06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

அரசியலில் வித்தை காட்டுவது

அரசியலில் வித்தை காட்டுவதும், சமூக அறியாமையை உட்செரிப்பதன் மூலமும், ஒரு சமூகத்தின் புதைகுழிகள் தொடர்ச்சியாக தோண்டப்படுகின்றது. வெளிப்படையானதும், நேர்மையற்றதுமான, அணுகுமுறையுடனான அரசியல் பித்தலாட்டங்கள் அரங்கேற்றப்படும் விதம் சூழ்ச்சிகரமானது.

 

 

இப்படி ஒரு பக்கம். மறுபக்கத்தில் இவர்களே புலி அல்லாதவர்களிடையே ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, ஜக்கியம் என்கின்றனர். எப்படி? எதனடிப்படையில்? புலி அல்லாதவர்pடையேயான ஜக்கியம் என்பது, இவர்களைப் பொறுத்த வரையில் புலியெதிர்ப்பின் அடிப்படையில் மட்டும் தான். புலிகளும் இப்படித் தான் ஜக்கியம் ஒற்றுமை என்கின்றனர். வேடிக்கையான ஒரே அரசியல்.

 

இப்படி ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணா அணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் என்று அனைவரையும் உள்ளடக்கிய வகையில் விட்டுக்கொடுப்புடன் கூடிய ஜக்கியம். இப்படி புலியெதிர்ப்பு அரசியல் கூத்தை ஆடிக்காட்ட முனைகின்றனர். இப்படி உள்ளவர்கள், மக்கள் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்று கேட்பதோ கேட்க கூடாத கேள்வி.

 

இப்படி அவர்களோடு கூடி மக்களின் முதுகில் குத்தவரும்படி புலியெதிர்ப்பு அணி கூவுகின்றது. இவையெல்லாம் அண்மையில் சபாலிங்கத்தின் பெயரில் நடத்திய கூத்தில் அரங்கேறியது. எதையும் அரசியல் ரீதியாக செய்வதை மறுக்கும் இந்த புலியெதிர்ப்பு, ரீ.பீ.சீ பின்னால் அனைவரையும் குலைக்க கோருகின்றது. இதன் பின்னால் சுயவிமர்சனம், விமர்சனம், ஜனநாயகம் என்ற பெயரில், எடுப்பார் கைப்பிள்ளை போல் எடுபடுவோரை அப்பாவிகள் என்பதா? அல்லது சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் என்பதா?

 

சபாலிங்கம் கூட்டம் ரீ.பீ.சீ கூட்டமாகிய கதை

 

இவை எல்லாம் எங்கே அரங்கேறியது என்றால், 13 ஆண்டுகளுக்கு முன் பாரிசில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சபாலிங்கத்தின் நினைவுக் கூட்டத்தில் அரங்கேறியது. ஒரு மரணத்தைக் கூட, தனது மக்கள் விரோத புலியெதிர்ப்பு அரசியலுக்காக ரீ.பீ.சீ பயன்படுத்தியது. இதை விட வேறு எந்த அரசியலும் ரீ.பீ.சீ க்கு கிடையாது.

 

இந்தியாவின் கூலிக் குழுவாக பிறப்பெடுத்து, அவர்களை அண்டி வாழ்ந்து கொண்டிருக்கும் ஈ.என்.டி.எல்.எப் வின் வானொலி தான் ரீ.பீ.சீ. அதன் ஒரு உறுப்பினரால் இவ் வானொலி நடத்தப்படுகின்றது. இது அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மை தான். ஆனால் அப்படி இல்லை என்ற நினைப்பில் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனையாட்டம் விவாதம் சிலர் செய்ய முனைகின்றனர். இதற்கு எப்போது சுயவிமர்சனம் செய்வார்களோ! தெரியாது.

 

ரீ.பீ.சீ நடுநிலையாக, எல்லாக் கருத்துக்களையும் உள்வாங்கியே ரீ.பீ.சீ. செயல்படுவதாக கூற முற்படுகின்றனர். அப்படி அவர்கள் எமக்கு சினிமா காட்ட முனைகின்றனர். அந்த வகையில் எம்மையும் அழைக்கின்றனர். தீவிர ஜனநாயகவாதிகளாக பாசாங்கு செய்யும் இவர்கள் அனைவரும், எமது எதிரான கருத்தை மாற்றுக் கருத்தாகவே அங்கீகரித்து கிடையாது. அரசியலற்ற புலியெதிர்ப்பு கருத்து மட்டும் தான், அதுவும் தம்மை அங்கீகரித்த கருத்தை மட்டும் தான், இவர்கள் மாற்றுக் கருத்தாக கருதுகின்றவர்கள்.

 

ரீ.பீ.சீ பின் (புலியெதிர்ப்பின் பின்) உள்ள எந்த நபரும் எப்படியும், எந்த இயக்கத்திலும் இருக்கலாம். ஆனால் வானொலி (புலியெதிர்ப்பு தளங்கள்) அப்படி இருக்காது என்று காட்ட முனைகின்றனர். இன்றைய அரசுகளை வர்க்கமற்ற அனைவருக்குமான அரசாக காட்ட முனைகின்ற புல்லுருவிகள் போல், இதுவும் முன்வைக்கப்படுகின்றது.

