தோழர்களே!

“மகாமகம் என்றால் என்ன? என்பதைச் சற்று விசாரித்துப் பாருங்கள். இதை அறிவதற்காக நாம் ஆவல்பட்டு தேடினோம், கும்பகோண ஸ்தலபுராணம் என்பதில் இருப்பதாக அறிந்தோம், அதை வரவழைத்துப் பார்த்தோம். அதில் உள்ளதை வெளியிடுகின்றோம்.

“கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும் ஒன்பது கன்னிகைகளாக வெளிவந்து வெள்ளியங்கிரிக்குச் சென்று பரம சிவனை அடைந்து, “உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் எவ்வளவோ கொடியதாகிய பாவங்களைச் செய்துவிட்டு எங்களிடத்தில் வந்து ஸ்நானம் செய்து அவர்களது பாவங்களை எங்களுக்குக் கொடுத்துத் தீர்த்துக் கொண்டு போய்விடுகிறார்கள். அந்தப் பாவங்களையெல்லாம் பெற்றுக் கொண்ட நாங்கள் எப்படி அவற்றைப் போக்கிக் கொள்ளுவது” என்று கேட்டார்கள். அதற்குப் பரமசிவனார், “கும்பகோணத்திலே, தென் கிழக்கிலே ஒரு தீர்த்தம் உண்டு. 12 வருஷத்துக்கு ஒருமுறை மாசிமாதம் மகாமகம் நாளன்று அதில் குளிப்பீர்களானால், உங்கள் பாவங்கள் தொலைந்து போகும்” என்று சொன்னார். அதற்கு 9 கன்னிகைகளும் “கும்பகோணம் எங்கே இருக்கின்றது” என்று கேட்டார்கள். அதற்குப் பரமசிவனார் அந்த 9 கன்னிகைகளையும் பார்த்து, “நீங்கள் காசிக்குப் போயிருங்கள், அங்கிருந்து நான் விஸ்வேஸ்வரன் என்னும் பெயருடன் உங்களைக் கும்பகோணத்திற்கு அழைத்துப் போகிறேன்” என்று சொன்னார். அந்தப்படியே கன்னிகைகள் காசிக்குப் போயிருந்தார்கள்.

பரமசிவனார் அவர்களைக் காசியிலிருந்து கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று, மகாமக குளத்தைக் காட்டிக் குளிக்க வைத்தார். பிறகு சிவபெருமானும் அந்தக் கன்னிகைகளும் கும்பகோணத்திலேயே கோவில் கொண்டுவிட்டனர்.” ஆதலால் இதில் அந்தக் காலத்தில் குளித்தவர்களுக்குச் சர்வ பாவமும் தொலைந்து சர்வ மங்களமும் உண்டாகும்” என்று கண்டிருக்கின்றது.

தோழர்களே!

இதுதான் கும்பகோண ஸ்தல மகத்துவமும், தீர்த்த மகத்துவமும், கோயில் மகத்துவமும் ஆகும். இதற்கு அப்புறம் அந்தக் குளத்தில் எப்படிக் குளிப்பது, அதற்காகப் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனப் பெண்களுக்கும் எப்படி, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியது என்கின்ற விஷயங்களும், எந்தெந்த இடத்தில் குளிப்பது, எந்தெந்தச் சாமியை எப்படி எப்படிக் கும்பிடுவது என்கின்ற விஷயமும் இருக்கின்றது.

இந்தக் கதையை ஆதாரமாக வைத்த இந்த மகாமக உற்சவத்திற்காக எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள், எவ்வளவு விளம்பரங்கள், எவ்வளவு பணச் செலவுகள், எவ்வளவு கஷ்டங்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். இந்துக்கள் மடையர்கள், அஞ்ஞானிகள், மூடர்கள் என்று ஒருவன் சொன்னால், உடனே கோபப்பட்டுக் கொள்ளத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கின்றோமே அல்லாமல் அறிவைக் கொண்டு பார்க்கின்றோமா?

