05312023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா?

 இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. "இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில்தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவதுதான் இந்தியின் தத்துவம். எனவேதான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு போர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும்.

இந்தியில் மெச்சத் தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலைகள்யாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமுந்தாம்; மநுதர்மமும், பாகவதமும்தான். இவற்றின் தன்மைதான் தெரியுமே உங்களுக்கு. இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால், நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும், அவருடைய அய்யாவையுந்தான் குறிப்பிட வேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்ளையடிப்பது (உங்களுக்குத் தெரிந்ததுதான்); வேறு ஆட்களைக் குறிப்பிட முடியாது. தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முத்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய ‘இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே! இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன்? இந்தி தேசிய மொழியா? அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. ‘கன்னிகாதானம்' என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட இருந்தது? ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது? மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது? இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா?

சூத்திரன் என்ற வார்த்தையைக் கைவிட்டு ‘திராவிடன்' என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் நீங்கள், மறுபடி சூத்திரனாக மாற விருப்பம் கொள்வீர்களா? இந்த முற்போக்கைக் கண்டு அஞ்சும் பார்ப்பனக் கூட்டம் வட நாட்டாரின் கூலிகளாகி, அவர்களுக்கு வால்பிடித்து நம்மவர் சிலரை விபீஷணர்களாக்கிக் கொண்டு, தேசிய மொழி என்ற போரால் நம்மீது வடமொழியைச் சுமத்துகிறது என்றால் நம்மை, நம் நாட்டை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுக்கிறதென்றால் நாம் அதற்கு இடங்கொடுக்கலாமா?

தோழர்களே! தாய்மார்களே! திராவிடர் - ஆரியர் போராட்டம், அதுவும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறாது இருந்துவரும் இப்போராட்டம், இன்று ஒரு முடிவான கட்டத்திற்கு வந்துவிட்டது. இதை முடித்து வைப்பது நமக்குப் பெருமையுங்கூட. நமது பின் சந்ததியார் போற்றிப் புகழக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பத்தில் நாம் இன்று இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின் சந்ததியரால் எள்ளி நகையாடப்படுவோம் என்பதோடு, அவர்களின் துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் நாமே காரணபூதர்களாகவும் ஆகிவிடுவோம்.

சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு

http://www.keetru.com/rebel/periyar/22.php