 

கருணா என்ற புலிக் கொலைகாரனுக்கு பின்னால் நிற்பவர்கள் முதல் எல்லா மக்கள் விரோத குழுக்களும் இணைந்து அல்லது அதன் எடுபிடிகள் சேர்ந்து வானொலியை நடத்துகின்றனராம். நல்ல அரசியல் வேடிக்கை. காலகாலமாக மக்கள் காதில் பூச் செருகியபடி, அவர்களின் தாலியையே அறுத்த கதை தான் இங்கும். மக்களின் அவலங்களின் மேல், அதைப்பற்றி பேசாது குதிரை ஓட்டுகின்றனர்.

 

இது ஒருபுறம். மறுபக்கம் யார் எப்படி என்பதற்கு அப்பால், வானொலியின் நோக்கம் என்ன என்பதே அடிப்படையான கேள்வி. புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பதை மறுப்பதே, தமது அரசியல் கொள்கை என்கின்றனர். அரசியல் ரீதியாக மக்களை அணுகுவதல்ல அரசியல் என்கின்றனர். மாறாக புலியைப் போல் கொசிப்பு அரசியலை செய்வதே சரி என்கின்றனர். இவர்கள் வானொலியில் செய்வது அரசியல், ஆனால் அரசியல் நாங்கள் பேச மாட்டோம் என்கின்றனர். இது ஒரு மக்கள் வானொலியாம்! வானொலியில் அரசியல் கொசிப்பு அடிப்பது தான் சரியாம். புலிகள் புலியாதரவு வானொலி நடத்துகின்றனர் என்றால், இவர்கள் புலியெதிர்ப்பு வானொலி நடத்துகின்றனர். மக்களை பற்றி கதைக்கும் அரசியல், வானொலிக்கே தீட்டு என்கின்றனர். இப்படி அவர்கள் நல்ல திருட்டு பார்ப்பனிய பூசாரிகள் தான்.

 

புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்க மறுப்பதும், மக்களை அரசியல் ரீதியாக விழிப்புற வைப்பதை மறுப்பதுமே, ரீ.பீ.சீ வானொலியின் அடிப்படையான அரசியல் நோக்கமாகும். இந்த வகையில் சிந்திப்பவர்கள், செயல்படுபவர்கள் கூடி கூச்சலிடுகின்றனர். மக்களின் வாழ்வியல் அரசியலை மறுத்து, புலியெதிர்ப்பு கொசிப்பை முன்னிலைப்படுத்துகின்றனர். இப்படியாக மக்கள் விரோத அரசியலை நிலை நிறுத்துவதே, அதன் மைய அரசியல் நோக்கமாகும்.

 

உண்மையை மூடிமறைக்கும் சூழ்ச்சியும், மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாத நரித்தனங்கள் மூலம், தம்மை நடுநிலை வானொலியாக அரங்கேற்ற முனைகின்றனர். சபாலிங்கத்தின் கூட்ட பின்னணியில் மூடிமறைக்கப்பட்ட உள்நோக்கம், கூட்டத்தின் இறுதிவரை மூடிமறைக்கப்பட்டு இருந்தது. இவை இடையிடையே அங்கும் இங்குமாக வெளிப்பட்டது. ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, ஜக்கியம் என்ற பெயரால் இது வெளிப்படபோதும், அது கூட்டத்தின் முடிவில் சொந்த முகத்துடன், தமது குறுகிய நோக்கத்துடன் எழுந்து நின்றது.

 

சபாலிங்கத்தை இதில் இருந்து புனிதப்படுத்தி, தமது நேர்மையை அப்பழுக்கற்றதாக காட்ட, கூட்டத்தை இரண்டாக பிரித்து நாடகமாடினர். இரண்டாவது கூட்டத்தில் விரும்பியவர்கள் பங்கு பற்றலாம் என்ற நாடகம் அரங்கேறியது. உண்மையில் நேர்மையற்ற அரசியல் வேடிக்கை தான்.

 

இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்த நண்பர்கள் வட்டம், இரண்டாவது சுற்றில் ரீ.பீ.சீ யின் ஏஜண்டுகளாக (பிரான்சின் பிரதிநிதிகளாக) வெளிப்பட்டனர். சதிகளும், சூதும் அரசியலாகிவிட்ட எமது அரசியல் சூழலில், அதுவே வாழ்வு முறையாக இருப்பதை இது அம்பலமாக்கியது. புலிகள் அதில் மூழ்கிவிட்டனர் என்றால், புலியெதிர்ப்பும் அப்படித்தான் என்பதை தனிநபர் வேறுபாடுகளின்றி தொடர்ச்சியாக நிறுவிக் காட்டுகின்றனர்.

 

புலியெதிர்ப்பு அரசியலாகக் கொண்ட ரீ.பீ.சீ அரசியல் சூழ்ச்சி தான், சபாலிங்கம் நினைவாகிப் போனது. எதையும் வெளிப்படையாக நேர்மையாக வெளிப்படுத்த முடியாத அரசியல் சூதாட்டங்களே, புலியெதிர்ப்பு அரசியலின் உள்ளடக்கமாகும். ரீ.பீ.சீ பின்னால் நடப்பதும் அது தான். மக்களின் அடிப்படையான பிரச்சனைகளை, தமது சொந்த அரசியலாக கொண்டிராதவர்களின் அரசியல் வாழ்வு என்பது, மக்களுக்கு எதிரான சூதும் சதியும்தான். இது தன்னைத்தான் மூடி மறைத்துக் கொண்டே சதா இயங்குகின்றது. இப்படித்தான் அந்தக் கூட்டமும் அன்று அரங்கேறியது. மக்களுக்கு எதைத்தான், இவர்கள் பெற்றுத் தரப் போகின்றார்கள்?

