Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு காரணம் என்ன? இது அரசியல் ரீதியானதே ஒழிய இராணுவ ரீதியானதல்ல. ஆனால் இதைக் காண மறுப்பதும், இதை இராணுவ ரீதியாக காண்பதும் புலி மற்றும் புலியல்லாத புலியெதிர்ப்பு தரப்பின் இன்றைய கண்ணோட்டமாகவே உள்ளது.

ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை பலிகொண்ட யுத்தம், இன்னமும் ஆயிரமாயிரம் இளைஞர்களை பலியிடத் தயாரான யுத்தம், பல பத்தாயிரம் மக்களை அழித்தொழித்துள்ளது. மக்கள் தமது வாழ்வை இழந்து, சொத்து சுகத்தை இழந்து அனாதையாகின்றனர். இதுவரை மக்களுக்கு புலிகள் எதையும் புதிதாக பெற்றுக்கொடுத்தது கிடையாது. இருந்ததை அழித்ததுக்கு அப்பால், எதையும் புலிகள் சாதிக்கவில்லை, சாதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனும் புலிகள் எதை எமக்கு பெற்றுத் தந்தனர் என்று சுயவிசாரணை செய்தால், அவர்கள் இருந்ததை அழித்ததை தவிர, தம்மிடம் புடுங்கியதை தவிர வேறு எதுவும் இல்லை என்ற உண்மையைக் காண்பான். மக்களின் உழைப்பைச் சூறையாடி, ஒரு சில பத்தாயிரம் பேர் உழைப்பின்றி மக்களின் உழைப்பில் சொகுசாக வாழ்கின்றதை மக்கள் காண்பர்.

 

இந்த அவலமான துயரமான நிலையில், இந்த யுத்தம் சாதிக்கப் போவது எதுவுமில்லை. இன்று இந்த யுத்தம் தோல்வி கண்டுவரும் நிலையில், ஒரு இனத்தின் மொத்த அழிவும் நிதர்சனமாகியுள்ளது. புலிகள் ஒருபுறமும், மறுபக்கமாக புலியெதிர்ப்பு ஒநாய்க் கூட்டமும், மக்களை தமது எடுபிடிகளாக்கி, தாம் நினைத்த தமது மக்கள் விரோத வக்கிரங்களை தமிழ் மக்களின் தீர்வாக காட்டுகின்றனர்.

 

இந்த நிலையில் புலிகள் என்றுமேயில்லாத அளவுக்கு இராணுவ ரீதியாக தோற்றுக் கொண்டிருக்கின்றனர். பேச்சவார்த்தை என்ற அரசியல் மேசையில் தோற்றவர்கள், அதைத் தொடர்ந்து இன்று இராணுவ அரங்கில் தோற்பது தொடங்கியுள்ளது. அரசியல் மேசையில் தோற்று வந்த ஒரு நிலையில், வெல்வதற்காக அவசரமாகவே ஒரு தலைப்பட்சமாக வலிந்த ஒரு இராணுவ அரங்கைத் தொடங்கினர்.

 

இப்படி உத்தியோகப+ர்வமாக அறிவிக்கப்படாத ஒரு யுத்தத்ததை நோக்கி அவசரமாக ஒடிய புலிகள், தொடர்ச்சியாக அதில் தோற்றுப் போகின்றனர். இந்த நிலைமைக்கான காரணம் என்ன? இந்தக் கேள்வி பலருக்கு புதிரானதாக உள்ளது. புலிகளுக்கு இதுவே அதிர்ச்சிகரமானதாக மாறிவிட்டது. எங்கும் விடை தெரியாத, விடை காண முடியாத புதிராகி நிற்கின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்ற மாவீரர் தினச்செய்தியில், மீண்டும் யுத்தம் என்ற பிரகடனத்தை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக மக்களின் பெயரில் தொடங்கிய தாக்குதல்கள், இன்று முட்டுச் சந்திக்கு வந்துள்ளது. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களின் உள்ளான தாக்குதலை நடத்தமுடியாத நிலை உருவாகியுள்ளது. புலிகளின் மக்கள், மக்கள்படை அழித்தொழிக்கப்பட்டுவிட்டனர் அல்லது அவர்கள் அழித்தொழிக்கப்படுகின்றனர். அண்மைக்காலமாக நடக்கும் பெரும் எண்ணிக்கையிலான வகைதொகை தெரியாத கொலைகளில் பெரும்பாலானவை, புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகின்றது. அமைதி சமாதானம் காலத்தில், புலிகள் இதே போன்று வகைதொகை தெரியாது கொலைகளைச் செய்தனர் என்றால், இன்று அதே உத்தியை யுத்த சூழலுக்குள் பேரினவாதம் செய்து முடிக்கின்றது. நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இனம் தெரியாதவர் என்ற போர்வையில், மனித உரிமையை மதிக்க மறுக்கின்ற புலிகளின் கடந்தகால கொலைகாரப் போக்கினால், இன்றைய கொலைகள் யாரும் கண்டு கொள்ளாத ஒரு அசமந்தமான போக்கில் இக் கொலைகள் ஊக்குவிக்கப்படுகின்றது. இப்படி புலிகள் அல்லாத இராணுவ பிரதேசங்களில், புலியின் இராணுவ செயல்பாட்டை புலியின் பாணியிலேயே இராணுவம் செயலற்றதாக்கியுள்ளது.

