Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எது சமூகத்துக்கு நடக்கக் கூடாதோ, அது நடக்கும். சமூகத்தின் சாரத்தை உறிஞ்சி, அதை தமது அலுக்கோசுத்தனத்துக்கு பயன்படுத்துவது நிகழும். சமூகத்தின் அறிவை நலமடித்து, அதையும் திண்டு செரிக்கின்ற வக்கிரத்தை அரங்கேற்றுகின்றது.

 இப்படியான ஒரு நிகழ்வு 15.10.2006 வேலணை மத்திய மகாவித்தியாலயம் பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டத்தில் அரங்கேறியது. சமூக அடிப்படையற்ற சமூக விரோத அலுக்கோசுகளினால், பாசிசத்தின் பெயரில் இவை நாடகமாக நடித்துக்காட்டப்பட்டது. மனித அறிவை, சமூக அறிவை மலடாக்க, அதை நலமடிக்கின்ற குதர்க்கமான நயவஞ்சகமான குறுக்குவழி சூழ்ச்சிகளால் அறிவு குதறப்பட்டது. பாசிசத்தின் பெயரில், அதனை பக்க துணையாகக் கொண்டே, தமது அலுக்கோசுத்தனத்தை நகைச்சுவையாகவே அரங்கேற்றினர். அந்த சங்கம் வெளியிட்ட மலரின் ஒருபகுதி, அலுகோசுத்தனம் மூலம் மிரட்டி, பிளவை முன்னிறுத்தி, தனது கோமாளித்தனம் மூலம் கிழித்தெறியப்பட்டது. ஏன் எதற்காக கிழிக்கப்பட்டது என்பதற்கு, எந்த சுயவிளக்கமும் வழங்கப்படவில்லை. அலுக்கோசுகளுக்கு காரணம் தெரிவதில்லை.

 

எழுதியற்காக சுடுவதும் சரி, எழுதியதை கிழித்தெறிவதும் சரி இரண்டும் ஒன்று தான். இங்கு சந்தர்ப்பமும் சூழலும் தான் இந்த நிலமையை வேறுபடுத்துகின்றது. நோக்கம் எழுதுபவனை, அவன் எழுத்தையும் இல்லாது ஒழிப்பதுதான். இந்த நிகழ்வு, என் முன்னாலேயே அரங்கேறியது. அதிஸ்டவசமாக பிரான்சில் வாழ்வதால், நான் உயிருடன் உள்ளேன்.

 

பூனையாட்டம் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் அலுக்கோசுகள், இதை கிழத்தெறிவதால் எதுவும் நடந்துவிடாது. மக்களை முட்டாளாக கருதி, தமது குருட்டுக் கண்ணுக்குள் அவர்களை அடிமைகள் என்று நினைத்துக் கொண்டு கழுவேற்றுபவர்களே இந்த ஐந்துகள். இதைத் தவிர வேறு எதுவும் தெரியாத அற்ப எடுபிடிகள் இவர்கள். அடியாட்களான இவர்கள் தங்களின் மூளையில் சொந்தமாக எதுவுமற்ற மரமண்டைகள். பணத்தை வைத்துக் கொண்டு, பாசிசத்தின் அலுகோசுகளாக சமூகத்தில் முன்னிலையில் குதியம் குத்துபவர்கள். இவர்கள் சமூக சேவை என்று புறப்பட்டால், அவர்கள் செய்வது அனைத்தும் அலுக்கோசுத்தனத்தைத் தவிர, வேறு எதுவுமாக இருப்பதில்லை.

 

சமூகம் அறிவுபூர்வமாக சிந்திப்பது தமது பாசிச அலுக்கோசுதனத்துக்கும் அதன் இருப்புக்கும் ஆபத்தானதாகவே கருதுகின்றது. இது சமூகம் சுயமாக சிந்திக்க கூடிய அனைத்தையும் நலமடிக்க கோருகின்றது. சமூக நல அமைப்புகளிலும் இதை நடைமுறையில் அமுல்படுத்த முனைகின்றது. பிளவின் பெயரில் அச்சுறுத்தலை விடுத்து, ஒரு சமூக நல அமைப்பையே முறைகேடாக தனது சொந்த இழிசெயலுக்கு உடந்தையாக்குகின்றது. இழிவானதும், சாதிய வக்கிரமும் கொண்ட யாழ் மேலாதிக்க மனப்பாங்கு கொண்ட இந்த சமூகவிரோத ஒட்டுண்ணிகள், சமூகத்தையே பேரம் பேசி விற்கின்ற கோமாளிகள் தான். பாசிட்டுகளுக்கு துணை நின்று அந்த துணிவில் கொக்கரிக்கின்ற இந்த எடுபிடி அலுக்கோசுகள், மனிதத்தை, மனிதநேயத்தை, மனிதத்துவத்தை, அதற்கு உதவுகின்ற அனைத்து சமூக உணர்வுகளையும் செல்லரிக்க வைத்து, அதில் குளிர் காய்வதே இதன் மேதமையாகும்.

