான் வரலாற்றைத் தீர்மானிப்பவர்கள் என்ற உண்மை, புலிக்கும் சரி புலியெதிர்ப்புக்கும் சரி, அங்குமிங்குமாக வாலை காட்டுபவர்களுக்கும் சரி கசப்பானதாக உள்ளது. தேசியத்துக்காகவோ, ஜனநாயகத்துக்காவோ மக்கள் தமக்காக போராட முடியாதவர்கள் என்று கூறிக்கொண்டு, அந்த மக்களை தமக்கு எதிரியாக நிறுத்தியவர்கள் தான், இன்று ஒட்டுமொத்தமாக தோற்கடிக்கப்படுகின்றனர். இந்த மக்கள் விரோதிகளை, மக்கள் வரலாறு என்றும் மன்னிக்காது.

 

(புலி) தேசியத்துக்கான போராட்டம் சரி, புலி பாசிசத்துக்கு எதிரான (புலியெதிர்ப்பு) போராட்டம் சரி, இவை இரண்டுமே மக்களை தமக்கு எதிராக நிறுத்தினர். இப்படி மக்களின் எதிரிகளின் போராட்டம் என்பது, மக்களை ஒடுக்குவதாக இருந்தது. மக்களை ஒடுக்குவதன் மூலம், தேசியத்தையும் ஜனநாயகத்தையும் பெறமுடியும் என்றனர். இப்படி இவர்கள் மக்களுக்கு எதிராக கட்டமைத்த புலிப் பாசிசமும், அரச பாசிசமும் மக்களை அடக்கியொடுக்கி அடிமைப்படுத்தின. மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையின் பின்னுள்ள, ஒரு வரலாறு இது.

 

இவ் இரண்டையும் எதிர்த்து நாம் நடத்தி வருகின்ற போராட்டம் இழிவாடப்பட்டது, கண்டு கொள்ளாது புறக்கணிக்கப்பட்டது. இன்று அந்த மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையும், புலியெதிர்பையும் தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையும் கூட, ஏற்றுக்கொள்ளப்படாமல் தான் உள்ளது.

 

இப்படியிருக்க மார்க்சியம், மக்கள் விடுதலை என்று, சிலர் புது வேஷம் போட்டு பினாற்றுகின்றனர். இது போல்தான், கடந்த காலத்திலும் புலி சரி, புலியெதிர்ப்பும் சரி மக்களை ஏமாற்ற, தாம் மக்களுக்காக போராடுவதாக காட்ட முனைந்தனர். மக்களை அணிதிரட்டி அவர்களை போராட்டத்துக்கு இட்டுச்செல்லாத வடிவங்களில், மக்களை ரசிகர் கூட்டமாக தம் பின்னால் வைத்திருக்க, அரசியல் மோசடிகளையும் கவர்ச்சிகளையும் காட்டி இட்டுக்கட்டினர்.

 

மக்கள் தம்மை ஆதரிப்பதாக காட்டமுனைந்தனர். மக்களுக்காக சில கதாநாயகர்கள் மட்டும் போராடமுடியும் என்று, சினிமா அரசியலை நடத்தினர். இப்படி போராட்டத்தை திரித்தனர். மக்களை மந்தைக் கூட்டமாக, அங்குமிங்குமாக வளைத்து, அவர்களை வைத்துச் சவாரி விடமுனைந்தனர். ஒருபுறம் தேசியம், மறுபக்கம் ஜனநாயகம் என்ற இரண்டு எதிர்ப்புரட்சிக் கும்பல், மக்களின் பெயரில் மக்களை அடிமைப்படுத்தினர். இவர்களில் பிழைக்கத் தெரிந்த சிலர், இன்றும் மக்கள் போராட்டம், மார்க்சியம் என்ற புது வேஷம் போடுகின்றனர்.

 

மக்கள் தமக்காக தாம் அணிதிரண்டு போராடாத வரை, அந்த அரசியலை முன்னிறுத்தாத வரை, தாம் மக்களுக்காக போராடுவதாக கூறுவது எல்லாம் தோற்கடிக்கப்படும். இந்த எதிர்ப்புரட்சி அரசியல் தோற்கடிக்கப்படும் என்ற உண்மை, புலி மற்றும் புலியெதிர்ப்பு தளத்தில் நிதர்சனமாகி வருகின்றது.

 

புலி மற்றும் புலியெதிர்ப்பு பொறுக்கிகளும், சமூக விரோதிகளும், அரசியல் லும்பன்களும், அரசியல் தளத்தில் இன்றும் தமது இறுதி ஆட்டத்தை நடத்துகின்றனர். ஏதோ தாம் மக்களுக்காக இருப்பதாக, காட்ட முனைகின்றனர். தமது 30 வருட வரலாற்று பின்னணியை மூடிமறைத்துக் கொண்டு, நிலைமைக்கு ஏற்பத் பிழைக்கத் தெரிந்த சிலர் புதுவேஷம் போடுகின்றனர்.

 

இவர்களின் கடந்தகாலம், நிகழ்காலம் எல்லாம், மக்களுக்கு எதிரான அவர்களின் சொந்த நடத்தைகளுடன் சங்கமமாகி வெளுறிக்கிடக்கின்றது. வேஷம் போட்டு மக்கள் புரட்சியை யாராலும் நடத்த முடியாது. மக்கள் தான், தமது வரலாற்றை தீர்மானிக்கின்றனர்.

 

பி.இரயாகரன்
18.08.2008