 

இனம் காணமுடியாத ஜனநாயகவாதிகள்

 

இந்த கூட்டத்தில் புலி உளவாளிகள் முதல் அனைத்து உளவாளிகளும் கலந்த கொண்ட ஒரு கூட்டம். ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் என்று அனைத்து தரப்புமாக, மொத்தம் 50, 60 பேர் கொண்ட கூட்டம்.

 

இவர்கள் எல்லாரும் சேர்ந்தே கொலைகளை கண்டித்தல், புலியிடமிருந்து ஜனநாயகத்தை மீட்டல் பற்றி புலம்பல்கள். வேடிக்கையான அரசியல் தளம். நாங்களும் அதில் கலந்து கருத்துரைப்பது சரியா பிழையா என்ற முரண்நிலையான சொந்த நிலைப்பாடுகள். நாங்கள் மக்களின் வாழ்வு சார்ந்த கருத்தியலை முன்வைப்பதன் மூலம், உதிரியான சிலருக்கு அதை உணர்த்த முடியுமா என்ற முனைப்பின் அடிப்படையில், இதில் பங்கு பற்றி கருத்துக்களை முன்வைக்கின்றோம். உண்மையில் மக்களைப் பற்றி சிந்திப்பவர்களின் போராட்ட வழி என்ன என்பதை, இங்கும் சுட்டிக்காட்ட முனைகின்றோம்.

 

இந்த வகையில் இந்த கூட்டத்தில் நாம் முன்வைத்த கருத்துகளைக் கூட, நடுநிலை வானொலியாளர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. எனக்கு நேரம் முடிந்துவிட்டதாக கூறிய அற்பத்தனங்கள். மீண்டும் இதே பாரிஸ் மண்ணில் திடீர் திடீரென அரங்கேறியது. மற்றவர்களை விட அதிக நேரத்தை நான் எடுத்திருக்கவில்லை. மக்களின் நலன், அவர்களின் வாழ்வியல் சார்ந்த அரசியல், மற்றவர்களை விட அழுத்தம் திருத்தமாக முன்வைப்பதை சகிக்க முடியாததன் விளைவு, நேரத்தை வழங்க அவர்களால் முடியவில்லை. மறுபக்கத்தில் எந்த ஜனநாயகவாதியும் இதை கண்டிக்கவில்லை.

 

எனது உரை

 

 

எமது கருத்துக்கள் ஏற்படுத்தும் உண்மை, உண்மையில் மக்களுக்காக சிந்திப்பவர்களை தடுமாற வைக்கின்றது. மக்கள் விரோத குழுக்கள், நபர்கள் இதனால் அதிர்ந்து போகின்றனர். இதனால் இதை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறுவது நடக்கின்றது. அதாவது தாம் அதற்கு விரோதிகள் அல்ல என்று காட்டி, சிந்திப்பவனின் குறைந்தபட்ச அரசியல் உணர்வை நலமடித்து சிதைப்பது இவர்களின் கைவந்த மோசடியாகின்றது. உண்மையில் சமூகத்தின் உள்ளார்ந்த பிரச்சனைகளைச் செரித்து, அதன் சுவடே தெரியாது பூசி மொழுகிவிடுவதே கடந்த 30 வருட தமிழ் அரசியலாகும். இதை ஒரு தந்திரமாக, பல தளங்களில் அரங்கேறுகின்றனர். இவை கடந்தகாலத்தில் சொந்த அமைப்பில் ஒரு அரசியல் முரண்பாடாக எழுந்தபோது, உட்படுகொலைகள் மூலம் மூடிக்கட்டியவர்கள், இன்றும் அதை பச்சையாகவே விபச்சாரம் செய்கின்றனர். ஒவ்வொரு கூட்டத்திலும் இவை எழுப்பப்படுவதும், அதை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறியே அனைவரையும் ஏமாற்றி கூட்டங்களை நடத்துகின்றனர். கடைந்தெடுத்த கயவாளிகள். அரசியல் உள்ளடகத்தை ஏமாற்றி மோசடி செய்து மக்களின் முதுகில் காலகாலமாக குத்தி வருபவர்கள். இந்த நிலையில் நாங்கள் மட்டும், நாங்கள் மட்டும் தான், சமூகப் பிரச்சனைகளின் அடிப்படையில் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். இதுவே அனைவருக்கும் எமக்குமான அரசியல் முரண்பாடு.