 

இவர்கள் இப்படி சவாரி விடுவது யார் மீது என்றால் மக்கள் மீதுதான். இலங்கை வாழ் தமிழ் சமூகம் எல்லாவிதமான சமூக அடிப்படையையும் பாசிட்டுகளிடம் இழந்து, நாதியற்ற ஒரு சமூகமாக அல்லலுறுகின்றது. இதற்குள் ஓட்டுண்ணிகளும், அலுகோசுகள் பாசிட்டுகளுடன் கோஸ்டி சேரும் போது, எஞ்சிக்கிடக்கும் கொஞ்ச நஞ்ச சமூக அடிப்படைகளையும் இல்லாதொழித்து விடுகின்றது. மனிதம் சிதைவுற்று அல்லலுறுகின்றது. இதுவே எமது சமூகத்தின் இன்றைய அவலமாகும்.

 

இதையும் மீறி இன்றைய எமது சமூக நிலையில், சமூக அக்கறையுடன் ஆங்காங்கே ஒருசில அமைப்புகள் மட்டுமே சுதந்திரமாக சுயமாக இயங்க முனைகின்றது. அதுவும் ஒரு சிலரின் நேர்மையான கடும் முயற்சிகளுடன் கூடிய, பாசிச சூழலுக்கு ஏற்ற சமரசம் தான் அதை இயங்க வைக்கின்றது. இது அன்றாடம் நாம் காணும் உண்மைகள். அதுவும் பற்பல சிரமங்களுக்கு மத்தியில், அவமானங்களுக்கு மத்தியில் தான், அவை சுயாதீனமாக தமது சொந்த நோக்குடன் தனித்துவமாக இயங்க முனைகின்றது. பல முரண்பட்ட கருத்துகள், சமூக முரண்பாடுகளுக்கு இடையில், தமிழரின் பாசிச அரசியல் வங்குரோத்துக்குள், இந்த மாதிரியான அமைப்புகள் தப்பிப்பிழைப்பதே கேள்விக்குரியதாக உள்ளது. இதற்குள் சொந்த நலனை முதன்மைப்படுத்திய புல்லுருவிகள், ஓட்டுண்ணிகள், அலுகோசுகள் புகுந்து, அந்த நேர்மையான செயலை மிரட்டி தமது இழிவான செயல்கள் மூலம் அவற்றைச் செல்லரிக்க வைக்கின்றனர்.

 

தமிழ் மக்களின் மேல் உண்மையான அக்கறையுடன், தமது சொந்த உழைப்பில் ஒரு சிறு பகுதியை அந்த மக்களுக்கு வழங்குவது என்பது, இன்று நடைமுறையில் சாத்திமற்ற ஒன்றாகவேவுள்ளது. இந்த நிலையில் பழையமாணவர் சங்கங்கள் தான், சுயாதீனமாக தம்மால் இயன்றளவில் இதை நேர்மையாக பகிரங்கமான கணக்கு வழக்குடன் செய்ய முடிகின்றது. இதற்கு வெளியில் மக்களின் பெயரில் பெறப்படும் பணங்கள் சுருட்டப்பட்டு, அவை சூறையாடப்படுகின்றது. அவை மக்களுக்கு சென்றடைவதில்லை. சுயமான சுயாதீனமாக செயல்படும் அமைப்புகளின் பணத்தைக் கூட, கூட்டி அள்ளிச் செல்லும் பாசிச வெறியாட்டம் நடத்தப்படுகின்றது. இப்படிப்பட்ட நிலையில் பொதுப் பணம் மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்வதில் பழையமாணவர் சங்கங்கள், அதில் தனிப்பட்ட நபர்களின் நேர்மையான செயல்கள், இன்றைய எமது அவலமான சமூகத்தில் போற்றுதலுக்குரியது. இவை எமக்கு இடையிலான முரண்பாடுகளைக் கடந்தும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