இந்தக் கும்பகோணத்துக்கும், அங்குள்ள மாமாங்கக் குளத்திற்கும் உள்ள அநேக சாக்கடைகளிலும், பட்டிக்காடுகளிலும், குப்பை மேடுகளிலும் உள்ள குழவிக் கற்களுக்கும், நீரோடைகளுக்கும், குளங்களுக்கும் குட்டைகளுக்குமெல்லாம் புராணங்களும் கதை ஆதாரங்களும் அய்தீகங்களும் இருந்து வருகின்றன. பொதுவாக இது போன்ற எந்தக் காரியங்களுக்கும் விசேஷம் என்பதெல்லாம் இரண்டே இரண்டு வாக்கியங்களில்தான் அடங்கி இருக்கின்றன. அதாவது,

1. சர்வ பாபங்களும் நிவர்த்தியாகிவிடும்.

2. வேண்டியதெல்லாம் அடையலாம் என்கின்றவையேயாகும்.

இந்த இரண்டு காரியங்களும் யோக்கியமான காரியங்களாயிருக்குமா? என்பதை யோசித்துப் பாருங்கள். மனிதன் செய்த பாவம் போகுமா?

மனிதன் செய்கின்ற பாவமெல்லாம் இந்த மாதிரியான காரியங்களால் தீர்ந்து போவதாயிருந்தால், உலகத்தில் எந்த மனிதனாவது பாவகாரியங்களைச் செய்யத் தவறுவானா? தயங்குவானா? என்று யோசித்துப் பாருங்கள்.

மனிதனுக்கு வேண்டிய, அவன் ஆசைப்படும்படியான காரியங்கள் எல்லாம் இந்த மாதிரியான சிறு காரியங்களால் கைகூடிவிடுவதாய் இருந்தால், மனிதனுடைய முயற்சி, நடத்தை, ஒழுக்கம் என்பவற்றுக்கெல்லாம் அவசியமும், நிபந்தனையும், வரையறையும் எதற்காக வேண்டும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

நிற்க, பாவமுள்ள மனிதர்கள் நதிகளில் ஸ்நானம் செய்ததால் நதிகளுக்கு அந்தப் பாவங்கள் ஒட்டிக் கொண்டது என்பதில் ஏதாவது அறிவோ, உண்மையோ இருக்க முடியுமா? அந்த நதிகள் அந்தப் பாவத்தைத் தொலைக்க மற்றொரு தீர்த்தத்தில் போய்க் குளிப்பது என்று மகாமக தீர்த்தத்துக்கு வந்து குளிப்பதனால், இதில் ஏதாவது புத்தி இருக்கின்றதா? நாணயம் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள். இத்தனை பாவங்களையும் ஏற்றுக் கொண்ட மகாமகத் தெப்பக்குளம் அதன் பாவத்தைத் தீர்க்க எந்த உருவெடுத்து எந்தக் குளத்தில் போய்க் குளிப்பது என்பதையும், பிறகு அந்தக் குளம் வேறு எந்தக் குளத்துக்குப் போய்ப் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளும் என்பதையும் யோசித்தால், கடுகளவு அறிவுள்ளவனாவது இதை ஏற்க முடியுமா என்று பாருங்கள். இதையெல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால், பாவபுண்ணியத்தின் பேரால், கடவுள் பேரால், தீர்த்தம், தலம், மூர்த்தி என்னும் பெயர்களால், மக்கள் எவ்வளவு தூரம் ஏய்க்கப்பட்டுக், கடையர்கள், மடையர்கள் ஆக்கப்படுகின்றார்கள் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