 

இந்த நிலையில் அமைதி சமாதானம் பேசியபடி புலிகள் கையாண்ட இராணுவ தாக்குதல்கள் செயலற்று முடங்கிப் போன நிலையில், எல்லைகளில் மோதலை வலிந்து தொடுப்பதைத் தவிர, வேறு இராணுவ மார்க்கம் புலிகளுக்கு இருக்கவில்லை. அதையும் அவர்கள் வலிந்து தொடங்கினர். ஆனால் எல்லாம் பாரிய இழப்புடன் கூடிய தோல்விகளுக்கு அது இட்டுச் சென்றுள்ளது. மிகப்பெரிய படையை வைத்திருந்த புலிகள், நினைத்த இடத்தில் நினைத்தவரைக் கொல்லக் கூடிய ஒரு கொலைகார அடியாள் கும்பலைக் கொண்டிருந்தது. அத்துடன் விரும்பிய இடத்தில் விரும்பியவாறு ஏன் எதற்கென்ற கேள்வியின்றி தற்கொலை மூலம் தாக்குதலை நடத்தக் கூடிய விசுவாசிகளைக் கொண்டிருந்த புலிகள், நினைத்த இடத்தில் நினைத்த தாக்குதலை நடத்தும் வல்லமையைக் கொண்டிருந்த புலிகள் தொடர்ச்சியாக மண்ணைக் கவ்வுகின்றனர். மக்களை உருட்டி மிரட்டி ஏமாற்றி பலவழிகளில் மக்களிடம் திருடும் கோடிக்கான பணத்தில், தமது சொந்த சுகபோகத்தின் தேவை தவிர, மீதி முழுவதையும் இந்த இராணுவதுறைக்கே கொட்டுகின்றனர். அள்ளி வழங்கும் இலஞ்சம், தமது நோக்கை அடைய இலட்சக்கணக்கில் செலவு செய்யும் புலிகளின் இராணுவ உத்திகள் எல்லாம் தவிடுபொடியாகின்றன.

 

கடந்தகாலத்தில் இது போன்ற புலிப்பாணி இராணுவ வெற்றிகள் அனைத்தும் இன்று புஸ்வாணமாகின்றது. இது பலருக்கு அதிர்ச்சியாக உள்ளது. வழமை போல் தாக்குதல் தொடங்கியவுடன், செய்திகளை தகவல்களை புணர்ந்து புனைந்து போட்டவாகள், அதிர்ந்து போய் நிற்கின்றனர். பலதரம் அவை புஸ்வாணமாகி அம்பலமாகியுள்ளது. பலரை மௌனமாகி உறையச்செய்துள்ளது. புலிச் செய்தித்தளங்கள் நம்பிக்கை இழந்து சோர்வடைந்து வருகின்றது. புலிகளின் இராணுவ தோல்விக்கான காரணம் என்ன என்பது, பேரினவாதத்துக்கு புரியாத புதிராகவே உள்ளது. இதன் சூக்குமம் பிடிபடவே மறுக்கின்றது. புலிகளை வெல்லும் நிலைக்கு, இராணுவத்தின் பலம் மற்றும் கட்டமைப்பு மாற்றிவிட்டதாக சிலர் கருத்துரைக்கின்றனர். இதன் விளைவாக யுத்தவெறி கோசத்துடன், பேரினவாதம் கொக்கரிக்கின்றது. புலிகள் பின்வாங்கி பதுங்கி தப்ப முனைகின்றனர். இப்படி நிலைமைகள் தலைகீழாகிப் போனது.