 

விட்டுக்கொடுப்பு, ஜக்கியம், ஒற்றுமை என்பதன் பெயரில், மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை, அரசியல் ரீதியாக நீத்துப்போகச் செய்கின்ற கூத்துகளே உண்மையில் அரங்கேறுகின்றது. இதை எதிர்த்து நாம் குரல்கொடுக்கும் போது, மார்க்சியம் என்ற முத்திரை குத்தியே மக்களின் முதுகில் குத்துகின்றனர். நாம் மார்க்சியத்தைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால், அதை செவிமடுப்பதற்கும் செயல்படுவதற்கும் குறைந்தபட்ச சமூக அறிவு வேண்டும். மக்கள் பற்றியே சிந்திக்காத, அதை வெறுக்கின்ற மக்கள் விரோத ஓட்டுண்ணிக் கூட்டத்தினர்க்கு, எப்படி மார்க்சியத்தை முன்வைக்கமுடியும். மற்றவர்களின் எடுபிடிகளாக, கூலிக் கும்பலாக, முன்னைய குழுக்களின் செல்லப்பிள்ளைகளாக, பழைய குழுவாத அடையாளங்களையே நக்குகின்றவர்கள், குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயகத்தை கூட அங்கு உள்வாங்குகின்றதும், பேசுகின்றதுமான அரசியல் தகுதி கிடையாது. எப்படி புலிகளுடன் நாம் மார்க்சியத்தை, முதலாளித்துவ ஜனநாயகத்தைப்பற்றி பேச முடியாதோ, அதே நிலைதான் புலியெதிர்ப்பு அணியின் முன்பும் உள்ளது. புலிக்கும், புலியெதிர்ப்பு அணிக்கும் அரசியல் ரீதியாக நாம் வேறுபாட்டை காணமுடியாது. அதனால் தான் இருதரப்பும் தத்தம் தரப்பு அரசியலை முன்வைப்பதுமில்லை, மாற்றுத் தரப்பை அரசியல் ரீதியாக விமர்சிப்பதுமில்லை.

 

இந்த நிலையில் நாங்கள் சாதாரண தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள், அவர்களின் பிரச்சனைகள் மீது மீண்டும் மீண்டும் விவாதத்தை நடத்த முனைகின்றோம். அதைக் கோரிய எமது விவாதத்தையே மார்க்சியம் என்கின்றனர். சரி நீங்கள் மக்கள் நலன் என எதைத்தான், எப்படி, எந்த அரசியல் வழியில் முன்வைக்கின்றீர்கள்? முன்வைக்காத உங்களிடம் எமது இந்தக் கேள்வி அபத்தம் தான். உண்மையில் அரசியல் ரீதியாக சீரழிந்தவர்கள், மக்களின் பிரச்சனையை முன்னெடுப்பது மார்க்சியத்தின் கடமை என்பதையே, இந்த முத்திரை குத்தலின் ஊடாக ஒத்துக்கொள்கின்ற தர்க்கம் உருவாகின்றது.

 

புலியெதிர்ப்பு அணியின் பின்னுள்ள ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ்சின் அரசியல் என்ன? இவர்கள் எப்படி மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பார்கள்? புலியை விட அரசியல் ரீதியாக எப்படி, எந்த வகையில் மாறுபட்டவர்கள்! வாயைத் திறந்து கூறுங்கள். மௌன விரதமோ. சூழ்ச்சியும், சதியும் ஒருங்கே கொண்ட செயல்பாடுகள் தான் இவர்களின் அரசியல். மக்கள் விரோத சக்திகளின் பின்னால் கூலிக் குழுவாக நிற்கின்றவாகள். இவர்கள் எப்படி மக்களின் பிரச்சனையை தீர்ப்பார்கள். கடந்த காலத்தில் உட் படுகொலைகள் மூலம் அல்லது அவர்களை ஒரங்கட்டுவதன் மூலம் சொந்த அமைப்புகளின் இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்தவர்கள். இன்று அவற்றை எல்லாம் கழுவேற்றிய கூலிக்குழுக்கள் தான். சரி அவர்களின் எடுப்பார் கைப்பிள்ளைகளாக புலியெதிர்ப்பின் பின் செல்பவர்களான நீங்களாவது பதிலளியுங்கள்.

 

இப்படிப்பட்ட நிலையில் சாதியம், பெண்ணியம் போன்ற சமூக ஒடுக்குமுறைகளை ஒழிப்பதில் நாம் உடன்பாடு தான் என்று கூறிக்கொள்கின்றனரே, எப்படி? அதன் அரசியல் வழி தான் என்ன? நீங்கள் செயல்படுகின்ற இயக்கங்கள் அல்லது உங்கள் செயல்பாடுகள் அதை எப்படி எந்த வகையில் ஒழிக்கும்? உண்மையில் இந்த சமூகப் பிரச்சனைகளை ஏற்றுக்கொள்வதாக கூறி செரிக்கின்ற அரசியல் சதி தான், புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் உத்தியாகும். இதையே புலியும் செய்கின்றது.

 

உண்மையில் இந்த சமூக ஒடுக்குமுறைகளை பாதுகாக்கின்ற நுட்பமான அரசியல் சதியாகும். இதைத் தான் புலிகளும் செய்கின்றனர். அவர்களும் கூட சமூக ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்வதன் மூலம், அதை செரிப்பது அவர்களின் உத்தியும் கூட.