 

இன்று சமூக அக்கறைக்குரிய செயல்பாடுகள் நலமடிக்கப்பட்ட நிலை தான், இன்று பொதுவாக காணப்படுகின்றது. இந்த நிலையில் ஏதோ தம்மால் இயன்ற எல்லைக்குள், மக்களுக்கு நேரடியாக சென்றடையும் வண்ணம் பழையமாணவர் சங்கங்கள் சுயாதீனமாக செயற்பட முற்படும் போது, அதில் பல முரண்பாடுகள் இருப்பது இயல்பு. இதை எல்லாம் அனுசரித்து மக்களுக்கு சென்றடையும் ஒரு துளி உதவியை, அந்த மனப்பக்குவத்தை முரண்பாடு கடந்து ஆதரிக்க வேண்டியநிலையில் நாம் உள்ளோம்.

 

சமூக செயல்பாட்டில் உள்ள அமைப்புகளில் ஒட்டுண்ணிகளும், ஐந்தறிவில்லாத மந்தைகளும் தமது சொந்த எடுபிடித்தனத்துடன் ஓட்டிக்கொள்ளும் போது, அந்த செயல்பாட்டை முடக்க தமது குறுகிய வக்கிரபுத்தியை காட்டுவது இயல்பு. அது பாசிசத்தின் துணையுடன் அல்லது பாசிசத்தின் பெயரில், அது எந்த சொந்த அமைப்பு முறையையும் அதன் விதியையும் கூட அங்கீகரிக்க மறுக்கின்றது. நாணம் அறுத்த கொம்பேறு மாடுகள் போலே நின்று திமிறும். இதற்குள் தனது அலுகோசுதனத்தை அரங்கேற்றும். சமூக கூறுகள் அனைத்தையும் தூக்கில் ஏற்றுவதை மட்டுமே தனது குலத்தொழிலாக கொண்ட இந்த எடுபிடி அடியாள் அலுகோசுகள், அதைத் தனது சொந்த வாழ்வாக கொண்டு விட்டால், கால் வைக்கும் இடமெங்கும் சமூகத்தின் இருப்புக்கே வேட்டுவைக்கின்றது. கழுவேற்றுவதே இந்த அடியாட்களின் சமூக செயல்பாடாகிவிடுகின்றது.

 

இந்த வகையில் தான் வேலணை மத்திய மகாவித்தியாலயம் வெளியிட்ட 'வித்தியாலயம் 2006" மலரிலும் அவற்றைக் கழுவேற்றியது. மலர் அச்சேற்றப்பட்டு அது புத்தகமாகிய நிலையில், இடையில் 30 முதல் 37 பக்கம் கொண்டிருந்த கட்டுரை, அலுக்கோசுகளினால் கழுவேற்றப்பட்டது. அந்தப் பக்கங்கள் கொண்டிருந்த கட்டுரை பாரிஸில் தொடரும் இன வன்முறைகளை, நிறவெறி ஆட்சியாளர்களே ஊக்குவிக்கின்றனர்என்பதாகும்.

 

பிளவை ஆயுதமாக்கி பாசித்தை துணைக்கிழுத்து, இந்தக் கட்டுரையை அந்த மலரில் இருந்து வலுக்கட்டாயமாக ஒரு சிலரால் அகற்றப்பட்டது. இதை விவாதிக்க முடியாத அலுக்கோசுகள் ஐந்தறிவற்ற முட்டாள்கள் என்பதையே, தமது சொந்த செயல் மூலம் இப்படி கோமாளிகளாகவே நிறுவிக்காட்டினர். பாசிச சமூகத்தின் எடுபிடிகளாகி அடியாள் வேலை செய்து, கழுவறுப்பதை மட்டும் தனது சொந்த இருப்பாக்கி, அதைக் கொண்டு சமூகத்துக்கே வர்த்தகம் செய்ய வெளிக்கிட்டால், அதுவே அந்த ஐந்துகளின் ஆறாவதறிவாகி விடுகின்றது. இதைக் கொண்டு அனைத்தையும் நலமடிக்கின்ற அலுக்கோசுகள் தான் தாங்கள் என்பதை, இந்த மலர் மூலம் மீண்டும் நிறுவிக்காட்டியுள்ளனர். இப்படி சமூகத்தின் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்தபடி செய்ய நினைப்பது, சமூகத்தை ஓட்டவுறுஞ்சி குடிப்பது தான்.

பி.இரயாகரன்
16.10.2006