 

உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்கின்றது. இதை புலிகளாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கை அரசியல் மீது கருத்துரைக்கும் யாராலும் இதை புரிந்துகொள்ள முடியாதுள்ளது. அந்தளவுக்கு அரசியலில் போக்கை தலைமை தாங்குவோருக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை புரிந்துகொள்ளும் அளவுக்கு, யாரும் மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு யாரும் இதை ஆராய்வதில்லை. இந்த நிலையில் இதை மீள மாற்றி அமைக்கும் வகையில், புலிகளின் இருப்பு அதை அனுமதிக்கவில்லை. புலிகளின் புலித் தேசிய சிதைவு இயல்பாக பல தளத்தில் தொடங்கிவிட்டது. புலிகளின் இராணுவ இருப்பும் அதை தடுக்கமுடியாது. இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? 1. புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு

 

2. தலைமைக்கும் அதன் கீழ்மட்ட உறுப்பினருக்குமான உறவு

 

3. முன்னனி தளபதிமாருக்கும் தலைமைக்குமான உறவு

 

4. தலைமைக்கும் மொத்த சமூகத்துக்குமான உறவு

 

இந்த உறவு சமாதானம் அமைதிக் காலத்தில் மெதுவாக, ஆனால் சிறுக்கச் சிறுக்க பலத்த மாறுதலுக்குள்ளாகியுள்ளது. இந்த இடைவெளி பலமானதாகவும, ஆழமானதாகியும் விட்டது. புலிக்குள் போராடும் உளவியல் பலம் முற்றாக சிதைந்து போய்விட்டது. இவைதான் தோல்விக்கான முக்கியமான அடிப்படையான காரணமாகும். இதை புலிகள் மாற்றவோ திருத்தவோ இனி முடியாது.

 

ஆயிரம் ஆயிரம் படைகளையும், நவீன இராணுவ உபகரணங்களையும் கொண்ட புலிகளின் இராணுவ பலம் மட்டும், யுத்தத்தையோ ஏன் ஒரு வெற்றிகரமான நகர்வையோ தீர்மானிப்பதில்லை. இதை புலிகளும், வலதுசாரிய கும்பல்களும் அங்கீகரிப்பதில்லை. இராணுவ வாதத்திற்குள் மல்லாக்க குப்புறவே வீழ்கின்றனர். புலிகளின் நவீன இராணுவ படைக்கு பின்னால் உள்ள பல ஆயிரம் இளைஞர்களின் போராடும் உணர்வுகளின் மட்டம் முற்றாகவே சிதைந்துவிட்டது. அவர்கள் போராட முடியாத அளவுக்கு உள்ள பாரிய உளவியல் நெருக்கடியே, அவர்களை இயல்பாக யுத்தத்தில் தோற்கடிக்கின்றது. இதை அணைபோட்டு தடுக்கமுடியாது. இதுதான் தோல்விக்கான குறிப்பான பிரதானமான அடிப்படைக் காரணமாகவுள்ளது.

 

1. புலிகளில் போராடும் இளைஞர்களின் அரசியல் மட்டம் முற்றாக சிதைந்துவிட்டது. அரசியலில் ஞானசூனியமாகி ஒரு கூலி கும்பலுக்குரிய மனோபாவத்தை பெற்றுவிட்டது.

 

