தமிழ்மக்களின் தலைவிதி ஒரு சிலரால், தமது சொந்த குறுகிய நோக்கில் கையாளப்படுகின்றது. அரசியல் கொலைகள் தொடருகின்றன. இந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரறாஜசிங்கம் நேற்று

 (இன்று) படுகொலை செய்பப்பட்டார். இப்படியான ஒவ்வொரு கொலையும் மக்களுக்கு மீண்டும் மீண்டும் அறைந்து சொல்லும் செய்தியென்ன.

 

வாயை மூடு என்பது தான்;. அடிமையாய் இரு என்பதைத் தான் சொல்லுகின்றது. இதைத் தாண்டி எதுவுமல்ல. இது தேசியத்தை பெற்றுத் தரப்போவதுமில்லை. கைக்கூலிகளை ஒழித்துவிடப் போவதுமில்லை. புலியின் அராஜகத்தை ஒழித்துவிடப் போவதுமில்லை.

 

அடிமை மக்கள் கைகட்டி, வாய் பொத்தி, மௌனமாக இரு என்று ஒவ்வொரு கொலையும் எமக்கு உரைக்கின்றது. உண்பதற்காக வாயை திற, அதற்காக மாடு மாதிரி உழை, கொலைகாரர்களை உருவாக்க புணர்ந்து பிள்ளையைப் பெறு. இது தான் கொலைகாரர்கள் மக்களுக்கு சொல்லும் ஒரேயொரு செய்தி. கொலையை கண்டிக்காதே. அதை விமர்சனம் செய்யாதே. நாம் சொன்னால் கர்த்தால் செய், ஊர்வலம் போ. இது கொலைகாரனின் அதிகாரத்துடன் கூடிய செய்தி.

 

அமைதி சமாதானம் வேஷம் போட்டு மீண்டும் கொலைகளை தொடங்கியவர்கள் புலிகள். அதே பாணியில் அண்மைக்காலத்தில் எதிர்தரப்பும் மீண்டும் கொலைகளை செய்யத் தொடங்கியுள்ளனர். ஜோசப் பரறாஜசிங்கம் இந்த வகையில் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு முன் நிகழ்ந்த பல படுகொலைகளை இவர் கண்டித்தவர் அல்ல, ஆதரித்தவர் கூட. அந்த அரசிலுக்கு இவர் பலியாகியுள்ளார். கொல்லப்படும் பலரின் சோகம் இப்படி உள்ளது. இதை எப்படி நாம் புரிந்து எதிர்கொள்வது.

 

கொலை செய்யப்படுவர்கள் சமூகத்தின் மேல் மட்டத்தில் இருந்து சமூகத்தின் கீழ் மட்டம் வரை உள்ளடங்குகின்றனர். மிக மோசமான மக்கள் விரோதிகள் முதல் அன்றாடம் கஞ்சிக்கே வழி இல்லாது எதிர்வினையாற்றுபவர்கள் கூட கொல்லப்படுகின்றனர்.

 

நடக்கின்ற தொடர்ச்சியான நிகழ்வுகள், எந்தக் கொலையையும் நாம் மௌனமாக ஏற்றுக் கொண்டு இருக்க முடியாத நிலையை உருவாக்கின்றது. நடப்பவை எல்லாம் தமிழ் மக்களை மேலும் அழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது. தமிழ் மக்கள் என்ற அடையாளம் சிதைந்து, சீரழிந்து போகும் அளவுக்கு இவை மாறிவிட்டது. கொலைகளை இன்று கண்டிப்போர் பலவிதமாக செயலாற்றுகின்றனர். புலிகள் தாம் செய்யும் கொலைகளை கண்டிப்பதில்லை. புலியெதிர்ப்பு அணியினர் தாம் செய்யும் கொலைகளைக் கண்டிப்பதில்லை. பரஸ்பரம் இதில் ஒரு இனம் காணமுடியாத ஒற்றுமை. கொலை செய்தவர்கள், அதை கொலை செய்யப்பட்ட தரப்பே செய்ததாக புணர்ந்து செய்தி வெளியிடுகின்றனர்.

 

உண்மை, நீதி, மனிதத்துவம் என எதுவுமற்ற அராஜகத்தில் அரசியல், தேசியம், மனித உரிமை எல்லாம் சிதைந்து சின்னாபின்னமாகின்றது. கொலையைக் கண்டிப்பது கூட சிலருக்கு (ரி.பி.சி புலியெதிர்ப்பு அணிக்கு) உள்நோக்கம் கொண்ட அரசியலாகிவிட்டது. கொலைக்கான சமூகக் காரணங்களை கேள்விக்குள்ளாக்காத கண்டிப்பது போலித்தனமானவை.

 

ஒரு தரப்புக் கொலையைக் கண்டிப்பது அதை விடக் கேவலமானது. அரசியல் கொலைகளை, கற்பழிப்புகளை, வன்முறைகளை, பொய்களை, சதிகளை எல்லாம் கூட்டி அள்ளி எம் முகத்தில் எறிகின்றது. இதைப் பார்த்துத் தெரிந்துகொள் என்கின்றது. ஒரு பக்கம் பேரினவாதத்தால் ஊட்டிவளர்க்கப்படும் கைக்கூலி கொலைகாரக் கும்பல்கள், மறுபக்கம் குறுந்தேசியத்தின் பெயரில் அலையும் வெறிபிடித்த கொலைகாரர்கள். இதுவே எம் அரசியலாகிவி;ட்டது. அங்கு இங்கும் சாமரை வீசுவதும் எமது நக்குத் தனமாகிவிட்டது.

 

பாவம் மக்கள். மிரண்ட விழியுடன் பரபரக்க தமக்குள் தாமே குசுகுசுக்கின்றனர். இந்த கொலைகள் அனைத்தும் மக்களுக்கு எதிரானவை. கொல்லப்பட்டவர் எந்தளவு பெரிய சமூக விரோதியாக இருந்தாலும், இன்று இதுவே எமது மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த கொலைகளின் பின்னால் எந்த தார்மீக பலமும், குறைந்தபட்ச அரசியல் நேர்மையும் கிடையாது. ஒரு தலைப்பட்சமாக கொலைகளை கண்டிப்பதையும் நாம் அனுமதிக்க முடியாது. மக்கள் மட்டும் தான், தமது சொந்த தீர்வுகளை வழங்க முடியுமே ஒழிய, மக்களை அடிமைப்படுத்தும் கொலைகாரக் கும்பல்கள் அல்ல.அனைத்து கொலைகளையும் நாம் எதிர்ப்போம்!

 

இதற்கான அரசியல் சமூக வேரை இனம் கண்டு, அதை அம்பலம் செய்வோம்!

 

மக்கள் மட்டும் தான் வரலாற்றை தீர்மானிக்க முடியும்;. கொலைகாரர்கள் அல்ல!