 

எப்படி கடந்தகால இயக்கங்கள் சோசலிசம் வரை பேசி மக்களின் முதுகில் ஆழமாக குத்தினரோ, அதே உத்தி, அதே தந்திரம் இங்கும். சொற்களில் அதை அலங்கரிப்பது, நடைமுறையில் இருப்பதைப் பாதுகாப்பது. உண்மையில் இவை அரசியல் சதிகள். சமூக முரண்பாடுகளை ஏற்றுக்கொள்வதாக காட்டி அதைச் உட்செரிப்பது, நடைமுறையில் அதை மறுப்பதுமாக அரங்கேறுகின்றது. இதுவே எம்முடன் நிலவும் அடிப்படையான முரண்பாடு. அன்றைய கூட்டம் இதை எல்லாம் செரித்து, ரீ.பீ.சீ யின் குறுகிய நலன்களுடன் தான் நிறைவேறியது.

 

கடந்து வந்த வரலாற்றில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளமுடியும் இந்தக் குழுக்கள் சமூக முரண்பாடுகளை களையப் போவதில்லை என்பதை நிறுவியே உள்ளனர். அதைவிட கேடுகெட்ட கூலிக் குழுக்களாக இன்று அவை உள்ளள. ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலொ, பிளாட், ஈரொஸ்சின் கடந்தகால இயக்க நடைமுறைகள், அதன் அரசியல் எந்த வகையிலும் புலிகளில் இருந்து மாறுப்பட்டது அல்ல. குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரொஸ் பேசிய இடது அரசியல் கூட, அடிப்படையில் புலி அரசியலுக்கு உட்பட்டது தான். ஈ.பி.ஆர்.எல்.எப் அடிமட்டத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை அதிகம் அணிதிரட்டிய போதும் கூட, அது வர்க்க ரீதியாக புலி அரசியலையே கொண்டிருந்தது. அதாவது இந்திய எடுபிடிகளாகவே, கூலி கும்பலாகவே உருவானது. அடிமட்ட சமூகத்தில் எழும் சாதி மோதல்களை மட்டும், தனது சொந்த அணி திரட்டலுக்காக பயன்படுத்தியது. உதாரணத்துக்கு இந்தியாவின் வன்னியர், தலித் இயக்கங்கள் போன்றதே.

 

இந்த இயக்கங்களின் இன்றைய பிரதிநிதிகள் எப்படி தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுவார்கள்? குறிப்பாக இவர்கள் யாரும் புலிகளின் வர்க்க அரசியலை விமர்சிப்பது கிடையாது. புலிகளின் அரசியலை விமர்சித்தால், யாருக்காக? எப்படி? எந்த மக்களுக்காக என்ற விடையம் வெளிப்படுவதை அவர்கள் திட்டமிட்டு தவிர்க்கின்றனர். இதற்கு பதிலாக விமர்சனமற்ற வெற்றுக் கோசங்களைக் கொண்டு, அரசியல் கொசிப்பை செய்வதன் மூலம் தம்மை மூடிமறைக்க விரும்புகின்றனர். இதுவே இயக்கங்களுடன் இல்லாத, தனிநபர்களின் நிலையும் கூட. அரசியல் ரீதியான விமர்சனம் அற்ற கொசிப்பே, இவர்களின் அரசியலாகி அவர்களின் இருப்பின் மையமாகின்றது.

 

ரீ.பீ.சீ பின்னால் வாலாட்டும் ஜனநாயகவாதிகளே!

 

நீங்கள் எதைச் சாதிக்க கோமணத்தை கட்டிக்கொண்டு அவசர குடுக்கையாக ஒடுகின்றீர்கள். கடந்த பல வருடமாக நீங்கள் செய்த அரசியல், எதைச் சாதித்தது. எந்த அரசியலை நீங்கள் மக்களுக்காக முன்வைத்தீர்கள். சொல்லுங்கள். இவ்வளவு காலமும் சரியான ஒன்றை உங்களால் ஆதரிக்கமுடிந்தா? பின்பற்ற முடிந்ததா? இல்லை ஏன்? சரி நீங்கள் இன்று செய்வது சரி என்று உங்களால் சொல்லமுடியுமா? நாளை இதை மறுத்து சுயவிமர்சனம் செய்வீர்களோ?

 

சரி புலியெதிர்ப்புக்கு (ரீ.பீ.சீ க்கு) பின்னால் எதைச் சாதிக்கப் போகின்றீர்கள்? எப்படி எந்த வழியில்? மக்களுக்காக எதை செய்யப் போகின்றீர்கள்? உங்களால் மக்களுக்காக ரீ.பீ.சீயில் எதையும் செய்யவும் முடியாது. சாதிக்கவும் முடியாது. இதை நீங்கள் இன்று உணர மறுத்தால், வரலாறு உங்களுக்கு திருப்பிக் காட்டும்.