2. புலி அமைப்பு, புலித் தலைமை பற்றி கொண்டிருந்த கண்ணோட்டங்கள் முற்றாக சிதைந்து, அதை வெளியில் சொல்லமுடியாத பாரிய உளவியல் நெருக்கடிகுள்ளாக்கிவிட்டது. எல்லாவிதமான நம்பிக்கைகளும் விசுவாசங்களும் அணிகளிடையே படிப்படியாக இல்லாது போகின்றது. அரசியல் நோக்கற்று இழிந்து செல்லும் சுயநல போக்கு கொண்ட புலிகளின் பொருளாதாரக் கட்டமைப்பு, எல்லாவிதத்திலும் இயல்பான போர்க்குணாம்சத்தை இல்லாதொழிக்கின்றது. புலிகளின் ஒவ்வொரு உறுப்பினரும் அமைதிக் காலத்தில், பலவற்றை சொந்த இயக்க வாழ்வியல் ஊடாக தாமாகவே தெரிந்து கொண்டார்கள். இதன் மூலம் சொந்த சுயநலத் தலைமையை, அதன் கொள்கையற்ற போக்கை, தமது வாழ்வியல் ஊடாகவே எதிர்மறையில் கற்றுக் கொண்டார்கள். தம்மைத் தலைமை தாங்கி நிற்கும் மாற்றவே முடியாத சொந்த தலைமையை, தனது மேலதிகாரியையும் நன்கு ஆழமாக உணாந்துபட்டு தெரிந்து கொண்டார்கள். இதைவிட வெளியில் இருந்து அவர்களின் விருப்பத்துக்கு மாறாக கடத்திவரப்பட்ட, ஆயிரக்கணக்கானவர்களுடனான உறவு, அவர்கள் வெளிப்படையான புலி மீதான அதிருப்திகள் இதை மேலும் ஆழமாக்கியது. இவர்களுடனான தொடர்புகள், அச்சமூட்டும் வகையில் அவர்களையே மேலும் மௌனமாக்கியது. ஒரு பாரிய இடைவெளியை உருவாக்கி வந்துள்ளது. பரஸ்பரம் சந்தேகத்தை மேலும் ஆழமாக்கி அதிகரிக்க வைத்தது. வெளிவேஷத்துடன் கூடிய போலியான ஒரு வாழ்வியல் முறையே, தலைமைக்கும் உறுப்புக்கும் இடையிலான உயிரான உறவாகியது. இது அமைப்பின் எல்லா மட்டத்திலும், எல்லா உறவிலும், இந்த போலித்தனமான நடிப்பே அவசியமான நிபந்தனையாகிவிட்டது. இந்த அதிருப்தி வெளிப்படுத்தும் உணர்வுகள், அவர்களின் சொந்த போர்க்குணாம்சத்தை சிறுகச்சிறுக அரித்து சிதைத்து தின்று வருகின்றது.

 

இதைவிட ஆடம்பரமாக சென்ற புலம்பெயர் வாழ்வியல் முறை, அதையொத்ததும் அதை விட வக்கிரத்தை அடிப்படையாக கொண்டதுமான யாழ் மேட்டுக்குடிகளின் ஆடம்பர வாழ்க்கை, அனைத்தும் சுயநலத்தை அடிப்படையாக கொண்டது. இது அங்கு போராடும் இளைஞன் முன் தான் ஏன் போராட வேண்டும் என்ற எதிர்மறையான கேள்வியை எழுப்பிவிடுகின்றது. இதை சொர்க்கமாக கருதுகின்ற இயல்பான உணர்வு, புலியினுள் ஆழமாகி ஒரு அரசியல் சிதைவை உருவாக்கிவிடுகின்றது.

 

இதற்கு ஏற்ற உறுதுணையாக சுயநலத்தை அடிப்படைiயாக கொண்ட புலிகளின் சமூக பொருளாதார கொள்கை, எதிர்மறையில் அவர்களுக்குள்ளும் அது செயல்படுகின்றது. சுயநலமற்ற சிந்தனைப் போக்கை, தியாக மனப்பான்மையை அது இயல்பாக மறுத்தலித்து விடுகின்றது. அமைதி சமாதான காலத்தில் இதுவே சமூக மேனிலைக்கு வந்தது. புலிக்குள் ஆழமான அதிருப்தியாக மாறிவிடுகின்றது. ஒவ்வொருவரும் சுயநலம் கொண்ட பொருளாதார அமைப்பில் உறுப்பினர் என்ற வகையில், தியாக மனப்பான்மை என்பது அவர்கள் முன்பே கேள்விக்குள்ளாகின்றது. அத்துடன் யுத்தமற்ற இக்காலகட்டத்தில், இதற்குள் வாழும் புலித் தலைமையில் சகல பூர்சுவா அற்பத்தனங்களும் அம்பலமாக்கிவிடுகின்றது.

