அமெரிக்க FOX தொலைக்காட்சி, தென் ஒசேத்திய யுத்தத்தில் இருந்து தப்பிய அமெரிக்க சிறுமியின் நேரடி ஒளிபரப்பில், இடையூறு செய்து நிறுத்தியது. காரணம், ஜோர்ஜிய ஜனாதிபதியை ஆக்கிரமிப்பாளர் என்று குற்றம் சுமத்தியதும், ரஷ்ய ராணுவத்திற்கு நன்றி சொன்னதும் தான்.

 

 

தெற்கு ஒசெத்தியாவை பூர்வீகமாக கொண்ட அந்த அமெரிக்க சிறுமியும், அவளது மாமியும், போர் தொடங்கி, ஜோர்ஜிய படைகள் குண்டு வீசிக் கொண்டிருந்த வேளை, ஒசெத்தியாவில் உறவினர்களுடன் ஒரு மாத விடுமுறையில் தங்கி இருந்திருக்கின்றனர். குண்டு வீச்சுகளில் இருந்து ஒருவழியாக தப்பி, அமெரிக்கா வந்து சேர்ந்த அவர்களிடம் இருந்து, ஒசேத்திய நிலைமை குறித்து, நேரடி தகவல்களை பெரும் பொருட்டு, அமெரிக்காவின் பிரபலமான "FOX தொலைக்காட்சி" பேட்டி எடுத்தது. நேரடி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில், ஜோர்ஜிய குண்டுவீச்சில் தமது வீடுகள் சேதமடைந்ததாகவும், ஒரே நாளில் 2000 ஒசேத்திய மக்கள் இறந்ததாகவும், தாம் ஜோர்ஜிய படைகளுக்கு பயந்து ஓடியதாகவும் தெரிவித்தனர். மேலும் தாம் ஜோர்ஜிய மக்களையல்ல, ஜோர்ஜிய அரசாங்கத்தையே குற்றம் சாட்டுவதாகவும், ஜனாதிபதி சாகஷ்விலி ஒரு ஆக்கிரமிப்பாளர் என்றும் கூறிக் கொண்டிருந்த போது; இடையூறு செய்த நிகழ்ச்சி தொகுப்பாளர், "வர்த்தக இடைவேளை" என்றும், "நேரமில்லை" என்றும் கூறி அவர்களை தொடர்ந்து பேசவிடாது தடுத்து, நிகழ்ச்சியை இடைநிறுத்தினார். இவற்றை நீங்கள், இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் நேரடியாக பார்க்கலாம்.


நமது தமிழ் வெகுஜன ஊடகங்கள் யாவும், தமது செய்திகளை ஆங்கிலோ-அமெரிக்க நிறுவனங்களான CNN, BBC, REUTERS, AP போன்றவற்றிலிருந்தே பெறுகின்றன. இந்த மேற்குலக ஊடகங்கள், அரச கட்டுப்பாட்டில் இல்லை என்றும், பக்கச்சார்பற்ற செய்திகளை வழங்குவதாகவும் பலர் இன்றும் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். இவை பெரும்பாலும் அரசாங்கத்திற்கு சொந்தமற்ற, தனியார் நிறுவனங்கள் தான். சில நேரம் தாம் சார்ந்த அரசாங்கங்களை விமர்சிக்கும் செய்திகளும் வருவது உண்மை தான். இருப்பினும் "தேசிய நலன்" கருதி முக்கியமான தருணங்களில் அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரிக்கின்றன. இவ்வாறு தான், அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தான், ஈராக் மீது படையெடுத்த போது, அமெரிக்காவின் பெரிய வெகுஜன ஊடகங்கள் யாவும் அரசாங்கத்தின் பின்னால் நின்றன.

 

அதே போன்றே தற்போதும், ஜோர்ஜிய பிரச்சினையில், ரஷ்யாவை கொடூரமான ஆக்கிரமிப்பாளராக காட்டி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றன. ஆமாம், அவை வழங்குவது செய்தியல்ல, பக்கச்சார்பான பிரச்சாரம். போர் நடந்த ஜோர்ஜியாவிற்கு இந்த ஊடகங்கள் அனுப்பிய செய்தியாளர்கள் எல்லோரும் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையால் ஜோர்ஜிய மக்கள் பாதிக்கப்பட்டதை காட்டுவதிலேயே கண்ணும்கருத்துமாக இருந்தனர். அப்போது கூட எவராவது ஒரு ஜோர்ஜிய குடிமகன், "ஜனாதிபதி சாகஷ்விலியின் முட்டாள்தனமே எமது அவலத்திற்கு காரணம்", என்று கூறி விட்டால், விழித்துக்கொள்ளும் செய்தியாளர் உடனேயே வேறு ஆட்களை தேடிப்போய் விடுவார். அப்படித்தான் மேற்குலக ஊடகங்கள் யாவும், "ஜோர்ஜிய மக்கள் அனைவரும் தமது அரசாங்கத்தின் பின்னால் நிற்பதாகவும், ரஷ்யாவை வெறுப்பதாகவும்", ஒருபக்க சார்பான தகவல்களை எம்மீது திணிக்கின்றன.

 

மக்களை மூளைச்சலவை செய்வதில் செய்தி ஊடகங்களின் பங்கு பெரிது. அவர்கள் யாரை நல்லவன் என்கிறார்களோ, யாரை கெட்டவன் என்கிறார்களோ, சொல்வதை நாமும் நம்ப வேண்டும். அது கூட நிரந்தரமன்று, சந்தர்ப்பத்திற்கேற்ப மாறும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது, ஜப்பானை எதிரி என்றார்கள், ரஷ்யாவை நண்பன் என்றார்கள். மக்கள் நம்பினர். யுத்தம் முடிந்த பின்னர், ரஷ்யாவை எதிரி என்றும், ஜப்பானை நண்பன் என்றும் கூறினார்கள். எந்தக் கேள்வியும் கேட்காமல், மக்கள் அதையும் நம்பினர்.