 

புலியெதிர்ப்புக்கு (ரீ.பீ.சீ) க்கு குடைபிடித்துக் கொண்டு செல்வதற்கு முன், அதன் பின்னால் அணி திரண்டுள்ளவர்கள் பற்றி என்ன நினைக்கின்றிர்கள்? ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலொ, பிளாட், ஈரொஸ்சுடன் சேர்ந்து புலியை திட்டி தீர்க்கப் போகின்றீர்களா அல்லது அன்னிய சக்திகளுக்கு பாய்விரிக்க போகின்றீhகளா? சொல்லுங்கள். எப்படி தமழ் மக்களின் பிரச்சனையை புலியெதிர்ப்பு மூலம் தீர்க்கப் போகின்றீர்கள். சம்மந்தப்பட்டவர்கள் இவற்றுக்கு பதில் சொல்வது கிடையாது, நீங்களுமா? இலங்கை பேரினவாத இராணுவப் பிரிவு நடத்துகின்ற இணையச் செய்தியை, புலியெதிர்ப்பு இணையங்கள் தமிழில் மொழிபெயர்த்து விடுவதும், புலிக்கெதிராக வெளிவரும் செய்திகளை வெளியிடுவதன் மூலம், தமிழ் மக்களிடம் எதைச் சாதிக்க முனைகின்றீர்கள். புலிச் செய்தியைப் போல் தான் புலியெதிர்ப்புச் செய்தியும். இதற்குள் அரசியல் ஆய்வு என்ற பெயரில் புலிக் கொசிப்பு. சமூகம், மக்கள் என்று எதுவுமற்ற மலட்டுக் கூட்டத்தின் வக்கிரங்கள் கொசிப்பாகின்றது. இவர்கள் பின்னணியில் ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலொ, பிளாட், ஈரொஸ் என்று அனைத்து மக்கள் விரோதக் குழுக்களும் உள்ளனர். இவர்களை புலியெதிர்ப்பு அணியினர் ஜனநாயகத்துக்கு திரும்பியவர்கள் அல்லது ஜனநாயகவாதிகள் என்கின்றனர்.

 

இலங்கை அரசுடன், இந்தியா அரசுடன், ஏகாதிபத்தியத்துடன் கூடி கூலிக் குழுவாக நிற்கும் இந்தக் குழுக்களின், கும்பலின் அரசியல், தமிழ் மக்களுக்கு எதிரானதா இல்லையா என்று விவாதிக்க மறுக்கின்ற ஜனநாயகம் தான், இவர்களின் புலியெதிர்ப்புக்கான வேலி.

 

இந்தக் குழுக்களின் அரசியல் இருப்பு கூலிக் குழுக்கள் தான். யார், எந்த அரசு, இவர்களின் உண்மையான எஜமானர்களோ, அவர்களின் விருப்பப்படி அனைத்தையும் செய்யத் தயாரான காட்டுமிராண்டிகள் தான். ஜனநாயகம் என்பது தங்களைத் தாங்களே புனிதப்படுத்தி காட்டிக் கொள்ள பயன்படுத்தும் பார்ப்பான் கொடுக்கும் தீர்த்தம் தான்.

 

1. இலங்கை அரசின் கீழ் இயங்கும் ஈ.பி.டி.பியின் ஆயுதப் பிரிவு இயங்கும் தளத்தில் அல்லது அவர்கள் ஆதிக்கம் உள்ள இடத்தில், நீங்கள் யாராவது ஜனநாயக பூர்வமாக அவர்களை விமர்சித்து செயல்பட அவர்கள் அனுமதிப்பார்களா? சொல்லுங்கள் நிச்சயமாக முடியாது.

 

2. இந்தியாவில் கூலிக்கும்பலாக இயங்கி, அங்கேயே அவர்கள் தயவில் காத்திருக்கும் ஈ.என்.டி.எல்.எப் கும்பல் உள்ள இடத்தில், உங்களால் சுயாதீனமாக செயல்பட முடியுமா? அவர்களை விமர்சனம் செய்ய முடியமா? முடியாது. உங்கள் எல்லோருக்கும் இவை நன்கு தெரியும்.

 

3. இதேபோல் புலிக் கருணா அணியும். அவர்கள் பிரதேசத்தில் நீங்கள் வாய் திறக்க முடியாது. இதை எல்லாம் மறுக்கும் அரசியல் உங்களிடம் உண்டா?

 

இதேபோல் தான் மற்றைய குழுக்களும். இப்படிபட்டவர்கள் எல்லாம் கூடித்தான் புலியெதிர்ப்பு கும்பலலாக உள்ளனர். இதற்குள் எத்தனையோ வெட்டுக் குத்துகள். இவர்கள் எல்லாம் ஜனநாயகவாதிகள். வேடிக்கை தான்.

 

அன்று ரீ.பீ.சீ சார்பாக இயங்கும் முன்னாள் புலி ராகவன் கூட்டத்தை தலைமை தாங்கிய போது, அவரின் புலி ஜனநாயகம் பல்லிளித்தது. நான் பேசும் நேரத்தை மட்டுப்படுத்தியதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? அது புலி அரசியல் தான். அன்று கூட்டம் முடிக்க அவசரப்பட்ட இதே ராகவன், கூறிய காரணம் என்ன? மேலதிக நேரம், கூட்ட மண்டபத்துக்கு அதிக பணத்தை செலுத்த வேண்டும் என்றாரே. கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் அதே இடத்தில் இம் மண்டபம் இலவசமானது என்று போட்டு உடைத்தனர். சூதும் சதியும், ஒருங்கே கூட, பொய்யும் புரட்டும் காரணங்களாகின்றது. இவர்கள் தான் புலியெதிர்ப்பு அணி. உண்மையில் இந்த கூட்டத்தின் முடிவில், ரீ.பீ.சீ யின் இரண்டாம் கட்ட கூட்டம் ஆரம்பமாக இருந்த சதி பின்னால் தெரியவந்தது.