மற்றும், அந்தப் புராணத்திலேயே இந்த மகாமகக் குளத்துக்குள் வடக்குப் பாகத்தில் 7 தீர்த்தங்கள் இருப்பதாகவும், கிழக்குப் பாகத்தில் 4 தீர்த்தங்கள் இருப்பதாகவும், நடுமத்தியில் (66,00,00,000) அறுபத்தாறு கோடி தீர்த்தம் இருப்பதாகவும் இந்த மகாமக குளத்தில் முழுகினால் இத்தனை தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்குமென்றும் எழுதி, அந்தப்படி ஒரு சித்திரமும் வரையப்பட்டிருக்கின்றது. இது எவ்வளவு பரிகசிக்கத்தக்க விஷயம் என்று பாருங்கள். இதை எழுதினவன் எவ்வளவு அயோக்கியன் அல்லது எவ்வளவு மூடன் என்பதன்று இப்போதைய நமது கேள்வி. மற்றென்னவென்றால், இதைப் படித்துப் பார்த்து இதன்படி நடப்பார்கள் என்று நம்பிய மக்களை இவன் எவ்வளவு முட்டாளாகவும், அடிவண்டலாகவும் கருதி இருக்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வியாகும்.

தீர்த்தம் என்றாலும், நதி என்றாலும், குளம் என்றாலும் என்ன என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். நதி என்றால் மழை பெய்வதால் ஏற்படும் வெள்ளங்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து, மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஓடை அல்லது நீர்ப்போக்காகும். குளம் என்றால் இந்த மாதிரி ஓடையில் இருந்து வழிவைத்துத் தண்ணீர் நிரப்புவதோ, மழை வெள்ளத்தால் ஊரில் உள்ள அசுத்தங்களையும், கசுமாலங்களையும் அடித்துக் கொண்டு வந்து குளத்தில் விழுந்து தேங்கியிருப்பதோதான். மற்ற இட்டித் தீர்த்தங்கள் என்பதும் கிணற்றுக்குள் நீர் ஊற்றம்போன்ற ஊற்றேயாகும். இந்தத் தண்ணீர்களுக்கு எல்லாம் அந்தந்த இடத்தை அனுசரித்த குணங்களேதாம் உண்டு. மற்றபடி அவற்றில் ஒரு மனிதன் செய்யும் பாவம் என்பதைப் போக்கவோ, அவன் ஆசைப்பட்டதைக் கொடுக்கவோ ஆன சக்திகள் எப்படி இருக்கக்கூடும் என்பது ஒரு மனிதனுக்குத் தெரியாதா என்றுதான் கேட்கின்றோம்.

மாமாங்கக் குளம் என்றால் என்ன?

மாமாங்கக் குளம் என்பது மேல்கண்ட மாதிரியான ஒரு சாதாரண தெப்பக்குளம். மகாமகச் சமயத்தில் அதில் உள்ள தண்ணீர் அவ்வளவையும் இறைத்துவிட்டு வெறும் அடி வண்டலையும், சேற்றையும் மாத்திரம் மீதி வைத்து அதிலும் கந்தகப் பொடியைக் கலக்கி விடுவார்கள். அந்தச் சேறானது கறுப்புக் களிமண்போல் இருக்கும். அந்தக் குளத்தின் விஸ்தீரணமோ சுமார் 500 அடி சதுரம் இருக்கலாம். அடி மட்டம் சுமார் 200 அடி சதுரம் இருக்கலாம். இதில் இலட்சம் பேர்கள் குளிப்பது என்றால் எப்படிச் சாத்தியமாகும்? அந்தக் குளத்தில் இறங்கி அந்தச் சேற்றில் கொஞ்சம் எடுத்துச் சரீரத்தில் பூசிக்கொள்ள வேண்டியதுதான். பிறகு இந்த அசிங்கம் போவதற்கு வேறு குளத்தில் குளிக்க வேண்டியதுதான். இதுதான் வழக்கமாம். ஒரு கிறிஸ்தவரோ, ஒரு மகமதியரோ இந்தப் படிச் செய்தால், அதை நாம் பார்க்க நேர்ந்தால் அப்போது நாம் என்ன என்று சொல்லுவோம்.


(1935-இல் ‘குடிஅரசு’ இதழில் எழுதியது)
http://www.keetru.com/rebel/periyar/55.php