 

1. தலைமையின் சொந்த ஆடம்பரமான வாழ்க்கைகள்

 

2. தலைமைகளின் இணக்கமற்ற அதிகாரபோக்கும், அதிகார வெறியும்

 

3. தான்தோன்றித்தனமான வாழ்க்கையும், செயல்களும்

 

4. சக மனிதனை மனிதனாகவே மதிக்கத் தவறுகின்ற வக்கிரங்கள்

 

5. சமூக ஒழுங்குகளை மீறியதும், அற்பத்தனமாக வாழும் இரகசிய பகிரங்க வாழ்க்கை முறைகள்.

 

இப்படி உள்ள ஒரு இயக்கத்தை, அந்த சூழலை கேள்வி கேட்க முடியாது. இதற்கு கீழ் உள்ளவன் தொடங்கி அனைவரும் அடங்கிப் போகும் வண்ணம், பீதியை அடிப்படையாக கொண்ட நிலமை. சக மனிதனை மனிதனாக மதிக்க தவறுகின்ற நிலையில், அவர்களிடையே உரையாடல்கள் எதுவுமற்ற போக்கில், அரசியல் உரையாடல்கள் கூட எதுவும் இல்லாத நிலையே புலிகளின் எதார்த்தமான பாசிச இருப்பாக நீடிக்கின்றது. தனிமையும், பீதியும் கலந்த உணர்வே, ஒவ்வொரு உறுப்பினரதும் ஆன்மாவுகுள்ளான உணர்வாகியது. அச்சம் கலந்த பீதி சார்ந்த மனவுணர்வு, கண்முன்னால் காணும் கொடூரமான சித்திரவதைகள், இதை செய்யும் லும்பன் வாழ்வை ஆதாரமாக கொண்ட கொலைகார நாசகாரக் கும்பல்கள், எப்போதும் எங்கும் கண்காணிப்படும் அவலம், நாம் எதற்காக ஏன் போராடுகின்றோம் என்று தெரியாத திரிசங்கடமான நிலைமை, அவர்களின் அனைத்துவிதமான தியாக மனப்பான்மையை போர்க்குணாம்சத்தை இல்லாதாக்கிவிட்டது.

 

இப்படி எந்தப் பிரச்சனையை பற்றியும் யாரும் வாய் திறந்து பேசமுடியாத நிலைமை. பேசினால் சித்திரவதைக் கூடங்கள், மரண தண்டனைகள் சாதாரணமான விடையமாக புலிக்குள்ளும் உள்ளது. இது புலி இயக்கவிதியாகும். அதிருப்திகளும், கேள்விகளும், சந்தேகங்களும் மனதுக்குள் குடைந்து அதை அரித்து, உளவியல் சிக்கலுக்குள் சிக்கிவிட்டது. இது புலிகள் அமைப்பு முழுக்க உருவாகிவிட்ட பொது நிலையாகும். இந்த உளவியல் சிக்கல், போராட்ட உணர்வை மழுங்கடித்து அதை இல்லாதாக்கிவிடுகின்றது.

 

கடந்தகாலத்தில் போராடும் ஆற்றல் கொண்டு காணப்பட்ட உளவியல் மட்டம், யுத்தத்தின் தேவை சார்ந்த அரசியல் என்பன அவர்களை போராடவைத்தது. அமைதிக்காலம் அதை முற்றாக சிதைத்து, அதை அறவே இல்லாததாக்கிவிட்டது. புலிகளின் அரசியல் நோக்கம் என்ன? தமிழ் மக்களுக்கு அவர்கள் எதை எப்படி பெற்றுத்தரப் போகின்றார்கள் என்ற கேள்வி சார்ந்த அரசியல் எதுவும் புலி உறுப்பினரிடையே விவாதத்துக்குரிய ஒரு அரசியலாக இருப்பதில்லை. சுத்த சூனியம், எல்லாம் தலைவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் உணர்வு, கடந்தகாலம் போல் நிகழ்காலத்தில் நம்பிக்கை எதையும் ஊட்டவில்லை. பிரபாகரனுக்கு அடுத்த மட்டத்தில் இருக்கக் கூடிய தலைவர்களின் தலைவிதி கூட இதுதான். எதையும் சுயமாக சித்திக்கவோ, சொல்லவோ, செயலாற்றவோ முடியாத நிலை, மொத்த அமைப்பையும் நம்பிக்கையீனத்தின் விளிம்புக்கு இட்டுச் சென்றுள்ளது.