 

இப்படிப்பட்டவர்கள் எல்லோரும் சேர்ந்து புலியெதிர்பாக (ரீ.பீ.சீயாக) குழுமுகின்றனர். எம்மையும் இந்தக் கூத்துக்கு அழைக்கின்றனர். மக்களின் பிரச்சனைகளை கைவிட்டு, உங்கள் கருத்தை முன்வைக்க வாருங்கள் என்ற வாதங்கள். இதில் சிலர் அப்பாவிகள். பலர் அரசியலை வாழ்வாக கொண்டு, வாழமுடியாத நேர்மையற்ற சந்தர்ப்பவாதிகள்.

 

ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி போன்ற கூலிக் குழுக்கள், ஜனநாயகத்தின் அரிச்சுவடியைக் கூட அனுமதிக்க மறுப்பவர்கள். மக்களின் சமூகப் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு செயல்படாத வலதுசாரிகள் யாரும், ஜனநாயகத்தை நினைத்துக் கூட பார்க்கமுடியாது. தமது கூலித்தனத்தையும், வலதுசாரி பாசிசத்தையும் நிறைவேற்ற ஜனநாயகத்தை தொட்டுக் கொள்ளவே பயன்படுத்துபவர்கள். இவர்கள் தமிழ் மக்களின் ஜனநாயகத்தை மீட்டுத் தரப்போகின்றார்கள். நல்ல அரசியல் வேடிக்கை தான். இவர்கள் மக்களின் சமூக முரண்பாடுகளை களைந்து, மக்கள் விடுதலையை வென்று தரப் போகின்றார்களாம். முட்டாள்களே நம்புங்கள்.

 

ஜனநாயக விரோதிகள், மக்கள் உரிமைக்கு எதிரானவர்கள், சமூக ஒடுக்குமுறையை செரித்து அதை மூடிமறைப்பவர்கள், கூடி நடத்தும் வானொலி (புலியெதிர்ப்பு) அல்லது பயன்படுத்தும் வானொலியின் அரசியல் என்ன? அது மட்டும் சூக்குமம். அது தான் புலியெதிர்ப்பு அரசியல். புலியை அரசியல் ரீதியாக விமர்சிக்காத அரசியல் தான் புலியெதிர்ப்பு. இதன் மூலம் தமது புலி அரசியலை பாதுகாக்கின்றனர். புலியின் அதே அரசியலைக் கொண்டு, புலியை கவிழ்க்கும் அரசியல் சதிதான், புலியெதிர்ப்பு அரசியல்.

 

மக்களுக்கு வெளியில் விடுதலை உண்டோ?

 

உண்டு என்று புலியெதிர்ப்பு சொல்லுகின்றது. அதைச் செய்வதாக (புலியெதிர்ப்பும்) ரீ.பீ.சீயும், அதன் பின் உள்ளவர்களும் சொல்லுகின்றனர். எப்படி ஜயா? தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள். மாயமா! மந்திரமா! அல்லது எப்படி அந்த விடுதலை? மக்களின் பிரச்சனையை பேசாது எப்படி மக்கள் விடுதலையைப் பெறமுடியும்? இதை சாதிக்கும் மந்திரக்கோல் வைத்துள்ளனரா? அண்ணைமாரே கோவியாதையுங்கோ, அதை ஒருக்கா விளாவாரியா சொல்லுங்கோ.

 

உண்மையில் யாருக்கும் அதைச் சொல்லும் தைரியம் கிடையாது. எந்த அரசியல் நேர்மையும் கிடையாது. நாங்கள் சொல்வது தவறு என்று சொல்லும் நேர்மையும் கூட கிடையாது. உண்மையில் இந்த விடையம் மீது விமர்சனம், விவாதம் நடத்தும் அரசியல் அருகதை கூட கிடையாது. சூதும், சதியும் புலியெதிர்பு அரசியலாக இருப்பதால், இந்த நிலை.

 

மக்களின் பிரச்சனைகளை இனம் காணல், அதை மக்களின் விடுதலைக்காக எழுப்புதல் என்பதை மறுப்பதே இவர்களின் அரசியலாகும். இதையொட்டி விவாதிப்பதை மறுப்பது தான், இவர்களின் ஜனநாயக மறுப்பாகும். அண்மையில் பாரிஸ் வந்த ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கம் அரசின் தீர்வுத்திட்டம் தொடர்பாக பேசிய கூட்டத்தில், மக்கiளின் பிரச்சனைகளை இனம் காணுதல் என்ற எனது தர்க்கமே பெரும்பான்மையினரின் கருத்தாக மாறியது. இதுவே கூடியிருந்தவர்களின் ஏற்புடைய கொள்கையாக இருந்தது. இதை உருவாக்க சிவலிங்கம் உட்பட்டவர்கள் பொறுப்பாக இருக்க, அக் கூட்டம் கோரியது. ஆனால் அதை உண்மையிலே செய்ய மறுத்தல், செய்யாமல் இருத்தல் புலியெதிர்ப்பின் மையமான அரசியலாகும். மாறாக அரசு அல்லது யாராவது வைக்கின்ற ஒன்றை கவ்விக்கொண்டு வள்வள்ளென்று குலைப்பதே, மக்கள் நலன் என்கின்றனர். புலியெதிர்ப்பின் பின் இருப்பது வேதாளக் கதை தான்.

 

மக்களின் பிரச்சனைகளை இனம் காணமல் இருத்தல், அதை மூடி மறைப்பது, அதை இனம் காணமல் விட்டுவிடுவதும் என்பதே, இவர்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது. மக்களின் பிரச்சனையில் இருந்து புலிகளை அம்பலப்படுத்துவதை மறுப்பதே, இவர்களின் தலையாய அரசியல் உத்தியாகும். உண்மையில் புலியின் அரசியலை விமர்சிக்க மறுப்பதே, இவர்களின் அரசியல் நலன்களாகும். இதைப் புரிந்து கொள்ளாமல் விட்டில் பூச்சியாக அதில் வீழ்ந்து மடிபவர்களை, நாம் பரிதாபத்துடன் பார்க்கவே முடியும்.

 

கடந்து வந்த காலத்தில், எது எந்த அரசியல் புலியை உருவாக்கியது? உங்களில் யாராவது அதை விவாதிக்க முடியமா? அதை சொல்ல, அதை மாற்ற உங்களால் முடியுமா? முடியாது. அதையே நீங்கள் புலியெதிர்ப்பு அரசியலாக கொண்டுள்ளீர்கள். அதையும் மறுக்க உங்களால் முடியாது. இவை எல்லாம் பற்றி பேசாதா அரசியல் தான், புலியெதிர்ப்பு கொசிப்பு. அதை பற்றி நீங்கள் பேசினால், உங்கள் அரசியல் தெளிவாகும். புலியைப் போல் உங்களுக்கும் புரட்சிகரமான மக்கள் நலன்கொண்ட அரசியல் எதுவும் கிடையாது.

 

புலியின் ஊடகமும், புலியெதிர்ப்பு (ரீ.பீ.சீ) ஊடகமும்

அரசியல் ரீதியாக என்ன வேறுபாடு? காட்ட முடியுமா? அரசியல் ரீதியாக காட்ட முடியாது. புலிகள் எப்படி மக்களின் வாழ்வு சார்ந்த அரசியலை நிராகரிக்கின்றனரோ, அதையே புலியெதிர்ப்பும் செய்கின்றது. இந்த எல்லைக்குள் தான், இந்த இரண்டு எதிரெதிரான ஊடகவியலும் இயங்குகின்றது. இரண்டு தரப்புக்கும் மக்கள் பற்றிய எந்த அக்கறையும் கிடையாது. இதனால் அவர்களிடம், மக்களுக்கான அரசியல் அடிப்படையே இல்லாமல் போய்விட்டது. மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசாது விசில் அடிப்பதும், கொசிப்படிப்பதுமே அரசியலாகிவிட்டது.

 

மற்றவர்கள் சொல்வதை தூக்கிவைத்து விபச்சாரம் செய்வதே இதன் பொது அரசியல் கொள்கையாகிவிட்டது. உதாரணத்துக்கு இந்தியாவின் அரசியல் பொறுக்கிகளாகவே வாழும் குரங்கு ஒன்று சொன்னால் அதை வைத்தும், மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு அந்த குரங்குகளை ஆளும் அனுமான் சொன்னால் அதை வைத்து ஆடுவதுமாகவே, இவர்களின் கொசிப்பு அரசியல் அரங்கேறுகின்றது. மக்களின் பிரச்சனையை வைத்து பேச வக்கற்றுக் கிடக்கின்றனார் புலியைப் போல் சம்பவங்கள், நிகழ்ச்சிகள் மேல் மிதக்கின்றனர். புலியைப் போல் வெற்று வேட்டுத்தனம்.

 

மக்களின் அடிப்படை பிரச்சனையைப் பற்றி பேசாது இருத்தல், விளைவுகளைப்பற்றி மட்டும் பேசுவதே இருதரப்பினரதும் உத்தி. உண்மையில் இவை திட்டமிட்ட மக்கள் விரோத செயல்பாடாகும் மக்களின் ஜனநாயகம் பற்றி யார் பேச வேண்டும் என்றாலும், மக்களின் அன்றாட அரசியல் பிரச்சனைக்கு வெளியில் அது பற்றி பேச எதுவும் கிடையாது. அதனால் தான் புலிகள் முதல் புலியெதிர்ப்பு வரை, மக்களைக் கண்டு அஞ்சும் ஜனநாயக விரோதிகளாக இருக்கின்றனர். உள்ளடகத்தில் பாசிசத்தை சாரமாக கொண்டு, மக்களை அடக்கி ஒடுக்குகின்றனார். புலிகள் முதல் ஈ.என்.டி.எல்.எவ் வரை மக்களை ஒடுக்கும் பாசிசம் தான், அவர்கள் அரசியல் இருப்பின் அடிப்படையாகும். இந்த ஊடகங்கள் மக்களின் பிரச்சனையை ஒரு நாளும் முன்னெடுக்கப் போவதில்லை. அதை தனித்துவமாக நாங்கள் செய்ய முனைகின்றோம் என்பதே மறக்க முடியாத உண்மை. ஆம் தனித்து பலவீனமாக இருந்தாலும், பலமாக நாம் அனைத்து தளத்திலும் முட்டி மோதுகின்றோம். இதை விட வேறு அரசியல் வழி எம்முன் இன்று கிடையாது.

பி.இரயாகரன்
18.05.2007


பி.இரயாகரன் - சமர்