 

வலிந்தே திணித்த கருணாவின் பிளவு, இதை மேலும் இரண்டு தளத்தில் ஆழமாக்கியது.

 

1. தவிர்த்து இருக்கக் கூடிய கருணாவின் பிளவு, ஆழமானதாக மீள முடியாத ஒரு பிரிவாகியது. இது புலிகளை இரண்டாக்கியது. கருணா வெளிச் சென்றாலும், புலியினுள் இன்னமும் பிளவு உயிருடன் காணப்படுகின்றது. 2. கருணா பிளவைக் கையாண்ட முறையும், கையாண்டு வரும் நடத்தை நெறிகளும், புலியின் கட்டமைப்பையே சிறுக்கச்சிறுக சிதறடித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது இது சூக்குமமாக, புலியின் சொந்த பாசிசத்தின் வீதியூடாக நடக்கின்றது. இயக்கத்தின் உள்ளார்ந்த இயல்புத் தன்மையையும், அதன் உள்ளார்ந்த விதியையும் நெருக்கடிக்குள்ளாக்கியதன் மூலம், அசாதாரணமான நிலை புலிக்குள் உருவாகியுள்ளது. பாசிசத்தினுள்ளும் காணப்பட்ட சுயாதீனமான சிந்தனைகள், அது சார்ந்த செயல்கள் அனைத்தையும் சந்தேகிக்கின்ற ஒரு போக்கு, புலியில் காணப்பட்ட உயிரோட்டத்தையும் இல்லாதாக்கியுள்ளது. அனைத்தும் தன்னியல்பாக முடமாக்கப்பட்டது. எல்லாவற்றையும் எதிராகவும், எதிரியாக கருதியதன் மூலம், கீழ் இருந்து மேல் வரை போலியான சம்பிரதாயமான விசுவாசமான பிரகடனங்களே உயர்ந்த புலி அரசியலாகியது. கேள்வியின்றிய வழிபாடே விசுவாசமாகியது.

 

இப்படி எங்கும் எதிலும் புலி தனக்குத்தானே குழிதோண்டியபடி தான், தனது சொந்த புதைக்குழிக்குள் அடிக்கடி புதைந்து மிதக்கின்றனர். கருணா விவகாரம் ஏற்படுத்திய விளைவு, இயக்கம் முழுக்க உள்ளார்ந்த அரசியல் விதியாகிவிட்டது. ஒவ்வொரு தளபதியும் தன்னைச் சுற்றி ஒரு வேலியிட்ட படி, பிரபாகரன் பெயரைச் கூறியபடி போலியாக பொம்மையாக அசைய முனைகின்றனர்.

 

எங்கும் ஒரு அசமந்தமான, அசாத்தியமான இனம் காணமுடியாத சூழல். மீட்சிக்கான பாதையோ, அதை கண்டறியும் பொதுச் சூழலே கிடையாது. தலைமை தனது தற்காப்பு என்ற எல்லைக்குள் முடங்கி நிற்கின்றது. பேரினவாதம் மட்டுமல்ல, சொந்த இயக்கத்தினுள்ளும் தற்காப்பை கோருகின்ற நிலைமையில் தலைமை உள்ளது. சொந்த அணிகளுக்கும் தலைமைக்கும் இடையில் உள்ள இடைவெளி அகன்று வருகின்றது. இது பல மட்டத்தில் ஒன்றுக்கு ஒன்று எதிரான போக்கில் வளர்ச்சியுறுகின்றது. பரஸ்பரம் நம்பிக்கையின்மை, பரஸ்பரம் விசுவாசமின்மை, மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம், இது புலிகளின் மொத்த இயக்கத்தின் சொந்த விதியாகிவிட்டது. இது உயிரோட்டமுள்ள தியாக மனப்பான்மை கொண்ட அனைத்துச் செயல்பாட்டை மறுதலித்துவிடுகின்றது. இயல்பாக இது தொடர்ச்சியான தோல்விக்கான முழுமையான சமூக அடிப்படையை உருவாக்கிவிட்டது. புலிகளின் சொந்த அரசியல் இராணுவ ரீதியான கட்டமைப்பு தோற்கடிக்கப்படுவது தவிர்க்க முடியாதாக்கியுள்ளது. முன்பை விடவும் இது வேகமாக அரங்கேறுவதை துரிதமாக்கியுள்ளது.

பி.இரயாகரன்
23.09.2006